'துயர் மீளாத குடும்பங்கள், சம்பவ இடத்தில் புதிய பிரச்னை' - ஒரு மாதத்திற்கு பிறகு கரூர் எப்படி இருக்கிறது?

கருர், கூட்ட நெரிசல், கரூர் தற்போதைய நிலவரம்
படக்குறிப்பு, கோகிலாவின் தாயார் மாலதி
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

(இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றன. சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

பிபிசி தமிழ் கள ஆய்வில் கண்டது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் நடத்திய மக்கள் சந்திப்பின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.

இந்த நிகழ்வில் ஒன்றரை வயதுக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை உயிரிழந்திருக்கிறார்கள். சில குடும்பங்களில் மூன்று பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.

சில குடும்பங்களில், அந்தக் குடும்பத்தின் ஆதரவாக இருந்தவர்கள் உயிரிழந்து, குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது. சில இடங்களில் தங்கள் துணைவரும் குழந்தைகளும் உயிரிழந்துவிட, தனித்து விடப்பட்டு வாழ்வை எதிர்கொள்ளவே தடுமாறுகிறார்கள்.

இவர்கள் அனைவருமே மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.

கருர், கூட்ட நெரிசல், கரூர் தற்போதைய நிலவரம்
படக்குறிப்பு, ஆனந்தஜோதி மற்றும் அவருடைய தாயார் வேணி

மூன்று பேரைப் பறிகொடுத்த குடும்பம்

கரூர் நெரிசலில் மனைவி ஹேமலதா, குழந்தைகள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா என மூன்று பேரைப் பறிகொடுத்த குடும்பம் ஆனந்தஜோதியினுடையது.

ஒரு மாதம் கழிந்துவிட்ட நிலையிலும் குழந்தைகளின் அடையாள அட்டைகள், உடைகள், காலணிகள் போன்றவற்றைப் பார்த்துப் பார்த்து குடும்பத்திலிருப்பவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள்.

ஆனந்தஜோதி ஒரு மாதம் கழித்து இப்போதுதான் வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கிறார். இதனால், பகலில் எப்படியோ பொழுது கழிந்துவிட்டாலும், இரவில் குழந்தைகளின் நினைவுகள் அவரை அலைக்கழிக்கின்றன. இதனால், அவரது தாயார், பாட்டி, உறவினர்கள் எனப் பலரும் அவரைத் தேற்ற வேண்டியிருக்கிறது.

காணொளிக் குறிப்பு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூரில் தற்போதைய நிலை என்ன?

"குழந்தைகளும் மருமகளும் எங்கேயோ ஊருக்குப் போயிருக்கிறார்கள். திரும்பி வந்துவிடுவார்கள் என்ற நினைப்பில்தான் இருக்கிறோம். எங்களால் இதிலிருந்து எப்படி மீண்டு வர முடியும்? எங்கள் பேத்திகளை நாங்கள் மிகச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டோம். பகலில் எல்லோரும் வேலைக்குப் போய்விடுவார்கள், குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றுவிடும் என்ற நினைப்பில் இருப்போம். ஆனால், இரவில் யாரும் திரும்ப வராதபோது, அதைத் தாங்க முடிவதில்லை." எனக் கதறுகிறார் ஆனந்தஜோதியின் தாயாரான வேணி.

"அவர்கள் அப்பா (ஆனந்தஜோதி), ராத்திரியானால் பதற்றமாகிவிடுவார். சுவரைப் போய் குத்துவார். தலையை மோதுவார். பொண்டாட்டி, பிள்ளைகளோடு இருந்துவிட்டு, தனியாக இருப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்? என் கணவர் இறந்தபோது இதுபோல நானும் துன்பப்பட்டிருக்கிறேன். ஆனால், தேற்றிக்கொள்ள எனக்காவது இரு குழந்தைகள் இருந்தார்கள். அவனுக்கு யாருமே இல்லை. 30 நாள் என்ன, 30 வருடமானாலும் அந்த வாழ்க்கையை மறக்க முடியாது"

இதனால், இரவில் ஆனந்தஜோதியை அவரது தாயார், தாத்தா, பாட்டி என அனைவரும் இரவு முழுவதும் விழித்திருந்து கவனமாகக் கண்காணிக்கிறார்கள்.

கருர், கூட்ட நெரிசல், கரூர் தற்போதைய நிலவரம்
படக்குறிப்பு, ஆகாஷ் - கோகிலா ஸ்ரீ

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஜோடி

கரூர் சம்பவத்தில் ஆனந்தஜோதி குடும்பத்தில் ஏற்பட்டதற்கு இணையான அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு மரணம், ஆகாஷ் - கோகிலா ஸ்ரீயின் மரணம்.

இளம் வயதினரான இந்த இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இருவருமே மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தில் இருந்த பொருளாதார சிரமங்களையும் தாண்டி, படித்து மேலே வந்தவர்கள். கோகிலா ஸ்ரீயின் தந்தை இளம் வயதிலேயே இறந்துவிட, தாயார்தான் மிகுந்த நெருக்கடிக்கு இடையில் இவரை ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் படிப்பையும் எம்.எட். படிப்பையும் படிக்க வைத்தார்.

இதற்குப் பிறகு ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றிய கோகிலா, தன் சகோதரருக்கும் திருமணம் செய்துவைத்தார். இதற்குப் பிறகு, ஆகாஷுடன் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான், கரூருக்கு வந்த விஜய்யைப் பார்க்க சகோதரர், வருங்கால கணவர் ஆகாஷ் ஆகியோருடன் சென்றார் கோகிலா ஸ்ரீ.

நெரிசல் அதிகமான நிலையில், சகோதரர் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட, கோகிலாவும் ஆகாஷும் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

"இந்தக் கூட்டத்திற்கு நான், கோகிலா, மாப்பிள்ளை (ஆகாஷ்) என எல்லோரும்தான் ஒரே வண்டியில்தான் சென்றிருந்தோம். சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு இதய நோய்க்காக ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்தது. ஆகவே, கூட்டம் அதிகமானவுடன் என்னை வெளியில் அனுப்பிவிட்டு, நாங்கள் விஜய்யைப் பார்த்துவிட்டு வருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், இப்படி நடக்குமென எதிர்பார்க்கவில்லை. ஆம்புலன்ஸ்கள் வர ஆரம்பித்த வந்த பிறகுதான் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது. இதற்குள் என் அம்மா அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்துவிட்டு, எனக்குத் தகவல் சொன்னார்." என அந்த நாளை நினைவுகூர்கிறார் கோகிலாவின் சகோதரர்.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

'எல்லா அம்மாவும் நினைப்பதைப் போலத்தானே நினைத்தேன்'

கோகிலாவின் தாயார் மாலதியால் இந்த இழப்பை இப்போதுவரை ஏற்கவே முடியவில்லை.

கோகிலாவுக்கு திருமணமாகி, பேரன் - பேத்திகளை வளர்க்கலாம் எனக் காத்திருந்தவர், இப்போது நொறுங்கிப்போயிருக்கிறார்.

"நான் கஷ்டப்பட்டதைப் போல எந்தக் காலகட்டத்திலும் என் மகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தட்டச்சு, தையல் என எல்லா கைத்தொழில்களையும் படிக்க வைத்தேன். இப்போது பிள்ளைகள் நன்றாக வளர்ந்துவிட்டார்கள், நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டது என நினைத்தேன். என் மகள் மிக அழகாக, தேவதையைப்போல இருப்பாள். அவள் நடந்து செல்வதைப் பார்த்துப் பார்த்து ரசிப்பேன். அவள் தலைமுடி அவ்வளவு அழகாக இருக்கும்."

"நான் வேலைக்கே செல்லக்கூடாது என்பாள். ஆனால், உனக்குக் கல்யாணம் ஆகி குழந்தை பிறப்பது வரை செல்வேன். அதற்குப் பிறகு குழந்தையைப் பார்க்கும் வேலை வந்துவிடும் என்பேன். அதற்குப் பிறகுதான் நான் வேலைக்குப் போக மாட்டேன் என்பேன். ஆனால், இப்போது எல்லாம் போய்விட்டது. எல்லா அம்மாவும் நினைப்பதைப் போலத்தானே நானும் நினைத்தேன்?" என அழுகிறார் மாலதி.

இந்த நிகழ்வில் உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை துரு விஷ்ணுவின் குடும்பமும் இதே நிலையில்தான் இருக்கிறது.

துரு விஷ்ணுவின் தந்தை பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான தாய் மாதேஸ்வரி, பாட்டி ஆகியோரால் இதிலிருந்து மீள்வது கடினமாகவே இருக்கிறது. யாராவது இதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் குடும்பத்தினர் கதற ஆரம்பிக்கின்றனர்.

கருர், கூட்ட நெரிசல், கரூர் தற்போதைய நிலவரம்
படக்குறிப்பு, துரு விஷ்ணுவின் தாய் மாதேஸ்வரி, பாட்டி ஜெயஸ்ரீ

'சாப்பிட அவன் இல்லை'

குழந்தை துரு விஷ்ணு விளையாடும் இடத்தைச் சுட்டிக்காட்டிக்காட்டி அழுகிறார் பாட்டியான ஜெயஸ்ரீ. "எப்போதும் அவன் நினைப்பு மாறவில்லை. ஏதாவது வேண்டுமென்றால் துணியை பிடித்து இழுப்பான். அப்போது சோத்துக்கு எவ்வளவோ கஷ்டப்பட்டோம். இப்போது எல்லாம் இருக்கிறது என்றாலும் சாப்பிட அவன் இல்லை." என்கிறார் பாட்டி ஜெயஸ்ரீ.

தாய் மாதேஸ்வரியால் மௌனமாக கண்ணீர் சிந்துவதைத் தவிர, வேறெதுவும் சொல்ல முடியவில்லை.

இந்த நிகழ்வில் நெருக்கமான உறவுகளை இழந்தவர்களில் சிலர், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும், ஊடகங்கள் தொடர்ந்து பேட்டி கேட்பது அவர்களுக்குப் பிரச்னையாக இருக்கிறது.

ஊடகச் செய்திகளில் இந்தக் குடும்பத்தினர் இடம்பெற்றுள்ள வீடியோக்களுக்கு கீழே பார்வையாளர்கள் எழுதும் மோசமான கருத்துகளும் அவர்களை நிலைகுலையச் செய்கின்றனர். இதனால், பல குடும்பத்தினர் ஊடகங்களிடம் பேசவே விரும்பவில்லை.

கருர், கூட்ட நெரிசல், கரூர் தற்போதைய நிலவரம்
படக்குறிப்பு, பழனியம்மாள், கோகிலாவின் தந்தை ஸ்ரீபெருமாள்

'மிகுந்த மன உளைச்சல்'

கரூர் நிகழ்வில் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த சி. பெருமாள் - செல்வராணி தம்பதியினர் இதில் மனமுடைந்து போயிருக்கிறார்கள்.

செல்வராணியும் குழந்தைகளும்தான் அந்தக் கூட்டத்திற்குச் சென்றனர். இதில் குழந்தைகள் இறந்துவிட, செல்வராணி காயமடைந்தார். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் சொல்வதாகச் சொல்கிறார் கணவர் பெருமாள்.

இந்த நெருக்கடிக்கு இடையில் ஊடகங்களின் வீடியோக்களுக்குக் கீழே வரும் கருத்துகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் இவர்கள். செல்வராணி கேமரா முன்புகூட வர விரும்பவில்லை.

"எப்போதெல்லாம் நான் என் இரு சக்கர வாகனத்தை எடுக்கிறேனோ, அப்போதெல்லாம் குழந்தைகளின் நினைவு வருகிறது. அதிலிருந்து மீண்டு வருவதே கடினமாக இருக்கிறது. காலையில் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தாலே பிள்ளைகளின் பெயரையும் சொல்லி பிஸ்கட்டை பிரித்துக்கொடுப்பதுபோல நினைவு வருகிறது. எப்படி மறக்க முடியும்? பணம் வந்ததும் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். என்ன மாறிவிட்டதை கண்டுபிடித்தார்கள்?" எனக் கேள்வியெழுப்புகிறார் சி. பெருமாள்.

இந்த மனநிலையில்தான் வேறு பலரும் இருக்கிறார்கள். உறவுகளை இழந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஊடகங்களைச் சந்திக்கவே விரும்பவில்லை.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மாமல்லபுரம் சென்று சந்தித்தது, இவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

கருர், கூட்ட நெரிசல், கரூர் தற்போதைய நிலவரம்
படக்குறிப்பு, கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடம்

'சம்பவ இடத்தில் புதிய பிரச்னை'

உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நிலை இப்படியிருக்க, சம்பவம் நடந்த இடத்தில் வசிப்பவர்கள் வேறுவிதமான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

வேலுசாமிபுரத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஒட்டி சில கடைகள் இருக்கின்றன. நெரிசல் ஏற்பட்ட இடம் முழுக்கவே காவல்துறையின் விசாரணைக்காக 12 நாட்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் மெல்லமெல்ல கடைகளைத் திறக்க ஆரம்பித்தார்கள்.

இங்கு கடை வைத்திருந்த ஒரு பெண் இப்போது வரை கடையைத் திறக்கவில்லை. சில விசித்திரமான பிரச்னைகள் இவர்களுக்கு இருக்கின்றன.

இந்தப் பகுதியில்தான் பலர் உயிரிழந்தார்கள் என்பதால், இங்கு வரவே பலர் தயங்குவதாக கடைக்கார்கள் சொல்கின்றனர். இங்குள்ள சில கடைகளின் உரிமையாளரும் அந்தப் பகுதியிலேயே தையல் கடை வைத்திருப்பவருமாகிய ஜெயமணி, இந்த நிகழ்வால் தனது வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.

"இந்த நிகழ்வுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடைகளின் பக்கம் யாரும் வர மாட்டேன் என்கிறார்கள். சாயந்தரம் எட்டு மணியானால் ஆட்கள் நடமாட்டமே குறைந்துவிடுகிறது. 'இறந்துபோன இடம், இறந்துபோன இடம்' என்று சொல்கிறார்கள். ஒரு ஒரே கடை மட்டும், அவர் ஆண் என்பதால் திறந்து வைத்திருக்கிறார். இங்கு கடை வைத்திருந்த பெண், இப்போதுவரை திறக்கவில்லை. எனக்கும் பிசினஸ் இல்லை. ஒவ்வொரு தீபாவளிக்கும் விடாமல் 12 மணிவரை தைப்போம். இந்த வருடம் 10 பிளவுஸ்கூட வரவில்லை. இந்த இடத்திற்கு வர எல்லோரும் பயப்படுகிறார்கள்." என்கிறார் ஜெயமணி.

கருர், கூட்ட நெரிசல், கரூர் தற்போதைய நிலவரம்
படக்குறிப்பு, ஜெயமணி

இந்தப் பகுதியில் மருந்துக் கடை வைத்திருக்கும் ஆனந்த்தும் இதையே எதிரொலிக்கிறார்.

"சம்பவம் நடந்து 12 நாட்கள் வரை இந்தப் பகுதி காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தது. கரூர் டிஎஸ்பி அனுமதி கொடுத்த பிறகு கடையைத் திறந்து கொண்டோம். இருந்தாலும் பழைய நிலைமை இன்னும் வரவில்லை. மக்களுக்கு இன்னும் கொஞ்சம் பயம் இருக்கு. இயல்பு வாழ்க்கை மந்தமாகியிருக்கிறது. போகப்போக சரியாகவிடும் என நம்புகிறோம்." என்கிறார் ஆனந்த்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இங்கு வந்து பூத் தூவி, வணங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் இவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"பத்தாவது நாள், பதினாறாவது நாள், 30வது நாள் என பூ போட்டு, மாலை போடுகிறார்கள். நாங்கள் சத்தம்போட்டு போகச் சொல்கிறோம். நாங்கள் இங்கே இருப்பதா, வேண்டாமா? உங்கள் வீட்டில் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். இங்கே வந்து பார்த்துவிட்டு வேண்டுமானால் செல்லுங்கள். மற்றபடி ஏதும் செய்யாதீர்கள். எங்கள் வாழ்வாதாரம் இதுதான் என்கிறோம்." என்றார் ஜெயமணி.

வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பது தவிர, வேறு சில பாதிப்புகளும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார் அவர்.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

இந்த நெரிசல் சம்பவத்தில் அந்தப் பகுதியில் உள்ள கடைகளின் முன்னால் இருந்த மறைப்புகள், கம்பிகள் போன்றவை சேதமடைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"இங்கே நாற்பது பேர் இறந்துவிட்டதால், நாங்கள் யாரும் அதைப் பற்றி இத்தனை நாட்களாகப் பேசவில்லை. ஆனால், யாரும் இந்த இடத்துக்காரர்களைப் பற்றிக் கேட்கவில்லை. கடையின் உரிமையாளர் எப்படியிருக்கிறார்கள், என்ன மன உளைச்சலில் இருக்கிறார்கள் என யாரும் கேட்கவில்லை. கடைகளை வைத்திருப்பவர்கள் அவற்றைத் திறக்கவில்லை. அதனால், அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. ஆகவே, அவர்களிடம் வாடகை கேட்கவே சங்கடமாக இருக்கிறது. அவர்களும் வாடகையை ஒரு மாதம் கழித்துத் தருகிறோம் என்கிறார்கள். நாங்கள் இந்த வாடகையை வைத்துத்தான் பிழைத்துக்கொண்டிருக்கிறோம்," என்கிறார் ஜெயமணி.

இந்த நெரிசல் சம்பவம் நடந்து ஒரு மாதமாகியிருக்கும் நிலையில், இது தொடர்பாக பல நிகழ்வுகள் நடந்துவிட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. அந்த அமைப்பும் விசாரணையைத் துவங்கிவிட்டது.

உயிரிழந்தவர்களின் உறவுகளைச் சந்தித்த விஜய்யும் தனது அரசியல் பணிகளைத் துவங்கிவிட்டார். சம்பவம் நடந்த இடத்திலும் நிலைமை சகஜமாகிவிடலாம். ஆனால், உறவுகளை, தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் அவ்வளவு சீக்கிரம் மீளப்போவதில்லை.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு