ஆதவ் அர்ஜுன் பேச்சு திமுக, விசிக கூட்டணியை பாதிக்குமா? திருமாவளவன் கூறியது என்ன?

- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்று பேச்சுகள் எழும் நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்து திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் எழுப்பி வருகிறது.
வி.சி.க.வின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன், “நேற்று வந்தவர், சினிமாவில் இருந்து வந்தவர் துணை முதல்வர் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்று பொதுவெளியில் கூறியது இரு கட்சிகளுக்கும் இடையே சில உரசல்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவரா, அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது” என்று பதிலளித்தார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுன் கூறிய கருத்துக்கு திமுக கடுமையாக பதிலளித்துள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “இது கூட்டணி அறத்துக்குச் சரி வராது” என்று கூறுகிறார். அதே வேளையில், ஆதவ் அர்ஜுனின் கருத்தை ஆதரிப்பதாகவோ கண்டிப்பதாகவோ கூறாத விசிக, திமுக-விசிக கூட்டணியில் விரிசல் இல்லை என்று கூறுகிறது.

ஆதவ் அர்ஜுன் கூறியது என்ன?
தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்த ஆதவ் அர்ஜுன், “மாமன்னன் படத்தில் வருவது போலத்தான். அனைவருக்கும் புரியும்படியாகச் சொல்கிறேன். என் தலைவர் அதிகாரத்துக்கு வருவது குறித்து அமைதியாக இருக்கலாம், ஆனால் அடுத்த தலைமுறையினர் என் தலைவர் எப்போது வருவார், இன்னும் எத்தனை நாட்கள் இப்படி உழைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். நேற்று வந்தவர், சினிமாவில் இருந்து வந்தவர் துணை முதல்வராகலாம், ஏன் என் தலைவர் ஆகக் கூடாது என்று தொண்டர்கள் கேட்கிறார்கள்,” என்று பேசியிருந்தார்.
மாமன்னன் திரைப்படத்தில், தலித் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் எஜமானரின் மகனின் முன்பு நாற்காலியில் அமரத் தயங்குவார். தலித் சட்டமன்ற உறுப்பினரின் மகன் (இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது உதயநிதி ஸ்டாலின்) அவருக்காக அந்த நாற்காலியைப் பிடுங்கித் தந்து அவரை அமர வைப்பார்.
மேலும், திமுகவுக்கும் விசிக தேவை என்று பேசிய ஆதவ் அர்ஜுன், “30% வாக்கு வங்கி இருக்கிறது என்றால் 234 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடலாமே. வட மாவட்டங்களில் விசிகவின் வாக்கு வங்கி இல்லாமல் திமுகவால் வெற்றிபெற முடியாது. கூட்டணியில் நாங்கள் கொடுக்கிறோம், நீங்கள் பெறுகிறீர்கள் என்ற ஆதிக்க உளவியலை ஏன் உருவாக்குகிறீர்கள்?” என்றும் பேசியிருந்தார்.
திமுகவின் எதிர்வினை

பட மூலாதாரம், Getty Images
இதற்கு பதிலளித்துப் பேசியிருந்த திமுகவின் மூத்த தலைவர் ஆ.ராசா, “இப்படி முதிர்ச்சியின்றிப் பேசுவது கூட்டணி அறத்துக்குச் சரியாக வராது. குழப்பத்தை விளைவிக்கும், பாஜகவுக்கு துணை போகின்ற, துணை போகிறார்களோ, குறுக்கு அரசியல் செய்கிறார்களோ என்று எண்ணக்கூடிய வகையில் ஒரு கருத்தைச் சொல்வதை திருமா ஏற்கமாட்டார். நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆதவ் அர்ஜுன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியிருந்தார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன், “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற எனது வீடியோவை பலரும் விவாதங்களுக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால் திமுக விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது” என்று கூறியுள்ளார்.
மேலும், ஆதவ் அர்ஜுன் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “உட்கட்சி விவகாரங்களைக் கலந்து பேசித்தான் முடிவெடுப்போம், பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளேன். மீண்டும் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுன் யார்?

ஆதவ் அர்ஜுன் 2021ஆம் ஆண்டு முதல் வி.சி.க.வின் அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்பு, 2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை திமுகவின் பிரசாரக் குழுவில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு வி.சி.க.வில் சேர முடிவெடுத்த அவர், பின்னர் Voice of commons என்ற விசிக பிரசார ஊடகத்தைத் தொடங்கினார். ‘லாட்டரி கிங்’ எனப்படும் தொழிலதிபர் சாண்டியகோ மார்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுன் கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே துணை பொதுச் செயலாளர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
“எனது மாமனார் நடத்தும் தொழிலுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எனது மூன்று ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில்களில் இருந்து முழுவதும் விடுத்து, ராஜினாமா செய்து மக்கள் பணியாற்ற அரசியலுக்கு வந்துள்ளேன்” என்று ஆதவ் அர்ஜூன் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்துக்கு முன்பாகவே, சமீப காலமாக, தி.மு.க, வி.சி.க. இடையில் அவ்வபோது உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஆதவ் அர்ஜுன் பேசுவதற்கு முன்பாக திருமாவளவன் செங்கல்பட்டில் வி.சி.க. தொண்டர்களுடனான கூட்டத்தில் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசிய வீடியோ அவரது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு சர்ச்சையானது.
“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது 1999ஆம் ஆண்டு வி.சி.க. தேர்தல் அரசியலில் நுழைந்தபோது முன்வைத்த முழக்கம். இதுகுறித்து நான் பேசிய வீடியோவை எக்ஸ் தளத்தில் எனது அட்மின் பதிவிட்டிருந்தார். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதை நினைவுப்படுத்தி நான் பேசியிருந்தேன்” என்று செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது தெரிவித்திருந்தார்.
அதேபோன்று இரு வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவது குறித்து திருமாவளவன் பேசியதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.
“தனி மெஜாரிட்டியில் பாஜக வென்றபோதும் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அப்படி நடப்பது தவறில்லை. அப்படியொரு கோரிக்கையை எழுப்புவதும் தவறில்லை. இது யாரையும் மிரட்டுவதற்காகச் சொல்லப்படும் கருத்து அல்ல. அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம், ஒரு இடத்தில் குவித்து வைப்பது அல்ல” என்று பேசியிருந்தார்.
திமுக - விசிக கூட்டணியை பாதிக்குமா?

பட மூலாதாரம், X/M.K.STALIN
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ஆம் தேதி வி.சி.க. நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை அழைத்தது சர்ச்சையானது. தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு அதிமுகவை அழைப்பதால் வி.சி.க. தனது எதிர்கால கூட்டணி வாய்ப்புகளைய் திறந்து வைப்பதாகப் பார்க்கப்பட்டது.
எனினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அமெரிக்க பயணத்தை முடித்து ஊர் திரும்பிய உடனே திருமாவளவன் அவரைச் சந்தித்து மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்று அதன் பிறகு திருமா பேசியிருந்தார். அத்துடன் கூட்டணியில் குழப்பம் தொடர்பான சர்ச்சைகள் ஓய்ந்தன என்று நம்பப்பட்டது. ஆனால் தற்போது இந்த விவகாரம் தலை தூக்கியுள்ளது.
தான் அளித்த பேட்டியில் ஆதவ் அர்ஜுன், “2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், 16 எம்.பிக்களை மட்டுமே வென்றிருந்தபோது கருணாநிதி மத்தியில் 8 அமைச்சர்களைப் பெற்றார். அது ராஜதந்திரம். அதையே எங்கள் தலைவர் செய்ய நினைத்தால் ஏன் எல்லோரும் சேர்ந்து அதிகாரத்தைப் பற்றி நீங்கள் பேசக்கூடாது என்று கூறுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மற்றொரு தருணத்தில் பேசிய திருமாவளவன், “கருத்து சொல்ல ஒவ்வொரு தனிநபருக்கும் உரிமை உண்டு, சுதந்திரம் உண்டு. ஆனால் கட்சித் தலைமைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். ஆதவ் அர்ஜுனும் கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜுனிடம் நேரடியாகப் பேச பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, அவரை மூன்று நாட்களுக்குத் தொடர்புகொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, தி.மு.க.விடம் தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்பதைவிட வி.சி.க.விற்கு வேறு சில நோக்கங்கள் இருக்கலாம் என்றார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.
"தனிநபர் விமர்சனம், வி.சி.க. இல்லாமல் தி.மு.க. வெற்றி பெறாது போன்ற கருத்துகளை தி.மு.க. லேசாக எடுத்துக்கொள்ளாது. இது திருமாவின் அனுமதியோடு பேசப்பட்டதா என்பது அடுத்த வரும் நாட்களில் கட்சியின் நடவடிக்கையைப் பொறுத்து தெரிய வரும்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள தி.மு.க. மாநாட்டில் கூட்டணிக் கட்சிகள் பங்கு பெறும்போது திருமா என்ன பேசுகிறார் என்பது கவனிக்கப்படும்," என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












