சிறார் ஆபாசப் பட வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
“ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதே குற்றம்,” கடந்த ஜனவரி மாதம் ‘குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக’ சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்து இது.
மேலும், அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ‘Just Rights for Children Alliance’ என்ற தன்னார்வ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இதை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பார்ப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,” என்று நேற்று (செப்டம்பர் 23) தீர்ப்பளித்தது.
இந்த வழக்கின் பின்னணி என்ன? குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள் பார்ப்பது குறித்து சட்டம் கூறுவது என்ன?


பட மூலாதாரம், Getty Images
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
சென்னை, அம்பத்தூர் காவல் நிலையத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் குழந்தைகள் தொடர்பான ஆபாச காணொளிகளை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக, அவர் மீது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (போக்சோ) மற்றும் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் (ஐ.டி. சட்டம்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் “ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல அதை மற்றவர்களுக்குப் பகிர்வதே குற்றம். எனவே போக்சோ சட்டம் மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது குற்றம் சுமத்த முடியாது,” எனக் கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும் அந்த உத்தரவில், “போக்சோ சட்டம், 2012 பிரிவு 14 (1)-இன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துவது குற்றம். ஐ.டி. சட்டம், 2000, பிரிவு 67 (பி)-இன் படி, குழந்தைகள் தொடர்பான ஆபாசக் காணொளிகளை உருவாக்குவதோ, பரப்புவதோ, வெளியிடுவதோ குற்றம். மனுதாரர் அதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பதால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றத்தின் அதிருப்தி
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ‘Just Rights for Children Alliance’ என்ற தன்னார்வ அமைப்பு கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
‘சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது’ என உச்சநீதிமன்றத்தில் அந்த தன்னார்வ அமைப்பு வாதிட்டது.
அப்போதே உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பு குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
“ஒரு தனி நீதிபதி எவ்வாறு இதுபோல உத்தரவிட முடியும்? இது மிகக் கொடுமையானது,” என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று (செப்டம்பர் 23) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் “குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பார்ப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,” என உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை செல்போனில் வைத்திருப்பதும், அதை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், " 'குழந்தைகள் ஆபாசப் படங்கள்' என்ற வார்த்தை, உயர்நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் சட்டப் பிரிவுகளிலும், பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக, ‘குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பானவை’ (Child Sexual and Exploitative Abuse Material- CSEAM) என்று பயன்படுத்த வேண்டும்,” என உச்சநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
போக்சோ சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012-இல் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் 2012 நவம்பர் 12-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
பாலியல் வன்கொடுமை, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது, ஆபாசப் படம் எடுப்பது போன்றவை இந்த குற்றங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவனோ, சிறுமியோ இத்தகைய பாலியல் தொடர்புடைய பிரச்னைகளை மற்றவர்களிடம் இருந்து எதிர்கொண்டாலோ, அதனால் மன ரீதியாக, உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டாலோ இந்த சட்டம் பாதுகாப்பு அளிக்கும். பாலியல் செயல்களுக்காக சிறார்களை கடத்தும் நபர்கள் மீதும் இந்தச் சட்டம் பாயும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை வரை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் நடப்பது தெரிந்தும் அதுபற்றி புகார் தெரிவிக்காமல் மறைத்தால்கூட அந்த செயலுக்கு ஆறு மாத சிறை தண்டனை அல்லது சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம்.
இச்சட்டத்தை மேலும் வலுப்படுத்த, 2019-ஆம் ஆண்டில் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அதன்படி கொலை, சிறார் பாலியல் வன்கொடுமை போன்ற மிகக் கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் இடம் அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் அஜிதா, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “போக்சோ சட்டத்தின் பிரிவு 15-இன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச காணொளிகள் அல்லது உள்ளடக்கத்தை, புகார் அளிப்பதற்கு தவிர்த்து வேறு காரணங்களுக்காக மின்னணு சாதனங்களில் சேமித்தால் அல்லது வைத்திருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம்,” என்கிறார்.
“புகாரளிக்க அதைப் பயன்படுத்த போவதில்லை எனும்போது, செல்போனில் அதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேமித்து வைத்திருப்பதை குற்றம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும். அது வக்கிர எண்ணத்தின் வெளிப்பாடு தானே,” என்கிறார்.
‘குழந்தைகள் ஆபாசப் படங்கள்’ என்பதற்கு பதிலாக Child Sexual and Exploitative Abuse Material என்பதைப் பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, காணொளிகள் மட்டுமல்ல புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், அல்லது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து உள்ளடக்கங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்பதை தெளிவுபடுத்தத் தான்," என்கிறார் அஜிதா.

பட மூலாதாரம், Getty Images
அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஆண்ட்ரூ சேசுராஜ்,
“ஒவ்வொரு வருடமும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடும் தகவல்களைப் பார்த்தாலே குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் புரிந்துகொள்ள முடியும். அப்படியிருக்க ‘குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்த்தால் தவறில்லை’ என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது அதை எங்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. இப்போது வெளியாகியுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆறுதலாக உள்ளது,” என்கிறார்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, 2021-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1.5 லட்சம் (1,49,404) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (இது 2020-ஆம் ஆண்டைக் காட்டிலும் 16.2% அதிகம்) இதில், போக்சோ வழக்குகள் 38%.
அதுவே, 2022-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சுமார் 1.6 லட்சம் (1,62,449) குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (இது 2021-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 8.7% அதிகம்.) இதில் போக்சோ சட்டத்தின் கீழ் 39.7% வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“ஆனால், இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்செயல்களில் 50%-க்கும் குறைவானவை தான் பதிவு செய்யப்படுகின்றன. வெளியே சொல்லாத சம்பவங்கள் இன்னும் எவ்வளவோ உள்ளன,” என்கிறார்.
“எனவே இத்தகைய வழக்குகளைக் கையாளும்போது குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலையில் இருந்து அதை அணுகாமல், குழந்தைகளின் சிறந்த நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்,” என கோரிக்கை வைக்கிறார் ஆண்ட்ரூ சேசுராஜ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












