திருவண்ணாமலை: 554 ஏக்கர் ஆக்கிரமிப்புகளால் கிரிவலப் பாதைக்கு ஆபத்தா? நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"அறுபது ஆண்டுகளாக இதே இடத்தில் வசித்து வருகிறோம். செத்தாலும் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம். நீதிமன்றத்தின் உத்தரவால் மனஉளைச்சலில் தவிக்கிறோம். திடீரென வெளியேறுமாறு கூறினால் எங்கே போவது?" எனக் கேள்வி எழுப்புகிறார், லட்சுமி.
திருவண்ணாமலையில் ரமணாஸ்மரத்தின் பின்புறம் இவர் வசித்து வருகிறார். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் தனக்கு நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
கிரிவலப் பாதையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இங்கு வசிக்கும் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது" என, திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கிரிவலப் பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் என்ன பிரச்னை?
திருவண்ணாமலையில் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கின் மனுவில், ' திருவண்ணாமலையில் மிகப் பழைமையானதாக மலை உள்ளது. இந்த மலையானது 2,669 அடி உயரமும் 14 கி.மீ சுற்றளவும் உடையது. இங்கு பௌர்ணமி கிரிவலம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது' எனக் கூறியுள்ளார்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டதாக மனுவில் கூறியுள்ள யானை ராஜேந்திரன், ' மலையில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கழிப்பறைகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.
'இவற்றுக்கு மின் இணைப்பும் குடிநீர் இணைப்புகளும் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளன. மலையைச் சுற்றிலும் வணிக நிறுவனங்களின் பெருக்கத்தால் கிரிவலப் பாதை அசுத்தமடைந்துள்ளது' எனவும் மனுவில் கூறியிருந்தார்.
"மலையில் இருந்து வரும் மழை நீர் ஓடைகள் மூலமாக 136 குளங்களுக்கு வந்து கொண்டிருந்தன. சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு அந்த நீர் பயன்பட்டு வந்தது. ஆறு, குளம், வாய்க்கால்கள் இல்லாத நிலையில் நகரத்தின் தண்ணீர் தேவையைப் போக்கும் வகையில் இந்தக் குளங்கள் இருந்தன" எனக் கூறுகிறார், வழக்கு தொடர்ந்த யானை ராஜேந்திரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " கடந்த 20 ஆண்டுகளாக திருவண்ணாமலையைச் சுற்றி பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பு கார்த்திகை தீபத்துக்கு மட்டும் மலையில் ஏறுவார்கள். தற்போது மலையில் கான்கிரீட் கட்டடங்கள் பெருகிவிட்டன" என்கிறார்.

பட மூலாதாரம், UGC
'உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும்'
மலையின் சாய்தளத்தில் சுமார் 450 அடி தூரம் வரை தண்ணீர் வரும் பாதையில் சிலர் வீடுகளைக் கட்டியுள்ளதாகக் கூறும் அவர், " ஓடைகளை ஆக்கிரமித்துக் கொண்டு சிலர் வீடுகளைக் கட்டி வைத்துள்ளனர். கிரிவலப் பாதையும் அசுத்தமடைந்துள்ளது" என்கிறார்.
"தவிர, இப்பகுதியில் மலைச் சரிவுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கடந்த ஆண்டு மலையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் இறந்தனர். வடக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும்" என்கிறார், யானை ராஜேந்திரன்.
"பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த குளங்கள் எப்படியிருந்தன என்பதை புத்தகங்களில் படிக்க முடிந்தது. அதன்படி, அங்குள்ள 136 நீர்நிலைகளை மீட்க வேண்டும் எனவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ரிட் மனுக்களை தாக்கல் செய்தேன்" எனவும் யானை ராஜேந்திரன் குறிப்பிட்டார்.
வழக்கை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கவும் இக்குழு அமைக்கப்பட்டது.
3430 வீடுகள்... 154 வணிக கட்டடங்கள்

பட மூலாதாரம், UGC
இக்குழுவினர் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை மற்றும் மலையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு நடத்தியது. "கோவிந்தராஜன் குழுவினர் வந்தபோது இங்கு வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்களை அளித்தனர்" எனக் கூறுகிறார், திருவண்ணாமலை மாவட்ட மா.கம்யூ செயலாளர் செல்வன்.
கடந்த ஜூன் 25 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவிந்தராஜன் குழு சமர்பித்திருந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.
அதில், 'திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மலை மீது 1,6,7,14,24 மற்றும் 26 ஆகிய 6 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 3430 வீடுகளும் 154 வணிக கட்டடங்களும் உள்ளதாக ஆணையர் அறிக்கை அளித்துள்ளார். ' எனக் கூறப்பட்டுள்ளது.
'பொதுமக்களின் தேவையை ஏற்று உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், UGC
'வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும்'
கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 2024 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் மலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள கோவிந்தராஜன் குழு, 'ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்து ஏழு பேர் இறந்தனர்' எனக் கூறியுள்ளது.
அந்தவகையில், 'கல்லாங்குத்து என வகைப்படுத்தப்பட்டுள்ள 554 ஏக்கர் மற்றும் 28 சென்ட் பரப்பளவில் உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது. ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுத்து அகற்ற வேண்டும்' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இப்பகுதியில் சர்வே எண் 10ல் உள்ள சுமார் 554 ஏக்கர் நிலத்தை வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் கோவிந்தராஜன் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குழுவின் அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைத்தனர். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.
'குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்'

பட மூலாதாரம், Shanmugam
இந்தநிலையில், மலையில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், ரமணாஸ்ரமத்தின் பின்புறம் வசிக்கும் சண்முகம்.
மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீஸில், 'நீதிமன்ற உத்தரவின்படி மலையின் மீது கட்டப்பட்ட கட்டடங்களில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் தாமரை நகர் மின்வாரிய பிரிவு அனுப்பியுள்ள நோட்டீஸில், 'மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கண்காணிப்பு கூட்டுக் குழுவின் உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மேற்கோள் காட்டிப் பேசிய சண்முகம், " கடந்த சில வாரங்களாக கடுமையான மனஉளைச்சலில் தவிக்கிறோம். இந்த இடத்தில் ஆதார் எண் உள்பட பல்வேறு சான்றுகளை வாங்கி வைத்துள்ளோம். வேறு இடங்களைக் கொடுத்தாலும் செல்ல முடியாத சூழலில் உள்ளோம்" எனக் கூறுகிறார்.
'காலி செய்ய சொன்னால் எங்கே போவது?'
இவருக்கு பள்ளி செல்லும் வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். " அறுபது ஆண்டுகளாக கூலி வேலை செய்து சேர்த்து வைத்த வைத்த பணத்தில் தான் இங்குள்ள மக்கள் வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர்" என்கிறார்.
"மலை அசுத்தமடைந்துவிட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நாங்கள் பட்டா கேட்டு போராடி வருகிறோம். திடீரென காலி செய்ய சொன்னால் எங்கே போவது?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
"இங்குள்ள மக்கள் யாரும் காலி செய்யத் தயாராக இல்லை" எனக் கூறும் சண்முகம், "சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் மலைப் பகுதியில் ஒரு பகுதியினருக்கு மட்டும் மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது" என்கிறார்.
'இடத்தைவிட்டு நகர மாட்டோம்'

பட மூலாதாரம், UGC
கடந்த செப்டெம்பர் 15 அன்று இப்பகுதி மக்கள் பட்டா கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் மனு கொடுத்தனர். "எங்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், 'நீதிமன்ற உத்தரவை நாங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் கருத்துகளை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்' என்று மட்டும் பதில் அளித்தார்" என்கிறார் சண்முகம்.
"பிறந்ததில் இருந்தே இந்தப் பகுதியில் வசித்து வருகிறேன். வாழ்ந்தால் இங்கு தான் வாழ்வோம். வீடுகளை இடிப்பதாக இருந்தால் எங்களையும் சேர்த்து சமாதியாக்கிவிட்டு இடிக்கட்டும். இந்த இடங்களை விட்டு நகர மாட்டோம்" எனக் கூறுகிறார், இப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி.
இவர் வீட்டு வேலைகளைச் செய்து வாழ்ந்து வருகிறார். " நீதிமன்றத்தின் உத்தரவால் மனஉளைச்சலில் தவிக்கிறோம். பல நாட்களாக தூக்கம் இல்லை. ஊர் மொத்தமும் கவலையில் உள்ளது. எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்" என்கின்றனர், இங்கு வசிக்கும் சுமதி மற்றும் கீதா ஆகியோர்.
"மின்வாரியத்தில் இருந்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு எங்கே போவது எனத் தெரியவில்லை. இந்த இடம் மட்டும் இருந்தால் போதும். எங்களுக்கு வேறு எந்த உதவிகளும் தேவையில்லை" எனவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
'இப்படியொரு காரணம் அவசியமில்லை'
"இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறுவதை முரண்பாடானதாக பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், மா.கம்யூ கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செல்வன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பை நீதிமன்றம் எவ்வாறு பார்க்கிறது என்பது முக்கியமானது" என்கிறார்.
"மலையில் வசிப்பதால் அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. இந்தியாவில் பல்வேறு மலைகளில் பல்லாயிரம் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம் எனக் கூற முடியுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மலைப் பகுதியில் வசிக்கும் சுமார் இரண்டாயிரம் பேர் மனு கொடுத்துள்ளதாகக் கூறும் செல்வன், "மக்கள் வசிப்பதால் மலைப் பகுதி அசுத்தமடைந்துவிட்டதைப் போன்ற காரணத்தை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை" என்கிறார்.
'ஐந்து மாதங்கள் கடந்தும் அகற்றப்படவில்லை'
"ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நீக்குவது தான் சட்டரீதியான நடைமுறை. ஆனால், காலக்கெடு முடிந்து சுமார் ஐந்து மாதங்கள் கடந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை" எனக் கூறுகிறார், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.
கிரிவலப் பாதை மற்றும் மலையில் சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் அவர்களுக்கு சாதகமாக அரசியல் கட்சிகள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
"ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை தலைவராக நியமித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரும் பல கூட்டங்களை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்தார். அதைச் செயல்படுத்த வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை" என்கிறார், யானை ராஜேந்திரன்.

மாநகராட்சி மேயர் சொல்வது என்ன?
இதுதொடர்பாக, திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"அங்குள்ள மக்கள் அனைவரும் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாகக் கூறும் நிர்மலா வேல்மாறன், "மலைப் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவர்களில் சிலர் கட்டடம் கட்டுவதற்கு அனுமதியை வாங்கியுள்ளனர்" என்கிறார்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள், அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறும் நிர்மலா வேல்மாறன், 'நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












