விமானத்தில் சக பயணி மரணம்: பக்கத்து இருக்கையில் சடலத்தை கிடத்திய விமான நிறுவனம்

விமானத்தில் சக பயணி மரணம்: பக்கத்து இருக்கையில் பிணத்தை கிடத்திய விமான நிறுவனம்
    • எழுதியவர், மையா டேவிஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் உயிரிழந்த பயணி ஒருவரின் சடலம் தங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய தம்பதியினர் பேசியுள்ளனர்.

மிட்செல் ரிங், ஜெனிஃபர் கோலின் என்ற தம்பதி வெனிஸ் நகருக்கு விடுமுறைக் காலத்தை கழிக்கச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மெல்போர்னில் இருந்து தோஹாவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டியிருந்தது.

அந்த விமானப் பயணத்தின்போது, தங்களுக்கு அருகிலுள்ள பயணிகள் நடைபாதையில் ஒரு பெண் இறந்ததாக ஆஸ்திரேலியாவின் சேனல் 9 செய்தி ஊடகத்துக்கு அந்தத் தம்பதியினர் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தங்கள் விமானப் பயணத்தின் மீதமுள்ள நான்கு மணிநேரத்திற்கு, பிற இருக்கைகள் காலியாக இருந்தபோதிலும், அவரை நகர்த்த முன்வராமல், விமானப் பணியாளர்கள் அவரது சடலத்தை மிட்செலுக்கு அருகில் போர்வையால் மூடி வைத்ததாக தம்பதியினர் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட அசௌகரியம் அல்லது மன உளைச்சலுக்கு மன்னிப்பு கோருவதாக கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

கத்தார் ஏர்வேஸ் அல்லது பயண முன்பதிவு செய்த குவாண்டாஸ் விமான நிறுவனம் தங்களை தொடர்பு கொள்ளவோ அல்லது ஆதரவு வழங்கவோ இல்லை என்று தம்பதியினர் தெரிவித்தனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் விமானத்தில் உள்ள பயணிகள் கவனிக்கப்படுவதை உறுதி செய்ய ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

அதன் பிறகு, பாதிக்கப்பட்ட பயணிகளையும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரிடமும் பேசியதாகவும் அவர்களின் கவலைகளில் கவனம் செலுத்தியதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்தது.

'சடலத்துக்கு அருகில் அமர்ந்திருந்தேன்'

விமானத்தில் சக பயணி மரணம்: பக்கத்து இருக்கையில் பிணத்தை கிடத்திய விமான நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சேனல் 9 செய்தி ஊடகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மிட்செல் ரிங் அந்தப் பெண்ணின் உடல்நிலை குலைந்தபோது, விமான ஊழியர்கள் உடனடியாக வந்து அவரைப் பார்த்ததாகத் தெரிவித்தார். ஆனால் "துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை, அதைக் கண்முன்னே பார்ப்பதற்கு மிகவும் துயரமாக இருந்தது" என்று கூறினார்.

விமான ஊழியர்கள் அவரது உடலை பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் இருக்கும் இடத்துக்கு நகர்த்த முயன்றனர். "ஆனால் அந்தப் பெண்மணி அளவில் பெரிதாக இருந்ததால், அவர்களால் அவரை பயணிகள் நடந்து செல்லும் பாதை வழியாகத் தூக்கிச் செல்ல முடியவில்லை" என்று அவர் கூறினார்.

அவருக்கு அருகில் இருக்கைகள் காலியாக இருப்பதைக் குழுவினர் பார்த்ததாக மிட்செல் கூறினார். 'தயவுசெய்து நீங்கள் நகர முடியுமா?' என்று விமான ஊழியர்கள் கேட்டதாகவும் 'கண்டிப்பாக, எனக்குப் பிரச்னை இல்லை' என்று தான் பதிலளித்ததாகவும் அவர் கூறுகிறார்.

"பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணை நான் இருந்த இருக்கையில் அமர்த்தினர்." அவரது மனைவி கோலின் தனக்கு அருகில் இருந்த காலி இருக்கையில் மாறி அமர்ந்து கொண்டார். அதன் பின்னர் பிற இருக்கைகள் காலியாக இருந்தபோதிலும், தான் மாறி அமர்வதற்கான வாய்ப்பை விமானப் பணியாளர்கள் வழங்கவில்லை என்று மிட்செல் தெரிவிக்கிறார்.

நான்கு மணிநேரம் கழித்து விமானம் தரையிறங்கியபோது, மருத்துவ ஊழியர்கள் மற்றும் போலீசார் வரும்போது பயணிகளைத் தங்கள் இருக்கைகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

பின்னர் ஆம்புலன்ஸ் அதிகாரிகள் அந்தப் பெண்ணின் உடலை மூடியிருந்த போர்வையை அகற்றியதாகவும், மிட்செல் அவரது முகத்தைப் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

கவனிப்புக்கான நெறிமுறை வேண்டும்

விமானத்தில் சக பயணி மரணம்: பக்கத்து இருக்கையில் சடலத்தை கிடத்திய விமான நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஊழியர்களுக்கு "வாடிக்கையாளர்களின் நலனைக் கவனிப்பது தொடர்பான கடமையுணர்வு" இருக்க வேண்டும் என்று தம்பதி கூறினர்.

"உங்களுக்கு ஆதரவு தேவையா, உங்களுக்கு சில ஆலோசனைகள் தேவையா?" என்பதை உறுதிப்படுத்த எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டியது அவர்களின் கடமை" என்றனர்.

கோலின் இந்த அனுபவத்தை "அதிர்ச்சிகரமானது" என்று குறிப்பிட்டார். "அந்தப் பெண்ணின் மரணத்திற்கு விமான நிறுவனத்தை நாங்கள் பொறுப்பேற்கச் சொல்ல முடியாது என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம், ஆனால் விமானத்தில் உள்ள பயணிகளைக் கவனிக்க ஒரு நெறிமுறை இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

கத்தார் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் எண்ணங்கள் எங்கள் விமானத்தில் துரதிர்ஷ்டவசமாக காலமான பயணியின் குடும்பத்தினருடன் உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

"இந்தச் சம்பவம் ஏற்படுத்திய எந்தவொரு சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். மேலும் எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப பயணிகளைத் தொடர்புகொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து குவாண்டாஸ் செய்தித் தொடர்பாளர், "இதுபோன்று விமானத்தில் நடக்கும் சம்பவங்களைக் கையாள்வதற்கான செயல்முறை, விமானத்தை இயக்கும் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஆகையால், கத்தார் ஏர்வேஸ் நிறுவனமே இதைக் கையாளும்" என்று தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)