ChatGPT: செயற்கை நுண்ணறிவு போட்டியில் அமெரிக்காவை வெல்லுமா சீனா?

அமெரிக்கா, சீனா, செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டெரெக் காய் & அன்னாபெல் லிங்
    • பதவி, பிபிசி நியூஸ்

ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலைகள், இந்த நவீன தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அத்துடன் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘சிப்’களை (Semiconductor) சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா ஏற்கெனவே விதித்துள்ள தடையும் இந்தத் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைய சீனாவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பம் முழுமையான வளர்ச்சி நிலையை எட்ட இன்னும் பல ஆண்டுகளாகும் என்பதால், இதுதொடர்பான போட்டியில் சீனா வெற்றி பெறும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து, அமெரிக்க இணைய சேவை வழங்கும் நிறுவனங்களைவிட, சீன இணைய நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளன என்று சீனாவின் தொழில்நுட்பக் கொள்கையை வகுக்கும் அமைப்பான டிரிவியத்தின் தலைவர் கேந்த்ரா ஷேஃபர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

அதேநேரம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நவீன உபகரணங்களைத் தயாரிப்பதில் அமெரிக்காவை ஒப்பிடும்போது சீனா 10 அல்லது 15 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

'சிலிகான் வேலி' என்னும் பலம்

தொழில்முனைவோருக்கு உலகின் தலைசிறந்த இடமாக அமைந்துள்ள சிலிகான் பள்ளத்தாக்கு (Silicon Valley), அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பலமாக விளங்குகிறது. இன்றைய நவீன உலகை கட்டமைத்துள்ள தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், இன்டெல் போன்றவற்றின் பிறப்பிடமாக ‘சிலிகான் வேலி’ திகழ்கிறது.

புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க முயல்வோரை ஊக்குவிப்பதை ஒரு கலாசாரமாகவே கொண்டுள்ள இந்நிறுவனங்கள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கின்றன என்கிறார் ஹாங்காங்கில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையத்தின் இயக்குநர் பாஸ்கல் ஃபங்க்.

ஒரு தயாரிப்பை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக மட்டும் ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளைச் செலவிடுகின்றனர் என்கிறார் அவர்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் OpenAI நிறுவனம், லாப நோக்கமின்றி பல ஆண்டுகள் இயங்கியது. இயந்திரங்களின் கற்றல் திறன் குறித்து இந்நிறுவனம் மேற்கொண்ட தொடர் ஆய்வுகளே, ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு ரோபோ உருவாக வழி வகுத்தது.

அமெரிக்கா, சீனா, செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர்

பட மூலாதாரம், Getty Images

இதுபோன்ற ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் தன்மை பெரும்பாலான சீன நிறுவனங்களிடம் இல்லை. ஒரு தொழில்நுட்பம் பிரபலமடைந்து, அதுகுறித்துப் பரவலாகப் பேசப்படும்போதுதான் சீன நிறுவனங்கள் அதைக் கைக்கொள்வதில் கவனம் செலுத்துகின்றன.

சீன நிறுவனங்களின் இந்த அணுகுமுறையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவுக்கு உள்ள முக்கியமான சவால் என்கிறார் ஃபங்க்.

ஆனால், அமெரிக்காவில் முதலீட்டாளர்களும்கூட நாட்டின் ஆய்வுப் பணிகளை ஊக்குவிப்பவர்களாக உள்ளனர். 2019இல், OpenAI தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தது.

“சமகாலத்தின் நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு விளங்குகிறது. உலகின் தீர்க்க முடியாத, சவாலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண இந்தத் தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா.

சீனாவுக்கு உள்ள சிக்கல்கள்

1.4 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ளதால், அதிக நுகர்வோரை கொண்ட தேசமாகவும் சீனா விளங்குகிறது. இந்த மக்கள்தொகை எண்ணிக்கையும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குச் சாதகமான காரணி என்கிறார் ரேஸ் கேபிடல் எனும் முதலீட்டு நிறுவனத்தின் பங்குதாரரான எடித் யூங்.

அனேகமாக சீன மக்கள் அனைவரும் WeChat எனும் செயலியை பயன்படுத்துகின்றனர். குறுஞ்செய்திகள் அனுப்புவது, மருத்துவரின் ஆலோசனைக்கான நேர ஒதுக்கீட்டைப் பெறுவது, வருமான வரி தாக்கல் செய்வது எனப் பல்வேறு பணிகளுக்கு இந்தச் செயலியை சீனர்கள் உபயோகிக்கின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது இதுபோன்ற செயலிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்த உதவும் என்கிறார் யூங்.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, எந்த அளவுக்கு தரவுகள் உள்ளனவோ, அந்த அளவுக்கு அதை மேம்படுத்த முடியும் என்று கூறுகிறார் அவர்.

அமெரிக்கா, சீனா, செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவை ஒப்பிடும்போது சீனாவிடம் அதிகப்படியான தரவுகள் உள்ளன. இது நல்லதோ, கெட்டதோ, ஆனால் தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பான விதிமுறைகள் சீனாவில் பெரிதாக இல்லை என்கிறார் அவர்.

சான்றாக, கண்காணிப்பு கேமராவை கொண்டு ஒருவரின் முகத்தை அங்கீகரிக்கும் வசதி, சீனாவில் அனேகமாக அனைத்து பொது இடங்களிலும் உள்ளன எனக் கூறும் யூங், இந்த தரவுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் என்கிறார்.

சீனாவின் தொழில்நுட்ப சமூகம், அமெரிக்காவைவிட பின்தங்கி இருப்பதாகத் தோன்றிலும், சீன ஆராய்ச்சியாளர்கள் திறன் மிக்கவர்களாகவே உள்ளனர் என்று, ‘AI Superpowers: China, Silicon Valley, and the New World Order’ என்ற தமது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் லீ கை ஃபு.

ஒரு புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பை நகலெடுத்ததைப் போலவே வேறொன்றை உருவாக்குவது (Copying) அங்கு அனுமதிக்கப்பட்ட நடைமுறையாக உள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இயங்கும் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் கோலோச்சுவதற்கான சூழலை இதுபோன்ற நடைமுறைகள் உருவாக்கித் தருகின்றன.

அமெரிக்கா, சீனா, செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட காப்புரிமை விஷயங்கள் சீனாவில் பெரும் பிரச்னையாக உள்ளது என்கிறார் லீ. இதுபோன்ற பிரச்னைகள் தொழில்முனைவோரை கடும் போட்டிக்கு ஆளாக்குகின்றன என்கிறார் அவர்.

1980களில் இருந்து சீனாவின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டுதான் வருகிறது. நாட்டின் இந்த வளர்ச்சி உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறையை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் பாஸ்கல் ஃபங்க்.

அமெரிக்காவை விஞ்சுமா சீனா?

சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தனித்துவமான திறன்களைக் கொண்டிருந்தாலும், அரசின் தணிக்கை போன்ற நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவு தொடர்பான மென்பொருளான சேட்போட்ஸை (chatbots) வடிவமைப்பைப் பாதிக்குமா என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.

இணையம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் பன்னாட்டு நிறுவனமான பைடு (Baidu) குறித்து, சீனாவில் யாரும் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புவார்கள் என்று தான் எண்ணவில்லை என்கிறார் யூங். ஏனெனில் இந்நிறுவனம் தொடர்பான விஷயங்கள் தணிக்கை செய்யப்பட்டவை என்பதை சீனர்கள் நன்கு அறிவார்கள் என்கிறார் அவர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சி, இந்தத் துறையில் சீனாவின் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்பதே தற்போதைய பெரிய கவலை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உயர் செயல்திறன் கொண்ட கணினிகளில் பயன்படுத்தப்படும் ‘சிப்’புகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது ஒரு வர்த்தகப் போரே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனலாம்.

லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் சிப்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான வன்பொருள் (Hardware) கட்டமைப்புக்கும் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.

நிவிடியா போன்ற அமெரிக்க நிறுவனங்களே சிப்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், இவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்தத் தடை நீக்கப்பட்டால் மட்டுமே, சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், Open AI நிறுவனத்தின் ChatGPT ரோபாவுக்கு எதிராக போட்டியிட முடியும் என்கிறார் ஃபங்க்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா ஒருபோதும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டுதான் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. எனவே இந்தத் தடையானது லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன் போன்ற நுகர்வோர் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளைப் பாதிக்காது என்கிறார் திருமதி ஷேஃபர்.

அமெரிக்கா, சீனா, செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர்

பட மூலாதாரம், Getty Images

செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் தொழில்நுட்பரீதியாக அமெரிக்கா போட்டுவரும் முட்டுக்கட்டையைத் தகர்த்தெறிய சீனாவுக்கு அமெரிக்காவை போல் ஒரு சிலிக்கான் வேலி தேவை.

அப்போத தான் பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் திறமையான ஆராய்ச்சியாளர்களை ஈர்த்து இந்த நவீன தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா வளர இயலும் என்கிறார் ஃபங்க்.

பெரிய அளவில் நிதி ஒதுக்கி வருவதன் மூலம், சிப் உற்பத்தி நிறுவனங்களை சீன அரசு ஊக்குவித்து வருகிறது எனவும் அவர் கூறுகிறார்.

ஆனால் சீனாவின் சிப் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைவரான ஜாவோ வெய்குவோ கடந்த மார்ச் மாதம் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானார்.

“வெய்குவோவின் கைது நடவடிக்கை, மற்ற அரசு நிறுவனங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி என்கிறார் ஷேஃபர். சிப் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பொருளாதாரரீதியாக ஊக்கமளிப்பது தொடர்பாக அரசுக்கு குழப்பம் எதுவும் வேண்டாம் என்று அறிவுறுத்தும் ஷோஃபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளைத் தொடர வேண்டிய நேரம் இது,” என்கிறார் அவர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்குத் தேவையான ‘சிப்’களை சொந்தமாக உற்பத்தி செய்ய இயலாமல், இதுகுறித்த ஆாாய்ச்சிகளை மட்டும் தொடர்வது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் சீனாவுக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: