முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இந்தியா - அஸ்வின் அரிய சாதனை

அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வெளிநாடுகளில் சிறப்பான பந்துவீச்சு, 5 விக்கெட் வீழ்த்தியது, 700 விக்கெட்டுகளைக் கடந்தது என அஸ்வின் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.

அஸ்வினின் அபாரமான பந்துவீச்சால் டோமினிகாவில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது.

அற்புதமாகப் பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரின் டெஸ்ட் வாழ்க்கையில் 33-வது முறையாக 5-வது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

24.3 ஓவர்கள் வீசிய அஸ்வின் 6 மெய்டன்கள் எடுத்து, 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வினுக்கு துணையாகப் பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

இந்தியா வலுவான தொடக்கம்

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

முதல்நாள் ஆட்டத்தின் பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப்பின் முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 23 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும், மேற்கிந்தியத்தீவுகள் அணியைவிட 70 ரன்கள் குறைவாக இந்திய அணி இருக்கிறது.

அறிமுக வீரராகக் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

சொதப்பல் பேட்டிங்

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு தகுதிபெறாமல் வெளியேறிய நிலையில் நம்பிக்கையற்றநிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்த டெஸ்டை எதிர்கொண்டது. அதற்கு ஏற்றார்போல் அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக பேட் செய்தனர்.

31 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த மேற்கந்தியத்தீவுகள் அணி அடுத்த 35 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதேபோல 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த அந்த அணி, அடுத்த 33 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

நம்பிக்கையளித்த அறிமுக வீரர்

இளம் வீரர் அலிக் அதானேஸ்(47) ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும். அதானேஸ் பேட்டிங்கில் ஒருவிதமான ஆக்ரோஷம், ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடியது, மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு விரட்டியது என அனுபவமிக்க பேட்டர்போல் ஆடினார். ஆனால், அஸ்வின் பந்துவீச்சில் பேட்டில் எட்ஜ் எடுத்து கேட்ச்கொடுத்து அதானேஸ் ஆட்டமிழந்தார்.

ஏற்கெனவே ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்த அதானேஷ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இந்த ஸ்கோரை அடித்துள்ளார்.

அதற்கு அடுத்தார்போல் கேப்டன் பிராத்வெய்ட் சேர்த்த 20 ரன்கள்தான் அதிகபட்சமாகும். ஒட்டுமொத்தமாக மேற்கிந்தியத்தீவுகள் பேட்டிங் பல்இல்லாத நிலையில் இந்தியப் பந்துவீச்சை எதிர்த்து விளையாட திராணியற்று இருந்தது.

கணிக்கத் தவறிய பிராத்வெய்ட்

பிராத்வெய்ட்

பட மூலாதாரம், Getty Images

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் பிராத்வெய்ட், ஆடுகளத்தின் ஈரப்பதத்தை கணிக்கவும் தவறிவிட்டார். ஒருவேளை பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்திருப்பார்கள். முதல்நாள் ஆட்டம் ஸ்வாரஸ்யமாக நகர்ந்திருக்கும்.

ஆனால், ஆடுகளத்தின் ஈரப்பதத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு நெருக்கடி அளித்தனர்.

ஜெய்ஸ்வால் நிதானம்

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை டி20 போட்டிகளில் பிரமாதப்படுத்திய ஜெய்ஸ்வாலுக்கு அறிமுக ஆட்டமாக இருந்தது. நிதானமாகத் தொடங்கிய ஜெய்ஸ்வால், முதல் ரன்னை அடிக்க 16 பந்துகளை எடுத்துக்கொண்டு, அல்ஜாரி ஜோஸப் ஓவரில் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் பவுண்டரி அடித்து தனது ரன்கணக்கைத் தொடங்கினார். அதன்பின் தனது வழக்கமான பாணியில் ஜெய்ஸ்வால் ஆடத் தொடங்கி, ரன்களைச் சேர்த்தார்.

ரோஹித் சர்மா கடந்த பல டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை, 30 ரன்கள் சராசரியைக் கூட எட்டவில்லை என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்திருந்தனர்.

அதற்குப் பதிலடியாக இந்த டெஸ்டில் ரோஹித் சர்மா நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்துள்ளார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தநிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்த ஜோடி நீடிக்குமா அல்லது பிரிக்கப்படுமா என்பது தெரியும்.

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

நெருக்கடி தரும் பந்துவீச்சு

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரக்கீம் கார்ன்வால், வாரிகன் இருவரும் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுக்கு பெரிதாக நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீசவில்லை. ஆடுகளத்தில் ஈரப்பதம் காய்ந்தபின் பந்து நன்றாக சுழன்றாலும், அதை விக்கெட் ஆக்கும் முயற்சியில் பந்துவீச்சு அமையவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெய்ட், சந்தர்பால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி முகமது சிராஜ் நெருக்கடி அளிக்கும் விதத்தில் பந்துவீசினார். பிராத்வெய்ட்டுக்கு 3 முறை பந்து பேட்டில் அவுட்சைட் எட்ஜ் எடுத்தாலும் அது கேட்சாகவில்லை.

வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். தனது முதல் 4 ஓவர்களில் 4 ரன்கள் கொடுத்து 2 மெய்டன்களையும் எடுத்தார்.

தந்தையும், மகனும்-அஸ்வினும்

9-வது ஓவரில் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார். அதற்கு ஏற்ற பலனும் கிடைத்தது. சர்வதேச அளவில் பெருத்த அனுபவம் கொண்ட அஸ்வின், மேற்கிந்தியத்தீவுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டிருந்ததால் ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருந்தார்.

அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து அஸ்வின் வீசிய பந்தை தடுத்து ஆட சந்தர்பால் முயன்றார். ஆனால், ஆடுகளத்தின் ஈரப்பத்தில் பந்து மெதுவாக வந்து சுழன்று பேட்டின் நுனையில் பட்டு க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

சந்தர்பாலின் தந்தை ஷிவ்நரைன் சந்தர்பாலை இதற்குமுன் 4 முறை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தநிலையில் அவரின் மகனையும் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தையையும், மகனையும் ஆட்டமிழக்கச் செய்த 5-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் கேப்டன் பிராத்வெயிட் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு எக்ஸ்ட்ராகவர் திசையில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அஸ்வினை பந்துவீச அழைத்தமைக்கு 2 விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்திக்கொடுத்து நெருக்கடியளித்தார்.

ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே ரேமன் ரீபர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அருமையாக கேட்ச் பிடிக்கவே ரீபர் 2 ரன்னில் வெளியேறினார்.

ரவிந்திர ஜடேஜா தனது பங்கிற்கு பிளாக்வுட் விக்கெட்டை வீழ்த்தினார். மிட்ஆப் திசையில் முகமது சிராஜ் ஒற்றைக்கையில் அருமையாக கேட்ச் பிடித்து பிளாக்வுட்டை பெவிலியன் அனுப்பினார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது.

அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

நிரூபித்த அஸ்வின்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாய்ப்புக் கிடைக்காமல் இருந்த அஸ்வின் இந்த டெஸ்டில் தனது இருப்பை தொடக்கத்திலேயே நிரூபித்தார். 2 செசன்களிலும் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகளுக்கு நெருக்கடி அளித்தார்.

முதல் செசனில் அஸ்வின் சந்தர்பாலையும், பிராத்வெய்டையும் வீழ்த்தினார். 2வது செசனில் அல்ஜாரி ஜோஸப், அலிக் அதானேஸ், ஜோமல் வாரிக்கன் ஆகியோர் விக்கெட்டுகளை சாய்த்து அஸ்வின் நிரூபித்தார்.

ஹோல்டர் ஏமாற்றம்

உணவு இடைவேளைக்குப்பின், 2-வது செசன் தொடங்கியது. அஸ்வின், ஜடேஜா தங்கள் ராஜ்ஜியத்தை தொடர்ந்தனர். ஜோஷ்வா டி சில்வா 2 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அஸ்வினின் கூக்ளி, கேரம்பால் போன்றவை ஹோல்டர், அதானேஷுக்கு பெரிய குடைச்சலாக இருந்தது. அதேநேரம் அஸ்வின் ஏதேனும் தவறான பந்தை வீசினால் அதை பவுண்டரிக்கு அனுப்பவும் இருவரும் தவறவில்லை.

சிராஜ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஹோல்டரின் பலவீனம் அறிந்து அவருக்கு ஷார்ட் பந்தை சிராஜ் வீசவே அதை ஹோல்டர்(18) டீப்-பேக்வார்ட் திசையில் தூக்கி அடித்தார். ஆனால், அங்கு நின்றிருந்த தாக்கூர் கேட்ச் பிடித்து அவரை வீழ்த்தினார்.

அடுத்துவந்த அல்ஜாரி ஜோஸப் 4 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். விக்கெட்டுகள் சரிந்தாலும் அரைசதம் நோக்கி நகர்ந்த இளம் வீரர் அதானேஷ் 47 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி வரிசையில் களமிறங்கிய கீமர் ரோச்(1) ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், வாரிகன் ஒரு ரன்னில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார்.

3வது செசன் தொடங்கிய 25 நிமிடங்களில் மேற்கிந்தியத்தீவுகளின் முதல்இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 64.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி ஆட்டமிழந்தது.

அஸ்வின் சாதனை

இந்த டெஸ்டில் அஸ்வின் புதிய சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அனைத்திலும் சேர்த்து 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர்களில் 3வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறி மைல்கல் எட்டியுள்ளார்.

தற்போது அஸ்வின் 702 விக்கெட்டுகளுடன் இருக்கும் நிலையில், 2வது இடத்தில் இருக்கும் ஹர்பஜன் சிங்கின் 707 விக்கெட்டுகளை முறியடிக்க இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த டெஸ்டிலோ அல்லது அடுத்த போட்டியிலோ அஸ்வின் முறியடித்து 2வது இடத்துக்கு முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: