இமயமலை நிலநடுக்க பகுதியிலும் அசையாத கட்டடங்கள்: பழங்கால கட்டட முறை

பட மூலாதாரம், Tarang Mohnot
- எழுதியவர், தராங்க் மொக்னாட்
- பதவி, ㅤ
1905ம் ஆண்டு இமாசலப்பிரதேசத்தில் ஒரு மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. உறுதியான தோற்றம் கொண்ட பல கான்கிரீட் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் சரிவதைப் போல சரிந்தன. ஆனால், சில நகரங்களில் காட் குனி எனப்படும் பழங்கால இமாலய கட்டுமானத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் மட்டும் இதில் தப்பித்தன.
ஒரு கதகதப்பான செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த முறையில் கட்டப்பட்ட நக்கர் கோட்டை என்ற கட்டுமானத்தை பார்க்கச் சென்றேன். இந்தப் பகுதியின் அதிகாரம் மிகுந்த குல்லு மன்னர்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த இந்த இடம் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த மோசமான நிலநடுக்கத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நின்று கொண்டிருந்தது அந்த ‘நக்கர் கேசல்’ எனப்படும் நக்கர் கோட்டை.
நிலநடுக்கத்தின் கரங்கள் நீண்டிருந்த பகுதியில் இந்தக் கோட்டைக்கும், காட் குனி முறையில் கட்டப்பட்ட பிற வீடுகளுக்கும் எந்தவிதமான நிலநடுக்கப் பாதிப்புகளும் ஏற்படாமல் இருந்ததை இந்திய மண்ணியல் ஆய்வு நிறுவன (Geological Survey of India) அதிகாரிகள் வியந்து பார்த்தார்கள்.
"மேற்பகுதி பாரம் மிகுந்த முறையில் கட்டப்பட்ட இந்த வீடுகள் பாதிப்படையாமல் இருந்தது முதலில் பார்ப்பதற்கு இயற்கைக்கு மாறானதாகத் தோன்றியது. ஆனால், மரம் சேர்த்துக் கட்டப்பட்ட சுவர்களின் அதிர்வுத் தாங்கும் திறன் பற்றி அறிந்தால்தான் இந்த வியப்பு விலகும்,” என்று அவர்கள் எழுதினார்கள்.
இந்த காட் குனி முறையில் கட்டப்பட்ட கட்டுமானங்களுக்கான மிக அழகான வாழும் எடுத்துக்காட்டுகளில் ஒன்று இந்த கோட்டை. ஆனால், இந்தப் பகுதியில் காட் குனி முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வீடுகள் கட்டப்படுகின்றன. அடுக்கு அடுக்காக ‘பிணை பூட்டு’ (இன்டர் லாக்கிங்) முறையில் தேவதாரு மரங்களைக் கொண்டு கட்டப்படுவதே இந்த முறையின் அடையாளம்.
இந்தக் கட்டுமான முறையில் கலவை ஏதும் பயன்படுத்துவதில்லை. நக்கர் கோட்டை தற்போது ஒரு விடுதியாக, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒன்றாக உள்ளது.
சாம்பல் நிறக் கற்களையும், மரப்பலகைகளையும் படுக்கை வாட்டில் மாற்றி மாற்றி வைத்து கட்டப்பட்ட, துருவேறியதைப் போலத் தோன்றும் இதன் சுவர்கள் காலம் கடந்த தன்மையை காட்டுகின்றன.
காட் குனி ஒரு புத்திக் கூர்மையான வடிவமைப்பு. "தேவதாரு மரங்களும், கற்களும் அழகான சமநிலையையும், கம்போசிஷனையும் தருகின்றன," என்கிறார் நார்த் என்ற உள்ளூர் கட்டுமான முறைகளை ஆராய்வதற்கான அமைப்பின் நிறுவனரான ராகுல் பூஷண்.
"கற்கள் கட்டுமானத்தின் எடையைக் கூட்டுவதால் மிகவும் தாழ்வான புவியீர்ப்பு மையம் ஏற்படுகிறது. அத்துடன், தனது நெகிழ்வுத் தன்மையால் மரப் பலகைகள் கட்டுமானத்தை இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன," என்கிறார் அவர். உலகில் மிகவும் அதிகமான நிலநடுக்க செயல்பாடுகள் உள்ள இமய மலைக்கு இந்த முறை கச்சிதமாகப் பொருந்துகிறது.
கதவுகள், ஜன்னல்கள் மிகச் சிறியதாகவும், அவற்றைச் சுற்றியுள்ள அருகால்கள் மிகுந்த தடிமனோடும் இருப்பதால், நிலநடுக்கம் ஏற்படும் நேரங்களில் திறப்புகளில் ஏற்படும் அழுத்தத்தின் அளவு குறைவாக இருக்கும். தவிர, இது போன்ற திறப்புகள் கட்டுமானங்களில் இருக்கும் வகையில் கட்டுமானங்கள் அமைக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Tarang Mohnot
இதனால், நிலநடுக்கத்தில் ஏற்படும் விசை, நிலத்துக்கு எளிதாக கடத்தப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பலகை வடிவக் கூரைகள் முழு கட்டுமானமும் சிதையாமல் நிலைத்திருக்க உதவுகின்றன.
காட் குனி என்ற சொல் சம்ஸ்கிருத மொழியில் ‘மர மூலை’ என்று பொருள் தரும் சொல்லில் இருந்து பிறந்த ஒன்று. இந்தக் கட்டுமான முறையின் சாரத்தை இந்த சொல் விளக்குகிறது என்கிறார் தேடி சிங். இமாசலப் பிரதேசத்தில் இன்னும் எல்லா வீடுகளும் காட் குனி முறையில் கட்டப்படும் செஹ்னி கிராமத்தில் இன்னும் இருக்கிற சில மேஸ்த்ரிகளில் ஒருவர் இவர்.
“காட் குனி முறையில் கட்டப்பட்ட எந்தக் கட்டுமானத்தை வேண்டுமானாலும் பாருங்கள், அவற்றின் மூலையில் பிணை பூட்டு முறையில் மர உத்தரங்கள் அமைக்கப்பட்டிருப்பதை தெளிவாகப் பார்க்க முடியும். இந்த மர அடுக்குகளுக்கு நடுவில் உள்ள இடைவெளிகள் சிறு கற்கள், வைக்கோல் போன்றவை கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். நுட்பமான இந்த பிணை பூட்டு முறை, நிலநடுக்கம் ஏற்படும் நேரங்களில் லேசாக நகரவும், சமாளித்துக்கொள்ளவும் ஏற்ற வகையில் நெகிழ்வுத்தன்மை மிக்கவை” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Tarang Mohnot
காட் குனி கட்டுமானங்கள் இரண்டு அடுக்கு சுவர்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்பதையும், இதனால், கடும் குளிர் காலத்தில் கட்டுமானம் உட்புறத்தில் கதகதப்போடும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும் என்கிறார். குழியும், உயர்த்திக் கட்டப்படும் கற்படுக்கையும் மேற்கட்டுமானத்தை வலுப்படுத்துவதோடு, தண்ணீரும், பனியும் நிலத்தில் ஊறுவதற்கும் உதவி செய்கின்றன என்கிறார் தேடி சிங்.
இந்தக் கட்டுமான முறை நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதோடு, இந்தப் பகுதியின் வேளாண் சமூக வாழ்க்கை முறைக்கும் உகந்த முறையில் இருக்கிறது. வழக்கமாக, தரைத்தளம் கால்நடைகளுக்கும், மேல் தளங்கள் மனிதர்கள் வாழவும் ஒதுக்கப்படுகின்றன. மேல் அடுக்குகள் சூரிய ஒளி காரணமாகவும், கீழே வாழும் கால்நடைகளின் உடற்சூட்டாலும் கொஞ்சம் கதகதப்பாக இருக்கும்.
"ஒரு கான்கிரீட் கட்டுமானத்தில் வாழ்வது குறித்து என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது. அவை எங்கள் வாழ்க்கை முறைக்கு ஒத்துவராது ," என்கிறார் மோஹினி. நக்கர் அருகே உள்ள சாச்சோகி என்ற சிற்றூரில் நூற்றாண்டு பழமையான மரத்தாலும், கல்லாலும் கட்டப்பட்ட வீட்டில் அவர் வாழ்கிறார். காட் குனி வீடுகளில் கால் நடைகளை வெளியே சுதந்திரமாக விட முடிகிறது என்றும், பால் கறப்பது, கடுங்குளிர் போன்ற நேரங்களில் அவற்றை உள்ளே வைத்துக்கொள்ள முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.
பெரும்பாலும் இந்த வீடுகள் கும்பல் கும்பலாக கட்டப்படுகின்றன. இதனால், கால்நடைகளை கலந்து பார்த்துக்கொள்ள முடிகிறது என்றும், பொருள்களை இருப்பு வைக்கும் இடங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Tarang Mohnot
இந்தக் கட்டுமானத் தொழில் நுட்பம் தலைமுறை தலைமுறையாக கைமாற்றித் தரப்படுகிறது. ஆனால், பல ஊர்களில் கான்கிரீட் வீடுகள் பெருகுவதால் இந்த பாரம்பரியம் மறைந்துகொண்டிருக்கிறது. ஆனால், கான்கிரீட் வீடுகளைக் கூட சிலர் கல் டைல்ஸ் ஒட்டியும், மரக் கட்டமைப்பு போல தோன்றும் வால் பேப்பர்களை ஒட்டியும் தங்கள் பாரம்பரிய கட்டுமானத்தின் அடையாளத்தை காக்க முற்படுகின்றனர்.
காரணம், காட் குனி முறையில் வீடு கட்டுவதற்கு தேவையான மூலப் பொருள்கள் விலை அதிகமாகவும், கிடைப்பதற்கு அரியவையாகவும் உள்ளன. 1864ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியில் வனத்துறை உருவாக்கப்பட்டது. இது காடுகளின் உரிமையை உள்ளூர் மக்களிடம் இருந்து மாற்றி அரசாங்கத்துக்கு அளித்தது.
இதனால், தேவதாரு மரங்கள் வணிகரீதியில் வெட்டப்படுவது அதிகரித்தது. காடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை சீர் செய்வதற்காக 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஹிமாச்சலி குடும்பத்துக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒரு மரத்தைப் பெற்றுக்கொள்வது உரிமை ஆனது. இதை வைத்து வீடு கட்டுவது இயலாத காரியம்.
"இருக்கும் சூழலோடு பொருந்தவில்லை என்பதால், கான்கிரீட் கட்டுமானங்கள் கண்ணுக்கு உறுத்தலாக உள்ளன. உள்ளூர் மக்கள் மர வீடுகள் கட்ட விரும்பவில்லை என்பதல்ல. அவர்களுக்கு வேண்டிய மூலப்பொருள்கள் கிடைப்பதில்லை,” என்கிறார் ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கல்ச்சுரல் அன்ட் ஹெரிடேஜ் ஸ்டடிஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநரும் மானுடவியல்-தொல்லியல் வல்லுநருமான சோனாலி குப்தா.

பட மூலாதாரம், Tarang Mohnot
இமாச்சலப்பிரதேச பாரம்பரிய கட்டுமான முறை செலவுபிடிப்பதாகவும், சாத்தியமற்றதாகவும் ஆகிவரும் நிலையில், கான்கிரீட் தொழில் துறை சூடுபிடிக்கத் தொடங்கியது.செங்கல்லும், சிமெண்டும் விலை மலிவாகவும், விரைவாகவும் வீடு கட்ட உள்ளூர் மக்களுக்கு உதவுகிறது. “காட் குனி கட்டுமானங்கள் ஒரு முறை அதிக முதலீடு செய்யத் தேவையுள்ள முறையாக உள்ளது. ஆனால், அவ்வளவு செலவு செய்ய மக்களால் முடியவில்லை” என்கிறார் பூஷண்.
இப்படி காட் குனி முறையில் கட்டுவது குறைவதால் இந்த முறையில் கட்டும் வேலை தெரிந்த மேஸ்திரிகள் கிடைப்பதும் குறைந்துவருகிறது. அத்துடன் கான்கிரீட் கட்டுமானங்கள் நீடித்து நிலைப்பவை என்ற எண்ணமும் ஓங்கி வருகிறது. ஆனால், கடந்த நூறாண்டுகளில் 4 அளவுக்கு அதிகமான தீவிரத்தில் ஏராளமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தருணங்களில் கான்கிரீட் வீடுகள் பாதிக்கப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது தவிர, இமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் புதிய பண்பாட்டு மாற்றங்களுக்கு ஏற்றதாகவும் காட் குனி வீடுகள் இல்லை. இந்த வீடுகளில் மிகவும் சிறிய கதவுகள் உள்ளன என்கிறார் மோஹினி. “இந்த வாசல்களில் குனிந்து செல்வது வீட்டு தெய்வத்தின் முன்பு குனிந்து செல்வது போல. ஆனால், இன்று மக்கள் யார் முன்பும் குனிவதை விரும்புவதில்லை. தெய்வத்தின் முன்புகூட” என்கிறார் அவர்.
இந்த சவால்கள் இருந்தாலும் உள்ளூர் அமைப்புகள் இந்தப் பாரம்பரியமான கட்டுமான முறையை ஊக்குவிக்கும் வழிகளை தேடிவருகின்றன.
Heritage Architecture என்ற பிபிசியின் பயணத் தொடர். உலகின் மிக சுவாரசியமான, வழக்கத்துக்கு மாறான, அழகியல் சார்ந்த கட்டுமான முறைகளை பதிவு செய்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












