"தலைமை தேர்தல் ஆணையரை சிபிஐ இயக்குநர் நியமன நடைமுறை போல செய்யுங்கள்" - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுசித்ரா மோஹந்தி
- பதவி, பிபிசிக்காக
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, தேர்தல் ஆணையக் கட்டமைப்பில் உள்ள தேக்கத்தைச் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் இருக்கக்கூடாது என்றது.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரின் நியமனம் சுதந்திரமாக நிகழ வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனூப் பர்ன்வால், அஷ்வினி குமார் உபாத்யாய், டாக்டர் ஜெயா தாக்குர், அசோசியேஷன் ஃபார் டெமோக்ராடிக் ரீஃபார்ம்ஸ் எனும் தன்னார்வ அமைப்பு ஆகியோர் இம்மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
“நாடாளுமன்றம் இதற்கான தனிச்சட்டத்தைக் கொண்டு வரும் வரையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்,” என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
“வலிமையற்ற தேர்தல் ஆணையம் மிக மோசமான சூழலை உருவாக்கும். மக்களின் தேர்வினைப் பிரதிபலிக்கும் தேர்தல் நடைமுறையின் தூய்மையை அத்தனை பேரும் பேணிக்காக்க வேண்டும், அப்போதுதான் ஜனநாயகம் வெற்றிபெறும்,” என்று நீதிபதிகள் கூறினர்.
“அரசாங்கத்திற்குக் கடமைப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒருவரால் சுதந்திரமான மனநிலையில் செயல்பட முடியாது,” என்றது நீதிபதிகளின் அமர்வு.
அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், மற்றும் சி டி ரவிக்குமார் ஆகிய நீதிபதிகளையும் உள்ளடக்கிய அமர்வு இந்த ஒருமித்த தீர்ப்பை அளித்தது.
தலைமை தேர்தல் ஆணையரை நீக்குவதற்கான ‘இம்பீச்மன்ட்’ முறை தேர்தல் ஆணையர்களுக்கும் பொருந்த வேண்டும் என்று நீதிபதி ரஸ்தோகி தனது தனிப்பட்ட கருத்தையும் வெளிப்படுத்தினார்.
அரசியல் சாசன சட்டத்தை வகுத்தவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் வகுக்க வேண்டும் என்று கூறி அப்பொறுப்பினைக் கொடுத்துச் சென்றனர். ஆனால் அந்த அமைப்புகள் அந்நம்பிக்கையை உடைத்துவிட்டன. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக இச்சட்டம் உருவாக்கப்படவில்லை,” என்று உச்சநீதிமன்றம் கூறியது.
“தேர்தல் ஆணையம் சுதந்திரமான நியாயமான முறையில் செயல்படக் கடமைப்பட்டிருக்கிறது, அது அரசியல் சாசனத்தின் கட்டமைப்புக்குள்ளும் விதிகளுக்குட்பட்டும் செயல்பட வேண்டும்,” என்று உச்சநீதிமன்றம் கூறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












