அணுமின் நிலையத்தில் ஒரு அணு உலையை செயல்பட விடாமல் முடக்கிய 'ஜெல்லி மீன்'

பட மூலாதாரம், Nathan Laine/Bloomberg via Getty Images
- எழுதியவர், ஆடம் டுர்பின்
- பதவி, பிபிசி நியூஸ்
பிரான்ஸில் அணு மின் நிலையங்கள் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஜெல்லி மீன்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜெல்லி மீன்கள் நீரேற்று நிலையத்தின் வடிகட்டிகள் மற்றும் பாலுவேல் அணு மின் நிலையத்திற்குள் நுழைந்ததாக பிரான்ஸின் தேசிய மின் வாரியமான ஈடிஎஃப் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் நார்மண்டியில் உள்ள மின் நிலையத்தில் 2.4 ஜிகாவாட் அளவிலான மின் உற்பத்தியை பாதித்துள்ளது. அணு மின் நிலையத்தை மீண்டும் முழு செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் மாதம், பிரான்ஸில் கிராவ்லைன் அணு மின் நிலையத்தில் "எதிர்பார்க்க முடியாத அளவில்" ஜெல்லிமீன்கள் நுழைந்ததால் அதன் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த தாக்குதலால் நான்கு அணு உலைகளில் ஒரு அணு உலை முழுவதுமாக நிறுத்தப்பட்டு, இரண்டாவது உலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால் பாலுவேல் அணு மின் நிலையத்தின் 5.2 ஜிகாவாட் மின் உற்பத்தியில் பாதியளவு குறைந்துவிட்டது.
உலக அணு சக்தி அமைப்பின்படி, பிரான்ஸின் மின் உற்பத்தியில் 70% அணு சக்தியிலிருந்து தான் பெறப்படுகிறது.
பிரான்ஸின் மிகப்பெரிய அணு மின் நிலையங்களில் பாலுவேலும் ஒன்றாக உள்ளது. இதன் நான்கு அலகுகளில் ஒவ்வொரு அலகும் 1,300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
அணு உலையின் அணு சக்தி அல்லாத வடிகட்டிகளில் ஜெல்லிமீன்கள் நுழைந்தபோது உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 9 மணிக்கு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக ஈடிஎஃப் தெரிவித்துள்ளது.
இரண்டு அலகுகளையும் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர தேவையான பரிசோதனைகள் மற்றும் தலையீடுகளை அதன் குழுக்கள் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












