தாலிபன் அமைச்சரின் இந்திய பயணம் பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது?

மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு மூத்த தாலிபான் அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

பட மூலாதாரம், DrSJaishankar

படக்குறிப்பு, மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு மூத்த தாலிபன் அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

ஆப்கானிஸ்தானின் தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி இந்தியா வந்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனான முத்தக்கியின் சந்திப்பு இன்று நடந்தது.

2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, ஒரு தாலிபன் அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். இந்தியா இதுவரை தாலிபன் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், தாலிபன் அரசை அங்கீகரிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

ஆனால், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

தாலிபன் அரசின் மீது மனித உரிமை மீறல் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பல நாடுகள் ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்கு விதிக்கப்பட்ட தடையை கடுமையாக எதிர்த்துள்ளன.

இத்தகைய சூழலில், அமீர் கான் முத்தக்கியின் இந்தியப் பயணம் குறித்து உலகம் முழுவதும் கவனம் குவிந்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானிலும் முத்தக்கியின் இந்தப் பயணம் குறித்து அதிக விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும், அந்நாட்டு ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியாக உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் சாலை

பட மூலாதாரம், ABDUL MAJEED/AFP via Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் அதிக எண்ணிக்கையிலான ஆப்கானிய அகதிகளை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் உறவில் விரிசல்

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், 2025 செப்டம்பரில் ஆப்கான் தாலிபனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

"இன்று நான் ஆப்கானிஸ்தானுக்குத் தெளிவான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் பாகிஸ்தான் மற்றும் டிடிபி (தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்) இவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்," என்று கூறினார் ஷாபாஸ் ஷெரீஃப்.

ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானின் பிரதிநிதி அஸீம் இஃப்திகார் அஹமத், 2025 செப்டம்பர் 17 அன்று ஆப்கானிஸ்தான் குறித்த கூட்டத்தில் பேசுகையில், "தாலிபன் நிர்வாகம் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான தனது சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து பரவும் பயங்கரவாதம் பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தொடர்கிறது," என்று தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமிர்கான் முத்தக்கி என்ன பேசினார்?

இதற்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் "அடிப்படையில்லாதவை" என்று நிராகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தக்கி, அக்டோபர் 7 அன்று மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில், "ஆப்கானிஸ்தானில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் செயல்படவில்லை. மேலும், அது எந்தவொரு அண்டை நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இல்லை," என்று கூறினார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப்

பட மூலாதாரம், Asad Zaidi/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் கூறியுள்ளார்.

'ஆப்கானிஸ்தான் நேற்றும் இந்தியாவுடன் இருந்தது, இன்றும் உள்ளது, நாளையும் இருக்கும்'

சமா டிவியின் அக்டோபர் 7 நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் அமீர் கான் முத்தக்கியின் இந்தியப் பயணம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார்.

ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் உறவு எப்போதும் 'கசப்பானதாக' இருந்ததாகவும், அது இப்போது மேலும் மோசமடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த உரையாடலின்போது க்வாஜா ஆசிஃப், "நீங்கள் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், பாகிஸ்தானை அங்கீகரித்த கடைசி நாடு ஆப்கானிஸ்தான்தான். அது முதல் இப்போது வரை ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுடன் நட்பு அல்லது சகோதரத்துவ உறவைக் கடைப்பிடித்த ஒரு சந்தர்ப்பம் கூட இல்லை. ஒரே மதத்தைக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் ஒருபோதும் அத்தகைய உறவை வைத்திருக்கவில்லை," என்று கூறினார்.

அவர் தொடர்ந்து, "உண்மையில், ஆப்கானிஸ்தான் நமக்கு எதிராகச் சதி செய்கிறது. நமது வீரர்கள் தினமும் பலியாகிறார்கள். பலர் தங்கள் குழந்தைகளைப் பிரிந்துள்ளனர். இதுவா அண்டை நாட்டின் உறவு?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் உறவு குறித்து அவர், "உண்மை என்னவென்றால், ஆப்கானிஸ்தான் நேற்றும் இந்தியாவுடன் இருந்தது, இன்றும் இந்தியாவுடன் உள்ளது, நாளையும் இருக்கும்," என்று குறிப்பிட்டார்.

'இந்தியா-ஆப்கான் உறவும் மாறிவரும் பிராந்திய சமநிலையும்'

ஆப்கானிஸ்தானில் இந்தியா அளித்த உதவிகள்

பட மூலாதாரம், WAKIL KOHSAR/AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியா தாலிபன் அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை, ஆனால் அங்கு மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

பாகிஸ்தானின் 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' (The Express Tribune) நாளிதழில் வெளியான தலையங்கத்தின் தலைப்பு - இந்தியா-ஆப்கான் உறவும் மாறிவரும் பிராந்திய சமநிலையும் என்பதாகும்.

அந்தக் கட்டுரையில், "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் குழுவால், ஆப்கான் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கிக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது, தெற்காசிய ராஜ்ஜிய நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான தருணம்" என்று எழுதப்பட்டுள்ளது.

முத்தக்கியின் இந்தியப் பயணம், ஆப்கானிஸ்தான் இப்போது தனது பிராந்திய உறவுகளை மறுசமநிலை செய்யும் திசையில் நகர விரும்புவதைக் காட்டுகிறது என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

"பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இந்தப் போக்கு உத்திரீதியான, மனிதாபிமான மற்றும் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பல அம்சங்களைக் கொண்டது. குறிப்பாக, நீண்ட காலமாக தாமதமான ஆப்கானிய அகதிகளைத் திருப்பி அனுப்பும் செயல்முறையை பாகிஸ்தான் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இது முக்கியமானது."

இறுதியாக, அந்தக் கட்டுரையில், "அகதிகளைத் திருப்பி அனுப்புவது அவசியமான சீர்திருத்தம். ஆப்கானிஸ்தான் உண்மையாக அமைதியை விரும்பினால், முதலில் தங்கள் வீட்டைச் சரிசெய்வதில் இருந்து தொடங்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 செப்டம்பர் 29 அன்று மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் குறித்து நடந்த கூட்டத்தில் தலைவர்களைச் சந்தித்த அமீர் கான் முத்தக்கீ.

பட மூலாதாரம், Republic of Tatarstan Press Service/Anadolu Agency via Getty Images

படக்குறிப்பு, 2025 செப்டம்பர் 29 அன்று மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் குறித்து நடந்த கூட்டத்தில் தலைவர்களைச் சந்தித்த அமீர் கான் முத்தக்கி

இந்தப் பயணத்தின் முக்கியத்துவம்

பாகிஸ்தானின் 'டான்' (Dawn) நாளிதழ், தனது இணையதளத்தில் ஏஎஃப்.பி செய்தி நிறுவனத்தின் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் முத்தக்கியின் இந்தியப் பயணம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியின்படி, "முத்தக்கியின் இந்தப் பயணம் மாஸ்கோவில் நடந்த பிராந்தியக் கூட்டத்திற்கு ஒரு நாள் கழித்து நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இரான், சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்."

"பிராந்தியத்தில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவக் கட்டமைப்பையும் நிலைநிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது காபூலுக்கு அருகிலுள்ள பாக்ராம் விமானத் தளத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிவிப்பிற்குப் பதிலடியாகப் பார்க்கப்பட்டது," என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் அன்பளிப்பாக 5 ஆம்புலன்ஸ்கள் முத்தக்கியிடம் ஒப்படைக்கப்பட்டது

பட மூலாதாரம், DrSJaishankar

ஆப்கான் நிபுணர்களின் பார்வையில் முத்தக்கியின் இந்தியப் பயணம்

சர்வதேச விவகாரங்களுக்கான ஆப்கான் நிபுணர் வஹீத் ஃபக்கீரி, "தாலிபன் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகள் ஓரளவு பதற்றமாக மாறிவிட்டன," என டோலோ நியூஸிடம் கூறினார்.

அவரது கூற்றுப்படி, "இந்தியா இந்தச் சூழலைத் தன் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது. இதனால்தான் இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகள் இப்போது மேம்பட்டுக் காணப்படுகின்றன."

ஜெர்மனியில் வசிக்கும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தூதராக அதிகாரி முகமது ஆசம் நூரிஸ்தானி, ரேடியோ லிபர்ட்டியிடம் கூறுகையில், "இந்தியாவுக்குப் பிராந்தியப் பாதுகாப்பு, பாகிஸ்தானின் அதிகரித்து வரும் செல்வாக்கு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து கவலைகள் உள்ளன.

தாலிபன்களுடனான பேச்சுவார்த்தை, இந்தியாவுக்கு அபாயங்களைப் புரிந்துகொள்வதற்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள அதிகார சமநிலையைச் சோதிப்பதற்கும் ஒரு வழிமுறையாக இருக்கலாம்," என்று கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா தாலிபன்களுடன் "வரையறுக்கப்பட்ட மற்றும் நடைமுறைக்கு ஏற்ற" பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். ஆனால், "அங்கீகாரம்" அளிப்பதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றும் நூரிஸ்தானி கூறினார்.

அதே சேனலில் பேசிய ஆப்கான் ஆய்வாளர் கௌஸ் ஜான்பாஸ், "ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலும் அல்லது ஆத்திரமூட்டும் நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்பதை இந்தியா உறுதிப்படுத்த விரும்புகிறது," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு