செங்கோட்டையனின் கணக்கு தவறாகி போனதா? விஜயுடன் பேசியது ஏன்?

பட மூலாதாரம், FB/Sengottaiyan
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தற்போது அந்தக் கட்சியிலிருந்து மொத்தமாக விலகி புதிய பாதையை தேர்வு செய்திருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 5 அன்று, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையன் அதனை செய்வதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு பத்து நாட்கள் கெடுவிதித்து ஊடகங்களில் பேசினார். மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் ஊடகங்களை சந்தித்த போது "அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் என்னை அழைத்து பேசியது பாஜகதான் " என்று கூறியிருந்தார்.
கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல் எழுப்பி இரண்டு மாதங்களுக்கும் மேலான பின்னரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் வைத்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. கடந்த காலங்களில் அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்களை நீக்கியது போலவே செங்கோட்டையனும் நீக்கப்பட்டார். கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய அனைத்து பொறுப்புகளும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன.
சட்டமன்ற உறுப்பினராக அவர் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்திக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாக புதன்கிழமை (நவம்பர் 26) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் செங்கோட்டையன்.
பாஜகவை நம்பி அவர் போட்ட கணக்குகள் தவறாகிப் போய்விட்டதாக ஒருபுறம் பேசப்படும் நிலையில், 'இது அந்தக் கட்சியின் விவகாரம், எங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை' என்று பாஜக தலைவர்கள் உறுதியாக மறுத்து வருகின்றனர்.

கெடு விதித்த செங்கோட்டையன்
அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவிய காலம் தொட்டு அக்கட்சியில் பணியாற்றிவரும் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், அவரது கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதியே ஊடகங்களை சந்தித்தார். அப்போது பூடகமாக பேசிய அவர், "நான் மனம் திறந்து பேசப் போகிறேன். எனது கருத்துக்கள் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை பிரபலிக்கும்" என்று கூறியிருந்தார்.
மனம் திறந்து பேசப்போவதாக கூறிய அவர், "அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்" என்று செப்டம்பர் 5ம் தேதி பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். அது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு மேற்கொள்வதற்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார். அடுத்த நாளே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஊடகங்களில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னை அழைத்து பேசியது பாஜகதான் என்றதுடன் "பாஜகவை விட்டால் நமக்கு வேறு வழியில்லை, நம்மை விட்டால் பாஜகவுக்கும் வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சிக்கவில்லை" என்று தெரிவித்தார். 2026-ல் அதிமுக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்றும் 2029-ல் பாஜகவின் எண்ணங்கள் நிறைவேற கட்சித் தலைமையிடம் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது செங்கோட்டையன் பேசியிருந்தார்.
அதிமுக பரப்புரை கூட்டம் ஒன்றில் தவெகவின் கொடிகளை பார்த்து, "பிள்ளையார் சுழி போட்டாச்சு" என்று எடப்பாடி பேசியதை குறிப்பிட்டு பேசிய செங்கோட்டையன், "நாம் ஒன்றிணைந்திருந்தால் மற்றவர்களை நாடிச் செல்ல வேண்டியதில்லை" என்றும் அதே சந்திப்பில் தெரிவித்தார்.
ஆனால், இப்போது தமிழக அரசியலில் புது வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் பேசியுள்ளார் செங்கோட்டையன்.

பட மூலாதாரம், FB/Sengottaiyan
கணக்கு தவறாகியதா?
"செங்கோட்டையன் தப்பு கணக்கு போட்டுவிட்டார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
மேலும் அவர் கூறுகையில், "செங்கோட்டையன் பாஜகவால் இயக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. அது உண்மையா என்று தெரியாது. அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். எவ்வாறாயினும், அவர் இப்படி செய்திருக்கக் கூடாது. அவர் குரல் எழுப்பிய நேரம் தவறானது. எடப்பாடியை நன்றாக புரிந்துகொண்டிருக்கும் அவர் இதனை செய்ய ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது. எடப்பாடி தன்னை எதிர்த்து குரல் கொடுக்கும் எவரையும் சேர்த்துக் கொண்டதில்லை- சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அனைவருக்கும் அதே நிலை தான். மேலும், பொதுவெளியில் ஒரு கட்சித் தலைவருக்கு ஒரு செயலை செய்ய கெடு விதித்து பேசுவதை, எடப்பாடி அல்ல, எந்த தலைவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் இவை செங்கோட்டையனுக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஒரு வேளை, பாஜகவுக்கு வெளிப்படையாக செய்தி சொல்வதற்காக, இப்படி செய்திருக்கலாம்" என்று கூறினார்.
'செங்கோட்டையனை பாஜக கைவிட்டுவிட்டது' என்கிறார் பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன், அவர் கூறும்போது ," பாஜக தானே அவரை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. என்ன பேசினார்கள் என்று பொதுவெளியில் சொல்லட்டும். செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து கட்சி ஒன்றிணைப்பு குறித்து பேசியவுடன் அவரது கட்சி பொறுப்பு பறிபோனதே. செங்கோட்டையன் தனியாக நின்று குரல் கொடுக்கும்போது, அதில் பாஜக தலையிட்டிருக்க வேண்டும், எடப்பாடியிடம் சமரசம் பேசியிருக்க வேண்டும். அல்லது செங்கோட்டையனுடன் அமித் ஷா வெளிப்படையாக ஒரு சந்திப்பை நிகழ்த்தியிருக்க வேண்டும். அப்போது எடப்பாடியின் அணுகுமுறை மாறியிருக்கும்" என்றும் கூறினார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஏன் ஒன்றாக இணையவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
"மன வேதனையில் உள்ளேன்"
"என்னை கொச்சைப்படுத்தி, நான் தான் அமைச்சரவையில் இடம் கொடுத்தேன் என்று கூறுவதும், சிற்றரசரை போல வாழ்ந்தாரே தவிர தொகுதிக்கு எந்த வேலையும் செய்யவில்லை என்று கூறுவதும் வேதனை அளிக்கிறது. கட்சியில் நெடுங்காலமாக உழைத்தவர்களுக்கு அல்லாமல், பணம் வைத்திருப்பவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது" என்று செங்கோட்டையின் மூன்று வாரங்கள் முன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடனான சந்திப்புக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்கள் 'நீங்கள் தவெகவில் இணைவீர்களா?' என்று கேள்வி எழுப்பிய போது அதனை மறுத்து பேசாத செங்கோட்டையன், '50 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்த எனக்கு கிடைத்திருக்கும் பரிசு, கட்சியின் உறுப்பினராகக் கூட இருக்கக் கூடாது என கட்சியில் இருந்து நீக்கம். மனவேதனையில் இருக்கிறேன்' என்று கூறினார்.
செங்கோட்டையன் மனதை காயப்படுத்தி அனுப்பியது அதிமுக என்கிறார் லட்சுமணன்,"அவர் வெளிப்படையாக குரல் எழுப்பிய பிறகு, மீண்டும் அதே கட்சியில் சமரசம் செய்துகொண்டு இருப்பது சாத்தியமில்லை. செங்கோட்டையனை காயப்படுத்தும் வகையிலான நியமனங்கள் சில அதிமுகவில் நடந்தன. அதுவும் அவர் குரல் கொடுத்ததற்கு காரணமாக இருக்கலாம்" என்றார் அவர்.

பட மூலாதாரம், X/SPLakshmanan
தவெகவில் என்ன பதவி?
மரியாதை இல்லாத அதிமுகவில் நீடிக்க வேண்டாம் என்று செங்கோட்டையன் முடிவு செய்திருக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், " ஆனால் இந்த முடிவை அவரே எடுத்தாரா, இல்லையா என்பது தெரியாது" என்று கூறுகிறார்.
மேலும், "அதிமுகவிலிருந்து வெளியே வந்தவர்கள், பாஜக கொடுக்கும் அழுத்தம் காரணமாக கட்சி ஒன்றிணையும் என்று நம்பினார்கள். ஆனால் அப்படி நடைபெறவில்லை. விஜய்க்கு ஆலோசனை வழங்க தற்காலிக ஏற்பாடாக செங்கோட்டையன் தவெகவுக்கு செல்லலாம்" என்றும் கூறினார்.
"தலைமைக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக செங்கோட்டையனுக்கு கிடைத்த 'தண்டனை' அல்லது 'பரிசு' இது. தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தால், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று அவரைப் போன்ற மூத்த அரசியல்வாதிக்கு தெரியாமல் இருக்காது. தெரிந்தே விளக்கைப் பார்த்த விட்டில் பூச்சி போல விழுந்துவிட்டார் என்றும் இதை பார்க்கலாம்" என்கிறார் ஜென்ராம்.
பாஜகவும் கைவிட்ட நிலையில், செங்கோட்டையன் வேறு வழி இல்லாமலே தவெகவுடன் பேசியுள்ளார் என்கிறார் பத்திரிகையாளர் லட்சுமணன். "தீவிர அதிமுக தொண்டராக இருந்தவருக்கு திமுகவில் சென்று சேர்வது எளிது கிடையாது. இந்த நிலைமையில், செங்கோட்டையனின் அனுபவத்துக்கு ஏற்ப ஒரு வெற்றிடம் இருப்பது தமிழக வெற்றிக் கழகத்தில் தான். தவெகவில் விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது குறித்து பேசிய பிறகே போயிருப்பார் என்று நினைக்கிறேன்" என்று கூறுகிறார் லட்சுமணன்.
செங்கோட்டையன் தமக்கு சீட் உறுதி செய்துகொண்டார் என்கிறார் ஜென்ராம், "கட்சிக்குள் இதுவரை அறைகூவல் விடுத்து எந்த முன்னெடுப்பும் எடுக்காத ஒருவர், திடீரென அப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார். சீட் கிடைக்காமல் வெளியே வருவதற்கு பதில் தியாகியாக வெளியே வர வேண்டும் என்று நினைத்திருக்கலாம்" என்று கூறினார்.

பாஜக பின்னணி உள்ளதா?
செங்கோட்டையனை விஜய் நோக்கி அனுப்பியதே பாஜகதானோ என்று சந்தேகம் கிளப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "இது செங்கோட்டையனின் சுயமான முடிவா என்று தெரியவில்லை. பாஜகவை நம்பிச் சென்றவர்களுக்கு கடந்த காலங்களிலும் இதே நிலை தான்" என்கிறார்.
ஆனால் அதிமுக விசயத்தில் பாஜக தலையிடவில்லை என்று மறுக்கிறார், பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி, "அதிமுக ஒரு பலம் வாய்ந்த கட்சி, பல ஆண்டுகாலமாக இருக்கும் கட்சி. அந்தக் கட்சிக்கு யாரும் ஆலோசனை வழங்க வேண்டியதில்லை. பாஜக இதில் தலையிடவில்லை. ஒவ்வொரு கட்சியும் தனது விவகாரங்களை தானே பார்த்துக்கொள்ளும். தனிநபர்கள் கட்சியை விட்டு விலகிச் சென்றால் அதற்கு பாஜக தான் காரணம் என்று எப்படி கூற முடியும்? தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு பாஜக தான் காரணம் என்று கூறும் மனோவியாதி வந்துவிட்டது." என்கிறார்.
மேலும் அவர், "செங்கோட்டையன் டெல்லி சென்று பேசியது குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படுகிறது? உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் ஆகியோரும் டெல்லி செல்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளனர்" என கூறினார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பாஜகவுக்கு விருப்பம் உள்ளது தானே என்று கேட்டபோது, நாராயணன், "ஒரு மாநில அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போது அதை கையாண்டோம்" என்றார்.
"மற்றபடி யாரும் எந்த கட்சிக்கும் செல்ல உரிமை உண்டு. செங்கோட்டையன் தவெகவுக்கு செல்லலாம். அதை தடுக்க முயலும் உரிமை திமுகவுக்கு உண்டு. இதில் தவறு ஏதும் கிடையாது" என்றார்.
அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து செங்கோட்டையனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயற்சித்தது, எனினும் அவரது கருத்தைப் பெற முடியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












