கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?

விஜய்

பட மூலாதாரம், TVK

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) நடைபெற்றது. இதில் பேசிய விஜய், தாங்கள் ஆட்சிக்கு வரும்போது செய்ய விரும்பும் விஷயங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டார். மேலும், தங்கள் ஆதரவாளர்கள் மீதான விமர்சனத்துக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

மேலும், திமுக மீது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அதுகுறித்து பதிலளித்த திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், "திமுகவை குறை சொல்வதற்கு விஜய்க்கு தகுதி இல்லை" என்றார். விஜயின் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு டிசம்பர் 4 அன்று சேலம் மாவட்டத்தில் விஜய் பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை கவனமாகப் பரிசீலித்ததாகக் கூறியுள்ள டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் சரவணன், சில காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,000 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்த விஜய், காஞ்சி மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசி தன் உரையைத் தொடங்கினார்.

"வாலாஜாபத் அருகே உள்ள அவலூர் ஏரி பாலாறை விட உயரமாக இருப்பதால் ஆற்றுத் தண்ணீர் ஏரிக்குப் போக முடியவில்லை. தடுப்பணை கட்டுவதன் மூலம் விவசாயம் சிறப்பாக நடக்கும். இதற்காக எத்தனை ஆண்டு மக்கள் போராட வேண்டும்?" என்று விஜய் கேள்வியெழுப்பினார்.

மேலும், "பரந்தூர் விமான நிலையப் பிரச்னையில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் மட்டுமே நிற்போம்" என்று கூறிய அவர், புகழ்பெற்ற காஞ்சிப் பட்டு நெய்பவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

60 ஆண்டுகளாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதையும் விமர்சித்த அவர், அரசால் அதற்கு ஒரு இடத்தை ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

செய்ய நினைக்கும் திட்டங்கள்

தவெக ஆட்சி அமைந்தால், தான் செய்ய நினைக்கும் திட்டங்கள் குறித்தும் அவர் கூறினார்.

"எல்லோருக்கும் நிரந்தரமான வீடு. எல்லா வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கும். கார் லட்சியம், அதற்கான வசதி வாய்ப்பை உண்டாக்கும் வகையில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வீட்டில் குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வருமானம். அதற்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில் கல்வியில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும்" என பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.

இந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஜய்

பட மூலாதாரம், TVK

'தற்குறிகள் அல்ல ஆச்சர்யக்குறிகள்'

தங்கள் கட்சி மீதான விமர்சனம் குறித்து பேசிய விஜய், "எம்ஜிஆர் கட்சியை ஆரம்பத்தில் இருந்தே கூத்தாடியின் கட்சி என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள் அனைவரும், மக்கள் போல் எம்ஜிஆர் அவர்களோடுதானே போய்ச் சேர்ந்தார்கள். இது வரலாறு. இது நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல், தவெக ஆதராவளர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பது குறித்தும் பதிலளித்தார். "தற்குறி தற்குறி என்கிறீர்களே, இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறி. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி" என்றும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திமுக சொல்லும் பதில் என்ன?

'திமுகவின் கொள்கையே கொள்ளைதான்' என்றும் விஜய் தன் பேச்சில் விமர்சித்திருந்தார்.

அதற்கு பதில் கொடுத்த திமுக மூத்த தலைவரும் அக்கட்சி செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன், "இன்று மக்களின் முக்கிய தேவை 4 விஷயங்கள் - கல்வி, உணவு, மருத்துவம், பெண் உரிமை & பெண் பாதுகாப்பு. இது எல்லாவற்றிலும் திமுகவின் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. கொள்கைப்படி பல திட்டங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். திட்டங்களை நிறைவேற்றாமல் இருக்கிறோமா? கொள்கையிலிருந்து மாறுபட்டு நிற்கிறோமா? இல்லை. கொள்ளை என்பது எல்லோரும் அரசியலில் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்வது" என்று கூறினார்.

மேலும், கொள்கைகளுக்காகவே திமுகவினர் போராட்டங்கள் நடத்தி சிறைக்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அரசாங்கத்தால் அல்ல" என்று கூறினார். மேலும், "அது தனி மனித குற்றம். அதில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இது மணிப்பூர் அல்ல. இங்கே என்ன குற்றம் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றும் அவர் கூறினார்.

டிகேஎஸ் இளங்கோவன்

பட மூலாதாரம், X/TKS Elangovan

படக்குறிப்பு, டிகேஎஸ் இளங்கோவன்

அண்ணா ஆரம்பித்த கட்சியைக் கைப்பற்றியவர்கள் என்று திமுகவை விஜய் குறிப்பிட்டது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "அவருக்கு அண்ணா யாரென்றே தெரியாது. முதல்வர் ஆகும் ஆசையில் இருக்கிறார். அண்ணாவே முதல்வர் ஆகவேண்டும் என்று கட்சி தொடங்கவில்லை. முதல் தேர்தலில் அவரே போட்டியிடவில்லை. அவர் போராட்டகளத்தில் நின்று சிறை சென்றவர். அவர் சொன்னவற்றைத்தான் தலைவரும் (மு.க. ஸ்டாலின்) நாங்களும் கடைபிடிக்கிறோம்" என்று கூறினார்.

மேலும், "ஏன் கரூரில் பரப்புரைக்கு 12 மணிக்கு வராமல் 7.30 மணிக்கு வந்தார் என்ற பதிலைக் கூட விஜய் இன்னும் சொல்லவில்லை. இதற்கு அவர் ஏன் பதில் சொல்லவில்லை? நாமக்கல்லில் 11 மணிக்குப் பேசிவிட்டு உடனே கரூர் வராதது ஏன்? இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்? இவர் எங்களைக் குறை சொல்வதற்கு தகுதி இல்லாதவர்" என்றும் டிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

தற்குறி என்று தாங்கள் யாரையும் சொல்லவில்லை என்று குறிப்பிட்ட அவர், "தற்குறி என்று நாங்கள் யாரையும் சொல்லவில்லை. விஜயை வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். பேச்சு பொருத்தமாக இல்லையென்றால் அப்படி விமர்சிப்பார்கள். அது பொதுவாக எல்லோரும் சொல்வதுதான்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு