தவெக-வின் சேலம் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

பட மூலாதாரம், TVK
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 4 அன்று தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை நவம்பர் 20 அன்று காவல்துறை நிராகரித்துள்ளது.
"திருவண்ணாமலை கார்த்திகை தீபம், பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு கொடுப்பது கடினம்" எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசியல்ரீதியாக தவெக-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். இதை தி.மு.க மறுக்கிறது.
தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு பரப்புரைக் கூட்டங்களை தவெக தலைமை நடத்தவில்லை. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
நவம்பர் 16 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக தவெக தரப்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.
அப்போது மேடையில் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், விஜயின் மக்கள் சந்திப்புப் பயணம் விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார். "கூட்டங்களை நடத்துவதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் சந்திப்பு நடக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?
இந்த நிலையில், டிசம்பர் 4 அன்று சேலம் மாவட்டத்தில் விஜய் பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர டவுன் சரக உதவி ஆணையாளர் சரவணனிடம் தவெக மாநகர செயலாளர் பிரசன்ன பாலாஜி அளித்துள்ள மனுவில், "சேலம் தாளமுத்து நடராஜன் வீட்டின் அருகில் உள்ள திடல், போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
தவெக தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை கவனமாகப் பரிசீலித்ததாகக் கூறியுள்ள டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் சரவணன், சில காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதில்,
- டிசம்பர் 4 அன்று அதிகளவில் வெளிமாவட்ட பாதுகாப்புப் பணிக்குக் காவல்துறை செல்வதால் தங்களின் கட்சி நிகழ்ச்சிக்குத் தேவையான அளவுக்கு ஆட்களை நியமிக்க இயலாது.
- விஜயின் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ள இடங்களில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற விவரம் கூறப்படவில்லை.
- நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் கூறப்படும் நாளில் எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.
இவற்றோடு, "வரும் காலங்களில் நிகழ்ச்சி நடக்கவுள்ள தேதியில் இருந்து நான்கு வாரங்களுக்கு முன்னதாக மனு அளிக்க வேண்டும். காவல்துறை தெரிவித்துள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனு அளிக்கும் பட்சத்தில் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்" என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், TVK
'தேதியை மாற்ற முடிவு'
"டிசம்பர் 3 அன்று திருவண்ணாமலை கார்த்திகை தீப நாளும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்பு தினமும் வருவதால் பாதுகாப்பு அளிக்க முடியாது" என காவல்துறை தங்களிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார், தவெகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நவம்பர் 30ஆம் தேதி இரவே பாதுகாப்புப் பணிக்காக திருவண்ணாமலை உள்பட வெளிமாவட்டங்களுக்குக் காவலர்கள் செல்ல உள்ளதாகக் கூறினர். இதனால் வேறு தேதியை முடிவு செய்து கூறுமாறு தெரிவித்துள்ளனர். இதை தலைமையில் தெரிவித்துள்ளோம்" எனக் கூறுகிறார்.
"தலைமைக் கழகத்தில் பரப்புரை தேதியை மாற்றிய பிறகு புதிய விண்ணப்பத்தை அளிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டங்களுக்கு, தேவையற்ற காரணங்களைக் கூறி ஆளும் கட்சி தடை போடுவதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்.
'யாரும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாதா?'
"கார்த்திகை தீபத்திற்கு (டிசம்பர் 3) மறுநாள் தவெக தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தோம். ஆனால், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்கின்றனர். அப்படியானால் இடைப்பட்ட நாட்களில் யாரும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாதா?" என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பரப்புரை நடத்துவதற்கு எந்த இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் தோராயமாக எவ்வளவு பேர் வருவார்கள் என்பதைச் சொல்ல முடியும். அதைப் பற்றி எதையும் கூறாமல் எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்" என்கிறார்.

பட மூலாதாரம், TVK
"பொதுவாக, பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு அளித்தவுடன் காவல்துறை தரப்பில் இருந்து மூன்று பக்கங்களுக்கு ஒரு விண்ணப்பம் கொடுப்பார்கள். அதை நிரப்பிக் கொடுக்க வேண்டும். அதில் உரிய தகவல்கள் இல்லாவிட்டால் நிராகரிப்பார்கள்" எனக் கூறுகிறார், சி.டி.ஆர்.நிர்மல்குமார்.
ஆனால், தவெக தரப்பில் விவரங்களை நிரப்பிக் கொடுத்தாலும் வேறு சில தகவல்களைக் கேட்டு மனுவை நிராகரிப்பதாகக் கூறும் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "நான்கு வாரத்திற்கு முன்னதாக பரப்புரைக் கூட்டத்தை முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர். அதுபோன்று எந்த அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் கூட்டம் நடத்துகின்றன?" எனவும் கேள்வி எழுப்பினார்.
"பா.ஜ.க தலைவர்களின் ரோட் ஷோ, இதர கட்சித் தலைவர்களின் பரப்புரைகள் போன்றவற்றுக்கு நான்கு வாரத்திற்கு முன்னதாக அனுமதி பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன?
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியன்று மக்கள் சந்திப்பு என்ற பெயரில் பரப்புரைக் கூட்டத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கினார். இதற்குப் பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது.
"இதற்கான விதிகள் கடுமையாக உள்ளதால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்கும் வகையில் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை நடத்தும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் அனுமதி வழங்கப்படுவதாகவும் மனுவில் தவெக கூறியிருந்தது.

'பொதுவான வழிகாட்டுதல்கள்' - அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
வழக்கின் விசாரணையில் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதை வசூலிக்கும் வகையில் விதிமுறைகளைக் கொண்டு வருமாறும், உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது. இந்த அறிக்கையை வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 21) சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ளது. இதன் மீதான விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளி வைத்துள்ளது.
"பொதுக்கூட்டம் நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும், கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு தற்காலிக கழிப்பறை, தலா நான்கு லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும்" என்றெல்லாம் வரைவு விதிகளில் கூறப்பட்டிருந்தது.
"ஆனால், இது அரசியல் கட்சிகளை முடக்குவதற்கான முயற்சி" எனக் கூறி அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்படப் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தங்களின் எதிர்ப்புகளைக் கட்சிகள் பதிவு செய்துள்ளன.

பட மூலாதாரம், TVK
'அனுமதி கிடைக்காவிட்டால் உள்ளரங்கு கூட்டம்'
இதைக் குறிப்பிட்டுப் பேசும் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "நீதிமன்றத்தில் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக முறையிட்டுள்ளோம். அரசின் வரைவில் 15 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் எனக் கூறினர். ஆனால், சேலம் நிகழ்ச்சிக்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாக அனுமதி பெறுமாறு கூறுகின்றனர். இதில் இருந்தே அரசின் நோக்கத்தை அறியலாம்" என்கிறார்.
"எப்போதும் போல தவெக தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். அனுமதி மறுக்கப்பட்டால் பொது மக்களை வரவழைத்து உள்ளரங்கு கூட்டங்களை நடத்த முடியுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.
"தவெக பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதில் எந்தவித அரசியலும் இல்லை" என்கிறார், தி.மு.க செய்தித் தொடர்புத்துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கரூரில் 41 பேர் உயிரிழக்கும் அளவுக்குக் கட்டுப்பாடற்ற கூட்டம் வருகிறது என்றால் அதற்கேற்ப காவல்துறை பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதே கரூரில் தவெக கூட்டம் நடத்துவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டம் நடந்தது. அங்கு யாருக்கும் எந்தப் பிரச்னையும் வரவில்லை" என்றார்.

'காவல்துறைக்கு மன உளைச்சல்'
"பா.ஜ.க தலைவர்கள் நடத்தும் கூட்டங்களில் பொதுமக்கள் யாரும் உயிரிழப்பதில்லை. தவெக கூட்டத்தில் மட்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டது மட்டுமின்றி அதிகளவிலான மக்கள் மயங்கி விழுந்தனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பில் காவல்துறை உள்ளது. அதற்கேற்ப மட்டுமே முடிவெடுக்க முடியும்" எனக் கூறும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், "தவெகவுக்கு சுய கட்டுப்பாடற்ற கூட்டம் வருகிறது. இதுபோன்ற கூட்டங்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய மன உளைச்சல் காவல்துறைக்கு உள்ளது" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழக அரசியலில் திமுக, அதிமுக இல்லாமல் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு பிரபலமான ஒருவர் உண்டு. வைகோ, விஜயகாந்த், சீமான் என்ற வரிசையில் இப்போது விஜய் இருக்கிறார். அதனால் அவரைப் பார்த்து தி.மு.க பயப்படுவதாகப் பேசுகின்றனர்.
அப்படியிருக்க, தவெக பரப்புரைக்கு நெருக்கடி கொடுக்கும்போது அக்கட்சிக்கு விளம்பரம் கிடைக்கும் என்பது தி.மு.க உணராத விஷயமல்ல. அவ்வாறு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமும் திமுக-வுக்கு இல்லை" என்றும் கூறினார்.

'நீதிமன்றம் சென்றாலும் சிரமம்தான்' - ஷ்யாம்
இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அரசியல் ரீதியாக இதை தி.மு.க அணுகுவதாகப் பார்க்க முடியாது. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கான பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் செயல்படுவதாகப் பார்க்கலாம்" என்கிறார்.
சேலத்தில் தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குவதில் சிரமங்கள் உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியிருக்கும்போது அனுமதி தருமாறு வழக்கு போடுவதற்கு வாய்ப்புகள் இல்லை" என்று விளக்கினார்.
அதோடு, "அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது உத்தேசமான கூட்ட விவரம், போதிய கால அவகாசம் ஆகியவை முக்கியம். கரூரில் கடைசி நேரத்தில் தவெக கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தவிர்க்கும் வகையில் காவல்துறை செயல்படுகிறது."
"சேலத்தில் தவெக பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு உரிய காலத்திற்குள் மனு அளிப்பதற்கான வேலைகளில் தவெக நிர்வாகிகள் ஈடுபடுவார்கள். அதைவிட வேறு வாய்ப்புகள் இல்லை" என்று கூறினார் ஷ்யாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












