நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு இடையிலான உறவு எப்படி இருந்தது – ஓர் அலசல்

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
நேருவும் சுபாஷ் சந்திர போஸும் எட்டு ஆண்டு இடைவெளியில் பிறந்தவர்கள். நேரு 1889 நவம்பர் 14 ஆம் தேதியும் போஸ் 1897 ஜனவரி 23 ஆம் தேதியும் பிறந்தனர். நேரு தனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை அலகாபாத்தில் கழித்தார், சுபாஷின் ஆரம்பகால வாழ்க்கை ஒடிஷாவின் கட்டாக் நகரில் கழிந்தது.
இரு தலைவர்களும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்கள். ஜவஹர்லாலின் தந்தை மோதிலால் நேரு, சுபாஷின் தந்தை ஜானகிநாத் போஸ் இருவரும் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்கள். ஜவஹர்லால் அவரது பெற்றோருக்கு ஒரே மகன். சுபாஷ் சந்திர போஸுக்கு ஒன்பது உடன்பிறப்புகள் இருந்தனர்.
ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் இருவருமே மிகச் சிறந்த மாணவர்கள். கட்டாக்கிலிருந்து கல்கத்தா வந்த பிறகு, போஸ் புகழ்பெற்ற பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு ஆங்கிலேய ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் தவறாக நடந்து கொண்டபோது போஸ் கல்லூரி முதல்வரைச் சந்தித்து, ஆசிரியர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதற்காக சுபாஷ் போஸ் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் அவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் பிஏ தேர்வில் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
சுபாஷ் சந்திர போஸ் லண்டனில் ஐசிஎஸ் தேர்வை எழுதினார். அங்கு அவர் தகுதி பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றார்.
நேரு கேம்பிரிட்ஜில் படித்துவிட்டு இந்தியா திரும்பியபோது அவருக்கு வயது 23. சுபாஷ் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியபோது அவருக்கு வயது 25.
மகாத்மா காந்தி பற்றிய இருவரின் மாறுபட்ட கருத்துகள்
மகாத்மா காந்தியுடனான நேருவின் முதல் சந்திப்பு 1916ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் நடந்தது. காந்தியுடனான முதல் சந்திப்பில் இளம் ஜவஹர்லாலுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் படிப்படியாக அவர் காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு அவரை மிகவும் மதிக்கத் தொடங்கினார்.
மாறாக காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் மீது எந்தவொரு சிறப்பு விளைவையும் ஏற்படுத்தவில்லை.
பிரபல வரலாற்றாசிரியர் ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'நேரு அண்ட் போஸ் பேரலல் லைவ்ஸ்' என்ற புத்தகத்தில், "1927 வாக்கில், இருவரும் அரசியலில் காலடி எடுத்து வைத்தனர். இருவரும் பிரிட்டிஷ் இந்திய சிறைகளில் முதல் தண்டனையை அனுபவித்தனர். இருவரும் காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டனர். ஆனால் போஸ் காந்தியின் செல்வாக்கின்கீழ் முழுமையாக வரவில்லை,” என்று எழுதியுள்ளார்.
"மோதிலால் நேரு, காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸின் சிறப்பு அமர்வில் கலந்துகொள்ள நேரு 1921 செப்டம்பரில் கல்கத்தா வந்தார்.
அப்போது போஸ் சித்தரஞ்சன் தாஸுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் சித்தரஞ்சன் தாஸ் வீட்டில்தான் தங்கினார்கள். அந்த நேரத்தில் ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் சந்திக்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU
கமலா நேருவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்
நேருவின் மனைவி கமலா நேரு காசநோய் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றபோது போஸ் மற்றும் நேருவின் நெருக்கம் அதிகரித்தது. அப்போது நேரு சிறையில் இருந்தார்.
சுபாஷ் சந்திர போஸ் கமலாவை சந்திக்க பாடேன்வைலர் சென்றார். கமலாவின் உடல்நிலை மோசமடைந்தபோது நேரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
"நேரு ஐரோப்பா சென்றடைந்தபோது, போஸ் நேருவை சந்திக்க பிளாக் ஃபாரஸ்ட் ரிசார்ட்டுக்கு சென்றார். இருவரும் ஒரே போர்டிங் ஹவுஸில் தங்கினர். கமலா நேருவின் உடல்நிலை சற்று மேம்பட்டபோது, சுபாஷ் சந்திர போஸ் ஆஸ்திரியா சென்றார்," என்று சுகதா போஸ் தனது 'ஹிஸ் மெஜஸ்டீஸ் ஆப்பனெண்ட்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் எழுதுகிறார், "அங்கிருந்து அவர் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். உங்கள் பிரச்னைகளுக்கு நான் ஏதேனும் வகையில் உதவிகரமாக இருக்கமுடியும் என்றால் எனக்கு அழைப்பு அனுப்பத் தயங்க வேண்டாம் என்று அதில் அவர் எழுதியிருந்தார். 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் லூஸானில் கமலா நேரு காலமானபோது ஜவஹர்லால் நேரு, சுபாஷ் போஸ், இந்திரா காந்தி ஆகியோர் அங்கே இருந்தனர்.
"கமலா நேருவின் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்தவர் போஸ். அவரது சோகமான நாட்களில் நேருவுடன் சுபாஷ் இருந்தது இருவருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியது," என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.
காந்தியின் ஆலோசனையின் பேரில் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார்
ஜவஹர்லால் நேரு தனது மனைவி கமலா நேருவை ஐரோப்பாவில் கவனித்துக் கொண்டிருந்தபோது, 1936ஆம் ஆண்டு ஏப்ரலில் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் நேரு கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரைத் தலைவராக்கும் யோசனை காந்தியுடையது. நேரு ஐரோப்பா செல்வதற்கு முன் காந்தி நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை அடுத்த ஆண்டு நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
"அடுத்த ஆண்டு காங்கிரஸ் தலைவராக உங்களை ஆக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். உங்கள் சம்மதம் பல சிரமங்களைத் தீர்க்கும்" என்று சில நாட்களுக்குப் பிறகு அவரிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்தார்.
ஆரம்பத்தில் நேரு சம்மதம் தெரிவிக்க சிறிது தயக்கம் காட்டினார். ஆனால் பின்னர் அவர் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ஆனால் காந்தியின் முடிவுக்கு காங்கிரஸின் சில வட்டாரங்களில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
நேருவுக்கு எதிராக ராஜகோபாலாச்சாரியை போட்டியிட அனுமதிக்குமாறு காந்தியிடம் முறையிடப்பட்டது. ஆனால் காந்தி அதற்கு செவிமடுக்கவில்லை. 592இல் 541 வாக்குகளை நேரு பெற்றார்.
வெற்றி பெற்றாலும் நேரு மீதான தாக்குதல்கள் குறையவில்லை. காவ்ஸஜி ஜஹாங்கீர் அவரை ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் என்று அழைத்தார். நேரு மாஸ்கோவை நோக்கித் தலை வணங்க நேரம் எடுக்கமாட்டார் என்று ஹோமி மோதி எச்சரித்தார்.
நேரு மீண்டும் கட்சியின் தலைவராவதில் காங்கிரஸில் கருத்து வேறுபாடு
1936 டிசம்பரில் ஃபைஸ்பூர் காங்கிரஸ் மாநாட்டில் நேருவை மீண்டும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் யோசனை முன்வைக்கப்பட்டபோது, சர்தார் படேல் அதைக் கடுமையாக எதிர்த்தார்.
காந்தியின் செயலாளரான மகாதேவ் தேசாய்க்கு படேல் கடிதம் எழுதினார். நேருவை 'அலங்காரம் செய்யப்பட்ட மாப்பிள்ளை' என்றும் அவர் ’அவர் எத்தனை பெண்களைப் பார்த்தாலும் அவர்கள் அனைவரையும் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறார்' என்றும் அதில் அவர் குறிப்பிட்டார்.
தேசாயின் ஆலோசனையின் பேரில் காந்திஜி ராஜகோபாலாச்சாரிக்கு எழுதிய கடிதத்தில், ’நீங்கள் காங்கிரஸின் முள்கிரீடத்தை அணிய வேண்டும் என்று படேல் விரும்புகிறார்’ என்று கூறினார். கோபாலாச்சாரி அவர் சொன்னதை ஏற்காததால் படேல், கோவிந்த் பல்லப் பந்தின் பெயரைப் பரிந்துரைத்தார்.
ஜவஹர்லால் நேரு கட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்தால், கட்சியின் உறுப்பினர் பதவியைக் கைவிடுவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று படேல் கூறினார்.
ராஜ்மோகன் காந்தி, சர்தார் படேலின் வாழ்க்கை வரலாறான 'படேல்' என்ற புத்தகத்தில், "கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்கும் தனது விருப்பத்தை ஆச்சார்ய கிருபலானியின் முன்னிலையில் நேரு காந்தியிடம் வெளிப்படுத்தினார். காங்கிரஸுக்கு புத்துயிர் ஊட்ட எட்டு மாதங்கள் என்பது மிகக் குறுகிய காலம் என்று அவர் வாதிட்டார். இதற்கு என்ன செய்ய முடியும் என்று பார்ப்பதாக காந்தி பதிலளித்தார். நேருவுக்கு எதிராகப் போட்டியிட வேண்டாம் என்று படேலை சம்மதிக்க வைத்தார்.
காந்தியின் சம்மதத்துடன் போஸ் காங்கிரஸின் தலைவரானார்.
1937ஆம் ஆண்டு மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸின் பெயரைப் பரிந்துரைத்தார். ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்த வரை, சுபாஷ் போஸ் சிறையில் அல்லது வெளிநாட்டில் இருந்தார்.
சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது நேரு இந்தியாவில் இருக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே கருத்தியல் வேறுபாடு இல்லை. இருவரும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சமரசத்தை விரும்பினர்.
1938 மே 14ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ், பம்பாயில் உள்ள அவரது இல்லத்தில் முகமது அலி ஜின்னாவை சந்தித்தார். ஆனால் இந்த சந்திப்பால் நேர்மறையான பலன் ஏதும் ஏற்படவில்லை.
நேருவை போலவே சுபாஷ் சந்திரபோஸும் மேலும் ஓராண்டு காங்கிரஸ் தலைவராக இருக்க விருப்பம் தெரிவித்தார். அதற்கு வலுவான ஆதரவை ரவீந்திரநாத் தாகூர் வழங்கினார். காங்கிரஸில் சுபாஷ் மற்றும் ஜவஹர்லால் ஆகிய இருவர் மட்டுமே நவீன சிந்தனை கொண்டவர்கள் என்று அவர் கருதினார்.
நேரு திட்டக்குழுவின் தலைவராக இருந்ததால், போஸ் மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று தாகூர் விரும்பினார். ஆனால் காந்தி, சுபாஷ் சந்திர போஸை மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆக்குவதற்கு ஆதரவாக இருக்கவில்லை.
போஸுக்கும் காந்திக்கும் இடையே மோதல்
காந்திக்கு நெருக்கமான பட்டாபி சீதாராமையா, சுபாஷ் போஸை எதிர்த்து தேர்தலில் நிறுத்தப்பட்டார். காந்தியின் ஆதரவு இல்லாதபோதும் சுபாஷ் போஸ் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 1580 வாக்குகள் கிடைத்தன. சீதாராமையா 1377 பேரின் ஆதரவை மட்டுமே பெற முடிந்தது.
வங்காளம், மைசூர், பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் மெட்ராஸ் ஆகிய மாநிலங்களில் இருந்து போஸ் அதிக வாக்குகளைப் பெற்றார். ஆனால் இந்த முடிவுக்குப் பிறகு வெளியான மகாத்மா காந்தியின் அறிக்கை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
“சீதாராமையா இந்தப் போட்டியில் இருந்து என்னுடைய வேண்டுகோளின் பேரில் மட்டும் விலகவில்லை என்பதால், இந்தத் தோல்வி என்னுடையது, அவருடையது அல்ல” என்றார் காந்தி.
"காந்திஜியின் கூற்று தன்னைக் காயப்படுத்தியதாக சுபாஷ் ஒப்புக்கொண்டார். காங்கிரஸ் உறுப்பினர்கள் காந்திக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்குமாறு கேட்கப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
காந்தியுடனான உறவைப் பற்றி குறிப்பிட்ட போஸ், காந்தியுடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர் மீதான மரியாதையைத்தான் ஒருபோதும் இழக்கவில்லை என்றும் அந்த மாமனிதரின் நம்பிக்கையைப் பெற முழு முயற்சி செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி எழுதியுள்ளார்.
நேருவுக்கும் சுபாஷுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன
இங்கிருந்துதான் சுபாஷுக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடங்கியது. பிப்ரவரி தொடக்கத்தில், நேருவும் சுபாஷும் சாந்திநிகேதனில் ஒரு மணி நேரம் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் நடந்த உரையாடல் குறித்து எந்தப் பதிவும் இல்லை. ஆனால் இதற்குப் பிறகு நேரு போஸுக்கு எழுதிய கடிதத்தின் பதிவு உள்ளது.
"காங்கிரஸுக்குள் உள்ளவர்களுக்கு சுபாஷ் போஸ் 'இடதுசாரி' மற்றும் 'வலது சாரி' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நேரு எதிர்த்தார். இந்த வார்த்தைகள் காந்தி மற்றும் அவரை ஆதரிப்பவர்கள் வலதுசாரிகள் மற்றும் எதிர்ப்பவர்கள் இடதுசாரிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று நேரு கருதினார்.
இந்தக் கடிதத்தில் இந்து-முஸ்லிம்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளையும் நேரு எழுப்பினார். இந்தப் பிரச்னைகளில் சுபாஷின் கருத்து அவரது காங்கிரஸ் சகாக்களிடமிருந்து வேறுபட்டதா என்பதை நேரு அறிய விரும்பினார். இவை அனைத்தையும் குறித்து சுபாஷ் போஸ் விளக்கக் குறிப்பை வெளியிட வேண்டும் என்று நேரு விரும்பினார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி எழுதுகிறார்.
சுபாஷை எதிர்த்த சர்தார் படேல் மற்றும் பந்த்
மறுபுறம் சர்தார் படேலும் சுபாஷ் சந்திர போஸின் எதிர்ப்பாளராக மாறினார். "போஸுடன் பணியாற்றுவது சாத்தியமற்றதாகிவிட்டது. மேலும் கட்சியை நடத்த தனக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார் என்று படேல் ராஜேந்திர பிரசாத்துக்கு கடிதம் எழுதினார்,” என்று ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ளார்.
பிப்ரவரி 22ஆம் தேதி வார்தாவில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றபோது, சுபாஷ் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக அதில் பங்கேற்க முடியவில்லை.
காந்தியின் உத்தரவின் பேரில் நேரு மற்றும் ஷரத் சந்திரபோஸ் தவிர, படேல் உட்பட எல்லா செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதற்குப் பிறகு திரிபுரியில் மார்ச் 10 மற்றும் 12க்கு இடையில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடந்தது. காய்ச்சல் இருந்தபோதிலும் அதில் பங்கேற்க போஸ் வந்தார்.
அப்போது ராஜ்கோட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்ததால் காந்தி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
"காந்தியின் அடிப்படைக் கொள்கைகளில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக கோவிந்தவல்லப் பந்த் ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். கடந்த ஓராண்டாக செயல்பட்டு வந்த காரிய கமிட்டியின் பணி மீது நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. காந்தியின் விருப்பப்படி ஒரு செயற்குழுவை அமைக்குமாறு தலைவரிடம் கோரப்பட்டது,” என்று பட்டாபி சீதாராமையா தனது 'ஹிஸ்ட்ரி ஆஃப் தி காங்கிரஸ்' புத்தகத்தில் எழுதியுள்ளார்.
போஸ் நேருவுக்கு 27 பக்க கடிதம் அனுப்பினார்
மகாத்மா காந்தியுடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க சுபாஷ் முயன்றுகொண்டிருந்த நேரத்தில் ஜவஹர்லால் நேருவுக்கு 27 பக்க தட்டச்சு செய்யப்பட்ட கடிதம் ஒன்றை அவர் எழுதினார்.
அவரது முதல் வாக்கியம், "இப்போது சில காலமாக நீங்கள் என்னை மிகவும் வெறுக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்ற உணர்வு எனக்கு உள்ளது.”
"நான் 1937இல் சிறையில் இருந்து வெளியே வந்ததிலிருந்து நான். தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் உங்களை எப்போதும் மதிக்கிறேன். நான் எப்போதும் உங்களை என் மூத்த சகோதரனாகக் கருதுகிறேன். அடிக்கடி உங்கள் ஆலோசனையை நாடினேன். ஆனால் என்னைப் பற்றிய உங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவற்றதாகவே உள்ளது,” என்று போஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
கடிதத்தின் தொனி முழுவதும் கசப்பு நிறைந்ததாக இருந்து. ஜனவரி 26 அன்று நேரு வெளியிட்ட அறிக்கை பற்றிக் குறிப்பிட்ட சுபாஷ், "கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி நாம் பேச வேண்டும், தனிநபர்களைப் பற்றி அல்ல என்று நீங்கள் சொன்னீர்கள்," என்றார்.

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU
"சில சிறப்பு வாய்ந்தவர்களைக் குறிப்பிடும்போது, நாம் தனிநபர்களை மறந்துவிட வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். சுபாஷ் சந்திர போஸ் மீண்டும் தேர்தலில் நிற்கும்போது, நீங்கள் ஆளுமையைப் புறக்கணித்து கொள்கைகளைப் பற்றி பேசுகிறீர்கள்.
ஆனால் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி மௌலானா ஆசாத் பேசும்போது அவருடைய புகழ் பாடுவதற்கு நீங்கள் தயங்குவதில்லை,” என்று போஸ் கடிதத்தில் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் செயற்குழுவின் 12 உறுப்பினர்கள் ராஜினாமா செய்த பின்னர் பிப்ரவரி 22 அன்று நேரு வெளியிட்ட அறிக்கைக்கு சுபாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். அது உங்கள் ஆளுமைக்கு புகழ் சேர்க்கவில்லை என்றார் சுபாஷ். (நேதாஜி கலெக்டெட் வொர்க்ஸ், தொகுதி 9)

பட மூலாதாரம், Getty Images
மோசமாக உணர வைத்த சுபாஷின் 'தற்பெருமை'
இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த ஜவஹர்லால் நேரு, சுபாஷ் போஸின் வெளிப்படையான பேச்சை பாராட்டினார். "வெளிப்படைத்தன்மை சிலரைக் காயப்படுத்தலாம். ஆனால் அது அவசியம், குறிப்பாக ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நபர்களிடையே இது மிக அவசியம். சில நேரங்களில் நான் உங்கள் வேலை மற்றும் விஷயங்களைச் செய்யும் விதத்தை விரும்பாத போதிலும்கூட தனிப்பட்ட முறையில் எப்போதும் உங்கள் மீது பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.
கடிதத்தின் அடுத்த பகுதியில், சுபாஷ் சந்திர போஸின் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் அவர் விரிவாகப் பதிலளித்தார். சுபாஷின் தற்பெருமையை விரும்பத்தகாததாக நேரு சில நேரங்களில் கண்டார்,” என்று ருத்ராங்ஷூ முகர்ஜி எழுதியுள்ளார்.
நேரு சுபாஷ் போஸுக்கு எழுதிய கடிதத்தில், "நீங்கள் மீண்டும் காங்கிரஸின் தலைவராவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அரசியல் ரீதியாக அதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காகப் பணியாற்ற உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் நீங்கள் இவை அனைத்திற்கும் மேலானவர் என்று நான் கருதுவதால் எனக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளது என்று எழுதினார்," என ருத்ராங்ஷு முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷுக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்தன
இந்தக் கடித பறிமாற்றங்களுக்குப் பிறகும் காந்தியையும் நேருவையும் சம்மதிக்க வைக்கும் முயற்சியை சுபாஷ் குறைக்கவில்லை. ஜூன் மாதம், அவர் காந்தியைச் சந்திக்க வார்தாவுக்கு சென்றார். அங்கு காந்திக்கும் சுபாஷுக்கும் இடையே கடைசி சந்திப்பு நிகழ்ந்தது.
ஆனால் இந்த சந்திப்பில் சாதகமான முடிவு எதுவும் ஏற்படவில்லை. சுபாஷ் மீதான காந்தியின் எண்ணம் மேலும் உறுதியாகிக் கொண்டே போனது.
1939 டிசம்பரில் தாகூர் காந்திக்கு ஒரு தந்தியை அனுப்பி சுபாஷ் மீதான தடையை நீக்கக் கோரினார். அதற்குப் பதிலளித்த காந்தி, சுபாஷ் போஸுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டார்.
1940 ஜனவரியில் CF ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி, தாகூரின் தந்தியைக் குறிப்பிட்டு, "சுபாஷ், குடும்பத்தின் சொல்பேச்சு கேட்காத குழந்தையைப் போல நடந்துகொள்வதை நான் காண்கிறேன். இந்தச் சிக்கலான விஷயத்தைத் தீர்ப்பது குருதேவின் திறனுக்குக் கீழே இல்லை என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது," என்று எழுதியுள்ளார். (காந்தி கலெக்டெட் வொர்க்ஸ், தொகுதி 71)

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU
சுபாஷ் இறந்த செய்தி கேட்டதும் உணர்ச்சிவசப்பட்ட நேரு
இறுதியில், சுபாஷ் போஸ் காங்கிரஸில் இருந்து விலக நேரிட்டது. ஃபார்வர்டு பிளாக் என்ற புதிய அவர் கட்சியை உருவாக்கினார். 1941இல், சுபாஷ் போஸ் இந்தியாவை விட்டு ரகசியமாக வெளியேறுவதில் வெற்றி பெற்றார்.
அவர் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனியை அடைந்தார். அங்கு அவர் ஹிட்லரை சந்தித்தார்.
காங்கிரசில் தலைவராகும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், 1943-44இல் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் காட்டினார்.

பட மூலாதாரம், NETAJI RESEARCH BUREAU
அவர் ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் அதாவது இந்திய தேசிய ராணுவத்திற்கு (INA) தலைமை வகித்தார். சிறுவயதிலிருந்தே, அவருக்கு ராணுவ வாழ்க்கையில் ஆசை இருந்தது. அவர் தனது வாழ்க்கையின் கடைசி சில ஆண்டுகளை ராணுவ சீருடையில் கழித்தார்.
இதன்போது நேரு 1942 ஆகஸ்ட் 9 முதல் 1945 ஜூன் 15 வரை சிறையில் இருந்தார். இதுவே அவர் வாழ்நாளில் மிக நீண்ட சிறைவாசம். விமான விபத்தில் சுபாஷ் போஸ் இறந்த செய்தி அறிந்த நேரு கதறி அழுதார்.
"துணிச்சலான வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா பிரச்னைகளிலிருந்தும் சுபாஷ் இப்போது வெகு தொலைவில் இருக்கிறார். பல விஷயங்களில் சுபாஷுடன் நான் உடன்படவில்லை, ஆனால் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவரது நேர்மை குறித்த கேள்விக்கே இடமில்லை,”என்று உணர்ச்சிவசப்பட்டு நேரு கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நேருவின் பெயரிடப்பட்ட படைப்பிரிவு
சுபாஷுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவருடன் கழித்த நாட்களை நேருவால் மறக்கவே முடியவில்லை. சுபாஷ் மனதில் கடைசி வரை நேரு மீது மரியாதை இருந்தது. அதனால்தான் அவர் INA வின் ஒரு படைப்பிரிவுக்கு 'நேரு ரெஜிமெண்ட்' என்று பெயரிட்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, டெல்லி செங்கோட்டையில் ஆசாத் ஹிந்த் ஃபெளஜ் வீரர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு வழக்கு தொடுத்தபோது ஜவஹர்லால் நேரு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வழக்கறிஞர் கவுனை அணிந்து நீதிமன்றத்தில் இந்த வீரர்கள் தரப்பில் கடுமையாக வாதிட்டார்.
"தானும் நேருவும் இணைந்து சரித்திரம் படைக்க முடியும் என்று சுபாஷ் நம்பினார். ஆனால் காந்தி இல்லாமல் தனது எதிர்காலத்தைக் காண நேரு தயாராக இல்லை. போஸ்-நேரு உறவு ஆழமாகாமல் போனதற்கு இதுவே மிகப் பெரிய காரணம்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி எழுதுகிறார்.
நேரு-சுபாஷ் உறவு இந்திய அரசியலில் ஒரு பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி மேலும் தொடர்ந்திருக்கும். ஆனால் விதி போஸை இந்தியாவின் அரசியல் காட்சியில் இருந்து அகற்றியது.
சுபாஷ் உயிருடன் இருந்திருந்தால், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக வருவதற்கு அவர் பலமான போட்டியாளராக இருந்திருப்பார் என்றும், இந்தியாவின் தலைமைப் பொறுப்பு நேருவுக்கு கிடைத்திருக்குமா அல்லது சுபாஷ் சந்திரபோஸுக்குச் சென்றிருக்குமா என்று பார்ப்பது சுவாரசியமாக இருந்திருக்கும் என்றும் சிலர் நினைக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












