சர்ச்சையான நேருவின் விமான பிரசாரம், அம்பேத்கரின் தோல்வி - சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் எப்படி இருந்தது?

பட மூலாதாரம், PHOTO DIVISION
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சர்தார் படேல் காலமாகி, ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக ஆன பிறகு, ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரானார். அரசின் கொள்கைகளை வகுக்க அவருக்கு முழு சுதந்திரம் கிடைத்தது.
சர்தார் படேல் மற்றும் புருஷோத்தம் தாஸ் டாண்டன் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு நேரு இரண்டு பாடங்களைக் கற்றுக்கொண்டார். முதலாவது, உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் தனக்கு விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தான் சொல்வதைக் கேட்பவராக இருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் இந்திய அரசியலில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஆச்சார்யா கிரிப்லானி காங்கிரஸிலிருந்து பிரிந்து கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியை உருவாக்கினார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்காளர்கள் மத்தியில் குறைந்த அளவு செல்வாக்குதான் இருந்தது. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நேரு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த பிறகு, ஜன்சங் என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
புதிதாக சுதந்திரம் பெற்ற நாடு ஒரு சில ஆண்டுகளுக்குள், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்தது. இதற்கு நேர்மாறாக மேற்கத்திய நாடுகளில் நில உரிமையாளர்களுக்கு முதலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
சுதந்திரம் அடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் 1950 மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.
சுகுமார் சென் 1921இல் இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரியானார். வங்காளத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றிய பிறகு மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலர் பதவியை அவர் வகித்தார். பிறகு அவர் அங்கிருந்து தலைமைத் தேர்தல் ஆணையராக டெல்லிக்கு கொண்டு வரப்பட்டார்.
வாக்காளர் பட்டியலில் பெண்களின் பெயர்களைச் சேர்ப்பதில் சிக்கல்

பட மூலாதாரம், PHOTO DIVISION
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் சுமார் 17 கோடி பேர் பங்கேற்றனர். இதில் 85 சதவிகிதம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. மொத்தம் சுமார் 4500 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 499 மக்களவை இடங்களும் அடங்கும்.
ராமச்சந்திர குஹா தனது 'இந்தியா ஆஃப்டர் காந்தி' புத்தகத்தில், "இந்தியா முழுவதிலும் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கட்டப்பட்டன. இது தவிர 20 லட்சம் இரும்பு வாக்குப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. அதற்கு 8200 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் தயாரிக்க மொத்தம் 16500 பேர் ஆறு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு வாக்காளரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முயற்சியாக இருந்தது,” என்று எழுதியுள்ளார்.
”வாக்காளர் பட்டியலில் பெண் வாக்காளர்களின் பெயரைச் சேர்ப்பதுதான் அவர்களுக்கு முன்னால் இருந்த மிகப்பெரிய பிரச்னை. பல பெண்கள் தங்கள் பெயரை வெளியிடத் தயங்கினார்கள். அவர்கள் தங்களை யாரோ ஒருவரின் மகள் அல்லது ஒருவரின் மனைவி என்று அழைக்கப்படுவதை விரும்பினார்கள்.
இதன் காரணமாக வாக்காளர் பட்டியலில் சுமார் 80 லட்சம் பெண்களின் பெயர்களைச் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் நடத்த 56,000 பேர் தேர்தல் அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிட 2 லட்சத்து 28 ஆயிரம் உதவியாளர்கள் மற்றும் 2 லட்சத்து 24 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்” என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தொலைதூர மலைப் பகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்வதற்காகப் பாலங்கள் கட்டப்பட்டன. மேலும் இந்துமாக்கடலில் உள்ள சில தீவுகளுக்கு தேர்தல் பொருட்களைக் கொண்டு செல்ல கடற்படை கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
மேற்கத்திய நாடுகளில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களால் பெயர் மூலம் வேட்பாளரை அடையாளம் காண முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களின் கல்வியறிவின்மை காரணமாக, வாக்குச்சீட்டில் வாக்காளரின் பெயருக்கு அடுத்ததாக தேர்தல் சின்னம் அச்சிடப்பட்டது.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு அதில் கட்சியின் சின்னங்கள் அமைக்கப்பட்டன. வாக்காளர்கள் அதில் தங்கள் வாக்குச் சீட்டுகளைப் போடவேண்டும்.
போலி வாக்காளர்களைத் தவிர்க்க இந்திய விஞ்ஞானிகள் ஒரு மையை உருவாக்கினர். வாக்காளர்களின் விரலில் தடவிய பிறகு அது ஒரு வார காலத்திற்கு அழியாமல் இருக்கும். தேர்தல் மற்றும் வாக்காளர் உரிமைகள் தொடர்பான ஆவணப்படம் இந்தியா முழுவதும் 3000 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
விமானம் மூலம் பிரசாரம செய்து சர்ச்சைக்கு உள்ளான நேரு

பட மூலாதாரம், PICADOR INDIA
இந்தியாவில் இந்தத் தேர்தல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், வியட்நாமில் உள்ள வியட்-மினுடன் வடகொரிய வீரர்களுக்கும் எதிராக பிரெஞ்சு ராணுவ வீரர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் வீரர்களும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நாட்களில் அமெரிக்கா தனது முதல் ஹைட்ரஜன் குண்டை சோதித்தது.
அந்த ஆண்டு உலகில் மூன்று அரசியல் படுகொலைகள் நடந்தன. ஜோர்டன் மன்னர், இரான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் ஆகியோர் கொலையாளிகளின் தோட்டாக்களுக்கு பலியாகினர்.
துர்கா தாஸ் தனது 'From Curzon to Nehru and After' என்ற புத்தகத்தில், "பிரதமராக தான் பயன்படுத்தும் விமானத்தின் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வது பொருத்தமானதாக இருக்காது என்று நேரு கருதினார். மறுபுறம், அவரிடமோ அல்லது காங்கிரஸ் கட்சியிடமோ பிரசாரத்திற்காக விமானங்களை வாடகைக்கு எடுக்கப் போதுமான பணம் இல்லை,” என்று எழுதியுள்ளார்.
அப்போதைய ஆடிட்டர் ஜெனரல் நேருவுக்கு உதவ ஒரு நல்ல ஃபார்முலாவை பரிந்துரைத்தார். இந்திய பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யக்கூடாது. அவர் விமானத்தில் பயணம் செய்தால் மட்டுமே இது முடியும் என்று அவர் யோசனை கூறினார்.
விமானத்தில் பயணம் செய்வதன் ஒரு நன்மை என்னவென்றால், ரயில் பயணத்தைவிடக் குறைவான பேரே அவரது பாதுகாப்பிற்குத் தேவைப்படுவார்கள். பிரதமரின் பாதுகாப்பிற்கான பொறுப்பு அரசுடையது என்பதால், இந்தச் செலவை அரசுதான் ஏற்க வேண்டும்.
அதனால் ஒரு நபருக்கான விமான கட்டணத்தை நேரு, அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. அவருடன் செல்லும் பாதுகாப்புப் பணியாளர்களின் கட்டணத்தை அரசு செலுத்தும். கட்சியைச் சேர்ந்த ஒருவர் நேருவுடன் இருந்தால், அந்த நபர் தனது கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று முடிவானது.
இதன் மூலம் நேரு, விமானப் பயணத்திற்கு ஆன செலவில் ஒரு சிறு பகுதியை மட்டுமே அரசுக்குச் செலுத்தினார்.
மூலை முடுக்கெல்லாம் நேரு பிரசாரம்

பட மூலாதாரம், PHOTO DIVISION
நேரு விமானம் தவிர, சாலைகள் மற்றும் ரயில்களையும் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தினார். அவரது தேர்தல் பிரசாரம் 1952 அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கியது. ஒன்பது மாதங்களுக்குள் நேரு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் செய்தார்.
நேரு விமானம் மூலம் 18,000 மைல்கள், கார்கள் மூலம் 5,200 மைல்கள், ரயில் மூலம் 1,600 மைல்கள் மற்றும் படகில் 90 மைல்கள் உட்பட மொத்தம் 25,000 மைல்கள் பயணம் செய்தார்.
நேருவின் முதல் தேர்தல் உரை பஞ்சாபில் உள்ள லூதியானாவில் நடந்தது. இதில், மதவாத கட்சிகளைத் தாக்கிப் பேசிய அவர், ஒரு காலத்தில் முஸ்லிம் லீக் செய்தது போல், இந்து-சீக்கிய கலாசாரம் என்ற பெயரில் அவர்கள் வகுப்புவாதத்தை வளர்க்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
நேரு தனது அடுத்த உரையை காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 அன்று டெல்லியில் நிகழ்த்தினார்.
இந்த உரையில் தீண்டாமை மற்றும் ஜமீன்தாரி நடைமுறைகளை ஒழிக்க தனது கட்சி உறுதியாக உள்ளது என்று வலியுறுத்தினார். மதத்தின் பெயரால் ஒருவர், வேறொருவர் மீது கையை உயர்த்தினால், அவருக்கு எதிராகத் தனது இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவேன் என்று சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த உரையில் நேரு அறிவித்தார்.
அம்பாலாவில் நடந்த தேர்தல் கூட்டத்தில், முக்காடிடும் பழக்கத்தை விட்டுவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட முன்வருமாறு அவர் பெண்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நேரு தனது தேர்தல் கூட்டத்தில் சீருடை அணிந்திருந்த காவலர்களின் வருகையால் பெரிதும் எரிச்சலடைந்தார். ஆனால் அன்றைய அதிகார வர்க்கத்தினர் அதைச் சமாளிப்பதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.
"நேருவின் இந்த எதிர்ப்புக்கு நாங்கள் தீர்வு அளித்தோம். பிரதமரின் பாதுகாப்பில் அவர் தலையிடக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். இதற்கு பிரதமர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் அவரது கூட்டத்தில் சீருடை அணிந்த காவலர்கள் இருக்க மாட்டார்கள் என உறுதியளித்தோம்.
இந்த ஏற்பாட்டால் பிரதமர் திருப்தி அடைந்தார். அப்போது காங்கிரஸ் டிக்கெட்டிற்கு பெரும் கிராக்கி இருந்தது. ஏனெனில் இந்தச் சின்னத்தில் ஒரு மின்கம்பம்கூட வெற்றி பெறும் என மக்கள் நம்பினர்,” என்று அப்போதைய அமைச்சரவை செயலர் என்.ஆர்.பிள்ளை எழுதியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களைப் பாராட்டிய நேரு

பட மூலாதாரம், Getty Images
அலகாபாத் கிழக்கு மற்றும் ஜோன்பூர் மேற்கு ஆகிய இரு பகுதிகளின் கூட்டுத் தொகுதியில் இருந்து நேரு வெற்றி பெற்றார். பின்னர் இந்தத் தொகுதியின் பெயர் ஃபூல்பூர் என மாற்றப்பட்டது.
நேரு அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான மௌலானா அபுல் கலாம் ஆசாத், உத்தர பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 16 இடங்களைப் பெற்றது. அதில் 8 இடங்களை அக்கட்சி மதராஸில் இருந்து கைப்பற்றியது.
பாரதிய ஜன்சங் 49 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றது. கட்சியின் தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தென்கிழக்கு கல்கத்தா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று மக்களவைக்கு வந்தார்.
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 144 இடங்களில் போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களில் 9 பேர் மட்டுமே மக்களவைக்கு வர முடிந்தது.
ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் சோஷியலிஸ்ட் கட்சி 254 இடங்களில் போட்டியிட்டு, 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சி கிரிப்லானியின் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இணைந்தது. புதிய கட்சிக்கு பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி என்று பெயரிடப்பட்டது.
"நேரு தனது தேர்தல் உரைகளில், எதிர்க்கட்சித் தலைவர்களான அம்பேத்கர், கிரிப்லானி, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்களைப் புகழ்ந்து, ஒரு காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
இவர்களைப் போன்றவர்களை என் கட்சியில் வரவேற்கிறேன். ஆனால் இவர்கள் அனைவரும் வேறு திசையில் செல்கிறார்கள். இதன்மூலம் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டார்,” என்று ராமச்சந்திர குஹா எழுதியுள்ளார்.
தான் மதிக்கும் பல பழைய நண்பர்கள் இருக்கும் காரணத்தால், குறிப்பாக சோஷியலிஸ்ட் கட்சியை எதிர்க்க வேண்டியிருப்பது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக நேரு தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, நேரு சுமார் 2 கோடி மக்களிடம் நேரடியாக உரையாற்றினார். சுமார் அதே எண்ணிக்கையிலான மக்கள் அவரைக் காண்பதற்காக தெருக்களின் இருபுறமும் கூடினர்.
மாஸ்கோ வானொலி மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாரம்

பட மூலாதாரம், PHOTO DIVISION
பாரதிய ஜன சங்கின் நிறுவகர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நேரு அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர். அதேபோல் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய பீம்ராவ் அம்பேத்கரும் நேரு அமைச்சரவையில் பணியாற்றியவர்.
தேர்தலுக்கு முன்பு அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து, ’ஷெட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனை’ நிறுவினார். அவர் தனது உரைகளில் காங்கிரஸை தாக்கி, அது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கவில்லை என்று கூறினார்.
1952 தேர்தலில், பெரும்பாலும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வீடு வீடாகச் சென்றும் பிரசாரம் செய்யப்பட்டது. லார்ட் பேர்ட்வுட் என்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் தனது 'A Continent Decides' என்ற கட்டுரையில், "டெல்லியின் சுவர்கள், தெருக்கள் மற்றும் சிலைகள்கூட தேர்தல் பிரசார சுவரொட்டிகளால் மூடப்பட்டிருந்தன. மேற்கு வங்கத்தில் மக்கள் ஒரு தனித்துவமான பிரசார முறையை வகுத்துள்ளனர். காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று தெருவில் திரியும் மாடுகளின் முதுகில் எழுதப்பட்டிருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தி பிரசாரம் செய்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே வானொலியில் பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அகில இந்திய வானொலியில் அல்ல மாஸ்கோ வானொலியில்.
இந்த வானொலி நிலையம் தாஷ்கண்டில் உள்ள தன் டிரான்ஸ்மிட்டர் மூலம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பிரசாரம் செய்து வந்தது.
மெட்ராஸில் இருந்து வெளியான படித்தவர்களுக்கான ஒரு வார இதழ், ’பிரவ்தா’ என்ற ரஷ்ய நாளேட்டில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பை வெளியிட்டது. அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுக்களின் கட்சி என்று வர்ணிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் முற்போக்கு மக்களின் ஆதரவைப் பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அதற்கான ஒரே மாற்று என்று அதில் கூறப்பட்டது.
தேர்தல் முடிவுக்காகக் காத்திருந்த மக்கள்

பட மூலாதாரம், PHOTO DIVISION
பிரதான கட்சிகளைத் தவிர, மதராஸில் திராவிட கழகம், பஞ்சாபில் அகாலி, பிகாரில் ஜார்கண்ட் கட்சி போன்ற பிராந்தியக் கட்சிகளும் தேர்தலில் பங்கேற்றன.
ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருந்தனர். அவர்களின் தேர்தல் கூட்டங்களில் ஏராளமான மக்கள் திரண்டனர்.
அரசியல் ஆய்வாளர் ரிச்சர்ட் பார்க், தேர்தலுக்கு சற்று முன்பு எழுதிய ஒரு கட்டுரையில், ”சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலாக இருக்கும்போதும்கூட, இந்தியாவின் முன்னணி அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியாளர்களும், தேர்தல் பிரச்சாரத்தின் நுணுக்கங்கள், பிரச்னைகளை வியத்தகு முறையில் வெளிப்படுத்துதல், அரசியல் பேச்சுகள் மற்றும் அரசியல் உளவியல் ஆகியவற்றில் பெற்றுள்ள தேர்ச்சி, வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதைவிட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல,” என்று குறிப்பிட்டுள்ளார்.
1952 தேர்தலின் முதல் வாக்கு, 1951 அக்டோபர் 25ஆம் தேதி, இமாச்சல பிரதேசத்தின் சினி தெஹ்சிலில் போடப்பட்டது. அதே நாளில் பிரிட்டனிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. அடுத்த நாளே அங்கு தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆளும் தொழிலாளர் கட்சியைத் தோற்கடித்து கன்சர்வேடிவ் கட்சியின் வின்ஸ்டன் சர்ச்சில் மீண்டும் பிரிட்டனின் பிரதமரானார்.
ஆனால் 1952 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில்தான் நாட்டின் பிற பகுதிகளில் வாக்களிப்பு நடத்த முடிந்த காரணத்தால், சினி தெஹ்சில் வாக்காளர்கள் தேர்தல் முடிவுகளுக்காகப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதிகபட்சமாக கேரளாவின் கோட்டயம் தொகுதியில் 80 சதவிகித வாக்குகள் பதிவாயின. அதே நேரம் மத்திய பிரதேசத்தின் ஷாடோல் தொகுதியில் மிகக் குறைவாக 20 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாயின.
நாடு முழுவதும் கல்வியறிவின்மை பரவலாக இருந்தாலும்கூட, சுமார் 60 சதவிகித வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகப் பெரிய உதாரணம் ஹைதராபாத்தில் இருந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அரசுக்கு எதிராக இருந்த ஹைதராபாத் நிஜாம், முதலில் வந்து வாக்களித்தார்.
அம்பேத்கர் தோல்வி

பட மூலாதாரம், NAVAYANA PUBLISHING HOUSE
நாடு முழுவதும் பிப்ரவரி கடைசி வாரத்தில் வாக்குப்பதிவு முடிந்தது. மக்களவையில் மொத்தமுள்ள 499 இடங்களில் காங்கிரஸ் கட்சி 364 இடங்களையும் மாநில சட்டப் பேரவைகளில் மொத்தமுள்ள 3,280 இடங்களில் 2,247 இடங்களையும் பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு மொத்தம் 45 சதவிகித வாக்குகள் கிடைத்தாலும் இடங்களின் எண்ணிக்கை 74 சதவிகிதமாக இருந்தது. ராஜஸ்தானில் ஜெய்நாராயண் வியாஸ், பம்பாயில் மொரார்ஜி தேசாய் மற்றும் பீம்ராவ் அம்பேத்கர் ஆகியோர் தோற்கடிக்கப்பட்ட தலைவர்களில் முக்கியமானவர் தலைவர்கள். மிகவும் சாதாரண வேட்பாளரான கஜ்ரோல்கர், அம்பேத்கரை தோற்கடித்தார்.
இது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பண்டாரா தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அம்பேத்கர், அங்கும் தோல்வியைச் சந்தித்தார். கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியின் ஆச்சார்யா கிரிப்லானியும் ஃபைசாபாத்தில் தோல்வியடைந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவர் பாகல்பூரில் இருந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவையை அடைந்தார்.
தேர்தல் வெற்றி குறித்த அச்சம் தவறு என்று நிரூபணமானது

பட மூலாதாரம், PHOTO DIVISION
மனித வரலாற்றில் ஜனநாயகத்தின் மிகப் பெரிய சோதனை இந்தத் தேர்தல் என்று தேர்தலுக்கு முன்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் கூறியிருந்தார்.
மதராஸை சேர்ந்த ஆசிரியரான சி.ஆர்.சீனிவாசன் தனது ‘Elections are on’ என்ற கட்டுரையில், “பெரும்பாலான வாக்காளர்கள் முதல்முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள். ஓட்டு என்றால் என்ன, ஏன், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. இது வரலாற்றில் மிகப் பெரிய சூதாட்டம் என்று சொன்னால் தவறில்லை,” என்று எழுதினார்.
"கல்வியறிவற்ற மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இங்கு அரசு எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை இந்தியாவின் வருங்கால சந்ததியினர், வியப்புடன் பார்ப்பார்கள். இந்தத் தேர்தல் வெற்றி குறித்து நேருவுக்குக்கூட சந்தேகம் இருந்தது,” என்று முன்னாள் ஐசிஎஸ் அதிகாரியான பெண்ட்ரேல் மூன் எழுதினார்.
யுனெஸ்கோ மாநாட்டில் உரையாற்றிய அவர், "சந்தேகத்திற்கு இடமின்றி ஜனநாயகமே சிறந்த ஆட்சி முறை. ஆனால் வயது வந்தோருக்கான வாக்குரிமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தரம் எப்படி இருக்கும் என்பது பார்க்க வேண்டிய விஷயம்," என்று கூறினார்.
ஆயினும் இந்த சந்தேகங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று பின்னர் நிரூபிக்கப்பட்டன.
"படிக்காத வாக்காளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மீது என் மரியாதை அதிகரித்துள்ளது. வயது வந்தோர் வாக்குரிமை பற்றி எனக்கு இருந்த அனைத்து சந்தேகங்களும் தவறு என்று நிரூபணமாகியுள்ளது,” என்று நேரு அவர்களே ஒப்புக்கொண்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












