வெனிசுவேலா அதிபர் தேர்தல்: மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிப்பு- அமெரிக்கா எழுப்பியுள்ள சந்தேகம்

பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலா அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ வெற்றிப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதுவரை 80% ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளதில் அதிபர் மதுரோ 51% வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவரது முக்கிய போட்டியாளர் 44% வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்தல் கவுன்சிலின் தலைவர் எல்வில் அமோரோசோ கூறியுள்ளார். இவர் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளார்.
தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று என எதிர்கட்சி கூறியுள்ளது.
தங்களது வேட்பாளர் எட்முண்டோ கோன்ஸாலேஸ் 70% வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டவர் என்றும் எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
தாங்கள் பெற்ற மொத்த வாக்குகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஆகியவற்றை தற்போதைய அதிபரை விட எதிர்கட்சி வேட்பாளர் கோன்ஸாலேஸ் 40% சதவீத புள்ளிகள் முன்னிலையில் இருந்ததை காட்டுகின்றன என எதிர்கட்சி கூறியுள்ளது.
11 ஆண்டுளாக பதவியில் இருக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவியிலிருந்து அகற்ற, எதிர்கட்சிகள் கோன்ஸாலேஸ் பின்னால் ஒன்றிணைந்தன.
தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், கோன்ஸாலேஸ் அதிபர் மதுரோவை தோற்கடிப்பார் என கூறின.
வெனிசுவேலாவில் 25 வருடங்களாக பொதுவுடமைவாத பிஎஸ்யுவி கட்சி ஆட்சியில் உள்ளது. முதலில் , மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்த நிலையில், 2013-ல் அவர் புற்றுநோயால் மறைந்தபிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். இந்தநிலையில் தாங்கள் மாற்றத்தை விரும்புவதாகப் பல வாக்காளர்கள் கூறினர்.
இந்த தேர்தலில் அரசு மோசடியில் ஈடுபடலாம் என்ற பரவலான அச்சங்கள் இருந்தபோதிலும், தாங்களுக்கு கிடைக்கும் முன்னணி மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் "தேர்தலைத் திருட" மதுரோ நிர்வாகம் எடுக்கும் முயற்சியை முறியடிக்க முடியும் என எதிர்க்கட்சி நம்பியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தேசிய தேர்தல் கவுன்சில் தேர்தல் முடிவுகளை அறிவித்த பிறகு, அதுகுறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தியவர்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனும் ஒருவர். வெனிசுவேலா தேசிய தேர்தல் கவுன்சில் அரசு ஆதரவாளர்களால் நிரம்பியுள்ளது.
"அறிவிக்கப்பட்ட முடிவு வெனிசுவேலா மக்களின் விருப்பத்தையோ அல்லது வாக்குகளையோ பிரதிபலிக்கவில்லை என்பதில் அமெரிக்கா தீவிர அக்கறை கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.
தேர்தல் முடிவுகளை நம்புவதற்குக் கடினமாக உள்ளது என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் கூறியுள்ளார்.
இதற்கிடையே மதுவோவின் கூட்டாளிகள் விரைவாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
''வெனிசுவேலா மக்களின் கண்ணியமும், துணிச்சலும் அழுத்தம் மற்றும் தவறாக வழிநடத்துதலுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது" என கியூபா அதிபர் கூறியுள்ளார்.
''அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் வெற்றி" என்று கேரகஸில் ஆதரவாளர்கள் மத்தியில் மதுரோ விவரித்தார்.
அவர் வெனிசுவேலா தேர்தல் முறையைப் பாராட்டினார், அது வெளிப்படையானது என்று விவரித்தார். மேலும் எதிர்க்கட்சிகளைக் கேலி செய்த அவர், ஒவ்வொரு தேர்தலிலும், ''மோசடி என்று கூறுகிறார்கள்" என்றார்.
எதிர்க்கட்சி தனது சொந்த வாக்கு எண்ணிக்கையை அறிவிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான மக்களை சாட்சிகளாக நிறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
தங்களது சாட்சிகள் வாக்குச் சாவடிகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என எதிர்கட்சி கூட்டணியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் கண்டனத்திற்குள்ளாவது இது முதல் முறையல்ல. 2018 மதுரோ பெற்ற வெற்றியும் சுதந்திரமானது அல்லது நியாயமானது அல்ல என்று பரவலாக நிராகரிக்கப்பட்டது.
வெனிசுவேலாவில் மின்னணு வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவின் முடிவுகள் தேசிய தேர்தல் கவுன்சிலின் தலைமையகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
யாருக்கு வாக்களிப்பட்டது என்பதை காட்டும் ரசிது மின்னணு வாக்குப்பதிவு இருந்து அச்சடிக்கப்படும். அது வாக்குப் பெட்டியில் செலுத்தப்படும்.
சட்டப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் செலுத்தப்பட்ட இந்த காகித ரசீதுகளை எண்ண கட்சிகள் சாட்சிகளை அனுப்பலாம். ஆனால், இதை செய்வதற்கு பலர் தடுக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்த முடிவுகள், இந்த காகித ரசீது எண்ணிக்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை பார்ப்பதே எதிர்கட்சிகளின் திட்டம். ஆனால், இந்த அச்சிடப்பட்ட ரசீதுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே தங்களுக்கு வழங்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்க்கட்சி கூறியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












