காதல் மணம் புரிந்த இளைஞரை மறுநாளே கட்டி வைத்து அடித்து உதைத்தது யார்? வைரல் வீடியோவின் பின்னணி

 சாய் சந்த் மற்றும் சாய் துர்கா

பட மூலாதாரம், Saichand

படக்குறிப்பு, காதல் திருமணம் செய்து கொண்ட சாய் சந்த் மற்றும் சாய் துர்கா
    • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக

ஆந்திரப் பிரதேசத்தில் ஏலூரு மாவட்டம், முசூனூரில் தங்களுக்குப் பிடிக்காத திருமணத்தைச் செய்துகொண்டதால் கோபமடைந்த ஒரு பெண்ணின் பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்கள் மணமகனைக் கடத்திச் சென்று, கிராம மக்கள் முன்னிலையில் தூணில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இளைஞர் ஒருவரை அரை நிர்வாணமாக ஒரு கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து நூஜிவீடு டிஎஸ்பி பிரசாத் மற்றும் பாதிக்கப்பட்டவர் பிபிசியிடம் பேசினர்.

அவர்கள் அளித்த விவரங்களின்படி,

ஏலூரு மாவட்டம் மந்தவல்லி மண்டலம் காணுகொல்லு பகுதியைச் சேர்ந்த சாய் சந்த் என்பவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த சாய் துர்கா என்பவரும் காதலித்து வந்தனர்.

சாய் சந்த் ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். துர்கா முசூனூர் மண்டலம் ரமணக்கபேட்டையில் தபால்காரராகப் பணியாற்றி வருகிறார்.

சாய் சந்த், துர்கா ஆகிய இருவரும் இறுவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடந்த காலத்தில் தங்களது மற்றொரு மகளும் இதுபோன்று சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டதால், இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று சாய் துர்காவின் பெற்றோர் கூறியிருப்பதாக டிஎஸ்பி தெரிவித்தார்.

துர்காவின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சாய் சந்தும் துர்காவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, தாங்கள் இருவரும் 2025-ஆம் ஆண்ட டிசம்பர் 30-ஆம் தேதி ஏலூருவில் உள்ள கங்கனம்மா கோயிலில் திருமணம் செய்துகொண்டதாக சாய் சந்த் தெரிவித்தார்.

சாய்சந்-சாய் துர்கா

பட மூலாதாரம், Saichand

படக்குறிப்பு, தாங்கள் இருவரும் 2025-ஆம் ஆண்ட டிசம்பர் 30-ஆம் தேதி ஏலூருவில் உள்ள கங்கனம்மா கோயிலில் திருமணம் செய்துகொண்டதாக சாய் சந்த் தெரிவித்தார்.

காவல்துறையிடம் புகார்

சாய் சந்துவும் சாய் துர்காவும் டிசம்பர் 29ஆம் தேதி காணுகொல்லு பகுதிக்கு உட்பட்ட மந்தவல்லி காவல் நிலையத்திற்குச் சென்றனர்.

தாங்கள் இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும், துர்காவின் பெற்றோரும் உறவினர்களும் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அந்த இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூறி, காவல் நிலையத்திற்கு வருமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் வரவில்லை. மாலை வரை காத்திருந்த காவல்துறையினர், "அவர்கள் வரவில்லை.. கவனமாக இருங்கள்.. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அழையுங்கள்," என்று கூறி சாய் சந்து மற்றும் சாய் துர்காவை அனுப்பி வைத்துள்ளனர்.

'மணமகனை கடத்திச் சென்று தாக்குதல்'

திருமணம் முடிந்த பிறகு மணமகன் எப்படிக் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களை நூஜிவீடு டிஎஸ்பி பிரசாத் தெரியப்படுத்தினார்.

சாய் துர்கா மற்றும் சாய் சந்த் இருவருக்கும் திருமணம் டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது.

அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காததால், மறுநாள் அதாவது டிசம்பர் 31-ஆம் தேதி முசுனூர் மண்டலம் ரமணக்கபேட்டையில் உள்ள தபால் நிலையத்திற்கு சாய் துர்காவை இறக்கி விடுவதற்காக சாய் சந்த் சென்றுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த சாய் துர்காவின் பெற்றோரும் உறவினர்களும் அங்கு வந்து, தங்கள் மகளைத் தனியாக இழுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் சாய் சந்தை ஒரு காரில் ஏற்றி கிராமத்தின் மையப்பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்த ஒரு தூணில் அவரைக் கட்டி வைத்தனர்.

சாய் சந்தின் ஆடைகளைக் கிழித்து, ஆபாசமாகப் பேசி, அவரைத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த உள்ளூர் மக்கள் அதைத் தடுக்க முயன்றனர்.

இருப்பினும், தங்கள் மகளைப் பின்தொடர்ந்து வந்து அவர் துன்புறுத்தியதாக அவர்கள் கூறியதால், யாரும் எதுவும் சொல்லவில்லை.

சுமார் இரண்டு மணிநேரம் அவர்கள் தன்னைத் தொடர்ந்து தாக்கியதாக சாய் சந்த் பிபிசியிடம் கூறினார்.

எனினும், அதிகப்படியான மக்கள் அங்கு கூடத் தொடங்கியவுடன், அவர்கள் தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

சம்பவம் குறித்து அறிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், தாக்குதலில் ஈடுபட்ட சாய் துர்காவின் பெற்றோர் விஜயலட்சுமி மற்றும் கண்டுலா பாபு, சகோதரர் சிவனக பிரசாத் மற்றும் உறவினர்களான சிவகிருஷ்ணா, சிரிஷா மற்றும் விஜயா ஆகியோரைக் கைது செய்திருப்பதாகவும் டிஎஸ்பி பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சாய் சந்த் மற்றும் சாய் துர்கா ஆகிய இருவருக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாதி காரணமா ?

தங்கள் மகள் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லாததாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சாதி ரீதியான விஷயம் எதுவும் இல்லை என்றும் டிஎஸ்பி பிரசாத் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மந்தவல்லி எஸ்.ஐ ராமச்சந்திர ராவ் பிபிசியிடம் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது தங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாததே இந்தச் சம்பவம் நடக்கக் காரணம் என்றும் தெரிவித்தார்.

ஆனால், பாதிக்கப்பட்ட சாய் சந்த் பிபிசியிடம் பேசுகையில், இந்தச் சம்பவத்தில் சாதி ரீதியான பின்னணி இருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சாய் துர்காவின் உறவினர்களிடம் பேச பிபிசி முயன்றது, ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு