இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து தீர்மானம் நிறைவேற்றம்: மீண்டு வர முடியுமா?

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம், NEWS 1ST

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அவ்வப்போது செய்திகளில் வரும் கிரிக்கெட் வாரியம் பற்றி இலங்கை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான பார்வை இல்லை என்பதே இப்போதைய நிலை.

இந்தப் பின்னணியில், தேர்தல் நடைபெறும் வரை அல்லது மேலும் அறிவிப்பு வரும் வரை இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்த இடைக்கால கிரிக்கெட் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இலங்கை அணி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது. இந்த நேரத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, இலங்கை கிரிக்கெட் வாரியம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணைகளை அடுத்து, இடைக்கால குழுவை தற்காலிகமாக இடைநிறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைக்காலக் குழுவால் இலங்கையின் விளையாட்டு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திசையில் இலங்கை கிரிக்கெட்டை வழிநடத்த முடியுமா?

இடைக்கால குழு ஏன் நியமிக்கப்பட்டது?

கடந்த 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஐ. இமாம், ரோகினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏரங்கனி பெரேரா, சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் உபுல் தர்மதாச ஆகியோர் இடைக்கால குழுவின் பிற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தமானி அறிவிப்பின்படி, புதிய இடைக்கால குழுவுக்கு மூன்று அடிப்படை பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த பொறுப்புகள்,

  • இலங்கை கிரிக்கெட் வாரிய முறைகேடுகள் குறித்த தணிக்கை அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த தேவையான விசாரணைகளை நடத்துதல் மற்றும் உரிய நடவடிக்கை எடுத்தல்.
  • சம்பந்தப்பட்ட விசாரணைகள் சுயாதீனமாக, வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பொருட்டு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ள காலத்திலும், இடைக்கால நிர்வாகக் குழு மேற்கொள்ளும் விசாரணைகள் நிறைவடைந்து, சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் வரை, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முறையாகப் பராமரிக்கப்படும்.
  • தொடர்புடைய தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் நடவடிக்கைகளைத் தயார் செய்தல்.

அனைத்து திசைகளிலும் எதிர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடைக்கால கிரிக்கெட் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவர் அர்ஜூனா ரணதுங்கா, நாட்டுக்காக விளையாடும் கிரிக்கெட் அணியை உருவாக்குவதே தனது முதன்மை நோக்கம் என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

"என் முதல் பணி, நாட்டை நேசித்து நாட்டுக்காக விளையாடும் அணியை உருவாக்குவதாகும். மேலும், கடந்த காலத்தில் நாட்டின் கிரிக்கெட் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணத்தைத் தனித்தனியாகக் கண்டறிய முயல்வேன். கிரிக்கெட்டை ஊக்குவிக்க அனைத்து மூத்த வீரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுகிறேன்."

"நாங்கள் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நாட்டை நேசிக்கும் வீரர்களின் குழுவை உருவாக்க விரும்புகிறோம். 2.2 கோடி மக்களை நேசிக்கும், ஒரு குடும்பத்தைப் போன்ற ஒரு அணியை உருவாக்க விரும்புகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

நடப்பு உலகக்கோப்பையில் தொடர் தோல்விகள் காரணமாக ரசிகர்கள் உட்பட பல தரப்பினரும் இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்பு ரசிகர்கள் உட்பட மக்கள் தர்ணா மற்றும் சத்தியாகிரகம் நடத்தி தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா கடந்த சனிக்கிழமை (நவம்பர் 5) தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த ஆண்டு செயல்பாடு என்ன?

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம், SRILANKAN MINISTRY OF SPORTS

இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி உட்பட இலங்கை அணி இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது.

இதில் இலங்கை அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மற்றும் 13 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்த வகையில் இலங்கைக்கு எதிராக ஆடிய ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை இந்த ஆண்டு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை அணி 1975 முதல், 907 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் 415 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  • தோல்வியடைந்த போட்டிகளின் எண்ணிக்கை 448.
  • ஐந்து போட்டிகள் டிரா ஆகியுள்ளன மற்றும் 39 போட்டிகள் முடிவின்றி முடிந்துள்ளன.
  • ஒருநாள் போட்டிகளில், இலங்கை அணியின் வெற்றி விகிதம் 45.75 சதவீதம், தோல்வி விகிதம் 49.39 சதவீதம்.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை 8வது இடத்தில் உள்ளது.

“இது ஒரு சுவிட்சை அணைப்பது போல் கிடையாது”

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம், Getty Images

இலங்கை கிரிக்கெட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுக்க புதிய திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்று பிபிசி சிங்களத்துடன் பேசும்போது மூத்த கிரிக்கெட் வர்ணணையாளர் ரோஷன் அபேசிங்க தெரிவித்தார்.

"இதை கட்டமைப்பது, சுவிட்சைப் போட்டு அணைப்பது போல் இல்லை. அடிப்படையிலிருந்து திட்டங்களைத் தயாரிக்க வேண்டியது அவசியம்."

"இந்திய அணியிடம் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இலங்கை கிரிக்கெட் முடிந்துவிட்டது என்று நான் சொல்லவில்லை. நாங்கள் போட்டிகளில் வென்றிருக்கிறோம். நாங்கள் ஆசியாவின் T20 சாம்பியன்கள் மற்றும் ஆசியாவின் 50 ஓவர் தொடரின் இரண்டாவது இடம் பிடித்தவர்கள். பிறர் சொல்வது போல் முற்றிலும் தடம் மாறிப்போகவில்லை. அப்படி இருந்தால், உலகக் கோப்பைக்கு தகுதி பெறக்கூட முடியாது. ஆனால் நாங்கள் விளையாடிய விதத்தில் எங்கள் கிரிக்கெட் நல்ல இடத்தில் இருப்பதாக சொல்ல முடியாது" என்றார்.

"எங்கு தவறு நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்"

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை கிரிக்கெட் அணி தாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும் என்றார்.

கிரிக்கெட் நிர்வாகம் விரைவில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

"இந்தப் பிரச்சினை குறித்து நாம் ஆராய வேண்டும். கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் இந்தப் பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது மற்றும் எங்கு தவறு செய்தோம் என்பதை அறிய இப்போதே விசாரணை நடத்த வேண்டும்."

"இது பயிற்சியில் ஏற்பட்ட தவறா, வீரர்களால் ஏற்பட்ட தவறா, அல்லது எங்கள் உயர் செயல்திறன் மையத்தில் ஏற்பட்ட தவறா? வெளியில் இருந்து பார்ப்பதை நாங்கள் கூறுகிறோம் ஆனால் இன்னும் ஆழமாக சென்று எங்கு தவறு செய்தோம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்."

"எங்கள் உள்நாட்டு போட்டிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன, 19 வயதுக்குட்பட்ட மற்றும் பள்ளி கிரிக்கெட் முறை ஆகியவற்றிற்கு கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது எளிதில் செய்யக்கூடிய ஒன்று அல்ல என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம், Getty Images

'இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு தெளிவான திட்டம் இருக்க வேண்டும்'

முன்னணி வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்க இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு இப்போது முதலே தெளிவான திட்டம் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கும் 2027 உலகக் கோப்பை ஒருநாள் தொடருக்கும் இப்போதே திட்டம் தேவை என்று கூறினார்.

"இந்த ஆண்டு உலகக் கோப்பை முடிந்துவிட்டது. 2027 உலகக் கோப்பையில் நாம் எங்கு இருக்கப் போகிறோம் என்பதற்கு தெளிவான திட்டம் தேவை.

இந்த இலக்குகளை தெளிவாக அடையாளம் கண்டுள்ளோமா? அவற்றுக்கு என்ன தேவை? அவற்றை நாம் தயார் செய்ய வேண்டும்.

இந்தியாவுடன் நடக்கும் போட்டியில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தால், அது முழு நாட்டையும் காயப்படுத்தும். அது வெட்கக்கேடானது. மக்கள் நடந்து கொள்ளும் விதம் நியாயமானதே.

எங்கள் கிரிக்கெட் தடம் மாறிவிடவில்லை, ஆனால் வளர்ச்சி இருக்க வேண்டும். நாங்கள் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம், Getty Images

'பயிற்சியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை'

பிபிசி சிங்களம் இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர்கள், அவர்கள் விளையாடிய போட்டிகள் மற்றும் அவர்கள் பெற்ற அனுபவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகள் குறித்து ரோஷன் அபேசிங்கிடம் கேட்டது.

"இது மிகவும் தவறு. அவர்களின் அறிவு மற்றும் திறனை அவர்கள் விளையாடிய போட்டிகளால் அளவிட முடியாது." என்று அவர் பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், "நவீத் நவாஸ் அவரது காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் விளையாடிய தேசிய அணியைப் பார்க்கும்போது, அவர் அணிக்குள் நுழைய முடியவில்லை. அது அவரது தவறு அல்ல. அவருக்கு நல்ல அனுபவம் உண்டு. பியால் விஜேதுங்கவுக்கும் அப்படித்தான்.

இங்கு இருக்கும் பயிற்சியாளர்களின் பயிற்சித் திறனை அவர்கள் விளையாடிய போட்டிகளைப் பார்த்து நீங்கள் மதிப்பீடு செய்ய முடியாது.

பின்னர் மைக் ஹெஸன் நியூசிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அவர் ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. ஜான் புக்கானன் ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அவர் ஒரு முதல் தரப் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் அவர்கள் வெற்றிகரமான பயிற்சியாளர்கள்.

ஒரு பயிற்சியாளர் தனது அணியும் அதன் வீரர்களும் விளையாடும் விதத்தால் வெற்றி பெறுகிறார். பயிற்சியாளரால் செய்யக்கூடியது இவ்வளவுதான். அவர் மைதானத்துக்குச் சென்று பேட் செய்ய முடியாது. நாம் பயிற்சியாளர்களை குறை கூறுகிறோம்.

ஆனால் பயிற்சியாளர்கள் எங்கு தவறு செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக, மனரீதியாக. ஆனால் பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கும் அணியின் வெற்றிக்கும் பயிற்சியாளர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஒவ்வொரு வீரருக்கும் குறிப்பிட்ட பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு திட்டம் இருக்கிறது. அந்தத் திட்டம் தவறாக இருந்தால் கண்டுபிடிக்க வேண்டும்.

குற்றத்தை யார் மீது சுமத்த வேண்டும் என்று நாம் தேடுகிறோம். ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளில், நாம் சரியான நடைமுறையைப் பின்பற்றி, எங்கு தவறு நடந்தது என்பதை துல்லியமாக கண்டறிய வேண்டும்" என்றார்.

இந்திய அணியை கண்டு நடுக்கமா?

மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்க, இந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இலங்கை அணி மிகக் குறைந்த ரன்களுக்கு தோல்வியடைந்ததற்கான மனநிலையை ஆராய வேண்டும் அல்லது இந்தியாவுடன் போட்டியில் உள்ள பிரச்சனையை ஆராய வேண்டும் என்று கூறினார்.

இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்களுக்கு தோல்வியடைந்த போதிலும், உலகக் கோப்பையின் மற்ற போட்டிகளில் இலங்கை அணி நன்றாக விளையாடியதாக ரோஷன் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.

உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு எதிராக போட்டிகளில் நன்றாக விளையாடிய இலங்கை அணிக்கு இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ஏதேனும் அச்சம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

"55 ரன்களுக்கு இந்தியாவிடம் தோல்வியுற்ற அதே அணி, உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. மேலும், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோற்ற போதிலும் 320 ரன்கள் எடுத்தது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 340 ரன்கள் எடுத்தது.

இவ்வாறு மற்ற அணிகளை வீழ்த்திவிட்டு ஒரு அணிக்கு எதிராக இவ்வாறு விளையாடுவதில் என்ன சிக்கல் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தியாவை கண்டு பயம் இருந்தால், அதை ஆராய வேண்டும். அதற்கு உளவியல் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியைப் பெற்று பிரச்சனை உள்ள பகுதிகளைக் கண்டுபிடித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இது மட்டைக்கும் பந்துக்கும் இடையே விளையாடப்படும் விளையாட்டு. இதுபோன்ற விஷயங்களை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மனரீதியான உதவி தேவைப்பட்டால், அது வழங்கப்பட வேண்டும்.

இந்த உலகக் கோப்பையில் மற்ற அணிகளுடன் நன்றாக விளையாடியதால் இந்தியாவில் இருந்து அதிக அழுத்தம் உள்ளது, மற்ற அணிகளிடமிருந்து அழுத்தம் இல்லை என்பதை நான் பார்க்கிறேன்." என்றார்.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களின் தொடர் காயங்கள் குறித்தும் ரோஷன் அபேசிங்க கருத்துத் தெரிவித்தார்.

வீரர்களுடன் பணிபுரியும் பயிற்சியாளர்கள், உடல் சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் காயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அவர் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது வீரர்களின் உடல்நிலையைக் கவனிக்க பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழு உள்ளது என்றும் கூறினார்.

ஒரு வீரர் காயமடைந்தால், அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்பவர்கள் அதைத் தவிர்க்க முடியாது என்றும் கூறினார்.

"தாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று முன்வந்து கூற வேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது. உதாரணமாக, வனிது ஹசரங்க பற்றிய ஒரு கதை இருந்தது. அவர் உடல்நலத்துடன் வந்தார், ஆனால் பயிற்சியின் போது அவர் மீண்டும் காயமடைந்தார். அது எப்படி நடந்தது என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம், Getty Images

மேலும், துஷ்மந்த சமீராவின் உடல்நிலை எல்பிஎல் போட்டியில் விளையாட தகுதி இல்லை என்றால், வீரர்களின் உடல்நிலை கண்காணிப்பவர்கள், அவர் இப்படி விளையாடினால் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் விளையாட முடியாது என்று கிரிக்கெட் வாரியத்திடம் கூற வேண்டும்.

அவர் LPL போட்டியில் விளையாடாததால் அவருக்கு ஏதேனும் நிதி இழப்பு இருந்தால், கிரிக்கெட் வாரியம் ஒரு முடிவை எடுத்து அவருக்கு வழங்க வேண்டும். வனிது ஹசரங்காவிற்கும் இதேதான் செல்லும். இதுபோன்ற முக்கிய விஷயங்களில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.

உலகின் பிற நாடுகளிலிருந்தும் வீரர்கள் லீக் தொடர்களில் விளையாடுகிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் நமது வீரர்களை விட அதிகமாக லீக் தொடர்களில் விளையாடுகிறார்கள். ஏன் அவர்கள் காயமடைவதில்லை? பிரச்சனை லீக் தொடர்களில் இல்லை, வீரர்கள் மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்படும் விதத்தில் உள்ளது." என்றார்.

இதற்கிடையில், இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இருந்து திறமையான வீரர்களின் குழுவை கண்டுபிடிக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்கு இருந்ததாக அவர் கூறினார்.

"LPL தொடர் இலங்கை அணிக்கு டி20 ஆசிய கோப்பையை வெல்ல உதவியதாக நான் நம்புகிறேன். இத்தகைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, லீக்கில் எந்த தவறும் இல்லை." என்றார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைப்பது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஊழல் காரணங்களுக்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் திர்மானம் சபைக்குக் கொண்டு வரப்பட்டு, இன்று காலை முதல் விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் பின்னர் இன்று மாலை இந்தத் திர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு முன்பாக இன்று காலை முதல் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்துடன், இலங்கை கிரிக்கெட்டிற்கு செல்லும் பிரதான வீதியை போலீஸார் மூடியிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியக் கட்டடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தே, போலீஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரிய வளாகத்திற்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்கள் தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.

எனினும், இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அருகில் செல்ல போலீஸார் இடமளிக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் படுதோல்விகளை அடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில், இந்திய அணியுடனான உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, இலங்கை அணியின் படுதோல்விக்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளே காரணம் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்க அறிக்கையொன்றின் ஊடாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய இடைக்கால குழுவொன்றை சிறப்பு அரசிதழ் மூலமாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுண ரணதுங்க தலைமையிலான 7 பேரை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் படி இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, இலங்கை கிரிக்கெட் வாரியம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணைகளை அடுத்து, இடைக்கால குழுவை தற்காலிகமாக இடைநிறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றம்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ரூ.16.65 கோடியை கையகப்படுத்த முயற்சி?

கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள இலங்கை வங்கியின் டாலர் வங்கி கணக்கிலிருந்து ரூ.16.65 கோடி பணத்தை இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தினார்.

இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய நபர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் அவர் கோரிக்கை விடுத்தார்.

ரூ.16.65 கோடி பணத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்ட குற்றச்சாட்டு குறித்து தெளிவூட்டும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ரூ.16.65 கோடியை கையகப்படுத்த முயற்சி?

இலங்கை அணி மீண்டு வர முடியுமா?

இலங்கை கிரிக்கெட் தனது தற்போதைய நிலையில் இருந்து மீண்டு வர வாய்ப்புள்ளதா என்று மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கேவிடம் கேட்டோம்.

அவர், 1996ம் ஆண்டு உலக சாம்பியன்களாக இருந்த இலங்கை அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற 1999ம் ஆண்டு உலகக் கோப்பையில் பெரும் தோல்வியை சந்தித்ததாக கூறினார். இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்த இலங்கை மீண்டும் எழுந்து நின்றதாக சுட்டிக்காட்டினார்.

"இந்த நாடு ஒருபோதும் ஏமாற்றப்பட முடியாது. இந்த நாட்டில் பிறவித் திறமைகள் நிறைந்த பல வீரர்கள் உள்ளனர். அதனால்தான் தில்ஷன் மதுசங்க, மதிஷா பத்திரண, பத்தும் நிசங்கா போன்ற வீரர்களை பார்க்க முடிந்தது. இந்தியாவிடம் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் இந்த நாட்டில் கிரிக்கெட் முடிந்துவிடாது.

நாங்கள் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் விளையாடும்போது, தோற்ற அந்தப் போட்டிகளை மறந்துவிடுவோம். ஆனால் அது நாங்கள் மீண்டு வந்தோம் என்று அர்த்தம் இல்லை. போட்டியில் வெற்றி பெற்றதால் எங்கள் கிரிக்கெட் நல்ல நிலையை எட்டியது என்று அர்த்தமல்ல.

படிப்படியாக முன்னேற ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்க வேண்டும். அது எப்போதும் ஒரு சவால் தான்.

நாங்கள் சிறந்த அணி என்று யாரும் சொல்ல முடியாது. இங்கிலாந்து அணிக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். கடந்த முறை 50 ஓவர் உலக சாம்பியன்களுக்கு இந்த முறை உத்தரவாதம் இல்லை.

வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். புதிய திட்டங்கள் தேவை. இந்த விளையாட்டு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. அதன்படி, நாங்கள் மாற வேண்டும் மற்றும் ஒரு திட்டத்தின்படி முன்னேற வேண்டும். பிறகு வெளியே வருவோம்.

கிரிக்கெட் ஒரு போட்டி மிகுந்த விளையாட்டு. எனவே நீங்கள் எப்போதும் முதல் இடத்தில் இருக்க முடியாது. இந்த போட்டியை எதிர்கொள்ள ஒரு அணியாக தயாராக இருக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)