புலியால் மக்கள் பீதி: கணவருடன் வயலில் வேலை செய்த பெண்ணுக்கு நேரிட்ட கொடூரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்
- பதவி, பிபிசி மராத்திக்காக
எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரக்கூடும்.
"நான் என் மனைவியை நம்பினேன். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வீட்டைக் கவனித்து வந்தோம். ஆனால் இப்போது அவர் என்னைத் தனியாக விட்டுச் சென்றுவிட்டார். என் வாழ்வில் மிகவும் மோசமான விஷயங்கள் நடந்துவிட்டன. என் வாழ்க்கையே சிதைந்து போய்விட்டது. நான் இல்லாத நேரத்தில் ஒரு புலி என் மனைவியை கொண்டு சென்றது. ஆனால் எனக்கு எதுவும் புரியவில்லை..."
இவ்வாறு அழுது கொண்டே தனது துயரத்தை வெளிப்படுத்தினார் பாண்டுரங்க் பெண்டோர். 45 வயதான அல்கா பெண்டோர் தான் புலியின் தாக்குதலில் உயிரிழந்த அவரது மனைவி.
அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தின் கோண்ட்பிப்ரி தாலுகாவில் உள்ள கணேஷ்பிப்ரியில் வசித்து வந்தனர். மனைவியை இழந்த பிறகு, தனது குடும்பத்தின் நிலை குறித்து சோகத்தில் வாடுகிறார் பாண்டுரங் பெண்டோர்.
அக்டோபர் 26-ஆம் தேதி இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
அன்று பாண்டுரங்கும் அல்காவும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
பிபிசி மராத்தியிடம் பேசிய பாண்டுரங், "நான் மருந்து தெளித்து கொண்டிருந்தேன். என் மனைவி புல் வெட்டிக் கொண்டிருந்தார். இரண்டு முறை அவரைப் பார்த்தேன். ஆனால் மூன்றாவது முறை பார்த்தபோது, அவரை காணவில்லை. தண்ணீர் குடிக்கப் போயிருப்பார் என்று நினைத்தேன். பிறகு பத்து நிமிடம் கழித்து மீண்டும் பார்த்தேன், ஆனால் அப்போதும் அவரைக் காணவில்லை. "என்கிறார்.
" நான் அவரை அழைத்தேன். ஆனால் அவரிடம் இருந்து பதில் இல்லை. மாலை ஆகிவிட்டதால், வீட்டுக்குப் போயிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் வீட்டிலும் அவர் இல்லை. அப்போதுதான் ஏதோ மோசமான விஷயம் நடந்திருக்கலாம் என்று நான் உணர்ந்தேன்" என்கிறார் பாண்டுரங்.
பாண்டுரங் உடனே கிராம மக்களை அழைத்து வயலுக்குச் சென்றுள்ளார். மக்கள் கூச்சலிட்டவுடன் புலி, பருத்தி வயலில் இருந்து ஓடியது. அதன் பிறகு அல்காவின் உடல் வயலுக்கு அருகில் கிடப்பதை அவர்கள் கண்டனர். அவரது ஒரு கையையும் கழுத்தையும் புலி முழுமையாகக் சாப்பிட்டு விட்டது.
திடீரென எனது மனைவியின் உடலை அப்படி பார்த்தவுடன் எனக்கு மயக்கம் வந்தது என்கிறார் பாண்டுரங்க்.
அவரது மனைவி இறந்த பிறகு, அவரும் அவரது 24 வயது மகனும் மட்டுமே தற்போது அக்குடும்பத்தில் உள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. பிறருடைய நிலத்தில் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த வயலில் அவர்கள் இதற்கு முன்பு புலியைப் பார்த்ததில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக, கிராமத்தைச் சுற்றி புலியின் நடமாட்டம் குறித்த பயம் நிலவியது.
அங்குள்ள மக்கள் சாலையில் புலிகளைப் பார்த்ததுண்டு. ஆனால், பாண்டுரங்கும் அவரது மனைவியும் ஒருபோதும் புலியைப் பார்த்ததில்லை. திடீரென்று, இப்போது அந்த புலி அவர்களின் குடும்பத்தை சிதைத்து விட்டது.
9 நாட்களில் நான்கு பேர் பலி
அல்கா பெண்டோர் மட்டும் அல்ல. ஒன்பது நாட்களில், சந்திரபூர் மாவட்டத்தில் புலிகளின் தாக்குதலால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் மூவர் ஆண்கள், ஒருவர் பெண்.
புலிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் விபரம் பின்வருமாறு :
1. பாண்டுரங் பெண்டோரின் கணேஷ்பிப்ரி கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செக்பிப்ரி கிராமத்தில் புலியால் முதலில் ஒருவர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
அக்டோபர் 18 ஆம் தேதி, விவசாயி பௌஜி பால் காளைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வீடு திரும்பினார். பின்னர் மாலையில், காளைகளை அழைத்து வர வயலுக்குச் சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை.குடும்பத்தினர் தேடியும் அவர் எங்கும் காணப்படவில்லை.
பின்னர், கிராம மக்கள் உதவியுடன், அக்டோபர் 19-ஆம் தேதி அவரைத் தேடும் பணி தொடங்கியது. அப்போது வயலில் அவரது உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதை கண்டனர்.
அப்போதுதான் புலி அவரைத் தாக்கி கொன்றது தெரியவந்தது.
2. இரண்டாவது சம்பவம் சந்திரபூர் மாவட்டத்தின் நாக்பிட் தாலுகாவில் நடந்தது. அக்டோபர் 25ஆம் தேதி, அகபூரைச் சேர்ந்த வாசுதேவ் வெட்டே என்ற விவசாயி, காட்டிற்கு அருகிலுள்ள தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், ஒரு புலி திடீரென அவரைத் தாக்கி கொன்றது.
3. மூன்றாவது சம்பவம் கணேஷ்பிப்ரி கிராமத்தில் நடந்தது, அங்கு பாண்டுரங் பெண்டோரின் மனைவி ஒரு புலியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
4. அக்டோபர் 26 ஆம் தேதி இரவு, சந்திரபூர் மாவட்டத்தின் சிமூர் தாலுகாவில் புலி தாக்குதலில் நான்காவது நபர் பலியானார். ஷிவ்ரா கிராமத்தின் முன்னாள் கிராமத் தலைவர் நீலகாந்த் பூரேவை புலி கொன்றது. அவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
புலியால் ஏற்பட்ட உயிரிழப்புகள்
ஜனவரி முதல் அக்டோபர் வரை சந்திரபூர் மாவட்டத்தில் மனித - வனவிலங்குகள் மோதல்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து வனத்துறைக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சந்திரபூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் இத்தகைய தாக்குதல்கள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிபா தனோர்கர், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பதில் வழங்கியது.
அதன் படி, ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் சந்திரபூர் மாவட்டத்தில் மட்டும் மனித - வனவிலங்கு மோதல்களில் மொத்தம் 25 பேர் இறந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.
இவற்றுள் மிக அதிகமான மரணங்கள் புலிகளால் ஏற்பட்டவை.
இந்நிலையில் புலிகளின் தாக்குதலில் மனிதர்கள் உயிரிழப்பது குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மனித-வனவிலங்கு மோதலில் முக்கிய இடம் வகிக்கும் சந்திரபூர்
நாட்டிலேயே புலிகளின் தாக்குதலால் அதிக உயிரிழப்புகள் பதிவாகிய மாநிலம் மகாராஷ்டிரா தான்.
2022ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் மட்டும் 82 பேர் இத்தகைய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில், 2020 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்துக்கு புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
அதன்படி, நாடு முழுவதும் புலிகளின் தாக்குதலில் மொத்தம் 378 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவற்றில் 58 சதவீதம், அதாவது 218 மரணங்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடந்துள்ளன எனத் தெரிய வருகிறது.
அதிலும் குறிப்பாக, சந்திரபூர் மாவட்டம் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்குமான மோதலில் முதலிடம் வகிக்கிறது.
2022 ஆம் ஆண்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) வெளியிட்ட 'நிலை அறிக்கையில்', சந்திரபூர் மாவட்டம் மனித–வனவிலங்கு மோதலில் நாட்டிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை இதற்கான காரணங்களையும் விளக்குகிறது.
அதிகரித்து வரும் சுரங்க மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் இந்தப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன, இவை வனப் பாதைகளை அழித்து வருகின்றன.
வனப்பகுதிகளின் இழப்பும், கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இந்தப் பகுதியில் மனித-வனவிலங்கு மோதல் அதிகரிப்பதற்கு பங்களிக்கின்றன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்ட மாவட்டம் - சந்திரபூர்

பட மூலாதாரம், Getty Images
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்குமான மோதல்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தாலும், புலிகளின் எண்ணிக்கையில் அது நான்காவது இடத்தில் தான் உள்ளது.
2022-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தமாக 3,682 புலிகள் உள்ளன.
- மத்திய பிரதேசம் – 785 புலிகள்
- கர்நாடகா – 563 புலிகள்
- உத்தரகாண்ட் – 560 புலிகள்
- மகாராஷ்டிரா – 444 புலிகள்
ஆனால் மாவட்ட வாரியாக பார்க்கும் போது, சந்திரபூர் மாவட்டத்தில் தான் அதிகமான புலிகள் இருப்பதாக 2022-ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் சந்திரபூரில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்குமான மோதல் ஏன் இவ்வளவு தீவிரமாக உள்ளது?
அதை குறைக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என வனத்துறை அமைச்சரிடம் கருத்து கேட்டுள்ளோம்.
அவரது பதில் கிடைத்தவுடன், இச்செய்தி புதுப்பிக்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












