மேக்ஸ்வெல் நகரவே சிரமப்பட்ட போதும் சிக்சர்களை விளாசியது எப்படி? ஆப்கன் பவுலர்கள் செய்த தவறு என்ன?

பட மூலாதாரம், Getty Images
“40 வயதை நெருங்கும் ஒருவர், 6-வது வீரராக களமிறங்கி, 200 ரன்களை எடுத்ததை இதற்கு முன்பு யாரும் பார்த்ததில்லை. இந்த போட்டியை வான்கடே மைதானமும் பார்வையாளர்களும் மறக்க மாட்டார்கள். மேக்ஸ்வெல் பிரதர், உங்களுக்கு சல்யூட். எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளன.”
செவ்வாய்கிழமை (நவம்பர் 7) இரவு ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி முடிந்தவுடன், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், கிளென் மேக்ஸ்வெல்லை பாராட்டி, சமூக ஊடக தளமான X-இல் (ட்விட்டர்) ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அவர், ‘பாஜ்ஜி பாய் கைதட்டுகிறார்’ என்று கூறினார்.
முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், "இதுபோன்ற ஒரு சாதனையை இதற்கு முன்பு பார்த்ததில்லை," என்று அந்த வீடியோவில் தோன்றி கூறுகிறார்.
வர்ணனையாளர் ஜதின் சப்ரு, 1983 உலகக் கோப்பையில் கபில்தேவின் ஆட்டமிழக்காத 175 ரன்களுடன் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸை ஒப்பிட்டு, “கபில் பாஜியின் 175 ரன்களை நேரலையில் நாம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் எப்படி உணர்ந்திருப்போம் என்பதை இன்று தெரிந்துகொண்டோம்," என்றார்.

பட மூலாதாரம், Reuters
மோசமாக துவங்கிய பேட்டிங்கைத் தூக்கி நிறுத்திய மேக்ஸ்வெல்
செவ்வாய்கிழமை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அளித்த 292 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய பேட்டிங் மிகவும் மோசமாகத் துவங்கியது. 19-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்கள் 7 பேர் 91 ரன்களுக்கு பெவிலியன் திரும்பும் நிலை ஏற்பட்டது.
ஆனால், கிளென் மேக்ஸ்வெல்லின் T-20 வடிவிலான பேட்டிங் (128 பந்துகளில் 201 ரன்கள்) மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸின் டெஸ்ட் போட்டி போன்ற பொறுமையான இன்னிங்ஸ் (68 பந்துகளில் 12 ரன்கள்) ஆகியவற்றின் அடிப்படையில் ஆஸ்திரேலியா மேலும் விக்கெட் இழப்பின்றி தப்பியது. 19 பந்துகள் மீதமிருந்த நிலையில், மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Reuters
பாகிஸ்தான் வீரர்களின் பாராட்டு
போட்டியின் போது சில சமயங்களில் மேக்ஸ்வெல் வலியால் அவதிப்பட்டார்.
ஆனால் இறுதிவரை நிலைத்து நின்று தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது மட்டுமின்றி சிக்ஸர் அடித்து இரட்டை சதத்தையும் பூர்த்தி செய்தார்.
பாகிஸ்தானின் ஸ்போர்ட்ஸ் சேனல் ‘ஏ ஸ்போர்ட்ஸில்’ ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியான ‘தி பெவிலிய’னில் பேசியபோது , முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம், தசைப்பிடிப்பு இருந்தபோதிலும், இவ்வளவு சிறந்த செயல்திறன் வெளிப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினார்.
மேலும் அவர், “இது தனி மனிதனின் சாதனை. தனி ஒரு மனிதனால் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற முடியாது என்று கூறப்படுகிறது. அது பொய்யாக்கப்படிருக்கிறது. தனி ஒருவர் ஒரு போட்டியை வெல்ல முடியும் என்று இன்று பார்த்தோம். போராடுவதை மட்டும் கைவிடக் கூடாது,” என்றார்.
அக்ரம் மேலும் கூறுகையில், “தசைப்பிடிப்புகள் எவ்வளவு ஆபத்தானவை என்பது கிரிக்கெட் வீரர்களுக்குத் தெரியும். மேக்ஸ்வெல் இதைக் கடந்து, இன்று ஒருநாள் போட்டிகளில் உலகின் தலைசிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார். நான் 20 வருடங்கள் விளையாடினேன், அதன் பிறகு 20 வருடங்களாக கிரிக்கெட்டுடன் இணைந்திருந்தேன், ஆனால் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை நான் பார்த்ததில்லை,” என்றார்.
இதே நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், மேக்ஸ்வெல் நினைத்த போதெல்லாம் சிக்ஸர்களையும், ரிவர்ஸ் ஸ்வீப்களையும் அடிப்பதாகக் கூறினார்.
“கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய பேஸ், ஃபுட்ஒர்க், கால் பலம் தேவை என்று அடிக்கடி கூறப்படும். ஆனால் அவர் தனது கைகளைப் பயன்படுத்தி அற்புதமாக விளையாடினார்.” என்றார்.
பிடிப்புகளால் ஏற்படும் வலியைப் பற்றிக் கூறுகையில், மிஸ்பா, “பிடிப்பு ஏற்படும் போது, இடுப்புக்கு கீழே இருந்து ஆற்றலைச் செலுத்தினார், அது மிகவும் வலிக்கும். மேக்ஸ்வெல்லுக்கும் அதுதான் நடந்தது. பின்னர் அவர் தனது மணிக்கட்டை மட்டுமே பயன்படுத்தினார். அவரது மணிக்கட்டுகளின் வேகம், வலிமை மற்றும் இணைப்பு எவ்வளவு அபாரமானது என்பதை அவர் சிக்ஸர்கள் அடித்ததை வைத்து நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்,” என்றார்.

பட மூலாதாரம், Reuters
மேக்ஸ்வெல் எப்படி பவர் ஹிட்டிங் செய்தார்?
தசைப்பிடிப்புகள் காரணமாக, மேக்ஸ்வெல் ஓடுவதற்குச் சிரமப்பட்டார். சில சமயங்களில் நொண்டியடிக்க வேண்டியிருந்தது. பிறகு அவர் நிற்கும் போது கூட அசௌகரியமாக உணரும் அளவுக்கு நிலைமை ஆனது.
இருந்தபோதிலும், அவர் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து மற்றும் அனைத்து வகையான பந்துகளிலும் நல்ல ஷாட்களை அடித்தார்.
வலியால் நகர முடியாமல் இருந்தபோதும் மேக்ஸ்வெல் எப்படி பெரிய ஷாட்களை ஆடினார் என்பதை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் அதே நிகழ்ச்சியில் விளக்கினார்.
“மேக்ஸ்வெல் பவர் ஹிட்டிங் செய்தார். பொதுவாக பேட்ஸ்மேன்கள் பேஸ்களை உருவாக்குவார்கள். பந்துக்காக காத்திருக்கும்போது, சிறிது வளைந்து, பந்துக்கு ஏற்ப நகர்த்தி ஷாட் ஆடுவார்கள். ஆனால் மேக்ஸ்வெல் நகரும்போது அவருக்கு வலி ஏற்பட்டது. அவர் ஒரே மாதிரி நிற்க வேண்டிய நிலையில் சிக்கிக்கொண்டார்,” என்றார்.
மாலிக் மேலும் கூறும்போது, “மேக்ஸ்வெல் இரு கால்களிலும் சம எடையை வைத்திருந்தார். பவர் ஹிட்டிங்கில் இதைச் செய்வது முக்கியம், ஏனென்றால் அப்போதுதான் உங்கள் கைகள் பந்தை நோக்கிச் செல்கின்றன. பவர் தாக்குதலுக்கு கைகளை நீட்டிப்பது முக்கியமானது. அதாவது திறந்த கரங்களோடு ஷாட்களை விளையாட வேண்டும்,” என்றார்.

பட மூலாதாரம், Reuters
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எங்கு தவறவிட்டனர்?
மேக்ஸ்வெல்லின் தசைப்பிடிப்பை ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் கான் ‘தி பெவிலியன்’ ஷோவில் கூறினார்.
அவர் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அவரது முகத்துக்கு நேராக வீசிய பந்துகளில்தான் மேக்ஸ்வெல் பெரும்பாலான சிக்ஸர்களை அடித்தார். அவர்கள் ஷார்ட் பந்துகளை வீசியிருந்தால், மேக்ஸ்வெல் தனது இடுப்புக்கு கீழே உள்ள பகுதியை பயன்படுத்த வேண்டியிருக்கும், அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். அவர் ஓவர்பிட்ச் பந்துகளில் சிக்ஸர் அடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசியிருந்தால் ஏதாவது மாற்றம் நடந்திருக்கும்,” என்றார் அவர்.
மேக்ஸ்வெல்லைப் பாராட்டிய அவர், “ஒரு கட்டத்தில் ஜம்பா பேட்டிங்கிற்கு வர்விருந்தார். ஆனால் மேக்ஸ்வெல் தனது ஆற்றலை மீண்டும் சேகரித்துக் கொண்டார், அற்புதமாக விளையாடினார். இந்த இன்னிங்ஸை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எட்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது அற்புதமானது,” என்றார்.
மொயீன் கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் இருவரும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளப் கிரிக்கெட் வரை இதுபோன்ற அற்புதமான இன்னிங்ஸை எங்கும் பார்த்ததில்லை என்று கூறினர்.

பட மூலாதாரம், Reuters
இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்ன கூறினர்?
சச்சின் டெண்டுல்கர், மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ் தனது வாழ்க்கையில் அவர் கண்ட சிறந்த இன்னிங்ஸ் என்று வர்ணித்தார்.
தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “கடைசி 25 ஓவர்களில் கிளென் மேக்ஸ்வெல் செய்தது ஆட்டத்தின் தலைவிதியையே மாற்றியமைத்தது. அதிகபட்ச அழுத்தத்தில் அதிகபட்ச செயல்திறனை அவர் காட்டினார். என் வாழ்நாளில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் இதுவாகும்,” என்று பதிவிட்டிருக்கிறார்.
வி.வி.எஸ் லக்ஷ்மண் தனது எக்ஸ் பக்கத்தில், "கிரிக்கெட் களத்தில் சிறந்த தனிப்பட்ட இன்னிங்ஸ்களில் இது ஒன்று. எல்லா காலத்திலும் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இது ஒன்று. நமது முயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது இந்த இன்னிங்ஸ் நமக்குக் கற்றுக் கொடுத்தது. இந்த நம்பமுடியாத இன்னிங்ஸுக்காக மேக்ஸ்வெல்லுக்கு கைதட்டல்," என்று பதிவிட்டிருந்தார்.
மேக்ஸ்வெல்லின் இந்த இன்னிங்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று வர்ணித்துள்ள வீரேந்திர சேவாக், இந்த இன்னிங்ஸ் நீண்ட காலமாக நினைவில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆட்டத்திற்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ரன்களைத் துரத்தும்போது 200 ரன்கள் எடுத்தது, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். கிளென் மேக்ஸ்வெல்லின் அற்புதமான இன்னிங்ஸ். பேட் கம்மின்ஸ் நல்ல ஆதரவை வழங்கினார்,” என்று பதிவிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












