சம்மன் விவகாரம்: போலீஸ் விசாரணையில் என்ன நடக்கும்? சீமான் கூறியது என்ன?

சீமான், நாம் தமிழர் கட்சி, நடிகை வழக்கு,

பட மூலாதாரம், NTK

பாலியல் புகார் வழக்கில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெள்ளிக்கிழமை மாலை (பிப்ரவரி 28) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

முன்னதாக, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் வியாழக் கிழமையன்று சம்மன் ஒன்றை வளசரவாக்கம் போலீசார் ஒட்டினர். இதை அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கிழித்தெறிந்தார். இதுதொடர்பாக காவல்துறைக்குக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அமல்ராஜ், சுபாகர் ஆகியோரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக உள்ளதால் அவரைக் கைது செய்வதற்கு வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், காவல் துறையின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது மட்டுமே இன்று நடக்கும் என்றும் எனக் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறைத் தலைவர் இடும்பாவனம் கார்த்திக்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சீமான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா?

"காவல்துறையின் சம்மனை ஏற்று இன்று அவர் ஆஜராக உள்ளார். அப்போது கேள்விகளுக்குப் பதில் அளிப்பது மட்டுமே நடக்கும். கைது செய்து 3 முதல் ஆறு மாதங்கள் வரை சிறையில் வைத்திருந்தால் இன்னும் வீரியமாகத் தேர்தல் பணியில் சீமான் ஈடுபடுவார். அது ஆளும்கட்சிக்கும் தெரியும்" எனக் கூறுகிறார் இடும்பாவனம் கார்த்திக்.

பாலியல் புகார் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை கேட்டு சீமான் வழக்குத் தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீமான் மனைவி கூறியது என்ன?

காவல்துறை ஒட்டிய சம்மனை கிழித்தது சர்ச்சையை ஏற்படுத்தவே, இதுகுறித்து விரிவான விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார் சீமானின் மனைவி கயல்விழி.

வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுவற்றில் சம்மனை ஒட்டியதால் அதில் என்ன உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக நான்தான் கிழிக்குமாறு கூறினேன். அந்த நேரத்தில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை" எனக் கூறினார்.

நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷின் சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்ததாகக் கூறிய கயல்விழி, "வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை வண்டியில் இழுத்துப் போட்டுக் கொண்டு சென்றனர்.

ஆய்வாளரின் சட்டை கலைந்திருப்பதைப் பார்த்து மன்னிக்குமாறு கேட்டேன். இந்த விவகாரத்தில் காவல்துறை திட்டமிட்டே வந்துள்ளது. மன ரீதியாக இடையூறு செய்வதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது" என்கிறார்.

தங்களுக்காக கொடுக்கப்பட்ட சம்மனை கிழிப்பதில் என்ன தவறு எனவும் கயல்விழி கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியது என்ன?

சீமான்

பட மூலாதாரம், @Seeman4TN

இதுதொடர்பாக, தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ஆளும்கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் பேசும்போது, "என்னோடு மோதி வெற்றி பெற முடியாததால் இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் உள்ளன.

எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் நான் பயப்பட மாட்டேன். அதிகாரம் நிலையானது என நினைத்துச் செயல்பட வேண்டாம்" எனக் கூறினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசிய விவகாரம் தொடர்பாக, இன்று காலை (பிப்ரவரி 28) கருங்கல்பாளையம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் சம்மன் கொடுக்க வந்துள்ளனர்.

இதைப் பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "என்னை நேரில் பார்ப்பதற்கு காவல்துறை அவசரப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. ஆட்சியாளர்கள், அதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.

வழக்கின் பின்னணி என்ன?

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு சீமான் மீது நடிகை ஒருவர், சீமான் அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்து புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகார் மனுவின் அடிப்படையில் சீமான் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தியது.

ஆனால் ஒரே ஆண்டில் அந்தப் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அந்த நடிகை அறிவித்திருந்தார். இருப்பினும் அந்த வழக்கு முடித்து வைக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.

இந்தச் சூழலில் தன் மீது 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

விசாரணைக்கு வந்த வழக்கு

சீமான், நாம் தமிழர் கட்சி, நடிகை வழக்கு,

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, சீமான் வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டச் சென்ற காவல்துறையினர்

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 21இல் தீர்ப்பு வெளியானது.

அதில் அவா், 'பாதிக்கப்பட்ட நடிகை இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சா்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்துவிட முடியாது' என்று கூறி சீமானின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

நீதிமன்ற தீர்ப்பில்,"மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. பாதிக்கப்பட்ட நடிகை கொடுத்த வாக்குமூலம் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்தபோது அந்த நடிகைக்கு சீமான் மீது எந்தக் காதலும் இல்லை.

திரைத்துறை தொடா்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உறவில் இருந்துள்ளாா். தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் அந்த நடிகை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா். எனவே இந்த வழக்கைப் பொருத்தவரை சீமான் மீதான புகாரை எளிதில் விட்டுவிட முடியாது. ஆகையால் இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது" என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கை விசாரணை செய்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)