சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டியபோது நடந்தது என்ன?

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

பட மூலாதாரம், @Seeman4TN

படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை" எனக் கூறியுள்ளார்.

சீமானின் வீட்டில் என்ன நடந்தது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, புகாரின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.

இந்தநிலையில், தன் மீது 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார்.

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக தனது புகார் மனுவை நடிகை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார்.

"மனரீதியான பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகாரை வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, 12 வாரங்களில் வழக்கில் புலன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அந்த நடிகையிடம் வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார், புதன்கிழமையன்று (பிப்ரவரி 26) நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றனர்.

இதுதொடர்பாக, வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட கட்சி நிகழ்வில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் செல்வதால் தன்னால் வர இயலாது என சீமான் தெரிவித்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் பிபிசி தமிழிடம் கூறினார்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்
படக்குறிப்பு, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர்.

நீலாங்கரை வீட்டில் என்ன நடந்தது?

நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று (பிப்ரவரி 27) வளசரவாக்கம் போலீஸார் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 28) நேரில் ஆஜராகுமாறு சீமானிடம் சம்மன் கொடுப்பதற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவுகளின்படி, சம்மனை சீமான் வீட்டின் சுவற்றில் போலீஸார் ஒட்டியுள்ளனர். இதை அங்கிருந்த நபர் ஒருவர் கிழித்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே போலீஸார் செல்ல முயன்றபோது, ஒருவர் தடுத்துள்ளார். இதனால் அவருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்
படக்குறிப்பு, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் நடந்த மோதல்

பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், "சம்மன் கொடுக்க வரும்போது வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தாலோ அல்லது வீடு பூட்டப்பட்டிருந்தாலோ சுவற்றில் ஒட்டலாம். ஆனால், சீமானின் வீட்டில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். அவர்களிடம் கொடுக்காமல் சுவற்றில் ஒட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார்.

"ஆஜராக முடியாது" - சீமான்

இதே கருத்தை ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சீமான் தெரிவித்தார்.

"எனக்கு ஏற்கெனவே அழைப்பாணையை போலீஸ் கொடுத்தபோது அதில் கையெழுத்திட்டு, திட்டமிட்டபடி வேலை இருப்பதால் வர முடியாது எனக் கூறிவிட்டேன். தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன். அப்படியிருக்கும்போது என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்றார்

"நாளையே வருமாறு கூறினால் வர முடியாது. 15 வருடங்களாக இதே நாடகத்தை நடத்தி வருகிறார்கள். விசாரணையே நடத்தாமல் இவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். என்னை எதுவும் செய்ய முடியாது. இதற்கெல்லாம் பயந்து ஓடக் கூடிய ஆள் நான் இல்லை" எனவும் சீமான் பதில் அளித்தார்.

"என் வீட்டில் மனைவி, மகன்கள் இருந்தனர். ஆனால் போலீஸார் அழைப்பாணையை சுவற்றில் ஏன் ஒட்ட வேண்டும்? ஏற்கெனவே விசாரணைக்கு பதில் அளித்துவிட்டேன்" என அவர் கூறினார்.

சீமான், நாம் தமிழர் கட்சி, பாலியல் புகார்

நீலாங்கரை உதவி ஆணையர் சொல்வது என்ன?

சீமானின் குற்றச்சாட்டு தொடர்பாக, நீலாங்கரை காவல் உதவி ஆணையர் பரத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

"வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் சீமானிடம் தகவல் கொடுப்பதற்காக வந்திருந்தனர். சீமானோ அல்லது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவர்களைப் பார்ப்பதற்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் யாரும் வரவில்லை. அதைப் படிக்காமல் கிழிப்பதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " சம்மனை கிழித்தது தொடர்பாக, வளசரவாக்கம் காவல்நிலைய போலீஸார் புகார் கொடுத்ததால், நீலாங்கரை காவல்நிலைய ஆய்வாளர் விசாரிப்பதற்குச் சென்றார். இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.

நடைமுறை என்ன?

காவல்துறை சார்பில் சம்மன் கொடுப்பது தொடர்பான நடைமுறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, "குறிப்பிட்ட நாளில் ஆஜராகுமாறு காவல்துறை கூறினால், தன்னால் வர முடியாது எனக் கூறி ஒருவர் அவகாசம் கேட்கலாம். ஆனால் ஆஜராகாமல் தவிர்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "வழக்கில் தொடர்புடைய நபருக்கு தபால் மூலமாகவோ நேரில் சென்றோ சம்மன் அளிக்கலாம் அல்லது அவர்களின் உறவினர்களிடம் வழங்கலாம். அவ்வாறு ஒப்படைக்க முடியாவிட்டால் வீட்டில் ஒட்டிவிட்டு வரலாம்" எனக் கூறுகிறார்.

''சம்மனைப் பெறுவதற்கு தொடர்புடைய நபரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தால், அதை உரிய சாட்சிகள் மூலம் காவல்துறைதான் நிரூபிக்க வேண்டும்'' எனவும் கூறுகிறார் கருணாநிதி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)