செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
'நம்பிக்கை துரோகம்', 'சூழ்ச்சி', 'வன்மம்' - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அதிகம் ஒலிக்கும் வார்த்தைகள் இவை.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்னைகளும், அவற்றின் அதிர்வுகளும் படிப்படியாக குறைந்து ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், கட்சியில் மீண்டும் சலசலப்புகள் தலைதூக்கியுள்ளன.
ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் ஒன்றாக பங்கேற்காதது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.
இதுதவிர, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளும் உள்ளன.
அடுத்த சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து ஆளும் திமுக இப்போதே காய் நகர்த்தும் வேளையில், தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் என்ன நடக்கிறது?

எடப்பாடி பழனிசாமி அறிக்கையும் பன்னீர்செல்வம் பதிலும்
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், "ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும் பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆக முடியுமா? துரோகியும் விசுவாசியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? " என்று பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு திங்கட்கிழமை மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்தார்.
"வஞ்சம், சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம் கட்சியில் அரங்கேற்றப்பட்டது. அத்தனை தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது. ஒற்றை தலைமைதான் வேண்டும் என அடம்பிடித்து அதை ஏற்றுக்கொண்டவர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்" என தெரிவித்தார்.
ஓநாய்-வெள்ளாடு உவமை குறித்து கேட்டபோது, "அவருக்கு (எடப்பாடி பழனிசாமி) நல்ல மனசு" என்று மட்டும் கூறிச் சென்றார்.

பட மூலாதாரம், PTI
அதிமுகவில் மீண்டும் கலகமா?
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு–அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் இத்திட்டத்தால் பயன்பெறும் 3 மாவட்ட விவசாயிகள் சார்பில், கோவை மாவட்டம் அன்னூர் அருகில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதிமுக மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், அந்நிகழ்வை புறக்கணித்தார். அந்த விழாவின் அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என காரணம் கூறியிருந்தார்.
அதேபோன்று, பிப்ரவரி 12 அன்று கோபியில் நடந்த எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், முதலில் 250 பேர்களின் பெயர்களை வாசித்தார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை இறுதிவரை அவர் சொல்லவில்லை.
இந்நிலையில், நேற்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்விலும் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. கோபியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை அவர் தனியாக கொண்டாடினார்.

இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "நினைவு நாள் என்றால் எல்லோரும் அங்கே (கட்சி அலுவலகம் அல்லது நினைவிடம்) செல்ல வேண்டும். பிறந்த நாள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக அந்தந்த பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன" என செங்கோட்டையன் பதிலளித்தார்.
இதுதவிர, அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை சில தினங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது.
"பழனிசாமிக்கு நெருக்கடி"
"இ.பி.எஸ்.சுக்கு எல்லாவிதமான சவால்களையும் ஏற்படுத்தும். தேர்தலை நோக்கி செல்லும் போது வலுவாக இருக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் நினைக்கின்றனர். இ.பி.எஸ்.சோ, கட்சியிலிருந்து வெளியே சென்றவர்கள் தனிநபர்கள் என நினைக்கிறார். ஆனால், ஓபிஎஸ், டிடிவி ஆகியோருக்கு தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் போட்டியிட்டு, இரண்டாவது இடம் பிடித்தனர்.
ஜெயலலிதா சிலைக்கு சென்னையில் மரியாதை செலுத்தும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் பங்கேற்கவில்லை. "அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என அவர் நினைக்கிறார், அதுதான் காரணமாக இருக்கும்" என்கிறார் ப்ரியன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றம் என அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்த அதிமுகவுக்கு அடுத்த சட்டமன்ற தேர்தல் வாழ்வா சாவா சூழல் தான் என்கிறார் அவர்.

"சின்னம் குறித்த வழக்குகள் தேர்தல் ஆணையத்தில் உள்ளன. இரட்டை இலையை முடக்கினால் இபிஎஸ் என்ன செய்வார்? கட்சியை வலுப்படுத்த அவர் ஆர்வம் காட்டுவதில்லை என கட்சியினர் நினைக்கின்றனர். குறிப்பிட்ட ஆட்களின் பிடியில்தான் கட்சி இருக்கிறது. கட்சி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. அப்படியிருந்தும் வெளியே உள்ளவர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டாம் என நினைப்பதை அவருடைய சுயநலமாக பார்க்கலாம், தன் ஆளுமை மீது அவருக்குள்ள நம்பிக்கையின்மையை குறிக்கிறது." என்றார் அவர்.
திமுகவுக்கு எதிராக விஜயின் தமிழக வெற்றிக் கழகம், பாஜக போன்ற கட்சிகள் வளர்வதற்கு அதிமுகவில் நிலவும் உள்கட்சிப் பிரச்னைகள் இடம் தரும் என்பது ப்ரியனின் கருத்தாக உள்ளது.
செங்கோட்டையன் குரலை கலகக் குரலாக பார்க்கலாமா?
அதிமுகவில் மீண்டும் எழுந்துள்ள சலசலப்புகள் தொடர்பாக பேசிய மற்றொரு மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "எடப்பாடி பழனிசாமி என்ன திட்டம் வைத்திருக்கிறார் என தெரியவில்லை. தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு சேதாரம் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் சேர்த்தால் என்ன நடக்கும் என்பது தெரியும். அவருக்கு பயம் இருக்கிறது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறார் அவர்" என்கிறார்.
கூட்டணி கணக்குகள் சரியாக வரவில்லை என்றால், ஓ.பன்னீர்செல்வத்தை சில மாதங்கள் கழித்து கட்சிக்குள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார் அவர். ஓ.பன்னீர்செல்வம் 6 மாதம் காலம் அமைதியாக இருக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா கூறியதை குபேந்திரன் குறிப்பிடுகிறார்.
செங்கோட்டையன் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்ததும் அவருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால் அவருடைய குரலை கலகக் குரலாக பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அதிமுகவில் என்ன நடக்கிறது? என்பது குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார், "கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என எங்களுக்கு அக்கறை இருக்காதா? பொதுச் செயலாளரே துரோகம் செய்வாரா? வேறொரு கட்சியிடம் பலி கொடுக்க நினைப்பவர்கள், ஒற்றுமையை கெடுப்பவர்களை வெளியேற்றியிருக்கிறோம். கட்சியை பலவீனப்படுத்தினார்கள் என்பதற்காகத்தான் அவர்களை நீக்கினோம்" என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு பன்னீர்செல்வம் பெற்ற வாக்குகளை அதிமுக வாக்குகளாக எப்படி கருத முடியும் என அவர் கேட்கிறார்.
"செங்கோட்டையன் விவகாரத்தைப் பொருத்தவரை, ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு 'நமது அம்மா' நாளிதழில் விளம்பரம் செய்திருக்கிறார்." என்றார்.
ஓ.பி.எஸ். தரப்பு ஆதரவாளராகக் கருதப்படும் மருது அழகுராஜ் கூறுகையில், "ஒற்றுமை தவிர வேறு வழியே இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர், ஒற்றுமைக்கு வழியே இல்லை என எடப்பாடி நினைக்கிறார். காலத்தே கூடாமல் போனால் எக்காலத்திலும் இணையாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிமுக 1989-ல் உடைந்து, 1990-லேயே சேர்ந்துவிட்டது. இனி ஒன்றுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நினைக்கவில்லை." என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்களை நேசிக்கும் குணம் அதிமுக தொண்டர்களுக்கு உள்ளது. எனவே, விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பிறகு அதிமுகவினர் தவெகவுக்கு செல்லக் கூடும். இன்னும் பல பிளவுகளுடன் அதிமுக சிதறிப்போகும் ஆபத்து உள்ளது. ஓபிஎஸ் ஒற்றுமைக்கு குரல் கொடுக்கிறார்." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












