அஸ்வின் காட்டிய மாயாஜாலம், ஜெய்ஸ்வாலின் சதம் - மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்திய அணி - டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெற்றிக்கு வித்திட்ட ஜெய்ஸ்வால்- அஸ்வின்
    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஜெய்ஸ்வாலின் சிறப்பான பேட்டிங், ரவிச்சந்திர அஸ்வினின் மாயாஜால பந்துவீச்சு ஆகியவற்றால் டோமினிகாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

மூன்று நாட்களிலேயே முதல் டெஸ்ட் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான(2023-25) சுற்றை இந்திய அணி 12 புள்ளிகளுடன் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

ஷேன் வார்னே சாதனையை முறியடித்த அஸ்வின்

பந்து மெதுவாக வரும் ஆடுகளத்தில் மாயஜால பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் 2வது இன்னிங்ஸில் 21.3 ஓவர்கள் வீசி 7 மெய்டன் 71 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து ஒரே டெஸ்டில் 12 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 23வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 22 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மறைந்த முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்தார்.

இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் அஸ்வின் 473 விக்கெட்டுகள் என்ற கணக்கில் இருந்தார். தற்போது 485 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் முடிவதற்குள் 500 விக்கெட்டுகளை அஸ்வின் நெருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 271 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50.3 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. அந்த முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராகக் களமிறங்கிய ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 171 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விராட் கோலி 76 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 103 ரன்களும் சேர்த்து இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

பிரமாதமான பந்துவீச்சு

வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறோம். இந்திய அணியின் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியை 150 ரன்களில் சுருட்டியபோதே ஆட்டம் எங்கள் பக்கம் வந்துவிட்டது.

மெதுவான ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இருப்பினும் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். 400 ரன்களுக்கு மேல் அடித்த நிலையிலும் எங்கள் பந்துவீச்சு 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக அமைந்தது.

ஜெய்ஸ்வாலுக்கு அருமையான தொடக்கம் கிடைத்திருக்கிறது. அவரது பொறுமை களத்தில் பரிசோதிக்கப்பட்டது. எந்தவிதமான பதற்றமும், அச்சமும் இல்லாமல் ஆடினார். இதேபோலத்தான் இஷான் கிஷனும் முதல் 20 பந்துகளுக்குப் பின்புதான் முதல் ரன் சேர்த்தார். முதல் டெஸ்ட் எப்போதும் பதற்றம் கொண்டதாக இருக்கும்.

ஜடேஜா, அஸ்வின் கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டியது. அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்த்தோமோ அதை அளித்தனர். அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் அதிகமாக எதையும் கேட்க வேண்டியதில்லை. இருவரின் முதிர்ந்த அனுபவம் இதுபோன்ற ஆடுகளங்களில் நன்கு உதவும்,” எனத் தெரிவித்தார்.

இந்திய அணி வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்த 50 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. 100 முதல் 130 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியில் முடிந்தது.

சொதப்பல் பேட்டிங்

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் அதிகபட்சமாக அதானேஷ் 28 ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸிலும் இவர் 47 ரன்கள் சேர்த்தது தான் அதிகபட்சமாகும்.

மற்ற வகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை. 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்த 50 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. 100 முதல் 130 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியில் முடிந்தது.

இரண்டு மணிநேரம் தடை

இரண்டாவதுநாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்திருந்தது. கோலி 36 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 143 ரன்களிலும் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே சோதனையாக இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது அல்சாரி ஜோசப் ஆட்டம் முடிவதற்கு 28 நிமிடங்களுக்கு முன்பே பெவிலியனுக்கு சென்றுவிட்டார்.

கார்ன்வால் மார்பு எரிச்சல் காரணமாக ஆட்டத்தைத் தொடரமுடியவில்லை. இதனால், முதல் 2 மணிநேரத்துக்கு பந்துவீச ஐசிசி விதிப்படி அனுமதிக்கப்படவில்லை.

அஸ்வின் - ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 150 ரன்களுக்கு மேல் அடித்த 3வது இந்திய பேட்டராக ஜெய்ஸ்வால் இடம் பிடித்தார்

ஜெய்ஸ்வால் மைல்கல்

ஏற்கெனவே பந்துவீச்சில் திணறிவந்த மேற்கிந்திய தீவுகள் அணி 2 முக்கியப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தடுமாறியது. ஆடுகளத்தின் மெதுவான தன்மையைப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால், ஹோல்டர் வீசிய ஓவரில் ஆஃப்சைடில் பவுண்டரி அடித்து டெஸ்ட் அரங்கில் 150 ரன்களை எட்டினார்.

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 150 ரன்களுக்கு மேல் அடித்த 3வது இந்திய பேட்டராக ஜெய்ஸ்வால் இடம் பிடித்தார். இதற்கு முன் ஷிகர் தவண்(187), ரோஹித் சர்மா(177) இந்த சாதனையைச் செய்திருந்தனர்.

கோலியின் மந்தமான பேட்டிங்

இரண்டு மணிநேரத்துக்குப்பின் ஜோஸப், கார்ன்வால் பந்துவீச அனுமதிக்கப்பட்டனர். விராட் கோலி 147 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார்.

ஆட்டம் தொடங்கியவுடனே 6வது ஓவரில் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ய மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வாரிகன் வீசிய ஓவரில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை கேப்டன் பிராத்வெயிட் தவறவிட்டார். அப்போது கோலி 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.

டெஸ்ட் வரலாற்றில் 147 பந்துகளில் அரை சதம் என்பது மிகவும் மந்தமான ஸ்கோராகும். விராட் கோலி தனது வழக்கமான பாணியில் ஆடியிருந்தால், இந்திய அணி இன்னும் வேகமாக ரன்களைச் சேர்த்திருக்கும்.

டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் என்னும் மைல்கல்லை எட்ட அஸ்வினுக்கு இன்னும் 15 விக்கெட்கள் மட்டுமே தேவை

ரஹானே ஏமாற்றம்

ஜெய்ஸ்வால் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கி ஜோஸப் ஓவரில் ஒரு பவுண்டரி, வாரிகன் ஓவரில் ஒரு சிக்ஸரும் அடித்தார். ஜெய்ஸ்வால், கோலி கூட்டணி 100 ரன்களை எட்டியது.

ஆனால், ஜோஸப் ஓவரில் லென்த்தில் வீசப்பட்ட ஷார்ட் பந்தை தொட்டு ஜெய்ஸ்வால் 171 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆடுகளத்தின் மெதுவான தன்மைக்கு ஏற்றாற்போல் தனது ஆட்டத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்குள் ரோச் பந்துவீச்சில் ரஹானே 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

20 பந்துகளில் முதல் ரன்

நண்பகல் உணவு இடைவேளைக்கு முன் கோலியும், ஜடேஜாவும் தலா ஒரு பவுண்டரி அடிக்க இந்திய அணி 400 ரன்களை எட்டியது. உணவு இடைவேளைக்குப் பிறகு வந்த விராட் கோலி நீண்டநேரம் நிலைக்கவில்லை. கார்ன்வால் வீசிய ஓவரில் கல்லியில் நின்றிந்த அதானேஷிடம் கேட்ச் கொடுத்து 76 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.

அடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். அறிமுக வீரராகக் களமிறங்கிய ஜெய்ஸ்வால் முதல் ரன்னை அடிக்க 16 பந்துகள் எடுத்துக்கொண்டார். இஷான் கிஷன் 20 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் முதல் ரன்னை அடிக்க, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார்.

ஜடேஜா 37 ரன்களுடனும், இஷான் கிஷன் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்களில் டிக்ளேர் செய்தது.

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 4வது ஓவரில் இருந்து அஸ்வின், ஜடேஜாவுக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

ஜடேஜா, அஸ்வின் ராஜ்ஜியம்

இதையடுத்து 2வது இன்னிங்ஸை மேற்கிந்திய தீவுகள் அணி தொடங்கியது. ஆடுகளம் மெதுவான தன்மையுடன், சுழற்பந்துவீச்சில் பந்து அதிக பவுன்ஸ், சுழலும் தன்மை இருக்கிறது என்பதை கேப்டன் ரோஹித் புரிந்து கொண்டார். இதனால், 4வது ஓவரில் இருந்து அஸ்வின், ஜடேஜாவுக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

ஜடேஜா வீசிய 10வது ஓவரில் சந்தர்பால்(7) எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய 16வது ஓவரில் பிராத்வெய்ட் 7 ரன்னில் ஸ்லிப்பில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிலும் அஸ்வின் 'அரவுண்ட் தி விக்கெட்டில்' பந்துவீசி மேற்கிந்திய தீவுகள் டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார்.

பிராத் வெயிட்(7), பிளாக்வுட்(5) இருவரும் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேற இடதுகை பேட்ஸ்மேன்களான சந்தர்பால்(7), ரேமன் ரீபர்(11) ஆகியோர் ஜடேஜா ஓவரில் சரிந்தனர். 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி திணறியது.

இதில் பிராத்வெய்ட் ரன் கணக்கைத் தொடங்காத நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை இஷான் கிஷன் கோட்டைவிட்டார். அதைப் பிடித்திருந்தால், பிராத்வெயிட்டின் விக்கெட் தொடக்கத்திலேயே வீழ்ந்திருக்கும்.

அதானேஷ் ஆறுதல்

அதானேஷ், ஜோஷ்வா டி சில்வா இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவை சரி செய்ய முயன்று நிலைத்து ஆடினர். ஆனால், சிராஜ் பந்துவீச்சில் சில்வா 13 ரன்கள் சேர்த்த நிலையில் எல்பிடபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார்.

அதானேஷ் ஒரு ரன் சேர்த்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் நழுவவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய அதானேஷ் இரு பவுண்டரிகளை அஸ்வினின் முதல் சுற்று ஓவரில் அடித்தார்.

30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்

அஸ்வினின் 2வது சுற்று ஓவரில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அதானேஷ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் மேற்கிந்திய தீவுகள் அணியின் பின்வரிசை வீரர்கள் யாரும் அஸ்வினின் மாயஜாலப் பந்துவீச்சுக்கு முன் நீண்டநேரம் நிலைக்கவில்லை.

அல்சாரி ஜோஸப்(13), கார்ன்வால்(4), ரோச்(0), வாரிகன்(18) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி 30 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளையும் மேற்கிந்திய தீவுகள் அணி இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதானேஷ், ஜோஷ்வா டி சில்வா இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவை சரிசெய்ய முயன்று நிலைத்து ஆடினர்

தோல்விக்குக் காரணம் என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் அவர்களின் நம்பிக்கைக்குரிய சுழற்பந்துவீச்சாளர் கார்ன்வால் உடல்நலக் குறைவால் 3 செஷன்களில் பந்துவீச முடியாமல் போனதுதான். மேற்கிந்திய தீவுகள் அணியில் காரல் ஹூப்பர், நரேன் ஆகியோருக்கு அடுத்தபடியாக தரமான சுழற்பந்துவீச்சாளராக கார்ன்வால் இருந்து வருகிறார்.

இரண்டாவது நாளின்போது பந்துவீசிக் கொண்டிருந்த கார்ன்வாலின் மார்பில் லேசான வலியும், எரிச்சலும் ஏற்பட்டது. இதனால், 2வது மற்றும் 3வது செஷனில் பந்துவீசாமல் கார்ன்வால் டக்அவுட்டில் ஓய்வெடுக்கச் சென்றார்.

மூன்றாவது நாளான நேற்று கார்ன்வால் பந்துவீச ஐசிசி விதிப்படி 2 மணிநேரம் தடைவிதிக்கப்பட்டது. ஐசிசி விதிப்படி ஒருவீரர் அதிகபட்ச நேரத்தை களத்தில் செலவிட்டிருந்தால்தான் அவரை பந்துவீச அனுமதிக்க முடியும்.

இல்லாவிட்டால் அதற்கு நடுவர் அனுமதிக்கமாட்டார். அந்தவகையில் கார்ன்வால் நேற்று முதல் இரண்டு மணிநேரம் பந்துவீச அனுமதிக்கப்படவில்லை. இதில் ஒரு வீரருக்கு உடலில் காயம் ஏற்பட்டால் மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆதலால், ஏறக்குறைய 3 செஷன்களில் கார்ன்வால் பந்துவீச முடியாமல் போனது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. முதல்நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி 46 ஓவர்கள் பந்துவீசியபோது அதில் 11 ஓவர்களை கார்ன்வால் வீசியிருந்தார். அப்போது இந்திய அணி 128 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ஆடுகளத்தின் மெதுவான தன்மையில், கார்ன்வால் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடுவது மிகவும் சிரமமானது. 3வது நாளான நேற்று கார்ன்வால் பந்துவீச வந்த சிறிதுநேரத்தில் கோலி விக்கெட்டை வீழ்த்தினார். ஒருவேளை கார்ன்வால் 3 செஷன்களிலும் பந்துவீசியிருந்தால் இந்திய அணி இந்த அளவு ஸ்கோர் செய்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

கார்ன்வாலின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட 2 மணிநேரம் தடை ஆகியவை மேற்கிந்தியத் தீவுகள் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: