ஜெய்ஸ்வால்: மேற்கிந்தியத் தீவுகளை மிரள வைத்த இளைஞன்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இளம் வீரர் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அபாரமான சதத்தால் டோமினிக்காவில் நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்துள்ளது.
2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
ஜெய்ஸ்வால் சாதனை சதம்
அறிமுக ஆட்டத்திலேயே தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்த 3வது இந்திய பேட்டர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். இதற்கு முன் பிரித்வி ஷா, ஷிகர் தவண் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தத்தில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த 17-வது இந்திய பேட்டராக ஜெய்ஸ்வால் இடம் பெற்றார்.
இந்தியாவுக்கு வெளியே அறிமுகப் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பேட்டராக செளரவ் கங்குலி இருந்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி அடித்த 131 ரன்கள்தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜெய்ஸ்வால் 27 ஆண்டுகளுக்குப்பின் முறியடித்து, 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். ஆசியாவுக்கு வெளியே கங்குலிக்கு அடுத்தபடியாக, அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்த வீரராக ஜெய்ஸ்வால் இடம் பெற்றார்.
ஜெய்ஸ்வால் 2வது நாள் ஆட்ட இறுதிவரை 350 பந்துகளைச் சந்தித்து 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அறிமுக டெஸ்ட் போட்டியில் ஒரு இந்திய பேட்டர் இந்த அளவு அதிகமான பந்துகளைச் சந்தித்தது இதுதான் முதல்முறையாகும்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன் கடந்த 1984ம் ஆண்டில், ஈடன் கார்டனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசாருதீன் அறிமுக ஆட்டத்தில் 322 பந்துகளைச் சந்தித்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதையும் ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டார்.
ரோஹித், ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதாவது, விக்கெட் இழப்பின்றி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 79 ரன்கள் முன்னிலை பெற்றபின் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்தியா முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி, முன்னிலை பெற்றதும் இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் கடந்த 1978ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுனில் கவாஸ்கர், சவுகான் இருவரும் முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டனர்.
அது மட்டுமல்லாமல் ஆசியக் கண்டத்துக்கு வெளியே, இந்திய அணியின் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் கடந்த 1979ம் ஆண்டு ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர், சவுகான் ஜோடி 213 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தொடக்க ஜோடி இந்தியாவுக்கு வெளியே சேர்த்த 3வது அதிகபட்சமாக இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுவாக அமைந்தது. இதற்கு முன் கடந்த 2002 வான்ஹடேவில் நடந்த டெஸ்டில் சேவாக், சஞ்சய் பங்கர் ஜோடி 201 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்து.
ஜெய்ஸ்வால், ரோஹித் அரைசதம்
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வி்க்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் நேற்றைய 2வதுநாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர்.
இதனால் முதல் 10 ஓவர்களில் ரோஹித், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 19 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஹோல்டர் வீசிய ஓவர்களில் 5 முறை தோள்பட்டையில் அடி வாங்கி ஜெய்ஸ்வால் நிதானமாக பேட் செய்து 104 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் 106 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
மந்தமான ஆடுகளத்தால் திணறல்
ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் விரைவாக இந்திய பந்துவீச்சாளர்களால் வெளியேற்ற முடிந்தது.
ஆனால், ஜெய்ஸ்வால், ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து மிகுந்த பொறுமையாக ஆடி, ஷாட்களைத் தேர்வு செய்து ஆடினார். ரோச் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து, ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 2வது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் சந்தித்த 80 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் கார்ன்வால், வாரிகன் இருவரும் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தாலும் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கிறது என்றாலும், பந்து பேட்டர்களை நோக்கி மெதுவாகச் செல்வதால் விக்கெட் வீழ்த்துவது குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஜோடியை வீழ்த்த முடியாமல் கேப்டன் பிராத்வெய்ட் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு பீல்டிங்கை பலமுறை மாற்றி அமைத்தார்.
2 ஆண்டுகளுப்பின் 100 ரன்கள்
இந்திய அணி 100 ரன்களைக் கடந்தபோது புதிய மைல்கல்லை எட்டியது. இந்திய தொடக்க ஜோடி கடந்த 2021, டிசம்பர் மாதத்துக்குப்பின் டெஸ்ட் போட்டியில் 100 ரன்களைக் கடந்தது இல்லை. 2021 டிசம்பரில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராக மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் இருவரும் 117 ரன்கள் சேர்த்திருந்தனர்.
ஜெய்ஸ்வாலுக்கு ரோஹித் அறிவுரை
ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளில் ஆடி பழக்கப்பட்டவர் என்பதால், ஒரு கட்டத்துக்கு மேல், ஜெய்ஸ்வால் அதிரடியைக் கையாண்டார். பீல்டர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் கண்டு, அதற்கு ஏற்றார்போல் ஷாட்களை ஆடினார், அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் டெஸ்ட் போட்டிகளுக்கான மரபு ஷாட்களைக் கடந்து ‘அப்பர்-கட் ஷாட்’, ‘ஸ்வீப் ஷாட்’, ‘ரிவர்ஸ் ஸ்வீப்’, ‘ஸ்விட்ச் ஹிட்’ ஷாட்களையும் ஜெய்ஸ்வால் ஆடி ரன்களைச் சேர்த்தார்.
ஜெய்ஸ்வாலின் ஆட்டம் வேகம் எடுப்பதைப் பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா, நிதானமாக ஆடக் கோரி அறிவுரை கூறியதையடுத்து, ஜெய்ஸ்வால் ஆட்டம் சிறிது மந்தமாகியது. இதனால், அடுத்த 50 ரன்களை எடுக்க ஜெய்ஸ்வால் 106 பந்துகளை எடுத்தார், தனது முதலாவது சதத்தை 215 பந்துகளில் நிறைவு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
9 பந்து வீச்சாளர்களாலும் பயனில்லை
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரையும் பிரிக்க கேப்டன் பிராத்வெய்ட் 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பயனில்லை. பிற்பகலுக்குப்பின் மார்பில் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக கார்ன்வால் பெவிலியன் சென்றார்,அதன்பின் கடைசிவரை அவர் பந்துவீச வரவில்லை.
ரோஹித்,ஜெய்ஸ்வால் ஜோடியை பிரிக்க வேறு வழிதெரியாமல் வேகப்பந்துவீ்ச்சாளர்கள் மூலம் ஷார் பந்து ஆயுதத்தை பிராத்வெய்ட் பயன்படுத்தத் தொடங்கினார். இதனால் ஜெய்ஸ்வால், ரோஹித் இருவரும் ஜோஸப், ஹோல்டர் பந்துவீ்ச்சில்உடலில் அடிவாங்கினர்.
இருப்பினும் ஷார்ட் பந்துகளை அருமையாக ஆடிய ஜெய்ஸ்வால் அவ்வப்போது பவுண்டரிகளாக மாற்றி ரன்களை சேர்த்தார். ரோஹித் சர்மாவும் ஷார்ட் பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்ததால் ஷார்ட் பந்து திட்டமும் தோல்வி அடைந்தது.
ரோஹித் 10வது சதம்
கேப்டன் ரோஹித் சர்மாவும் நீண்டகாலத்துக்குப்பின் டெஸ்ட் அரங்கில் தனது சதத்தை நிறைவு செய்தார். ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் இது 10-வது சதமாக அமைந்தது, அவரின் 27 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு வெளியே ரோஹித் சர்மா அடித்த 2வது சதம்.
ரோஹித் சர்மா சதம் அடித்தபின் நீண்டநேரம் நிலைக்கவில்லை, அலிக் அதானேஷ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
சுப்மான் கில் ஏமாற்றம்
இந்த டெஸ்ட் போட்டியில் புஜாரா இல்லாதநிலையில் 3வது வீரராகக் களமிறங்க பயிற்சியாளர் திராவிட்டிடம் விருப்பம் தெரிவித்து, ஆசையாக சுப்மான் கில் களமிறங்கினார். ஆனால், வாரிகன் பந்துவீச்சில் கில்லின் பேட்டின் நுனினியில் பந்துபட்ட ஸ்லிப்பில் இருந்த அதானேஷிடம் கேட்சாக மாறியது. இதனால் 6 ரன்னில் கில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி புதிய பந்தை 101-ஆவது ஓவர்வரை எடுக்காமல் தாமதித்து பழைய பந்தையே பயன்படுத்த விரும்பினர். பழைய பந்தில் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் நடுவரிடம் இருமுறை ரிவியூ சென்றும் பலன் இல்லை.
பவுண்டரி அடித்து சிரித்த கோலி
விராட் கோலியும் வழக்கத்துக்கு மாறாக மந்தமாக பேட் செய்தார். 80 பந்துகளைச் சந்தித்த நிலையில், ஒருபவுண்டரி கூட அடிக்காமல் ரன்களை சேர்த்திருந்தார். வாரிகன் பந்துவீச்சில் கவர்-ட்ரைவ் ஷாட்டில் கோலி பவுண்டரி அடித்து தனது கணக்கை தொடங்கியவுடன், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார். ஜெய்ஸ்வால், கோலி ஜோடி 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












