வெனிசுவேலா மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கே பிரச்னையாக மாறுமா? உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு

பட மூலாதாரம், US government
- எழுதியவர், ஆண்டனி ஸூர்ச்சர்
- பதவி, வட அமெரிக்க செய்தியாளர்
வெனிசுவேலாவில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படுத்தும் ரகமான ஒரு இரவு நேரத் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, டொனால்ட் டிரம்ப் இப்போது ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் செயலில் இறங்குவது போல் தெரிகிறது.
சனிக்கிழமை காலை தனது மார்-ஏ-லகோ ஓய்வு விடுதியில் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்கச் செய்தியாளர் சந்திப்பில், கராகஸில் இரவு நேர நடவடிக்கையில் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகப் பிடித்ததாக அதிபர் அறிவித்தார்.
அதன்பிறகு, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சேத் உள்ளிட்ட குழுவினர், வெனிசுவேலா மக்களுடன் இணைந்து, சிக்கலில் தவிக்கும் அந்த நாட்டின் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்பார்கள் என்று டிரம்ப் கூறினார்.
"ஒரு பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான அதிகார மாற்றத்தைச் செய்யும் வரை நாங்கள் அந்த நாட்டை நிர்வகிப்போம்," என்று அவர் கூறினார்.
"நாட்டை நிர்வகிப்பது" என்பது உண்மையில் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த வாக்குறுதி அதிபரின் போக்கில் முரண்பாடுகளும் அச்சுறுத்தும் தடைகளும் நிறைந்த ஒரு திடீர் மாற்றத்தைக் காட்டுகிறது
"முடிவில்லாப் போர்களுக்கு" எதிராகப் பிரசாரம் செய்த, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் கடந்த கால முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்த மற்றும் "அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை" என்ற வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதாக உறுதியளித்த ஒரு அதிபர், இப்போது தனது அதிபர் பதவியையே பொருளாதாரம் சீர்குலைந்துள்ள மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை பல தசாப்த கால சர்வாதிகாரத்தால் சிதைக்கப்பட்டுள்ள ஒரு தென் அமெரிக்க நாட்டை மறுசீரமைப்பதில் பணயம் வைத்துள்ளார்.
இருப்பினும் டிரம்ப் இடைவிடாத நம்பிக்கையுடன் இருந்தார்.
தனது நிர்வாகம் "வெற்றி பெறுவதில் ஒரு சரியான சாதனை தடத்தை கொண்டுள்ளது" என்றும் - இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார். வெனிசுவேலாவின் சிதைந்து வரும் தொழில்முறை உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் ஈடுபடும் என்று அவர் உறுதியளித்தார். இது அமெரிக்காவின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதி வழங்கும் மற்றும் வெனிசுவேலா மக்களுக்குப் பயனளிக்கும் என்றார் அவர்.
இந்த முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்க வீரர்களை வெனிசுவேலாவிற்கு அனுப்பும் வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை. "நாங்கள் தரைப்படையைப் பயன்படுத்த அஞ்சவில்லை... நேற்றிரவு எங்கள் வீரர்கள் அங்கே இருந்தார்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கடுமையாக விமர்சித்த டிரம்ப், இப்போது இராக் போரை வடிவமைத்தவர்களில் ஒருவரான வெளியுறவுத்துறை செயலாளர் காலின் பவலின் இந்த வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டியிருக்கும்: "நீங்கள் ஒன்றை உடைத்தால், அதற்கு நீங்களே உரிமையாளர்"
நன்மையோ, தீமையோ அமெரிக்கா வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றி அமைத்துள்ளது.
கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு அமைதியை நிலைநாட்டுபவராக இருப்பேன் என கூறி டிரம்ப் பதவியேற்றார். ஆனால் உலகம் முழுவதும் ராணுவ பலத்தைப் பயன்படுத்த தயாராக இருப்பதை கடந்த ஒரு ஆண்டில் அவர் நிரூபித்துள்ளார்.
கடந்த வாரத்தில், சிரியா மற்றும் நைஜீரியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். 2025-இல் அவர் இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், கரீபியனில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் படகுகள், ஏமனில் உள்ள கிளர்ச்சிப் படைகள், சோமாலியாவில் உள்ள ஆயுதக் குழுக்கள் மற்றும் இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்களைத் தாக்க உத்தரவிட்டார்.
கடந்தகால நடவடிக்கைகள் பெரும்பாலும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை உள்ளடக்கியவை, அவை அமெரிக்கப் படைகளுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைத்தன. ஆனால் டிரம்பின் வெனிசுவேலா தாக்குதல் - மற்றும் அந்த நாட்டின் எதிர்காலம் குறித்த அவரது உறுதிப்பாடுகள் - குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டவை.
அவரது குறிக்கோள், வெனிசுவேலாவை "மீண்டும் சிறந்ததாக்குவது" (Make Venezuela great again) என்று அவர் தனது செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
டிரம்பின் "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்" என்ற முழக்கத்தின் இந்த தாக்கம், டிரம்பின் சில ஆதரவாளர்களுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கலாம்.

பட மூலாதாரம், TRUTH SOCIAL
டிரம்ப் ஆதரவாளராக இருந்து, அவர் தனது அரசியல் தளத்தைக் கைவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி அவரிடமிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜரி டெய்லர் கிரீன், அதிபரின் நடவடிக்கைகளைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் உடனடியாக பதிவிட்டார்.
"முடிவே இல்லாத ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்கான நமது அரசின் ஆதரவு மீது அமெரிக்கர்களுக்கு இருக்கும் வெறுப்பு நியாயமானது; ஏனெனில் அதற்குப் பணம் செலுத்த நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய இரு தரப்புமே வாஷிங்டனின் ராணுவ இயந்திரத்திற்கு எப்போதும் நிதி வழங்கி அதனைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
"இதனை முடிவுக்குக் கொண்டு வரத்தான் தாங்கள் வாக்களித்ததாக பல MAGA ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் நாங்கள் தவறாக கணித்துவிட்டோம்."
டிரம்பின் மற்றொரு முக்கிய விமர்சகரான கென்டக்கியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸி, மதுரோ மீது ஆயுதங்கள் மற்றும் கோகெயின் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையும், பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க எண்ணெயை மீட்டெடுப்பது மற்றும் ஃபென்டானில் உற்பத்தியை தடுத்து நிறுத்துவது ஆகியவற்றிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறிய விளக்கத்தையும் ஒப்பிட்டு விமர்சித்தார்.
பெரும்பாலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபருக்குப் பின்னால் அணி திரண்டுள்ளனர். சபாநாயகர் மைக் ஜான்சன், ஒரு "குற்றவியல் ஆட்சிக்கு" எதிரான இந்த ராணுவ நடவடிக்கையை "தீர்க்கமானது மற்றும் நியாயமானது" என்றார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, வெனிசுவேலா நடவடிக்கை தனது "அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை" என்ற கொள்கையையே முன்னெடுத்துச் செல்வதாக டிரம்ப் கூறினார். ஏனெனில் இது அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், எண்ணெய்க்கான நிலையான ஆதாரத்தையும் வழங்கும் என்பது அவரது கருத்து.
மேற்கத்திய அரைக்கோளம் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்கள்) ஐரோப்பிய சக்திகளின் செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று வலியுறுத்தும் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால அமெரிக்க வெளியுறவுக் கொள்கையான 'மன்றோ கோட்பாட்டை' அவர் மீண்டும் கையில் எடுத்து, அதற்கு "டான்ரோ கோட்பாடு" என்று டிரம்ப் புதிய பெயரிட்டார்.

பட மூலாதாரம், Jeenah Moon/Reuters
வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, "மேற்கத்திய அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் இனி ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது" என்பதைக் காட்டுகிறது என்று டிரம்ப் கூறினார்.
புதிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தியின் குறிக்கோள், "நமது தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமாக விளங்கும் வர்த்தகம், நிலப்பரப்பு மற்றும் வளங்களைப் பாதுகாப்பதாகும்" என்று அவர் கூறினார். அவர் மேற்கத்திய அரைக்கோளத்தை அமெரிக்காவின் "சொந்த பிராந்தியம்" என்று வர்ணித்தார்.
மதுரோவை சிறைபிடிக்க டிரம்ப் எடுத்த முடிவு, உலகளாவிய அரசியலில் பெரிய கவலைகளை எழுப்பும். உலகின் பிற முக்கிய ராணுவ வல்லரசுகளுடனான அமெரிக்காவின் உறவுகளையும் பாதிக்கும்.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த பொறுப்பற்ற தாக்குதலுக்கு அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பைடன் நிர்வாகத்தின் போது, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்கா இதேபோன்ற கண்டனங்களைத் தெரிவித்தது. இப்போது டிரம்ப் நிர்வாகம் அந்த இரு நாடுகளுக்கும் இடையே பல நேரங்களில் ரஷ்ய தரப்பிற்கு சாதகமாக இருப்பதாகத் தெரியும் ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

பட மூலாதாரம், Reuters
டிரம்பை விமர்சிக்கும் ஜனநாயகக் கட்சியினர் இன்னும் நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
"அமெரிக்கா எந்தக் காரணத்திற்காகவும் மற்ற நாடுகளை நிர்வகிக்க கூடாது," என்று செனட் வெளியுறவு குழுவில் இடம்பெற்றுள்ள ஹவாயைச் சேர்ந்த பிரையன் ஷாட்ஸ் கூறினார்.
"அமெரிக்கர்களுக்குப் பேரழிவைத் தரும் விளைவுகளைக் கொண்ட முடிவில்லா போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதை நாம் இந்நேரம் கற்றிருக்க வேண்டும்."
நவம்பர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றினால் சபாநாயகராக வாய்ப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறுகையில், "மதுரோ ஒரு குற்றவாளி மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்த சர்வாதிகாரி" என்றார். ஆனால் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்தை கலந்தாலோசிக்காத டிரம்பின் முடிவைக் கண்டித்தார்.

"டொனால்ட் டிரம்ப் சட்டத்தைப் பின்பற்றவும், அமெரிக்காவில் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பைக் கொண்டுள்ளார்," என்று அவர் கூறினார். "அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு அதுவே தேவை."
தாக்குதலுக்கு முன்னதாகவே நடவடிக்கை விவரம் "கசியவிடப்படலாம்" என்ற கவலையாலேயே நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று டிரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அந்த ராணுவ நடவடிக்கை ஒரு வெற்றியாக அமைந்தது - அமெரிக்கர்கள் யாரும் உயிரிழக்கவில்லை மற்றும் அமெரிக்க உபகரணங்களுக்குச் சேதம் குறைவாகவே ஏற்பட்டது. டிரம்ப் தனது வழக்கமான பாணியில், இந்த நடவடிக்கையை ஒரு "அற்புதமான தாக்குதல்" என்றும், "அமெரிக்க வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவ பலம் மற்றும் திறமையின் மிகவும் ஆச்சரியப்படுத்தும், பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று இது" என்றும் விவரித்தார்.
இப்போது அவர் அந்த வெற்றி தொடரும் என்பதில் தனது அதிபர் பதவியையே பணயம் வைத்துள்ளார். வெனிசுவேலாவை நிர்வகிப்பதையும் புனரமைப்பதையும் ஏற்பதாக அமெரிக்கா கூறுகிறது அதன் உண்மையான பொருள் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. டிரம்பும் அவரது குழுவினரும் பல தசாப்தங்களாகக் குழப்பத்தில் இருந்த ஒரு தேசத்தை வலுப்படுத்தும் அதே நேரத்தில் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை தங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று எண்ணும் ஒரு பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












