ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் மேயர் தேர்தலுக்கு தயாராகி வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம்

ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் மேயர், நியூயார்க் மேயர் தேர்தல், மீரா நாயர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அன்சுல் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"சகோதரர்களே, சகோதரிகளே! (மேயர்) தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கின்றன. நானா அல்லது ஆண்ட்ரூ க்யூமோவா? உங்களின் தேர்வு யார்?"

இந்த வார்த்தைகளை ஹிந்தியில் பேசினார் ஜோஹ்ரான் மம்தானி. நியூயார்க் நகரின் மேயர் தேர்தல் போட்டியாளரான அவர் ஆங்கிலம் பேசும் அமெரிக்காவில் ஹிந்தியில் பேசி வாக்குகளைச் சேகரித்தார்.

அவருக்கு வாக்களிக்குமாறு ஹிந்தியில் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ இந்தியாவில் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஆண்ட்ரூ க்யூமோ, நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் தனது தோல்வியைத் தற்போது ஒப்புக் கொண்டார். இது பெரிய அரசியல் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

தனது ஆதரவாளர்களிடம் பேசிய க்யூமோ, 33 வயதான ஜனநாயக சோஷலிசவாதி ஜோஹ்ரான் மம்தானி 'முதன்மை' தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். மேலும், இப்போதைய சூழலை மதிப்பாய்வு செய்து, எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில், நியூயார்க் நகரின் மேயர் தேர்தலைச் சந்திக்கும் முதல் முஸ்லிம் வேட்பாளராக அவர் புதிய சாதனை ஒன்றைப் படைக்க உள்ளார்.

நவம்பரில் நடைபெற இருக்கும் தேர்தலில் மம்தானி வெற்றி பெறும் பட்சத்தில், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரின் முதல் முஸ்லிம் மேயராக, தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட முதல் மேயராக அவர் அறியப்படுவார்.

யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?

ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் மேயர், நியூயார்க் மேயர் தேர்தல், மீரா நாயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகழ்பெற்ற இந்திய - அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயருக்கும், புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹ்மூத் மம்தானிக்கு மகனாகப் பிறந்தவர் ஜோஹ்ரான்.

உகாண்டா தலைநகர் கம்பலாவில் பிறந்தவர் ஜோஹ்ரான் வாமே மம்தானி. 1991ஆம் ஆண்டு பிறந்த மம்தானிக்கு, கானா நாட்டின் முதல் பிரதமரும், புரட்சியாளருமான, வாமே க்ரூமாவின் பெயரை நடுப்பெயராகச் சூட்டினார் அவரது தந்தை.

புகழ்பெற்ற இந்திய - அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயருக்கும், புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹ்மூத் மம்தானிக்கும் மகனாகப் பிறந்தவர் ஜோஹ்ரான்.

பிறந்த சில வருடங்கள் அவர் கம்பலாவில் வாழ்ந்தார். பிறகு ஐந்து வயதில் அவருடைய குடும்பத்தினர் தென்னாப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அவருடைய தந்தை மஹ்மூத் மம்தானி கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஜோஹ்ரான் தனது ஆரம்பப் பள்ளிக் கல்வியை கேப்டவுனில் உள்ள புனித ஜார்ஜ் கிராமர் பள்ளியில் பெற்றார். தென்னாப்பிரிக்காவின் மிகவும் பழமையான அந்தப் பள்ளி 1848ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அவருக்கு 7 வயதாகும்போது அவரது குடும்பம் நியூயார்க் வந்தது. அங்கே உள்ள ப்ரோன்க்ஸ் அறிவியல் உயர் நிலைப்பள்ளியில் படித்தார் அவர். போதென் கல்லூரியில், 2014ஆம் ஆண்டு ஆப்பிரிக்க படிப்புகள் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு மம்தானி அமெரிக்க குடிமகன் ஆனார்.

அரசியல் பயணம்

ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் மேயர், நியூயார்க் மேயர் தேர்தல், மீரா நாயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில், நியூயார்க் நகரின் மேயர் தேர்தலைச் சந்திக்கும் முதல் முஸ்லிம் வேட்பாளராக அவர் புதிய சாதனை ஒன்றைப் படைக்கவுள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஜோஹ்ரான் மம்தானி சமூக சேவைப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். அப்போது அவர் ஃபோர்க்ளோஷர் கவுன்சிலராக பணியாற்றினார். அதாவது, வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியவர்களால் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலாத சூழலில் அவர்களுக்குத் தேவையான நிதி ஆலோசனை போன்றவற்றை வழங்கும் பணி.

நியூயார்கின் குயின்ஸ் பகுதியில் இந்தப் பணியை மேற்கொண்டிருந்த அவர், குறைந்த வருவாய் கொண்ட, நிதி நெருக்கடி காரணமாகத் தங்கள் வீடுகளை இழக்கும் அவல நிலையில் உள்ள மக்களுக்காக அவர் பணியாற்றினார்.

இந்தப் பணிதான் அவரை அரசியலை நோக்கி நகர்த்தியது. அந்தப் பணியின்போது, மக்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் அவர்களின் நிதி நிலைமை மட்டுமல்ல. இது கொள்கை சார்ந்ததும்கூட என்பதை அவர் உணர்ந்தார். ஒரு முழுநேர அரசியல்வாதியாக மாறினால், சாமானியர்களுக்கு சவாலாக இருக்கும் கொள்கைகளை மாற்ற இயலும் என்று அவர் நம்பினார்.

அதன் பிறகு 2020ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டார். குயின்ஸில் உள்ள அஸ்டோரியா என்ற 36வது மாவட்டத்தில் அவர் போட்டியிட்டார். நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக அவர் ஜனநாயக சோஷலிச கட்சி சார்பில் போட்டியிட்டார்.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற அவர் நியூயார்க் மாகாண சட்டமன்றத்தில் இடம் பெற்ற முதல் சோஷலிச பிரதிநிதி மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

முன்னாள் ஆளுநரை நியூயார்க் நகரின் மேயர் பதவிக்கான 'முதன்மை' போட்டியில் தோற்கடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.

கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் ஆளுநர் க்யூமோ. தற்போது அரசியலில் மறுபிரவேசம் செய்யும் நோக்கத்தோடு இந்த முதன்மைப் போட்டியில் பங்கேற்றார். அவருக்கு வயது 67. ஆனால் அவர் வேட்பாளராகத் தேர்வாகவில்லை.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய மம்தானி, "இன்றிரவு நாம் வரலாறு படைத்துள்ளோம். ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை அது சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரியும்" என்ற நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற சொற்களை அவர் குறிப்பிட்டார்.

மேலும், "நண்பர்களே நாம் சாதித்துவிட்டோம். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நியூயார்க் நகர மேயர் போட்டியில் இடம் பெறுவேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் மேயர், நியூயார்க் மேயர் தேர்தல், மீரா நாயர்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மம்தானி மீதான விமர்சனம்

நரேந்திர மோதி முதல் இஸ்ரேல் வரை, ஜோஹ்ரான் மம்தானி பலரை வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மேடிசன் சதுக்கத் தோட்டத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினால், அதன் பிறகு ஒரு கூட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினால் அதில் நீங்கள் பங்கேற்பீர்களா என்ற கேள்வி ஜோஹ்ரான் மம்தானியிடம் முன்வைக்கப்பட்டது.

"என் அப்பாவும் அவரது குடும்பத்தினரும் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். குஜராத்தின் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாகக் கொல்ல மோதி உதவினார். அங்கே அளவுக்கு அதிகமான வன்முறை நிலவியது. தற்போது குஜராத்தி இஸ்லாமியர்களே இல்லை என்பது போன்ற ஒரு தோற்றம் நிலவுகிறது. நாம் பெஞ்சமின் நெதன்யாகுவை பார்ப்பதைப் போன்றே, மோதியையும் பார்க்க வேண்டும். அவர் ஒரு போர்க் குற்றவாளி," என்று மம்தானி பதில் அளித்தார்.

நியூயார்க்கில், அவரது இந்த அறிக்கைக்குப் பிறகு சில இந்திய - அமெரிக்கர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கிய குழுக்கள் அவரது கருத்தை வெறுப்பு கொண்ட, பிரிவினையை ஏற்படுத்தும் கருத்து என்று விமர்சித்தனர். மம்தானி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

பாலத்தீன விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மை தலைவர்களிடம் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார் ஜோஹ்ரான் மம்தானி. அவர் பாலத்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலை விமர்சித்தும் வருகிறார் அவர்.

அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், இஸ்ரேல் ஒரு யூத நாடாக இருப்பதை அவர் எதிர்த்தார். "மதம் மற்றும் இதர கூறுகளின் அடிப்படையில் குடியுரிமை பிரிக்கப்படும் எந்த ஒரு நாட்டையும் நான் ஆதரிக்க மாட்டேன். அனைத்து நாடுகளிலும் சமத்துவம் நிலவ வேண்டும். இதுதான் என் நம்பிக்கை," என்று அவர் கூறினார்.

சர்ச்சைக்குரிய 'க்ளோபலைஸ் தி இண்டிஃபாதா (Globalise the Intifada)" என்ற முழக்கத்தில் இருந்து அவர் விலகி நிற்கவில்லை. இண்டிஃபதா என்பது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பாலத்தீன போராட்டங்களைக் குறிப்பிடும் சொற்றொடர்.இது தொடர்பாகப் பேசிய அவர் "இந்த முழக்கம் மனித உரிமைகளுக்கான பாலத்தீன மக்களுடைய போராட்டத்தின் அடையாளம்" என்று கூறினார். "இது சமத்துவத்திற்கான குரல். வன்முறைக்கான குரல் இல்லை" என்று அவர் கருதுகிறார்.

ஆனால் அவரது கருத்தை விமர்சிக்கும் பலரும், "இந்த முழக்கம் சர்வதேச அளவிலான வன்முறைக்கு வழி வகுக்கிறது. இது யூத வாக்காளார்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்புகிறது" என்று குறிப்பிடுகின்றனர்.

தேர்தல் பிரசாரம்

முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் மேயர், நியூயார்க் மேயர் தேர்தல், மீரா நாயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மம்தானி பாலத்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலை விமர்சித்தும் வருகிறார்.

உடை, உணவு, இருப்பிடம், இலவசப் பேருந்து சேவை போன்றவற்றை முன்னிருத்தி ஜோஹ்ரான் தனது பிரசாரத்தை நடத்தி வருகிறார். சாமானியர்களின் குரலாக இருக்க விரும்புவதாக அவர் தொடர்ந்து வாக்குறுதி கொடுத்துள்ளார்.

தம் தேர்தல் பிரசாரத்தின்போது, டிரம்புக்கு வாக்களித்தவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார். பிறகு, "எந்த காரணங்களுக்காக அவர்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரை அதிபராகத் தேர்வு செய்தார்கள்? ஜனநாயகக் கட்சி மக்களின் ஆதரவைப் பெற எத்தகைய மாற்றங்களை அடைய வேண்டும்?" என்ற கேள்வியையும் எழுப்பினார்.

  • இலவசப் பேருந்து சேவை
  • அனைத்து குழந்தைகளுக்குமான பாதுகாப்பு
  • முனிசிபல் கார்ப்பரேஷனால் நடத்தப்படும் கடைகள்
  • மலிவு விலை வீடுகள்

இதன் அடிப்படையில் அவர் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்து வருகிறார். பிபிசியிடம் பேசும்போது, மம்தானி, "இந்த நகரத்தில் நான்கில் ஒருவர் என்ற அளவில் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். ஐந்து லட்சம் குழந்தைகள் தினமும் இரவு பசியோடு உறங்குகின்றனர்," என்று தெரிவித்தார்.

"இந்த நகரைச் சிறப்பாக மாற்றும் அடையாளத்தை இந்த நகரம் இழந்து வரும் அபாயத்தில் உள்ளது," என்று அவர் கூறினார். அவரது பிரசாரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ - கோர்டெஸ் மற்றும் செனெட்டர் பெர்னி ஸாண்டர்ஸ் ஆதரவளித்தனர்.

நியூயார்க் மேயர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

நியூயார்க் நகரின் மேயருக்கான பதவிக்காலம் நான்கு ஆண்டுகள். ஒருவர் இரு முறை (தொடர்ச்சியாக) மட்டுமே அந்தப் பதவியை வகிக்க இயலும். அதாவது 8 ஆண்டுகள் மட்டுமே.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினர் முதலில் தங்களுக்கான மேயர் வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள். அதற்காக நடைபெறுவதுதான் முதன்மைத் தேர்தல். கட்சியில் பதிவு செய்த உறுப்பினர்கள் இந்த வேட்பாளர் தேர்வில் வாக்களிப்பார்கள்.

தரநிலை வாக்களிப்பு (ranked-choice voting) முறையை நியூயார்க் பின்பற்றுகிறது. வாக்காளார்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 1 முதல் 5 ரேங்க் வரை வாக்களிக்க இயலும். 50% வாக்குகளை ஒருவர் பெற்றால் மட்டுமே வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற முடியும். இல்லையெனில் ஒவ்வொரு சுற்றுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மேயர் தேர்தலில் பங்கேற்பார்கள். அது பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும். பதிவு செய்த வாக்காளர்கள் அனைவரும் அந்தத் தேர்தலில் வாக்களிக்க இயலும்.

அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் நியூயார்க் நகரின் மேயராக பதவி ஏற்பார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு