ஓரியானிட் விண்கல் பொழிவை எப்போது, எங்கே பார்க்கலாம்?

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், VCG via Getty Images

ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

"ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது.

இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images

ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன?

ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும்.

ஓரியன் விண்மீன் குழுமத்திலிருந்து விழுவதைப் போல தெரிவதால், அதன் பெயரிலேயே இவை அழைக்கப்படுகின்றன.

ஹாலி வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் நிறைந்த பாதையை பூமி கடக்கும் போது ஓரியானிட் விண்கல் மழை ஏற்படுகிறது . இந்த தூசி மற்றும் சிறு கற்கள் வினாடிக்கு சுமார் 41 மைல்கள் (66 கிலோமீட்டர்) வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன.

இந்த ஹாலி வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. பூமிக்கு அருகே வரும் நிகழ்வு 2061-ம் ஆண்டு கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் காற்றுடன் உராயும்போது இவை ஆவியாகி, நமது கண்களுக்கு தென்படுகிற ஒளிக்கீற்றுகளைஉருவாக்குகின்றன. இவை வானில் சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அவை மங்கலாகத் தோன்றலாம், ஆனால் தனித்துவமான ஒளிப் பாதையை விட்டுச் செல்கின்றன.

பெரிய விண்கற்கள் பிரகாசமான பாதைகளை உருவாக்கும். சில நேரங்களில் விண்கற்கள் வீனஸ் கோளை விட பிரகாசமாக தோன்றலாம் - இவை ஃபயர்பால்கள் (fireball) என்று அழைக்கப்படுகின்றன.

ஹாலியின் தூசி மற்றும் சிறு கற்களால் உருவாக்கப்படும் இரண்டு விண்கல் மழைகளில் ஓரியானிட்ஸ் ஒன்றாகும். மற்றொன்று ஈட்டா அகுவாரிட்ஸ் விண்கல் மழை ஆகும். இது ஆண்டின் முற்பகுதியில், மே மாதத்தில் தோன்றும்.

ஓரியானிட்ஸ் எங்கே, எவ்வளவு தெரியும்?

ரேடியன்ட் என்பது வானில் விண்கற்கள் தோன்றுவதாகத் தெரியும் புள்ளி. ஓரியானிட்ஸுக்கு இது ஓரியன் விண்மீன் குழுமமாகும்.

ஓரியன் நள்ளிரவுக்குப் பிறகு கிழக்கில் உதிக்கிறது, இது சிவப்பு நிற பீட்டல்ஜியூஸ் நட்சத்திரத்திற்கு அருகே தோன்றும்.

ஓரியனைக் கண்டுபிடிக்க, ஓரியன்ஸ் பெல்ட் என்று அழைக்கப்படும், நெருக்கமாக அமைந்த மூன்று பிரகாசமான நட்சத்திரங்களின் வரிசையைத் தேடுங்கள்.

காட்சியின் தரம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எத்தனை விண்கற்கள் தெரியும் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது - இது ஜெனித்தல் மணிநேர விகிதம் (zenithal hourly rate) என்று அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 22 அன்று ஓரியானிட்ஸின் உச்சத்தின்போது மணிக்கு சுமார் 15 விண்கற்கள் 148,000 மைல் (238,000 கிமீ/மணி) வேகத்தில் பயணிக்கலாம்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், VCG via Getty Images

ஓரியானிட் விண்கல் மழையை எப்போது காண முடியும்?

ஓரியானிட்ஸ் விண்கல் மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடும். நாசாவின் கூற்றுப்படி, விண்கற்களைக் காண சிறந்த வாய்ப்பு அக்டோபர் 22 இரவு, அக்டோபர் 23 அதிகாலை வரை ஆகும்.

இரவு வானில் பிரகாசமான நட்சத்திரங்களின் பின்னணியில் இதைப் பார்க்க முடியும்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், CFOTO

ஓரியானிட் விண்கல் மழையை எப்படிப் பார்ப்பது?

நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், முடிந்தவரை குறைந்த ஒளி கொண்ட இருண்ட இடத்தைக் கண்டுபிடிப்பது.

நகரங்கள் மற்றும் தெரு விளக்குகளிலிருந்து விலகிய பகுதியைக் கண்டுபிடிக்கும்படி நாசா அறிவுறுத்துகிறது - மேலும் வானிலைக்கு ஏற்பவும் சரியான இடம் வேண்டும்.

"இருளில் 30 நிமிடங்களுக்குள், உங்கள் கண்கள் பழகிவிடும், நீங்கள் விண்கற்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று நாசா கூறுகிறது.

பின்னர், நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால் தென்கிழக்கு வானத்தையும், தெற்கு அரைக்கோளத்தில் இருந்தால் வடகிழக்கு வானத்தையும் பாருங்கள். இந்தியா தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.

இந்த விண்கல் பொழிவை பார்க்க தொலைநோக்கி தேவையில்லை - சூழ்நிலைகள் சரியாக இருந்தால், வெறும் கண்களால் பார்க்க முடியும்.

தீபாவளிப் பட்டாசுகள் அலங்கரித்த வானத்தை, விரைவில் ஓரியானிட்ஸ் ஆண்டு காட்சியின் உச்சம் அலங்கரிக்க உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வானம் தெளிவாக இருக்குமா?

வானில் அதிகமாக மேகங்கள் இருக்கும் போதும், மழைப்பொழி காலத்திலும் விண்கல் பொழிவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்.

மூடுபனி, பிரகாசமான கால நிலைகளுடன் இந்த விண்கல் பார்ப்பது சிரமமாகும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.