இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதுவது பற்றி பாகிஸ்தான் வீரர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அபிஜீத் ஸ்ரீவஸ்தவா
- பதவி, பிபிசி இந்திக்காக
பாகிஸ்தான் குறைந்த ரன்கள் எடுத்திருந்தாலும், ஆசியக் கோப்பையின் அரையிறுதியாக பார்க்கப்பட்ட ஆட்டத்தில் வங்கதேசத்தை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆசியக் கோப்பை வரலாற்றில் முதன் முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதுகின்றன.
வங்கதேசத்திற்கு எதிரான 'வாழ்வா சாவா' போட்டியில் ஷாஹீன் ஷா அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் அவர் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றிக்குப் பிறகு, பரிசளிப்பு விழாவில் அப்ரிடியும் கேப்டன் சல்மான் அலி அகாவும் கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாயின.
இறுதிப் போட்டி குறித்து கேட்டபோது, அஃப்ரிடி இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் , "நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து கேப்டன் சல்மான் அலி அகாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, "இறுதிப் போட்டிக்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எந்த அணியையும் வெல்லும் ஆற்றல் எங்களிடம் உள்ளது. நாங்கள் ஒரு வலுவான அணி; ஞாயிற்றுக்கிழமை அதை நிரூபிக்க முயற்சிப்போம்"என்றார்.
இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்
ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெறும் இந்தியா–பாகிஸ்தான் மோதல் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். 41 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில், இரு அணிகளும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை.
ஆசியக் கோப்பையில் இந்தியா மிகச் சிறந்த சாதனை படைத்துள்ளது. இதுவரை எட்டு முறை பட்டத்தை வென்றுள்ளது. அதே நேரம், பாகிஸ்தான் இரண்டு முறை மட்டுமே (2000, 2012) கோப்பையை கைப்பற்றியுள்ளது.
2005-ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை மோத, இரண்டு முறையும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்த ஆசியக் கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தானை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது.
இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நீண்டகாலமாகவே ரசிகர்களை கவர்ந்த ஒன்று. புள்ளிவிவரத்தின்படி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானின் ஆதிக்கம் செலுத்தினாலும், டி20 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளும் மோதிய 15 டி20 போட்டிகளில் இந்தியா 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்தியா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த முறை வெற்றியை நிர்ணயிப்பது, வீரர்களின் தற்போதைய ஃபார்ம் மற்றும் போட்டி நாளில் அவர்கள் வெளிப்படுத்தும் செயல் திறன் தான்.
சூப்பர் ஞாயிறு - இந்தியா பாகிஸ்தான் இறுதிப்போட்டி
சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. ஆனால் அனைவரின் கவனமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா–பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் தான் இருக்கிறது.
இரு அணிகளும் மோதிய இந்தத் தொடரின் முந்தைய போட்டிகளில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான், கோப்பையை வெல்ல கடுமையாக போராடும். அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் இந்தியா முனைப்புடன் விளையாடும்.
பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
நேற்றிரவு பாகிஸ்தான் அணியின் தொடக்கம் மோசமாக அமைந்தது.
49 ரன்களில் ஏற்கனவே 5 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன.
ஆனால் கீழ்வரிசை பேட்ஸ்மேன்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் 37 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து, அணியை 136 ரன்கள் வரை முன்னேற்றினர்.
இலக்கு சிறிது தான், ஆனால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தனர்.
சிக்ஸர்களை விளாசிய அப்ரிடி, பவர்பிளே ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஹாரிஸ் ரவூஃப் அவருக்கு பக்க பலமாக இருந்து, முதல் ஆறு ஓவர்களில் மூன்று வங்கதேச வீரர்களை வெளியேற்றினார்.
வங்கதேசம் 1 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. 44 ரன்களில் நான்கு விக்கெட்டுகள் சரிந்தன. அதன்பின் சுழற்பந்து வீச்சாளர்கள் அழுத்தத்தை அதிகரித்தனர்.
மிடில் ஆர்டர் வீரர்கள் தொடர்ந்து தோல்வியடைந்தனர். 17வது ஓவரில் ஷமிம் ஹொசைன் அவுட் ஆன பிறகு, வங்கதேச அணி முற்றிலும் சரிந்தது.
20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுத்த வங்கதேசம் தோல்வியடைந்து, பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வங்கதேசம் எங்கே தவறு செய்தது?
வங்கதேசத்தின் தோல்விக்கு அவர்களின் மோசமான பீல்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. மூன்று எளிய கேட்சுகளை அந்த அணி தவறவிட்டது.
பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 51 ரன்களில் எடுத்திருந்தபோது, நூருல் ஹசனும் மெஹ்தி ஹசனும் ஷாஹீன் ஷா அப்ரிடியின் கேட்சை விட்டுவிட்டனர். அதன்பின் அப்ரிடி 19 ரன்கள் எடுத்தார்.
அப்ரிடி அவுட்டானதும், முகமது நவாஸின் கேட்சும் தவற விடப்பட்டது. அப்போது பூஜ்ஜியத்தில் இருந்த அவர், பின்னர் 25 ரன்கள் சேர்த்தார்.
போட்டிக்குப் பிறகு, வங்கதேச பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், 'எளிய கேட்சுகளை விட்டுவிட்டதாலும், தவறான ஷாட்களை அடித்ததாலும் தங்களால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியவில்லை' என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












