ராம்லீலா நடத்தும் இஸ்லாமிய குடும்பம் - உத்தரபிரதேசத்தில் 158 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

பட மூலாதாரம், Aman
- எழுதியவர், அமன்
- பதவி, பிபிசி இந்திக்காக
உத்திர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இன்ஹானா. அங்குள்ள தன்னுடைய பிரம்மாண்ட வெள்ளை மற்றும் சிவப்பு மேன்ஷனின் மன்றத்தில் வெள்ளை குர்தா அணிந்து நமாஸ் செய்துகொண்டிருந்தார் 45 வயது மொஹம்மது ஷுஜா. அவரது மேன்ஷனிலிருந்து 50 மீட்டர் தள்ளியுள்ள 25 ஏக்கர் நிலத்தில்தான் தசரா கண்காட்சி நடத்தப்படுகிறது.
சௌத்ரி ஷுஜா ஒரு வங்கி அலுவலர். ஆனால், இங்கு அவருடைய பங்களிப்பு சற்று வித்தியாசமானது. இந்த தசரா கண்காட்சியை நடத்துவதே அவர்தான்.
இந்த பாரம்பரியத்தைத் தொடங்கிவைத்தவர் சௌத்ரி ஷுஜாவின் கொள்ளு தாத்தா சௌத்ரி அக்பர் ஹுசைன். அவர் 1867-ஆம் ஆண்டு தொடங்கியது இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது இந்த தசாரா கண்காட்சியையும் ராம்லீலாவையும் (ராம நாடகம்) நடத்தும் பொறுப்பு சௌத்ரி மொஹம்மது ஷுஜா மற்றும் அவர் குடும்பத்தினரிடம் இருக்கிறது.
இதுபற்றிப் பேசிய மொஹம்மது ஷுஜா, "நாங்கள் 158 ஆண்டுகளாக தசாரா நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆறாவது தலைமுறையாக இதைத் தொடர்கிறோம். நபியை எந்த அளவுக்கு மதிக்கிறோமோ அதே அளவு ராமர் மீதும் மரியாதை வைத்திருக்கிறோம். அவர் எங்களுக்கும் நல்வழி காட்டியிருக்கிறார். அதனால் அவருக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். எப்படிப்பட்ட வேலை வந்தாலும், ராம்லீலாவையும் கண்காட்சியையும் எங்கள் இடத்தில் நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்கிவிடுவோம்" என்று கூறினார்.
ஷுஜாவின் மனைவி நிதா அமினாவும் இதைப் பெருமையாகவே கருதுகிறார். "இப்படியொரு விஷயம் வேறு எங்கும் நடக்காது என்று நினைக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை இது மதிப்பு மிக்க ஒரு விஷயம். இதை எங்கள் பண்டிகையாகவே கொண்டாடுகிறோம். அதுமட்டுமல்லாமல் ஹோலியும் எங்கள் வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது. பண்டிதர் வந்து நல்ல நேரம் பார்த்த பின், வண்ணங்கள் பூசும் விளையாட்டு இங்குதான் தொடங்கும். அதன்பின்னரே கிராமம் முழுவதும் விளையாடத் தொடங்குவார்கள்" என்று கூறினார் நிதா.
'தசரா முடிந்து 10 நாள் கழித்து ராம்லீலா'

பட மூலாதாரம், Aman
சௌத்ரி குடும்பத்தைச் சேர்ந்த, சௌத்ரி ஃபவாத் ஹுசைன் முந்தைய நாள்களை நினைவுகூர்ந்தார். "நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, ராமர், சீதை, லட்சுமணன் எல்லோரும் இங்கே மேன்ஷனிலேயே தயாராவார்கள். ராவணன் மேளதாளங்களுக்கு நடுவே முன்னால் செல்ல, ராமரும் சீதையும் மூன்று-நான்கு யானைகளில் வருவார்கள். இது ராமசந்திர மூர்த்தியின் வெற்றியைக் கொண்டாடும் பண்டிகை. அவர் இந்தியாவின் அரசன். அத்தனை ஹிந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமே அரசன். அதனால் இது அனைவருக்குமான பண்டிகை தான். இது நம் கலாசாரம், நம் வரலாறு" என்று கூறினார் அவர்.
தசராவும் ராம்லீலாவும் நாடு முழுவதும் நடத்தப்பட்டாலும் இன்ஹானாவில் நடக்கும் ராம்லீலா ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இங்கு ராம்லீலாவைப் பார்க்க இஸ்லாமியர்கள் பெருமளவு வருகிறார்கள்.

பட மூலாதாரம், Chaudhary Mohammad Shuja
தசரா முடிந்து பத்து நாள்கள் கழித்து இந்த ராம்லீலா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்வு அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடந்தது. இதைக் காண சுற்றுப்புற ஊர்களில் இருந்து கிட்டத்தட்ட 25,000 மக்கள் வந்ததிருந்தனர்.
இந்த நாள்களில் சுமார் ஆயிரம் கடைகள் போடப்படும் என்பதே இந்த பண்டிகை மக்களிடையே பெற்றிருக்கும் வரவேற்பை உணர்த்திவிடும். இந்தக் கடைகளில் குளிர்பானங்கள் முதல் களிமண் பொம்மைகள் வரை அனைத்தும் விற்கப்படுகின்றன.
உத்திர பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரம் தான் இன்ஹானா. மொத்தம் 25,000 பேர் வாழும் அந்த ஊரில் 40% இஸ்லாமியர்கள் தான். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த 158 ஆண்டுகால வரலாற்றில் தசரா கண்காட்சிக்கோ, ராம்லீலாவுக்கோ இங்கு எவ்வித எதிர்ப்பும் எழுந்ததில்லை.
இஸ்லாமிய சமூகத்துடனான கூட்டணி

பட மூலாதாரம், AMAN
அக்டோபர் 12-ஆம் தேதி கண்காட்சி நடக்கும் இடத்தில் மக்கள் பெரும் கூட்டமாகக் கூடினார்கள். ராமாயணத்தின் சுந்தரகாண்டம் காட்சியை கலைஞர்கள் அரங்கேற்றினர். அதில், ஹனுமன் இலங்கைக்கு வருவதும், இலங்கை பற்றி எரிவதும் காட்சிகளாக விரிந்துகொண்டிருந்தன. அங்கே அந்த மைதானத்தின் மையத்தில் 40 அடி உயரத்தில் நின்றிருந்த ராவணனின் உருவ பொம்மைக்கு ராமரும், லட்சுமணனும் நெருப்பிட்டனர்.
நிறைய இஸ்லாமிய குடும்பங்களோடு சௌத்ரி மொஹம்மது ஷுஜாவும் அங்கே இருந்தார். அந்த இடத்தில் புர்கா அணிந்த பல பெண்களும் இருந்தனர். அனைவருமே ராம்லீலா நிகழ்வை புகைப்படம், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த 40 அடி உயர ராவணனின் உருவ பொம்மையும் சௌத்ரி மொஹம்மது ஷுஜாவின் வீட்டில் தான் தயார் செய்யப்பட்டது.
"ராம்லீலாவுக்கான முன்னேற்பாடுகள் பல நாள்கள் முன்பே தொடங்கிவிடும். முதலில், ராவணனை மேன்ஷனில் உருவாக்கத் தொடங்குவோம். ராவணனை அலங்கரிப்பதற்கான பேப்பர்களை கொண்டுவருவதாகட்டும், அலங்காரங்கள் செய்வதாகட்டும், உடைகளை தயார் செய்வதாகட்டும், நாங்கள் அனைத்தையும் செய்வோம்" என்று கூறினார் நிதா.
இங்கு ராம்லீலாவை அரங்கேற்றுவது கலைஞர்களுக்குமே ஒரு தனித்துவமான அனுபவம். அதன் இயக்குநரான இந்திராசென் மௌர்யா பேசுகையில், "இஸ்லாமியராக இருந்தாலும் இந்த தசராவை சௌத்ரி ஐயா ஆடம்பரமாகவும் விமர்சையாகவும் கொண்டாடுவது குறிப்பிடத்தக்க விஷயம். முன்பு இங்கு இஸ்லாமிய கலைஞர்களுமே ராம்லீலா நாடகங்களில் பங்கெடுத்திருந்தனர். இதில் இன்னும் சிறப்பு என்னவெனில் இந்த நிகழ்வைக் கண்டுகளிக்க பெருமளவு இஸ்லாமியர்கள் வருகிறார்கள்" என்று கூறினார்.
இன்ஹானாவின் இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்த 65 வயது ஶ்ரீகோபால் குப்தா, "நாங்கள் இந்தக் கண்காட்சிக்கு சிறு வயது முதலே வந்துகொண்டிருக்கிறோம். இன்று ஜாதி மற்றும் மதத்தைக் காரணமாகக் கொண்டு இந்த நாடு பிரிந்துகிடக்கும் நிலையில் கங்கை - யமுனை கலாசாரத்தின் ஒரு பெரும் உதாரணமாக சௌத்ரி குடும்பம் விளங்குகிறது" என்று நெகிழ்ந்து பேசினார்.
அதேசமயம் 50 வயதான விநய் குமார் சரோஜ் பேசுகையில், "சிறுவயதில் எனக்கு இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் புரியவில்லை. ஆனால் இப்போது இச்சமூகத்தில் நிலவும் பிளவு, அதனால் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தையெல்லாம் பார்க்கும்போது, இந்தக் கண்காட்சி எவ்வளவு முக்கியம் என்று புரிகிறது" எனக் கூறினார்.
இதை நிதாவும் ஏற்றுக்கொள்கிறார். "வகுப்புவாதமும், பிரிவினைவாதமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்தச் சூழலில், இந்த கண்காட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கான பொறுப்பு எங்களுக்கு இன்னும் அதிகரித்திருப்பதாக நாங்கள் உணர்கிறோம்" என்று அவர் கூறினார்.
சமூகத்திற்கான புதிய ஒளி

பட மூலாதாரம், AMAN
இந்த கொண்டாட்டத்திற்குத் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த மொஹம்மது ஷுஜா, "இந்த 150 ஆண்டுகளில் நாங்கள் ஏன் இந்நிகழ்வை நடத்துகிறோம் என்று யாரும் எதிர்ப்பும் தெரிவித்ததில்லை" என்று கூறினார்
கடந்த 50 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துகொண்டிருப்பவரான மொஹம்மது ஷமிம், "நம்முடைய சௌத்ரி அக்தர் ஹுசைன் ஐயா ராமாயண பாடல்களை (நான்கு வரிப் பாடல்கள்) முழுமையாகப் படித்து ராம்லீலாவை வழிநடத்துவார். இங்கு ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வேறுபாடுகளே இருந்ததில்லை. தொழுகை முடிந்த பிறகு மசூதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் வாசனைத் திரவியங்களோடு காத்திருப்பார்கள். பிரார்த்தனை முடிந்த பிறகு அனைவரையும் கட்டித் தழுவி, அந்த வாசனைத் திரவியங்களையும் இடுவார்கள்" என்று பழைய நாள்களை நினைவுகூர்ந்தார்.

சௌத்ரி குடும்பம் ராம்லீலாவை நடத்துவதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து கற்றும் கொள்கிறார்கள். "எங்களைப் பொறுத்தவரை ராமர் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறார். அவரோடு ஹனுமானையும் அந்த நிலையில் தான் வைத்திருக்கிறோம். நம் மதிப்பிற்கு உரியவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கான உதாரணமாக அவர் திகழ்கிறார்" என்று கூறினார் சௌத்ரி ஷுஜா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












