ரூ.1 லட்சம் கடன் ரூ.50 லட்சமானது: சிறுநீரகத்தை விற்ற விவசாயி - சென்னை மருத்துவருக்கு தொடர்பா?

- எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்
- பதவி, பிபிசி மராத்திக்காக
மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் இருந்து மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. கடன் சுமை காரணமாக விவசாயி ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார்.
அந்த விவசாயியின் பெயர் ரோஷன் குலே. 36 வயதான ரோஷன், மின்பூர் கிராமத்தைச் (நாக்பிட் தாலுகா) சேர்ந்தவர்.
கடன் கொடுத்தவர்கள் தன்னை மிகவும் துன்புறுத்தியதால், வேறு வழியின்றி கம்போடியா நாட்டிற்குச் சென்று தனது சிறுநீரகத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ரோஷன் கூறுகிறார்.
அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அங்கு போலீசார் இருந்தனர். நாங்கள் ரோஷனிடம் பேச முயன்றோம், ஆனால் போலீசார் விசாரணை நடத்தி வருவதால் தான் எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறி பேச மறுத்துவிட்டார்.
இருப்பினும், அவரது தந்தை சிவதாஸ் குலே, கடன் கொடுத்தவர்கள் கொடுத்த அழுத்தம் மற்றும் அவர்கள் செய்த சுரண்டல் குறித்துத் தெரிவித்தார்.
வட்டிக்கு கடன் கொடுப்பவர்களின் கும்பலில் சிக்கிக் கொண்ட விவசாயி

பட மூலாதாரம், ANI
பிபிசி மராத்தியிடம் பேசிய ஷிவ்தாஸ் குலே, "என் மகன் பால் வியாபாரம் செய்து வந்தார், ஆனால் கோவிட் காலத்தில் அது முடங்கியது. பின்னர், 2021-ல் நீண்ட கால நோய் பாதிப்பால் எங்கள் பசுக்களில் ஆறு பசுக்கள் இறந்துவிட்டன. அவற்றின் சிகிச்சைக்காக, வட்டிக்கு பணம் கொடுக்கும் இரண்டு நபர்களிடம் இருந்து தலா 50,000 ரூபாய் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம்"என்று கூறினார்.
"அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த, கடன் வழங்கும் மற்றொரு நபரிடம் இருந்து கடன் வாங்க வேண்டியதாயிற்று. பிரம்மாபுரியில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று உள்ளது. முந்தைய கடனை அடைக்க, கடன் பெற்ற நபரை, கடன் வழங்கும் மற்றொரு நபரிடம் பணம் வாங்க இவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது மற்றும் அடிப்பதாக மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பிசினஸ் கரஸ்பாண்டண்டாக ரோஷன் பணிபுரிந்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் அங்கேயும் சென்று கடனைத் திருப்பித் தருமாறு அவரை அவமானப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக ரோஷன் தனது வேலையை ராஜினாமா செய்ததாக அவரது தந்தை கூறுகிறார்.
முதல் தகவல் அறிக்கையின் (FIR) படி, ஒரு லட்சம் ரூபாய் கடன், வட்டியோடு சேர்த்து 50 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனைத் திருப்பிச் செலுத்த அந்த விவசாயி தனது நிலத்தை விற்றதுடன், முக்கால் ஏக்கர் நிலத்தை வட்டிக்கு பணம் கொடுத்தவருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். அவரது வீட்டில் இருந்த 6 சவரன் தங்கமும் விற்கப்பட்டது.
இவ்வளவு செய்த பிறகும் கடன் தீரவில்லை. இறுதியில், ரோஷன் தனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தார்.
அவர் கம்போடியா நாட்டிற்குச் சென்று தனது சிறுநீரகத்தை 8 லட்சம் ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படுகிறது.
ரோஷன் இது குறித்துக் கூறுகையில், "வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள், உனது சிறுநீரகத்தை விற்றாவது பணத்தைக் கொடு என்று என்னிடம் கூறினார்கள். அதனால் தான் நான் என் சிறுநீரகத்தை விற்றேன்," என்று குற்றம் சாட்டியுள்ளார்.
விற்கப்பட்ட இடது சிறுநீரகம்

பட மூலாதாரம், ANI
இந்த விவகாரத்தில் தற்போது மணிஷ் புருஷோத்தம் காட்பந்தே, கிஷோர் ராம்பாவ் பாவன்குலே, லட்சுமண் பண்டிட் உர்குடே, பிரதீப் ராம்பாவ் பாவன்குலே, சஞ்சய் வித்தோபா பல்லார்புரே மற்றும் சத்யவான் ராம்ரத்தன் போர்க்கர் ஆகிய வட்டிக்கு கடன் வழங்கும் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது சட்ட விரோதமாக கடன் கொடுத்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வட்டிக்கு பணம் கொடுத்தவர்களுக்கும் விவசாயிக்கும் இடையே நடந்த நிதிப் பரிமாற்றங்களுக்கான ஆதாரங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரம்மாபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 20 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த வீடியோ பேட்டியில், கடன் சுமை காரணமாகவே தனது சிறுநீரகத்தை ரோஷன் விற்றுவிட்டதாகக் கூறுவதைக் காணலாம்.
கடந்த நான்கு மாதங்களாக நீதி கேட்டு வருவதாகவும், யாரும் தனது புகாரைப் பதிவு செய்யத் தயாராக இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
"எனக்குப் பணம் திரும்ப வேண்டும்" என்பது மட்டும் தான் அவர் முன்வைக்கும் ஒரே ஒரு கோரிக்கையாக உள்ளது.
"புகார் பதிவு செய்யப்படுவதை நாங்கள் உறுதிசெய்தோம், இப்போது விசாரணை நடந்து வருகிறது" என்று சந்திரபூர் காவல் கண்காணிப்பாளர் மும்கா சுதர்சன் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டது உண்மையானது தானா என்பதை உறுதிப்படுத்த, டிசம்பர் 17 புதன்கிழமை ரோஷன் குலேவுக்கு போலீசார் மருத்துவப் பரிசோதனை நடத்தினர்.
அந்த மருத்துவ அறிக்கையில், ரோஷனின் இடது சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியவந்தது.
சென்னை மருத்துவருக்கு தொடர்பா?

சிறுநீரகத்தை விற்ற விவசாயி, சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் பெயரைத் தெரிவித்துள்ளார். அந்த மருத்துவர் தனது சிறுநீரகத்தை விற்க உதவியதாகவும், தன்னுடன் கம்போடியா வரை வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் எனக் கூறுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் சுதர்சன்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அந்த மருத்துவருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் இப்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடன் கொடுத்தவர்களின் கடனை அடைப்பதற்காக மட்டுமே சிறுநீரகம் விற்கப்பட்டதா அல்லது ஏதேனும் தனிப்பட்ட காரணத்திற்காக விற்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் எஸ்பி கூறினார். இதற்கு கடன் கொடுத்தவர்கள் நேரடியாகக் காரணமா? என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

"இது ஏதேனும் 'சிறுநீரகக் கடத்தல் கும்பல்' மூலம் நடந்ததா? அந்த கும்பல் வழியாக இந்த விற்பனை நடைபெற்றதா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவரான சஞ்சய் பல்லார்புரேவின் மனைவி சப்னா பல்லார்புரேவை பிபிசி மராத்தி சந்தித்தது.
"எனது கணவர் ஒரு மதுபானக் கடை வைத்துள்ளார். உதவி என்று கேட்பவர்களுக்கு அவர் பணம் கொடுப்பார், ஆனால் வட்டிக்கு அல்ல. ரோஷன் என்பவருக்கு அவர் எந்தப் பணமும் கொடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் எனது கணவரின் கடையில் அமர்ந்திருப்பது வழக்கம், அந்த காரணத்திற்காகவே எனது கணவரின் பெயர் இதில் தவறாக இணைக்கப்பட்டுள்ளது" என்று சப்னா பல்லார்புரே கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள பிபிசி முயன்றது, ஆனால் அவர்களிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. அவர்களின் பதில் கிடைக்கும் பட்சத்தில் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












