கரண் தாபர் தொடர்பாக போலி செய்தி: பிபிசி விளக்கம் - என்ன நடந்தது?

கரண் தாபர் போலி செய்தி

"இது பிபிசி செய்தி அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறோம். நம்பகமான ஆதாரங்கள் மூலம் செய்திகள் பெறுவதை உறுதிசெய்ய, இணைப்புகள் மற்றும் URL-ஐ சரிபார்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்."

சர்ச்சைக்குரிய இணையப் பக்கம் தொடர்பாக பிபிசி செய்தித் தொடர்பாளர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த வலைப்பக்கத்தில், மூத்த பத்திரிகையாளர் கரண் தாபர் பணம் சம்பாதிக்கும் திட்டத்தை விளம்பரப்படுத்துவதைப் போல காட்டுவதாக கூறப்படுகிறது.

கரண் தாபர் இந்த இணையதளம் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கை அளித்ததுடன், போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

இதை 'பொய் மற்றும் போலி செய்தி' என்று கூறியுள்ள கரண் தாபர், "இந்த அவதூறான மற்றும் தீங்கிழைக்கக் கூடிய பதிவு வலைப்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது" என்று போலீசில் அளித்த புகாரில் கூறியிருக்கிறார்.

அந்த இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தாம் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை என்றும் கரண் தாபர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிபிசி இந்தியா மற்றும் சன் டிவியின் பெயரைப் பயன்படுத்தி என்னைப் பற்றிய தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான செய்திகள் போலியான இணையப் பக்கத்திலும், ஃபேஸ்புக் பதிவிலும் பகிரப்படுவதாக எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மூலம் எனக்குத் தெரிய வந்தது." என்று குறிப்பிட்டுள்ளார்.

கரண் தாபர் போலி செய்தி

அவர் மேலும் "எனக்கும் சன் டிவியின் பூஜிதா தேவராஜுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடலை விவரிக்கும் octequiti.com வெப்சைட்டின் இணையப் பக்கம் 'ஒன் கிளிக் பந்தயம்' என்ற தலைப்புடன் பணம் சம்பாதிக்கும் மோசடி இணையதளமாக விளம்பரப்படுத்தப்படுகிறது." என்று கூறுகிறார்.

"சமூக ஊடகங்களில் பகிரப்படும் இழிவான மற்றும் தீங்கிழைக்கக் கூடிய அந்த தகவல் தவறானது மற்றும் போலியானது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், இதற்கான எனது பதிலில் சரியான உண்மைகளை பொதுமக்கள் முன் முன்வைப்பது முக்கியம் என்று கருதுகிறேன். பொய்யான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட இந்த அவதூறு தகவலை முதலில் மறுக்கிறேன். பொதுமக்கள் இதை நம்பவேண்டாம்" என்று கரண் தாபர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கரண் தாபர், "இந்த செய்தி குறித்து நான் ஏற்கனவே பேஸ்புக்கில் புகார் செய்துள்ளேன். இதுகுறித்து பிபிசி இந்தியா மற்றும் சன் டிவிக்கும் தெரிவித்துள்ளேன். மேலும் அதை அகற்ற உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்" என்றார் அவர்.

தன்னை தொடர்புபடுத்தி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள செய்தியின் உண்மைத்தன்மையை சரிபார்த்துக் கொண்ட பிறகே எந்தவொரு செயலிலும் இறங்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

தி வயர் என்ற பிரபலமான நிகழ்ச்சியை கரண் தாபர் தொகுத்து வழங்குகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)