அகதா கிறிஸ்டியின் உலகம் போற்றும் கிரைம் நாவலுக்கு கருவாக அமைந்த 'இந்திய வழக்கு' எது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செரிலன் மோலன்
- பதவி, பிபிசி நியூஸ், மும்பை
குடும்ப சண்டையை விட சில விஷயங்கள் மிகவும் பிறரைக் கவரக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக அந்தச் சண்டையில் சம்பந்தப்பட்டவர்கள் உங்களுடைய உறவினர்கள் அல்ல, மற்றும் அந்தச் சண்டையின் நோக்கம் கொலைச் சதி என்ற நிலை ஏற்படும் போது அது அனைவரையும் கவரக் கூடியதாக இருக்கிறது.
"கிரைம் நாவல்களின் ராணி" என்று அழைக்கப்படும் அகதா கிறிஸ்டி, இதைப் பற்றி அதிகம் அறிந்திருந்தார். அவரது முதல் நாவலான ‘தி மிஸ்டீரியஸ் அஃபேர் அட் ஸ்டைல்ஸ்’, குடும்பச் சண்டையில் இருந்து பிறந்த ஒரு புதிரான கொலைக் கதை ஒன்றைத் தெளிவாக விளக்குகிறது.
1920 இல் வெளியிடப்பட்ட, ஹூடுன்னிட், எமிலி இங்க்லெதோர்ப் என்ற பணக்கார பெண்ணின் கொலையை மையமாகக் கொண்டது அந்தக் கதை. அவரது இரண்டாவது கணவர் - அவரை விட 20 வயது இளையவர் - அவரது நண்பரும் நம்பிக்கையாளருமான ஈவ்லின் ஹோவர்ட் உட்பட முழு இங்க்லெதோர்ப் குடும்பத்தாலும் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது.
அந்தப் புத்தகம் கிறிஸ்டியின் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது - விசித்திரமான துப்பறியும் நபர், ஹெர்குல் போயிரோட் - மற்றும் அவரது அடுத்தடுத்த புத்தகங்களைப் போலவே, பல சந்தேக நபர்கள், அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள், சாதாரண பார்வையில் மறைத்து வைக்கப்பட்ட தடயங்கள் மற்றும் இறுதியில் "பெரிய வெளிப்படுத்துதல்" மூலம் குற்றவாளி எங்கே என்பது தெளிவாக வெளிக்காட்டப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அகதா கிறிஸ்டியின் முதல் நாவலுக்கு கருவாக அமைந்த இந்திய வழக்கு
இந்த நாவல் வட இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான மலைப்பகுதியான முசோரியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்த நிஜ வாழ்க்கை கொலைச் சம்பவத்தால் ஈர்க்கப்பட்டதாக பரவலாக கருதப்படுகிறது.
செப்டம்பர் 1911 இல், பிரான்சிஸ் 49 வயதான கார்னெட் ஓர்மே, ஐரிஷ் பாரிஸ்டரால் கட்டப்பட்ட ஒரு உயர்மட்ட ஹோட்டலான சேவாய் (Savoy) இல் உள்ள அவரது அறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருக்கு ப்ரூசிக் அமிலம் என்ற சயனைடு சார்ந்த விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அவரது தோழியான 36 வயதான ஈவா மவுண்ட் ஸ்டீபன்ஸ், அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
1912 ஆம் ஆண்டில் ஒரு ஆஸ்திரேலிய செய்தித்தாள் குறிப்பிட்டது போல, "அதைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளின் தனித்தன்மை" காரணமாக இந்த வழக்கு உலகளாவிய தலைப்புச் செய்தியாக மாறியது. பிரிட்டிஷ் செய்தித்தாள்கள் 'முசோரி கொலை வழக்கு', 'ஹோட்டல் மர்மம்' போன்ற தலைப்புச் செய்திகளுடன் விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களை வெளியிட்டன.
முசோரியில் வசிக்கும் இந்திய எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், அமைதியான மற்றும் பசுமையான இந்த மலை நகரத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்த புகழ் பெற்ற கொலைக்கும் கிறிஸ்டியின் முதல் புத்தகத்திற்கும் இடையிலான தொடர்பை தனது கட்டுரை ஒன்றில் வரைந்துள்ளார். கிறிஸ்டி தனது புத்தகத்தில் "குற்றத்தின் சூழ்நிலைகளைப் பயன்படுத்தினார்" என்று அவர் கூறுகிறார். ஏனெனில் அந்த வழக்கு "மிகவும் பரபரப்பான" வழக்காக இருந்தது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஓர்மே இந்தியாவில் வாழ்ந்து வந்ததாகவும், லக்னௌ நகரைச் சேர்ந்த ஆன்மீகவாதியான ஸ்டீபன்ஸை சந்தித்து நட்பாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓர்மே, ஒரு "தனிமையான பெண்". ஸ்டீபன்ஸிடம் இருந்து ‘கிரிஸ்டல் கேசிங்’ மற்றும் பிற அமானுஷ்ய நடைமுறைகளைக் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இரு தோழிகளும் சிறிது காலம் சேவாயில் ஒன்றாக தங்கியிருந்தனர், அப்போது ஸ்டீபன்ஸ் ஓர்மேக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை கவனித்துக்கொண்டதாக கூறினார். ஆனால் ஓர்மே தனது நண்பருக்கு ஏராளமான பணம், மூன்று நெக்லஸ்கள் மற்றும் பிற நகைகளை எழுதி வைத்திருந்ததால், அவற்றை அபகரிப்பதற்காக ஸ்டீபன்ஸ் தான் ஓர்மேவுக்கு விஷம் கொடுத்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.
அதே நேரம், ஓர்மே திருமணம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்த நிலையில், அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பியவர் இறந்ததால் ஓர்மே அனுபவித்த "இடைவிடாத துயரம்" மற்றும் அவரது சொந்த உடல்நலக்குறைவு காரணமாக அவரே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த வழக்கு அதன் பலதரப்பட்ட திருப்பங்களால் காவல்துறை உட்பட பலரை குழப்பியது. ஒன்று, ஓர்மே இறப்பதற்கு முன் ஸ்டீபன்ஸ் லக்னோவுக்குப் புறப்பட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இரண்டாவதாக, ஓர்மேவின் உடல் கண்டெடுக்கப்பட்ட அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.
ஓர்மேவின் அறைக்குள் ஒரு பாட்டில் தூக்க மாத்திரைகள் மற்றும் இரண்டு லேபிள்கள் - ஆர்சனிக் மற்றும் ப்ரூசிக் அமிலம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்த மருந்துகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை.
1900 களின் முற்பகுதியில், மருந்து கடையிலிருந்து மருந்துகளை வாங்க கையெழுத்திட வேண்டியிருந்தது. ஆனால் ப்ருசிக் அமிலத்திற்கான கையொப்பம் ஓர்மேவின் கடிதத்தில் இருந்த கையெழுத்துடன் பொருந்தவில்லை என்று வழக்குத் தொடரப்பட்டது.
ஸ்டீபன்ஸ், ஒரு நண்பருடன் உரையாடிய போது, ஆறு மாதங்களுக்கு முன்பே ஓர்மேவின் மரணத்தைப் பற்றி அவரே பேசியதாகவும், மேலும் ஓர்மே தான் நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு மருத்துவரை திருமணம் செய்து, தன் செல்வம் அனைத்தையும் அவரிடம் விட்டு விடுவது குறித்தும் தெரிவித்ததாகவும் அரசுத் தரப்பு கூறியது.
ஆனால், ஸ்டீபன்ஸ் ஓர்மேவுக்கு "மிகவும் அர்ப்பணிப்புள்ள துணை" என்றும், அவர் தன் நண்பருக்கு விஷத்தை வாங்கி அல்லது கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் பாதுகாப்பு தரப்பு வலியுறுத்தியது.
ஸ்டீபன்ஸ் இறுதியாக விடுவிக்கப்பட்டார். நீதிபதி "ஓர்மேவின் மரணத்தின் உண்மைச் சூழ்நிலைகள் அநேகமாக ஒருபோதும் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை" என்று குறிப்பிட்டார்.
கிறிஸ்டியின் புத்தகம் இந்த குற்றச் சம்பவத்தின் பல தகவல்களை பிரதிபலிக்கிறது. அவருடைய நூலில் உள்ள ஒரு கதாபாத்திரமான எமிலியும் ஓர்மேவைப் போலவே விஷம் காரணமாக இறந்துவிடுகிறார். அவரது உடல், உள்ளே இருந்து பூட்டப்பட்ட ஒரு அறையில் இருந்து மீட்கப்பட்டது. அவருக்கு விஷம் கொடுப்பது அவரது தோழனான ஈவ்லின் என்பது இறுதியில் தெரியவருகிறது - அவர் மாறுவேடத்தில் விஷத்தை வாங்கி, போலி கையெழுத்தைப் பயன்படுத்தி, அவருடைய தோழியைக் கொல்ல பணம் தான் காரணமாக இருந்தது.
எமிலி இறப்பதற்கு முன்பே அவர் இங்க்லெதோர்ப் குடியிருப்பை விட்டு வெளியேறுகிறார். அவர் அதை எப்படி சரியாக செய்தார்? அதற்கு ஹெர்குல் போயிரோட் மட்டுமே பதில் சொல்ல முடியும்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, பல்வேறு வழக்குகளுக்கிடையேயான ஒற்றுமைகள் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. இந்திய க்ரைம் கதை எழுத்தாளர் மஞ்சிரி பிரபு 2022 இல் நடந்த சர்வதேச அகதா கிறிஸ்டி விழாவில் கிறிஸ்டியின் முதல் நாவலுக்கும் முசோரி கொலைக்கும் இடையிலான "சுவாரஸ்யமான தொடர்பை" பற்றி பேசினார் .

பட மூலாதாரம், Getty Images
விஷத்தால் ஏற்படும் மரணங்களில் எழும் மர்மங்கள்
இந்தியாவில் விஷத்தின் மூலம் நேர்ந்த மரணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரே எழுத்தாளர் கிறிஸ்டி மட்டுமல்ல. செசில் வால்ஷ் ஆக்ராவில் நேர்ந்த உணர்வு ரீதியிலான குற்ற வழக்கு குறித்து விவரித்தார். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஆக்ரா மற்றும் அவுத் ஐக்கிய மாகாணங்களின் கீழ் ஒரு பிரதேசம் மற்றும் உலகை அந்த குற்ற வழக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தி ஆக்ரா டபுள் மர்டர்: எ க்ரைம் ஆப் பேஸன் ஃப்ரம் ராஜ் (The Agra Double Murder: A Crime of Passion from the Raj), மீரட் நகரில் வசித்த அகஸ்டா ஃபுல்லம் என்ற ஆங்கிலேயப் பெண்ணும், ஆங்கிலோ-இந்தியரான டாக்டர் கிளார்க்கும் எப்படி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்த வாழ்க்கைத் துணைகளுக்கு விஷம் கொடுக்க சதி செய்தார்கள் என்பதைப் பற்றி எழுதியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் போலவே, 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் விஷம் தொடர்பான வழக்குகள் பொதுவானவை. நச்சுப் பொருட்களின் விற்பனை, குறிப்பாக ஆர்சனிக் விற்பனை எந்தவிதக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. டாக்ஸிக் ஹிஸ்டரிஸ்: பாய்சன் அண்ட் பொல்யூசன் இன் மாடர்ன் இந்தியா (Toxic Histories: Poison and Pollution in Modern India) என்ற தனது புத்தகத்தில், டேவிட் அர்னால்ட், 1904 ஆம் ஆண்டில் விஷங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இந்திய விஷச் சட்டத்தை உருவாக்குவதற்கான "முதன்மை உத்வேகத்தை" ஆர்சனிக் நச்சுகள் எவ்வாறு அளித்தன என்பதைப் பற்றி எழுதுகிறார்.
"10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1914 இல் விஷச் சட்டத்தின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்த அரசு, ஐக்கிய மாகாணங்களில் அரசு சமீபத்திய ஆண்டுகளில் விஷம் கலந்த இரண்டு வழக்குகளைக் குறிப்பிட்டது. ஒன்று ஓர்மே கொலை, மற்றொன்று ஃபுல்லாம். கிளார்க் கேஸ்," என்று அவர் இந்தப் புத்தகத்தில் எழுதுகிறார்.
உண்மையான குற்றம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையாக உள்ளது என்பதுடன் திரைப்படங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் இணைய நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை தொடர்ந்து கவர்கிறது. ஆனால் கிறிஸ்டியின் ரசிகர்களுக்கு, ‘தி மிஸ்டீரியஸ் அஃபேர் அட் ஸ்டைல்ஸ்’ எப்போதும் இந்த கொடூரமான நியதியில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












