காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து இலக்கியங்கள் சொல்வது என்ன?

காசி தமிழ் சங்கமம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் 'விடுதலையின் அமுதப் பெருவிழா'-வின் ஓர் அங்கமாக 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்திய அரசு ஒரு மாத காலம் நடத்துகிறது.

நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை வாரணாசியில் இந்திய கல்வி அமைச்சகம் நடத்தும் இந்த ஒரு மாத கால நிகழ்வு நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

இது தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கு இருக்கும் நீண்டகாலப் பண்பாட்டுத் தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சி என ஒரு தரப்பினரும், மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள், போட்டித் தேர்வுகள், அலுவல்பூர்வ தொடர்பாடல்கள் உள்ளிட்டவற்றில் இந்தியை முன்னிறுத்தும் நரேந்திர மோதி அரசு தமிழை வைத்து பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேச முயற்சிப்பதாக இன்னொரு தரப்பினரும் 'காசி தமிழ் சங்கமம்' குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

காசி மற்றும் பனாரஸ் ஆகிய பெயர்களிலும் பரவலாக அறியப்படும் வாரணாசி நரேந்திர மோதி பிரதிநித்துவப்படுத்தும் மக்களவைத் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல நூற்றாண்டு காலமாகவே காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு வரலாறு, வழிபாடு, பண்பாடு மற்றும் மொழி ரீதியிலான தொடர்புகள் உள்ளன.

அவற்றில் சில முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல்கள் இங்கே.

தலைவி - தோழி உரையாடலில் வாரணாசி

தமிழ் இலக்கியத்தில் காசி வாரணாசி

பட மூலாதாரம், Getty Images

சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் கபிலர் எழுதிய பாடல் ஒன்றில் வாரணாசி பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது.

எட்டுத்தொகை நூல்கள் கி.மு காலகட்டத்தைச் சேர்ந்தவை.

கலித்தொகையில் 60ஆம் பாடலில் தலைவி தன் தோழியிடம் கூறுவது போல பின்வரும் வரிகள் உள்ளன.

''தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு நீ

வாரணவாசிப் பதம் பெயர்த்தல் ஏதில

நீ நின்மேல் கொள்வது எவன்?''

இந்தக் குறிஞ்சித் திணை பாடல் தலைவியும் அவளது தோழியும் தலைவன் குறித்து பேசும் ஒரு காதல் தன்மையுள்ள பாடல்தான். ஆனால், 'வாரணாசி செல்வோர்க்கெல்லாம் முக்தி கிடைப்பதைப் போல' என்று பொருள்படும் வகையிலான ஓர் உவமை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'வாரணவாசி' எனும் இந்தச் சொல் வாரணாசி / காசியைக் குறிக்கிறது.

திருநாவுக்கரசரின் வாரணாசி பயணம்

kasi tamil sangamam tamil literature language

பட மூலாதாரம், Getty Images

நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தமிழ் உலகில் சைவ சமயம் சார்ந்த பக்தி இயக்கத்தை பரப்பிய சிவனடியார்களுள் முக்கியமானவர். சைவர்களின் கடவுளான சிவபெருமானே வாரணாசியில் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார்.

12ஆம் நூற்றாண்டில் சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரிய புராணம் திருநாவுக்கரசரின் வரலாற்றைப் பற்றிக் கூறும்போது காசியை 'வாரணாசி' என்ற பெயரில் குறிப்பிடுகிறது.

அன்ன நாடு கடந்து கங்கை

அணைந்து சென்று வலம் கொளும்

மின்னு வேணியர் வாரணாசி

விருப்பினோடு பணிந்து உடன்

பின் அணைந்தவர் தம்மை அங்கண்

ஒழிந்து கங்கை கடந்து போய்

மன்னு காதல் செய் நாவின்

மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்

''கங்கையாறு வந்து சென்று வலமாக வரும், ஒளி நிறைந்த சடையுடைய சிவ பெருமான் எழுந்தருளிய வாரணாசியை விருப்பத்துடன் வணங்கிவிட்டு, தம்முடன் வந்த அடியவர்களை அவ்விடத்தில் விட்டுவிட்டு, கங்கைக் கரையைக் கடந்து, பொருந்திய காதல் செய்யும் திருநாவுக்கரசர், கல் நிரம்பிய மலைக் கானல்களைக் கடந்தார்,'' என்று திருநாவுக்கரசரின் பயணத்தை இந்தப் பாடல் விவரிக்கிறது.

ganga river kasi varanasi tamil hinduism ritual

பட மூலாதாரம், Getty Images

முருகனைப் போற்றிய திருப்புகழில் 'காசி'

 தமிழ்நாட்டில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ், தமிழ் மொழியில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்களில் மிகவும் முக்கியனவற்றுள் ஒன்று.

‘’கான கக்குற மாதை மேவிய

ஞான சொற்கும ராப ராபர

காசி யிற்பிர தாப மாயுறை

மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்

பங்கப் படமிசை யேபனி போல்மதம்

வந்துட் பெருகிட வேவிதி யானவ’’

என்ற பாடலில் 'காசி' குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்புகழ் முருகக் கடவுளைப் போற்றி எழுதப்பட்ட இலக்கியம். இதில் முருகனின் பிறப்பைப் போற்றும் அருணகிரிநாதர், 'காசியில் முதன்மையாக அமர்ந்திருக்கும் கடவுளும் அவரது மனைவியும்' பெற்றெடுத்த மகன் என்று முருகனைப் பற்றிக் குறிப்பிடும்போது முருகனின் தந்தையாகக் கூறப்படும் சிவன் இருக்கும் ஊராக காசியைக் குறிப்பிட்டுள்ளார்.

காசி - சிவகாசி - தென்காசி: புராணங்கள் சொல்வது என்ன?

இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியிலும் காசி - தமிழ்நாடு தொடர்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பல சிவன் கோவில்களுக்கு 'காசி விஸ்வநாதர் கோவில்' என்ற பெயர் உள்ளதே இதற்கு ஒரு முக்கியச் சான்று. 

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் வாரணாசி நகரை உத்தர காசி என்று சுட்டுகின்றன. 'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். தென்காசி 'தக்ஷிண காசி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'தக்ஷிண்' என்றால் தெற்கு என்று பொருள். 

இந்தக் கோவில் கட்டுமானம் 15ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் பராக்கிரும பாண்டியனால் தொடங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நடக்கும்போதே அம்மன்னன் மரணமடைந்துவிட்டதால் அதற்குப் பின்னர் அரியணை ஏறிய குலசேகர பாண்டியனால் கட்டி முடிக்கப்பட்டது.

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரும பாண்டியன் காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றை எடுத்துவந்து மதுரையில் சிவன் கோவில் கட்ட விரும்பியதாகவும், அதற்காக காசி பயணித்ததாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.

அப்படி வரும் வழியில் அந்த லிங்கத்தை அவர் உறங்குவதற்காக மரத்தடியில் படுத்திருந்த, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்ததாகவும், பிறகு அதை அங்கிருந்து தூக்க முடியாததால், அதை அங்கேயே விட்டுவிட்டு, தென்காசியில் வந்து கோவில் ஒன்றை எழுப்பியதாகவும் சமய நம்பிக்கை ஒன்று உலவுகிறது. அதுவே 'சிவகாசி' என்று ஆனது என்பது புராணங்களில் கூறப்படும் நம்பிக்கையாக உள்ளது.

இந்தப் புராண நம்பிக்கையை அறுதியிட்டுச் சொல்லும் வரலாற்று ஆவணங்கள் போதுமான அளவுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

kasi tamil sangamam narendra modi

பட மூலாதாரம், narendra modi twitter

பத்தாம் நூற்றாண்டு சித்தர் பாடல்

பதினெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் கி.பி. பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்தவர். அவர் எழுதிய பாடல்களின் தொகுப்பான சிவவாக்கியம் எனும் நூலில் காசி குறிப்பிடப்பட்டுள்ளது.

''ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம் வெளியதான சோதிமேனி விசுவநாத னானவன் தெளியுமங்கை யுடனிருந்து செப்புகின்ற தாரகம் வெளிதோர் ராமராம நாமமிந்த நாமமே.''

ஒளி நிறைந்த காசி நகரில் உள்ள விஸ்வநாதன் என்று சிவபெருமானைப் போற்றி சிவவாக்கியர் இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

'சித்தர் வாக்கு; சிவன் வாக்கு' என்றே தமிழில் ஒரு பிரபலமான சொலவடை இருக்கிறது. அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவரே சிவன் குறித்து பாடிய பாடலில் காசியைச் சுட்டியுள்ளார்.

தேவாரத்தில் வாரணாசி

வாரணாசி அப்பர் மற்றும் சுந்தரர் தேவாரத்தில் வைப்புத் தலமாக குறிப்பிடப்பட்டுள்ள தலமாகும். ஒரு குறிப்பிட்ட தலத்தைப் பற்றிப் பாடாமல், பாடல்களுக்கு இடையே சுட்டப்படும் தலங்கள் வைப்புத் தலங்கள் எனப்படுகின்றன.

சம்பந்தரின் 2ஆம் திருமுறையில் 39ஆம் பதிகத்தில் 7-வது பாடலில் காசி பற்றிய குறிப்புள்ளது.

''மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி

காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்

கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திருக் குணவாயில்.''

எனும் பாடல் சிவ பெருமானுக்கு கோவில் உள்ள ஊர்களில் வாரணாசியும் ஒன்று எனக் குறிப்பிடுகிறது.

திருநாவுக்கரசரின் 6ஆம் திருமுறையில் 70ஆம் பதிகத்தில் வாரணாசி பற்றி குறிப்பிடப்படுகிறது. எந்தெந்த ஊர்களில் கயிலாயநாதன் என்று அழைக்கப்படும் சிவபெருமானைக் காணலாம் என்று கூறப்படும் பட்டியலில் தேவாரம் வாரணாசியையும் குறிப்பிடுகிறது. அந்தப் பாடல் கீழ்வருமாறு.

''மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்

வக்கரை மந்தாரம் வாரணாசி

வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி

விளமர் விராடபுரம் வேட்களத்தும்

பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்

பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்

கண்ணை களர் காறை கழிப்பாலையும்

கயிலாய நாதனையே காணலாமே.''

இங்கே தொகுக்கப்பட்டுள்ளவை பரவலாக அறியப்பட்ட சில இலக்கியச் சான்றுகள் மற்றும் புராணத் தகவல்கள் மட்டுமே. வேறு பல இலக்கியங்களில் காசி / வாரணாசி பற்றிய குறிப்புகள் உள்ளன.

காணொளிக் குறிப்பு, ஆஸ்திரேலியாவில் நிலத்துக்கு அடியில் மக்கள் வசிக்கும் நகரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: