உடற்பயிற்சி செய்தால் மூளை பெரிதாகுமா? - மருத்துவர்கள் கூறும் ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பாமினி முருகன்
- பதவி, பிபிசி தமிழ்
உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் சீராக்குவதில் கூட முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நினைவாற்றல், கூர்ந்து கவனித்தல் மற்றும் சிந்தனை திறன் போன்ற மூளையின் செயல்கள் மேம்படும் என்கின்றன அந்த ஆய்வுகள்.
உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
மூளை ஆரோக்கியம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
மூளை ஆரோக்கியம் என்பது அறிவாற்றல், யோசிக்கும் திறன், உணர்ச்சி, நடத்தை, அசைவு போன்றவற்றில் உங்களின் மூளை எந்தளவிற்கு நன்றாக செயல்படுகிறது என்பதை குறிப்பதாகும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிட்டுள்ளது.
இதுபற்றி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "மூளை ஆரோக்கியம் என்பது உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் உங்கள் முழு திறனையும் பயன்படுத்த இது உதவுகிறது." என தெரிவிக்கிறது.
"நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழல், வாழ்நாள் முழுவதும் கற்றல், சமூக உறவுகள் போன்றவற்றை உள்ளடக்கியது" எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார மையம், "இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்" எனவும் தெரிவித்துள்ளது.
உடற்பயிற்சிக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
உடற்பயிற்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாற்றல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கு உதவுவதாக ஹார்வர்ட் ஆய்வு தெரிவிக்கிறது.
அதில், "உடற்பயிற்சி மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ரசாயனங்களை வெளியிடுவதன் மூலமாகவும், புதிய மூளை செல்கள் வளர உதவுவதன் மூலமாகவும், மூளையில் புதிய ரத்த நாளங்களை உருவாக்குவதன் மூலமாகவும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிந்தனை மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் மூளைப் பகுதிகள் பெரிதாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதுபற்றி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணராக பணிபுரியும் பிரபாஷ் பிரபாகரனிடம் கேட்டபோது, "பொதுவாக உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஆரோக்கியமானது" என்றார்.
"நமது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கும், அறிவாற்றலை அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி உதவும்." என்றார்.
இதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "நமது மூளையில் ஃப்ரென்டல் லோப் (Frontal lobe), பரியேட்டல் லோப் (Parietal lobe), டெம்போரல் லோப் (Temporal lobe), ஆக்ஸிபிடல் லோப் (Occipital lobe) என 4 பிரிவுகள் உள்ளன. இதில் இந்த Frontal lobeதான் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் நமது பாணி, நாம் சிந்திக்கும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும். அதனால் இந்த இடத்தை பயிற்சிகளால் மேம்படுத்துவதன் மூலம் பலன் கிடைக்கும்" என்றார்.
மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகளை பரிந்துரைப்பதாக மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் கூறினார். ஒன்று மனம் சார்ந்த பயிற்சி, மற்றொன்று ஏரோபிக்ஸ் பயிற்சி ஆகும்.

மனம் சார்ந்த பயிற்சி

பட மூலாதாரம், Getty Images
இந்த பயிற்சிகள் நினைவாற்றல், ஒரு விஷயத்தில் கூர்மையாக கவனம் செலுத்துதல், ஒரு பிரச்னையை தீர்க்கும் திறன் போன்ற அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.
இதுபற்றி பேசிய மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன், "Fund of information அதாவது பொதுஅறிவு, தகவல்கள் என எந்தளவிற்கு அதிகமான தகவல்களை மூளைக்குள் செலுத்துகிறோமோ அந்தளவிற்கு அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும்" என்றார்.
இதுபற்றி அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒரு அங்கமான தேசிய சுகாதார நிறுவனத்திலும் (NIH) ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், "அதிகமாக தகவல்களை மூளைக்கு செலுத்துவதன் மூலம் வயதாவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும், டிமென்ஷியா போன்ற நோய்களை தடுக்க முடியும். வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெறுவதும், பல உணர்வுப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதும் மூளையை பலப்படுத்துகிறது. இதனால் மூளையால் பிரச்னைகளை சிறப்பாக கையாள முடியும். மூளையின் செயல்பாடும் நீண்ட காலத்திற்கு சிறப்பாக இருக்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மனம் சார்ந்த பயிற்சிகளை மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் பட்டியலிடுகிறார்.
- வாசித்தல் - என்ன வாசிக்கிறோம் என்பதை விட தொடர்ந்து வாசிப்பதுதான் முக்கியம்
- திறன் மேம்பாடு - இசை, நடனம் என புதிதாக ஏதாவது ஒரு திறனை கற்றுக்கொள்ளுதல், புதிய மொழிகளை கற்பதும் இதில் அடங்கும்
- புதிர்கள் - சுடோகு, வார்த்தை விளையாட்டு, கணக்கிடுதல்.
இவை அனைத்தும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் என்று அறிவுறுத்துகிறார்.
ஏரோபிக்ஸ் பயிற்சி

பட மூலாதாரம், Getty Images
உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் எந்தவொரு உடல் அசைவு அல்லது செயல்பாடும் ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். அதன்படி,
- தீவிர நடைபயிற்சி
- ஓட்டம்
- சைக்கிள் ஓட்டுவது
- நீச்சல்
என இவை அனைத்தும் ஏரோபிக் உடற்பயிற்சியின் கீழ் வரும்.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி விரிவடைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஹிப்போகேம்பஸ் என்பது டெம்போரல் லோப்-ல் உள்ளது. இது மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு உதவும் பகுதியாகும்.

பட மூலாதாரம், Getty Images
இதுபற்றி பேசுகையில், "BDNF அதாவது Brain-derived neurotrophic factor என்ற புரதம் உள்ளது. இது வெளியாவதால் நியூரல் இணைப்பு (மூளையின் நரம்பு செல்களான நியூரான்களுக்கு இடையேயான இணைப்புகள், இவை சமிக்ஞைகளை கடத்துவதற்கான பாதைகளை உருவாக்குகின்றன) மேம்படும். நியூரானின் வளர்ச்சியை இது அதிகரிக்கும். இதுவும் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்த உதவும்" என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.
"நியூரோகெமிக்கல் (Neurochemical) சமநிலையால்தான் மூளையில் தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நியூரோ கெமிக்கல்களை ஊக்கப்படுத்துவதற்கும் இது உதவும்" என்றார்.
'வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி அவசியம்'

பட மூலாதாரம், Getty Images
"மூளை ஆரோக்கியத்திற்கு பெரும்பாலான ஆய்வுகள் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தைதான் பரிந்துரைக்கின்றன. நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் என எதை செய்தாலும் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் என்ற கணக்கில் செய்ய வேண்டும். அதாவது இந்த 150 நிமிடங்களை தினசரி பிரித்து மேற்கொள்ள வேண்டும். தினமும் உடலுக்கு அசைவுகளை கொடுப்பது அவசியம்" என்றார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.
ஹார்வர்ட் ஆய்வில் வாரத்திற்கு 120 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அரை மணி நேரம் அல்லது வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடலில் செயல்பாடுகள் அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது.
மூளையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Images
உடற்பயிற்சிகள் மூளைக்கு ஆரோக்கியத்தை அளித்து, அதன் செயல்பாடுகளை தூண்டுகிறது என்பது பல ஆய்வுகள் மூலமாகவும் நிரூபணமாகி உள்ளது.
லாங்கிடூடினல் ஏஜிங் ஸ்டடி இன் இந்தியா (LASI) 2024ஆம் ஆண்டு 31,464 முதியவர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது.
இதில் அதிக உடல் அசைவுகளால் ஆண்கள் 0.98 புள்ளிகள் அதிக அறிவாற்றலும், பெண்கள் 1.32 புள்ளிகள் அதிக அறிவாற்றலும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்துவதற்கும், பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.
"அறிவாற்றல் தொடர்பான பிரச்னை (cognitive dissonance) இருப்பவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் குறைவாக இருக்கும். உதாரணமாக சாதாரணமானவர்களிடம் வீடு பற்றி எரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டால், அவர்கள் நான் அங்கிருந்து ஓடுவேன், மற்றவர்களை காப்பாற்றுவேன் என பதில் சொல்லுவார்கள். ஆனால், இந்த பிரச்னை இருப்பவர்களால் இந்த பதிலை சொல்ல முடியாது. அதனால் இந்த உடல் பயிற்சிகள் அல்லது அசைவுகள் இவர்களின் இந்த பிரச்னையை குணப்படுத்த உதவும்" என்கிறார்.
அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சிகள் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












