காஸாவில் கொல்லப்பட்ட 6 பத்திரிகையாளர்கள் - இஸ்ரேல் கூறும் காரணம் என்ன?

பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட இடம்

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

அல் ஜஸிராவின் பத்திரிகையாளர் அனாஸ் அல் ஷரீஃபுடன் அதே நிறுவனத்தின் மற்றொரு பத்திரிகையாளர் முகமது க்ரெய்க்கா, ஒளிப்பதிவாளார்கள் இப்ராஹிம் ஜஹிர், முகமது நவ்ஃபல் மற்றும் மோமென் அலிவா ஆகியோர் கொல்லப்பட்டதாக அல்ஜஸிரா தெரிவித்துள்ளது.

காஸா நகரில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறாவது பத்திரிகையாளரின் பெயர் முகமது அல்-கால்டி என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கால்டி ஒரு உள்ளூர் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருந்ததாகவும், காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவர்களால் அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

அவர்கள் காஸா நகரின் அல் ஷிஃபா மருத்துவமனையின் அருகே பத்திரிகையாளர்களுக்கான கூடாரம் ஒன்றில் இருந்ததாக அல்ஜஸிரா தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பில் ஒரு பயங்கரவாத பிரிவுக்கு அனாஸ் அல் ஷரீஃப் தலைவராக செயல்பட்டதால் அவர் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.

ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பு படை கொல்லப்பட்ட மற்ற பத்திரிகையாளார்கள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

பிபிசி வெரிஃப் உறுதி செய்த இரண்டு காணொளிகளில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதை காண முடிகிறது. யாரோ ஒருவர் க்ரெய்க்காவின் பெயரைச் சொல்ல, ஊடகம் என எழுதப்பட்ட மேலாடையை அணிந்த நபர் ஒரு உடல் ஷரீஃபினுடையது என சொல்கிறார்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதி ஊர்வலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதி ஊர்வலம்

பத்திரிகையாளர்கள் கொலைக்கு அல் ஜஸிரா கண்டனம்

ஷரீஃப் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் என்றும், காஸா பகுதியில் நடப்பவற்றை உலகம் அறிந்துகொள்ள "ஒரே குரல்" ஆக இருந்தார் என்றும் அல் ஜஸிராவின் மேலாண் ஆசிரியர் முகமது மோவாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ராணுவத்தை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் அல் ஜஸிரா, "காஸா மீதான தொடர்ச்சியான இஸ்ரேல் தாக்குதலின் பேரழிவு விளைவுகளுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் இடைவிடாது படுகொலை செய்யப்பட்டுள்ளனர், பட்டினி திணிக்கப்பட்டுள்ளது, மேலும் முழு சமூகங்களும் அழிக்கப்பட்டுள்ளன," என தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களின் கொலை "காஸாவை கைப்பற்றுதல் மற்றும் ஆக்கிரமித்தலை அம்பலப்படுத்தும் குரல்களை அழிப்பதற்கான ஒரு தீவிர முயற்சி" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கத்தாரை தளமாகக் கொண்ட இந்த ஒளிபரப்பு நிறுவனம், "தங்கள் சிறந்த பத்திரிகையாளர்களில் மற்றொரு குழுவுக்கு" மரியாதை செலுத்துவதாகவும், பத்திரிகையாளர்களை "வேண்டுமென்றே இலக்கு வைத்து" தாக்கியதற்கு இஸ்ரேல் ராணுவத்தை பொறுப்பாக்குவதாகவும் கூறுகிறது.

"அனாஸ் மற்றும் அவரது சகாக்கள் காஸாவில் மிச்சமிருந்த கடைசி குரல்களில் சிலவாக இருந்தனர்," என்றும் அவர்கள் இப்பகுதியில் உள்ள "துயரமான உண்மையை" காட்டினர் என்று அது கூறுகிறது.

காஸாவினுள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் அரசு பிபிசி உட்பட வெளிநாட்டு செய்தி அமைப்புகளை சுதந்திரமாக செய்தி சேகரிக்க காஸாவுக்குள் அனுமதிப்பதில்லை.

இதன்விளைவாக பெரும்பாலான நிறுவனங்களை செய்தி சேகரிக்க காஸாவில் இருக்கும் செய்தியாளர்களையே நம்பியிருக்கவேண்டியுள்ளது.

வெளிநாட்டு செய்தியாளர்களை அழைத்து வரும்படி ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நேற்று தெரிவித்திருந்தார்.

"பாதுகாப்பு பிரச்னைகள் இருந்தாலும் அதை செய்யமுடியும் என நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

சர்வதேச ஊடகங்கள் ஹமாஸ் பிரசாரத்தை முழுமையாக நம்பிவிட்டதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

முன்னதாக சர்வதேச பத்திரிகையாளர்களை காஸாவிற்குள் அனுமதிக்க முடியாததற்கு இஸ்ரேல் பாதுகாப்பு காரணங்களை தெரிவித்திருந்தது. பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிப்பது அவர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் அவர்கள் ராணுவத்தை அபாயத்திற்குள்ளாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பத்திரிகையாளர்களை காஸாவிற்கு ஒரு நேரத்தில் சில மணி நேரங்களுக்கு மட்டுமே அழைத்து சென்றதுடன், அவர்கள் படம்பிடித்த காட்சிகளையும் காட்டச் சொல்லி கேட்டனர்.

பத்திரிகையாளர்கள் கொலைக்கு கண்டனம்

பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம், காஸாவில் ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது"சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்" என்று கண்டித்துள்ளது.

எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பத்திரிகையாளர்கள் இருந்த கூடாரத்தை இஸ்ரேல் இலக்கு வைத்ததை கண்டிப்பதாகக் கூறப்பட்டுள்ளது, மேலும் "இஸ்ரேல் பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து பொதுமக்களையும் , மதிக்க வேண்டும் மற்றும் பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

"அனைத்து பத்திரிகையாளர்களும் காஸாவிற்கு உடனடியாக, பாதுகாப்பாக மற்றும் தடையின்றி அணுமதிக்கப்படவேண்டும்" என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (the Committee to Protect Journalists - JCPJ), " நம்பகமான ஆதாரங்கள் இன்றி பத்திரிகையாளர்களை போராளிகளாக முத்திரை குத்தும் இஸ்ரேலின் நடைமுறை, அதன் நோக்கம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் மனப்பான்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது," என தெரிவித்தது.

பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் என்றும், "எந்தவொரு சூழலிலும் குறி வைக்கப்படக் கூடாது" என்றும் சிபிஜே மேலும் கூறியது, இதற்கு பொறுப்பானவர்கள் "பதிலளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியது.

ஷரீஃப் இஸ்ரேலால் கொல்லப்படுவதற்கு முன்பு, சிபிஜே மற்றும் ஐக்கிய நாடுகள் அவருக்கான அச்சுறுத்தல்களை கண்டித்திருந்தன.

பத்திரிகை சுதந்திரம் குறித்த ஐநா நிபுணர் ஒருவர், காஸாவில் உள்ள பத்திரிகையாளர்கள் "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவத்தால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்" என்பதற்கு "பெருகி வரும் ஆதாரங்கள்" உள்ளன என்று கூறினார்.

"ஒருபுறம், இஸ்ரேல் எந்த சர்வதேச பத்திரிகையாளர்களையும் காஸாவுக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கிறது, மறுபுறம், தொடர்ந்து நடைபெறும் இனப்படுகொலையை உலகிற்கு வெளிப்படுத்தும் கண்களாக இருக்கும் உள்ளூர் பத்திரிகையாளர்களை அது இரக்கமின்றி சேறு பூசுகிறது, அச்சுறுத்துகிறது, தடுக்கிறது, இலக்கு வைக்கிறது மற்றும் கொல்கிறது," என்று கருத்து சுதந்திரம் குறித்த ஐநா சிறப்பு அறிக்கையாளர் ஐரீன் கான் கூறினார்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளருக்கு ஹாமாஸுடன் தொடர்பு?

போர்க் காலத்தில் அல் ஜஸிராவில் பரவலாக அறியப்பட்ட முகமாக இருந்த அனஸ் அல்-ஷரீஃப், தற்போதைய மோதல் தொடங்குவதற்கு முன்பு காஸாவில் ஹமாஸ் ஊடகக் குழு ஒன்றில் பணியாற்றியவர் என பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் அவரை "ஹமாஸில் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவர்" என்று கூறுகிறது, ஆனால் இதை நிரூபிக்க ஆதாரங்களை வழங்கவில்லை.

காஸாவில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான ஆவணங்கள் அனாஸ் அல்-ஷரீஃப் ஹமாஸைச் சேர்ந்தவர் மற்றும் ஒரு குழுவின் தலைவராகப் பணியாற்றியவர் என்பதை உறுதிப்படுத்துவதாக இஸ்ரேல் ராணுவம், கூறுகிறது.

இந்த ஆவணங்களில் "பணியாளர் பட்டியல்கள், பயங்கரவாதப் பயிற்சி வகுப்புகளின் பட்டியல்கள், தொலைபேசி டைரக்டரிகள் மற்றும் ஊதிய ஆவணங்கள்" அடங்கும் என்று அது தெரிவிக்கிறது.

ஆனால், வெளியிடுவதற்காக ராணுவம் காட்டியதெல்லாம் வடக்கு காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் செயற்பாட்டாளர்களை பட்டியல் என்று கூறப்படும் ஸ்ப்ரெட் ஷீட்களின் சில ஸ்கிரீன்ஷாட்கள் மட்டுமே. இவை ஹமாஸ் செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்ட காயங்களையும், ஆயுதக் குழுவின் கிழக்கு ஜபாலியா பட்டாலியனுக்கான தொலைபேசி டைரக்டரியின் ஒரு பகுதியையும் காட்டுகின்றன.

பிபிசியால் இந்த ஆவணங்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

அவரது மரணத்திற்கு முந்தைய சில சமூக ஊடக பதிவுகளில், அனாஸ் ஹமாஸை விமர்சிப்பதைக் கேட்க முடிந்தது.

ஷரீஃப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸில் போராளி அல்லாத ஒரு சிறிய பங்கு வகித்திருந்தால், அவரைக் கொன்றதை இஸ்ரேல் நியாயப்படுத்துவது குறித்து கேள்விகள் எழும்.

மேலும், போர் முழுவதும் இருந்து வரும் பிரச்சினையாக, பாதிப்பின் அளவு குறித்த கேள்வியும் உள்ளது. ஷரீஃபை இலக்கு வைத்து தாக்கியதில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஹமாஸுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறப்படும் மற்ற நான்கு அல் ஜஸிரா பத்திரிகையாளர்களையும் கொன்றிருக்கின்றனர்.

அல் ஜஸிரா செய்திக் குழுவினர் மொத்தமாக கொல்லப்பட்டதற்கும் இதுவரை இஸ்ரேல் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதையும் குறிப்பிடுவது முக்கியம்.

2023 அக்டோபரில் காஸாவில் இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து 186 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு