அமெரிக்க தலைமை: சீனா செல்லும் ஐரோப்பிய தலைவர்கள் - இந்தியாவை பாராட்டும் செளதி

இந்தியாவுக்கு செளதி பாராட்டு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் உமர் சுல்தான் ஒலாமா, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை பாராட்டினார். யுக்ரேன் நெருக்கடியின் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர் வழிநடத்திய விதத்தால் தாம் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.

“வரலாற்று ரீதியாக உலகம் ஒருமுனை, இருமுனை அல்லது மும்முனையாக இருந்துள்ளது. எனவே நீங்கள் எந்த தரப்பை தேர்ந்தெடுப்பீர்கள்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவருடைய பல உரைகளை நான் கேட்டிருக்கிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்தியாவும் எந்த தரப்பிலும் சேரக்கூடாது என்பது தெளிவாகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, புவிசார் அரசியல் என்பது குறிப்பிட்ட குழுக்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. வரலாற்றில் கடந்த காலத்தில் இருந்த இது போன்ற 'நடைமுறை' இப்போது இல்லை. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாடு தனது நலன்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என்று உமர் சுல்தான் ஒலாமா கூறியிருந்தார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் செளதி அரேபிய ஆய்வாளரும் அரசியல் ஆய்வாளருமான சல்மான் அல்-அன்சாரி, இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பாராட்டினார். மேற்கத்திய நாடுகளின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா தனது நலன்களில் சமரசம் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நான் பாராட்டுகிறேன். இந்தியா யாருக்கும் பின்தங்கிய நாடல்ல. மேற்கு அல்லது கிழக்கு நாடுகள் என்ன விரும்புகின்றன என்ற அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியவில்லை. செளதி அரேபியாவும் இத்தகைய கொள்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதை நான் நினைக்கிறேன். இறையாண்மை கொண்ட நாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று சல்மான் அல்-அன்சாரி குறிப்பிட்டார்.

யுக்ரேன்-ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சல்மான் அல்-அன்சாரி பேசினார். “யுக்ரேன்-ரஷ்யா போரில் செளதி அரேபியாவும் இந்தியாவும் எந்த ஒரு பக்கத்திலும் தாங்கள் இருப்பதை விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் எந்த குழுவுடன் இருக்க விரும்பவில்லை. அணிதிரட்டலில் ஈடுபட்டு மேலும் பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை,” என்று அல்-அன்சாரி கூறினார்.

இந்தியாவுக்கு செளதி பாராட்டு

பட மூலாதாரம், Getty Images

செளதி பழைய கொள்கையை கைவிடுவது ஏன்?

“செளதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. செளதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கையானது, தன் குடிமக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் குறிக்கோளால் இயக்கப்படுகிறது,"என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலகக் கொள்கை மாநாட்டில் செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் கூறினார்.

”செளதி அரேபியாவில் உள்ள மக்களின் துன்பங்களை எவ்வாறு குறைப்பது என்பதுதான் எங்களின் முன்னுரிமை. எங்கள் வெளியுறவு கொள்கையில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம், எங்கள் நலன்களைப் பாதுகாப்பது, கூட்டாண்மையை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்காகப் பணியாற்றுவது. வளரும் நாடுகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். ஏனெனில் அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த மேற்கத்திய நாடுகளின் ஆட்சேபத்திற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்,"ஐரோப்பா தனக்கு ஏற்றபடி ரஷ்யாவிலிருந்து எரியாற்றல் இறக்குமதியை குறைத்து வருகிறது. ஐரோப்பாவில் தனிநபர் வருமானம் 60 ஆயிரம் யூரோக்கள். ஆனால் இங்குள்ள அரசுகள் தங்கள் குடிமக்களுக்கான விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படுகின்றன.

இந்தியாவில் தனிநபர் வருமானம் 2000 டாலர்கள். எங்களுக்கும் எரியாற்றல் தேவை. அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கும் நிலையில் நாங்கள் இல்லை. ஐரோப்பாவிற்கு கொள்கை மிகவும் முக்கியமானது என்றால், யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலின் இரண்டாவது நாளிலிருந்து அதாவது 2022 பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருக்க வேண்டும்,” என்று கூறினார்.

2022 பிப்ரவரி முதல் ஐரோப்பா, இந்தியாவை விட ஆறு மடங்கு அதிக எரிசக்தியை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது என்று ஜெய்சங்கர் கூறினார்.

ஜெய்சங்கரின் இந்த அறிக்கை, சுதந்திரம் அடைந்ததில் இருந்தே இருக்கும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியைக் காட்டுகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அணிசேரா முறையில் அடித்தளமிட்டவர் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அதாவது இந்தியா எந்த ஒரு அணியிலும் சேராது.

இந்தியாவுக்கு செளதி பாராட்டு

பட மூலாதாரம், Getty Images

இந்திய வெளியுறவு அமைச்சர் இப்போது இந்த அணிசேரா கொள்கையை மல்டி-அலைன்மென்ட் என்று அழைக்கிறார். அதாவது இந்தியா எந்த ஒரு குழுவுடனும் சேராது. தன் நலன்களுக்கு ஏற்ப எல்லா குழுக்களிடமும் தனது கருத்தை முன் வைக்கும்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு சோதனை நேரம் வந்தது. ஆனால் கடினமான காலங்களில் நேருவின் அணிசேராக் கொள்கையில் இருந்தே இந்தியா தீர்வு கண்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெய்சங்கரின் கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் யுக்ரேன் நெருக்கடியின் போது செளதி அரேபியா தனது பழைய வெளியுறவுக் கொள்கையிலிருந்து ஒரு வழியில் வெளியே வந்ததாகத் தோன்றியது. மேலும் அது அணிசேரா கொள்கையின் மூலம் தீர்வையும் கண்டது.

பனிப்போரின்போது இந்தியா சோவியத் யூனியனுடனோ அல்லது அமெரிக்க முகாமிலோ இருக்கவில்லை. ஆனால் செளதி அரேபியா கம்யூனிஸ எதிர்ப்பு முகாமில் இருந்தது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா தலைமையிலான பிராந்திய பாதுகாப்பு வலையமைப்பில் செளதி அரேபியா இடம்பெற்றிருந்தது.

ஆனால் இப்போது அமெரிக்காவுடன் கட்டுண்டு இருப்பது தனது நலன்களுக்கு ஏற்றது அல்ல என்று செளதி அரேபியா கருதுகிறது. இப்போது இந்தியாவின் அணி சேரா பாதையை அது பின்பற்றி வருகிறது. செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ’எண்ணெய்க்கு ஈடாக பாதுகாப்பு’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்தக் கொள்கை இப்போது வரலாறாகி விட்டதாகத் தோன்றுகிறது.

சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) செளதி அரேபியாவும் உரையாடல் கூட்டாளியாக இணைந்துள்ளது. இது தவிர, வரும் காலத்தில் செளதி அரேபியா பிரிக்ஸ் அமைப்பிலும் இணையலாம். இந்த இரண்டு அமைப்புகளிலும் இந்தியா ஏற்கனவே முழுநேர உறுப்பினராக உள்ளது. செளதி அரேபியா SCO இல் இணைவது, பனிப்போர் கால அமெரிக்க முகாமில் இருந்து வெளியேறும் அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

”எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க விரும்பாததால், அணிசேரா கொள்கையை செளதி விரும்புகிறது. அதாவது அமெரிக்காவின் நம்பகத்தன்மை பலவீனமடைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் அதன் உதவியாளராக இருக்க செளதி விரும்பவில்லை,” என்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் அஷ்வினி மொஹபாத்ரா கூறினார்.

இந்தியாவுக்கு செளதி பாராட்டு

பட மூலாதாரம், Getty Images

மிடில் பவர் செயல் உத்தி

இந்தியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியா ஆகியவை 'மத்திய சக்தி' நாடுகளாக பார்க்கப்படுகின்றன. யுக்ரேனைத் தாக்கியதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கிற்கு ரஷ்யா சவால் விடுத்துள்ளதாகவும், அதற்கு சீனா ஆதரவளிப்பதாகவும் நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்த நடுத்தர சக்தி நாடுகள் எந்தப் பிரிவிலும் சேராமல் நன்மை பெற விரும்புகின்றன.

ஒருபுறம் யுக்ரேன் நெருக்கடிக்குப் பிறகு இந்தியா, ரஷ்யாவிலிருந்து மலிவான எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துக் கொண்டே இருந்தது. மறுபுறம் அமெரிக்கா தொடர்ந்து கேட்டுக்கொண்டபோதிலும் செளதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்பதோடு கூட அதை குறைக்கவும் செய்தது.

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் இந்தியா, செளதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. ஆனால் அனைவரும் மறுத்துவிட்டனர். அதே மாதத்தில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க செளதி அரேபியா முடிவு செய்தது. எண்ணெய் விலை அதிகமாக இருக்கவேண்டும் என்று செளதி அரேபியா விரும்புகிறது. தனது பொருளாதாரம் எண்ணெயை சார்ந்திருப்பதை குறைக்க செளதி அரேபியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

அமெரிக்காவை கோபப்படுத்தும்விதமாக செளதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தது. அதன்பின் அமெரிக்க நாளிதழ் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில், ”எண்ணெய் விலையை லாப அளவில் வைக்க தேவையான அனைத்தும் செய்யப்படும் என்ற தெளிவான குறிப்பை, எண்ணெய் உற்பத்தியை குறைப்பதன் மூலம் செளதி கொடுத்துள்ளது" என்று எழுதியது. செளதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், ’செளதி ஃபர்ஸ்ட்’ என்ற கொள்கையின் கீழ் செயல்பட்டு வருகிறார்.

“மத்திய கிழக்கில் வல்லரசுகளின் போட்டி அதிகரித்து வரும் நேரத்தில், செளதி அரேபியா அமெரிக்க முகாமில் இருந்து வெளியேறுவது போல் தெரிகிறது. செளதி இனி அமெரிக்காவை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று இளவரசர் முகமது கடந்த ஆண்டு தனது கூட்டாளிகளிடம் கூறினார். அமெரிக்காவுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்குரிய பலன் வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்தியாவுக்கு செளதி பாராட்டு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, செளதி அரேபியா மூலம் பயனடையும் ரஷ்யா

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு 10.64 லட்சம் பீப்பாய்களை எட்டியுள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இதுவரை இவ்வளவு எண்ணெய் இறக்குமதி செய்ததில்லை. பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா தினமும் 10.62 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் இறக்குமதி செய்தது. இதனுடன் கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா தினமும் 68 ஆயிரத்து 600 பீப்பாய்கள் மட்டுமே எண்ணெய் இறக்குமதி செய்தது. இது இப்போதைய அளவை ஒப்பிடும்போது 24 மடங்கு குறைவு. மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 34 சதவிகிதம் ஆகும். இந்தியாவிற்கு அதிக எண்ணெய் சப்ளை செய்யும் இராக்கை விட இது இரண்டு மடங்கு அதிகம்.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து அதிபர் புதினுக்கு இந்தியா உதவுவதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. இந்தியாவும் சீனாவும் ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குவதால், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பலனளிக்கவில்லை என்று மேற்குலக நாடுகள் கருதுகின்றன. இதேபோல், செளதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இராக் மற்றும் குவைத் ஆகியவை எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு ஒரு 10 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் குறைப்பதாக அறிவித்தபோது, பீப்பாய்க்கு 79 டாலராக இருந்த எண்ணெய் விலை 85 டாலராக உயர்ந்தது.

”செளதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் முடிவால் ரஷ்யா நேரடியாகப் பயனடைகிறது,” என்று ஆக்ஸ்போர்டு இன்ஸ்டிடியூட் ஃபார் எனர்ஜி ஸ்டடீஸின் மூத்த ஆராய்ச்சி உறுப்பினரான அதி இம்சிரோவிக், ஃபைனான்சியல் டைம்ஸிடம், கூறினார்.

“புதினுக்கு இது ஒரு மெகா பரிசு. பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ரஷ்யா சிக்கலில் உள்ளது. நீங்கள் திடீரென்று பீப்பாய்க்கு 10 டாலர் கூடுதலாக கொடுக்கத் தொடங்குகிறீர்கள். செளதியின் இந்த பரிசை உலக நாடுகளுக்கும் வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச விரும்புவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு செய்தி வெளியானது. ஆனால் இருவரும் பேச மறுத்துவிட்டனர்.

இந்தியாவுக்கு செளதி பாராட்டு

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பாவிலும் அமெரிக்கா குறித்த கேள்விகள்

அமெரிக்க தலைமைத்துவம் குறித்த கேள்வி மேற்கு ஆசியாவில் மட்டும் எழுப்பப்படவில்லை, அதன் தாக்கம் ஐரோப்பாவிலும் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 5 முதல் 7 வரை சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவைப் பின்பற்றும் முன் ஐரோப்பா தன்னைத்தானே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீன சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஐரோப்பிய செய்தித்தாள் பொலிட்கோவுக்கு அளித்த பேட்டியில் மக்ரோங், கூறியிருந்தார். ”தைவான் ஐரோப்பாவுடன் தொடர்புடைய பிரச்சனை அல்ல. அமெரிக்கா-சீனா சண்டையில் ஐரோப்பா எந்த தரப்பையும் ஆதரிக்கக்கூடாது,” என்று மக்ரோங் கூறினார். யுக்ரேன் நெருக்கடிக்கு ஐரோப்பா தீர்வு காணத் தவறிவிட்ட நிலையில் தைவான் விவகாரத்தில் என்ன தீர்வை வழங்க முடியும் என்று பிரான்ஸ் அதிபர் கேள்வி எழுப்பினார்.

மக்ரோங்கின் இந்த அறிக்கை ஐரோப்பாவில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. மக்ரோங்கின் கருத்து குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஒரு தலையங்கத்தில், "பிரான்ஸ் அதிபர் இந்த அறிக்கை மூலமாக எந்த உதவியையும் பெறப் போவதில்லை. மக்ரோங்கின் இந்த அறிக்கை மேற்கு பசிபிக் பகுதியில் சீனாவிற்கு எதிரான ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை பலவீனப்படுத்தும். இதனுடன், அமெரிக்கா ஐரோப்பாவில் தனது அர்ப்பணிப்பைக் குறைக்க வேண்டும் என்று கோரிவரும் தலைவர்களின் பிரசாரம் அமெரிக்காவில் வலுப்பெறும். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்பை மீண்டும் பார்க்க விரும்புகிறாரா என்று ஜோ பைடன் மக்ரோங்கிடம் கேட்க வேண்டும்,” என்று எழுதியது.

புதின் ஆரம்ப கட்டத்தில் ஐரோப்பாவுடன் நல்லுறவை விரும்பினார். ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் நுழைவுக்குப் பிறகு, விஷயங்கள் மிகவும் சிக்கலானதாக மாறியது. ஜெர்மனி முதல் பிரான்ஸ் வரை பல நாடுகளும் யுக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு எதிராக உள்ளன. ”யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஏஞ்சலா மெர்க்கலும் ஒருவிதத்தில் காரணம். ஏனெனில் அவர் 2008 இல் யுக்ரேனை நேட்டோவில் சேரவிடாமல் தடுத்தார்,” என்று கடந்த ஆண்டு ஏப்ரலில் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

இந்தியாவுக்கு செளதி பாராட்டு

பட மூலாதாரம், Getty Images

மெர்க்கலின் அலுவலகம் இதற்கு எழுத்துப்பூர்வ பதிலை அளித்து தன் முடிவை நியாயப்படுத்தியது. யுக்ரேன் ஆழமாக பிளவுபட்டிருப்பதாலும், பரவலான ஊழல் இருப்பதாலும் நேட்டோவில் அந்த நாடு சேர்வதை தான் நிறுத்திவிட்டதாக மெர்க்கல் கூறினார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு 14 வது மாதமாக நீடிக்கிறது. அதற்கான தீர்வு என்ன என்பது குறித்து ஐரோப்பா விவாதித்து வருகிறது. யுக்ரேன் தொடர்பாக அமெரிக்காவின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த மேற்கு நாடுகளும் ஒன்றுபட்டதாகத் தோன்றியது. ஆனால் இப்போது அமெரிக்கா குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கடந்த ஐந்து மாதங்களில், மூன்று முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டதில் இருந்து இது தெளிவாகிறது. ஜெர்மன் அதிபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவுக்கு சென்றிருந்தார். ஸ்பெயின் பிரதமர் இந்த ஆண்டு மார்ச் மாதமும், பிரான்ஸ் அதிபர் கடந்த வாரமும் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: