நடராஜன் தந்த திருப்பம்: 13 கோடிக்கு 'ஒர்த்' என நிரூபித்த ஹாரி புரூக் - கொல்கத்தாவை வென்ற ஹைதராபாத்

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது வெற்றியை ருசித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இம்முறை இமாலய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது.

கடந்த முறையைப் போல கடைசிக் கட்டத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்த்துவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை புதிய நட்சத்திரம் ரிங்கு சிங்கால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அதிரடி வீரர் ஹாரி புரூக், கேப்டன் மார்க்ரம், இளம் வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட, புவனேஷ்குமார், மார்க்கண்டே ஆகியோர் பவுலிங்கில் அசத்தினர். இக்கட்டான நேரத்தில் அணிக்கு மிகவும் அவசியமான விக்கெட்டை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜன், வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.

ஹைதராபாத் அணி பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு பல கேட்ச்களை கோட்டை விட்டதால் எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றிக்கு கடைசி வரை போராட வேண்டி வந்துவிட்டது.

மறுமுனையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியோ ஒரு கட்டத்தில் இமாலய இலக்கை துரத்துகையில் எப்படி ஆட வேண்டும் என்று மற்ற அணிகளுக்கு பாடம் எடுப்பது போன்றதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், அதே இமாலய இலக்கு தந்த அழுத்தத்துடன், ஆந்த்ரே ரஸ்ஸலின் உடல் தகுதிப் பிரச்னையும் சேர்ந்து கொள்ள அந்த அணி கடைசி வரை போராடியும் வெற்றி கைகூடவில்லை.

ரூ.13.25 கோடிக்கு 'ஒர்த்' என்பதை நிரூபித்த ஹாரி புரூக்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்னை 13.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் ஹாரி புரூக்கின் ஆட்டம் அமைந்திருந்தது. கடந்த சில தொடர்களாகவே பலவீனமாக காணப்பட்ட மிடில் ஆர்டரை வலுப்படுத்தவே இவரை அந்த அணி வாங்கியிருந்தது. ஆனால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பவுன்சாகக் கூடிய ஆடுகளங்களில் அதிரடியாக விளையாடிப் பழக்கப்பட்ட ஹாரி புரூக், மெதுவான இந்திய ஆடுகளங்களில் சற்று தடுமாறினார்.

அவரது ஆட்ட ஸ்டைலை புரிந்து கொண்டு, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதற்கான பலனை அறுவடை செய்துள்ளது. மிடில் ஆர்டரில் 2 போட்டிகளிலும், தொடக்க வீரராக கடந்த ஆட்டத்திலும் ஜொலிக்கத் தவறிய ஹாரி புரூக், ஐ.பி.எல்.லில் தனது நான்காவது ஆட்டத்திலேயே சதம் கடந்து அசத்தினார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்சைத் தொடங்கிய அவர், தனது ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு அப்போதே கட்டியம் கூறிவிட்டார்.

அதன் பிறகு ஹாரி புரூக்கின் பேட்டில் பட்ட பந்துகள் எல்லைக்கோட்டை முத்தமிட்ட வண்ணம் இருந்தன. குறிப்பாக, வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 55 பந்துகளில் சதம் கடந்து அசத்திய ஹாரி புரூக் 12 பவுண்டரிகளையும், 3 சிக்சர்களையும் விளாசினார்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங்கில் திட்டங்களை கனகச்சிதமாக செய்து முடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் தனது திட்டத்தை கனகச்சிதமாக செயல்படுத்துவதில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஹாரி புரூக் முதல் பந்தில் இருந்தே வேகப்பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். உமேஷ் யாதவ், பெர்குசன் ஆகியோர் வீசிய முதல் 3 ஓவர்களிலேயே அணிக்கு 43 ரன்களை அவர் திரட்டித் தந்துவிட்டார்.

இதன் மூலம், கொல்கத்தா அணி முன்கூட்டியே சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தத்தை அவர் உண்டாக்கினார். பவர் பிளேவில் நான்காவது ஓவரை சுனில் நரைன் சிக்கனமாக பந்துவீசி முடித்தாலும் அடுத்து வந்த ஓவர்களில் கேப்டன் மார்க்ரம் சுழற்பந்துவீச்சாளர்களை சின்னாபின்னமாக்கினார். இதனால், கொல்கத்தா அணி சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் மிடில் ஓவர்களிம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரன்கள் தடையின்றி வந்து கொண்டிருந்தன.

கேப்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 50 ரன் குவித்து ஆட்டமிழந்த பிறகு சுழற்பந்துவீச்சாளர்களை இளம் வீரர் அபிஷேக் சர்மா பார்த்துக் கொண்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்னிங்சின் கடைசிக் கட்டத்தில் ஒருபுறம் வேகப்பந்துவீச்சாளர்களை ஹாரி புரூக் சிதறடிக்க, சுழற்பந்துவீச்சாளர்கள் சிக்கனம் காட்டாமல் அபிஷேக் சர்மா நன்றாக கவனித்தார். 17 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் சேர்த்தார்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தாவின் சுழல் மும்மூர்த்திகளை சிதறடித்த மார்க்ரம், அபிஷேக்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் - வருண் சக்கரவர்த்தி சுழல் கூட்டணி கடந்த இரு தொடர்களாகவே எதிரணிகளை அச்சுறுத்தி வருகிறது. நடப்புத் தொடரில், அவர்களுடன் 19 வயதே நிரம்பிய இளம் லெக் ஸ்பின்னர் சுயாஷ் சர்மாவும் சேர்ந்து கொள்ள, இந்த சுழல் மும்மூர்த்திகளை எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.

இந்த சுழல் கூட்டணியை சமாளிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் போட்டு வைத்த திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்றிக் காட்டினர். வேகப்பந்துவீச்சுக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய ஹாரி புரூக்கின் வேகம் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்ததும் தணிந்தது. பவர் பிளேவுக்கு பிறகு 7 முதல் 14-வது ஓவர் வரையிலும் ஹாரி புரூக் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 20 பந்துகளில் வெறும் 19 ரன்களையே அவர் எடுத்திருந்தார்.

ஆனால் மறுமுனையில் இருந்த கேப்டன் மார்க்ரம் சுழற்பந்துவீச்சாளர்களை கவனித்துக் கொண்டார். மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சில் 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் 42 ரன்களை விளாசினார். நரைன் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 ரன்களை எடுத்த மார்க்ரம், வருண் சக்கரவர்த்தி வீசிய 8 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களையும், சுயாஷ் வீசிய 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களையும் விளாசினார்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், BCCI/IPL

மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை மார்க்ரம் கவனித்துக் கொண்டதால், மறுமுனையில் ஹாரி புரூக்கால் நெருக்கடியின்றி விளையாட முடிந்தது. 15-வது ஓவர் வரையிலும் ஒரு பவுண்டரி கூட கொடுக்காத சுனில் நரைனை டெத் ஓவர்களில் அபிஷேக் சர்மா கவனித்தார். அவரது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அசத்தினார் அபிஷேக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் திட்டங்களை சரியாக நிறைவேற்றி, எந்தவொரு கட்டத்திலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த விடாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆந்த்ரே ரஸ்ஸல் பாதியில் வெளியேறியதால் கொல்கத்தாவுக்கு பாதிப்பு

நடப்புத் தொடரில் நான்காவது போட்டியாக, ஒவ்வொரு முறையில் பந்துவீச வந்ததுமே விக்கெட் வீழ்த்தி அசத்தி வரும் ஆந்த்ரே ரஸ்ஸல் நேற்றும் அதனை செய்து காட்டினார். முதல் பந்திலேயே மயங்க் அகர்வாலை வீழ்த்திய அவர், அதே ஓவரின் கடைசிப் பந்தில் ராகுல் திரிபாதியையும் பெவிலியனுக்கு அனுப்பினார். அந்த ஸ்பெல்லில் மேலும் ஒரு ஓவரை வீசிய ரஸ்ஸல் காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் போது ஆந்த்ரே ரஸ்ஸலை அவசியமான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தவித்தது. 19-வது ஓவரின் போது மீண்டும் பந்து வீச வந்த ஆந்த்ரே ரஸ்ஸல், முதல் பந்திலேயே அபிஷேக் ஷர்மாவை வீழ்த்தினாலும், மேற்கொண்டு பந்துவீச முடியாமல் மீண்டும் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார்.

இமாலய இலக்கைத் துரத்துகையில் ஆந்த்ரே ரஸ்ஸல் போன்ற அசகாய சூரரின் பங்களிப்பு எந்தவொரு அணிக்கும் மிகவும் அத்தியாவசியமானது. 100 சதவீத உடற்தகுதியுடன் இல்லாத அவரால் முழு பங்களிப்பை அளிக்க முடியாமல் போனது அவரது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், Getty Images

இமாலய இலக்கு தந்த நெருக்கடியால் சரிந்த விக்கெட்டுகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 229 ரன் என்ற இமாலய இலக்கு தந்த நெருக்கடியே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பேட்ஸ்மேன்களை மனதளவில் முதலிலேயே வீழ்த்திவிட்டது. முதல் பந்து முதலே அடித்து நொறுக்க வேண்டும் என்று அவசரம் காட்டிய கொல்கத்தா வீரர்கள் 20 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை தாரை வார்த்து விட்டனர். வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகியோர் அனைத்து பந்துகளையும் விளாச விரும்பி, ஜேன்சன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டனர்.

பின்னர் ஜெகதீசன், கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் அந்த அணி வேகமாக ரன்களைக் குவித்தாலும் வெற்றி இலக்கு வெகுதொலைவில் இருந்ததால் அது போதுமானதாக இருக்கவில்லை.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், BCCI/IPL

தனி ஒருவனாக போராடிய கேப்டன் நிதிஷ் ராணா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் போய்விட்டாலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கும் அசத்தலாகவே இருந்தது. குறிப்பாக, கேப்டன் நிதிஷ் ராணாவின் பேட்டிங் அசத்தலாக இருந்தது. முதல் 3 ஓவர்களிலேயே 20 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டாலும், கொஞ்சமும் சோர்ந்து போகாமல் களத்தில் சூறாவளியாக அவர் சுழன்றார். குறிப்பாக, ஐந்தாவது ஓவரை வீச வந்த உம்ரான் மாலிக்கை நிதிஷ் ராணா பதம் பார்த்தார்.

அந்த ஓவரில் 4, 6, 4, 4, 4, 6 என்ற வகையில் அனைத்துப் பந்துகளையும் எல்லைக்கோட்டிற்கு விரட்டி 28 ரன்களை நிதிஷ் ராணா திரட்டினார். இதன் மூலம் ரன் ரேட் நெருக்கடியில் இருந்து சற்று விடுபட்ட கொல்கத்தா அணிக்கு, அடுத்து வந்த ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து ரன் ரேட்டை பராமரிக்க அவர் உதவினார். சேஸிங்கில் அந்த அணியின் உத்தியும் அதுவாகவே இருந்தது. அதாவது ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர், மற்ற பந்துகளில் ஒன்று இரண்டு ரன்கள் என்ற வகையில் அந்த அணி ரன்களை குவித்துக் கொண்டே இருந்தது.

இக்கட்டான நேரத்தில், தனது அணிக்காக ஒரு கேப்டன் இன்னிங்சை அபாரமாக விளையாடிய நிதிஷ் ராணா, 41 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்களை குவித்தார்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், Getty Images

அச்சுறுத்திய ஜோடியை பிரித்து திருப்பம் தந்த நடராஜன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 228 ரன்களைக் குவித்திருந்த போதிலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு சேஸிங்கில் நிதிஷ் ராணா - ரிங்கு சிங் ஆகியோர் களத்தில் இருந்த வரை வெற்றி இலக்கு எட்டும் தொலைவில் இருந்ததாகவே பட்டது. இருவருமே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருந்ததால் ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவ்வளவு ரன்களைக் குவித்தும் பலனில்லாமல் போய்விடுமோ என்று அதன் ரசிகர்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

அந்த நேரத்தில், 17-வது ஓவரை வீச வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், தனது அணி எதிர்பார்த்திருந்த திருப்பத்தை தந்தார். களத்தில் அச்சுறுத்திக் கொண்டிருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் நிதிஷ் ராணாவை மூன்றாவது பந்தில் நடராஜன் காலி செய்தார். நடராஜன் புல்டாசாக வீசிய பந்தை ராணா தூக்கி அடிக்க, டீப் கவர் திசையில் நின்றிருந்த வாஷிங்டன் சுந்தர் அற்புதமாக கேட்ச் செய்தார். நிதிஷ் ராணா - ரிங்கு சிங் ஜோடி பிரிந்த பிறகே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், BCCI/IPL

ரிங்கு சிங்கிடம் மீண்டும் ஒரு அற்புதத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம்

நிதிஷ் ராணா ஆட்டமிழந்த பிறகும், ரிங்கு சிங் களத்தில் இருந்ததால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே அதன் ரசிகர்கள் நம்பினர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடந்த ஆட்டத்தில், கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை நொறுக்கி அணிக்கு அதிசயிக்கத்தக்க வெற்றியைத் தேடித் தந்த ரிங்கு சிங் அதுபோன்றதொரு அற்புதத்தை நிகழ்த்துவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

நிதிஷ் ராணா ஆட்டமிழந்த போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 3 ஓவர்களில் 58 ரன்கள் தேவையாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது போல ரிங்கு சிங்கும் சில பவுண்டரிகளை விளாசினார். இதனால், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவையாக இருந்தது. ரிங்கு சிங்கோ நான்-ஸ்டிரைக்கர் முனையில் இருந்தார்.

கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக் முதல் பந்திலேயே ஷர்துலை காலி செய்தார். அடுத்த பந்தில் உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்து, ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அப்போதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டிருந்தது. ஏனெனில், அடுத்த 4 பந்துகளில் கொல்கத்தா அணிக்கு 31 ரன்கள் தேவையாக இருந்தது. சன்ரைசர்ஸ் அணி நோபால், வைடுகளை வீசாத பட்சத்தில் அனைத்து பந்துகளில் சிக்சருக்குப் போனாலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், Getty Images

உம்ரான் மாலிக் கச்சிதமாக ஓவரை வீசி ரிங்கு சிங்கை பெரிய ஷாட்களை ஆட விடாமல் கட்டிப் போட்டார். கடைசி வரையிலும் களத்தில் இருந்த ரிங்கு சிங், ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர் அடித்து திருப்திப்பட்டுக் கொண்டார். ரிங்கு சிங் மீண்டும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவார் என்று கடைசி வரையிலும் நம்பிக் கொண்டிருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மோசமான பீல்டிங் - 7 கேட்ச்களை கோட்டை விட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பீல்டிங் கடந்த ஆட்டத்தைப் போலவே நேற்றும் மிகவும் மோசமாக இருந்தது. அந்த அணி வீரர்கள் மொத்தம் 7 கேட்ச்களை கோட்டை விட்டனர். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசனுக்கு மட்டும் 2 கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. புவனேஷ்வர் குமாரும், ராகுல் திரிபாதியும் தலா ஒரு கேட்சை தவறவிட்டனர்.

மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிதிஷ் ராணாவை 16-வது ஓவரில் அவுட்டாக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் கோட்டை விட்டார். புவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் மட்டும் 2 கேட்ச்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் கோட்டை விட்டனர்.

நடராஜன் தந்த திருப்பம்

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் எளிய கேட்ச்களை தவறவிடாமல் பிடித்திருந்தாலே, அந்த அணி நேற்றைய ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றிருக்கும். பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டால் அந்த அணி எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை மிகவும் போராடியே பெற முடிந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: