காங்கிரஸ் ஆட்சியில் 51, பா.ஜ.க. ஆட்சியில் 232 - எம்.பி.க்கள் இடைநீக்கம் அதிகரிக்க என்ன காரணம்?

எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்றத்தில் இன்று ஒரே நாளில் 78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் இருந்து 33 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் இருந்து 45 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் 2 பேர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக பிரதமர் மோதியோ அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மக்களவையில் 33 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மாநிலங்களையில் இருந்து 45 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் அறிவிப்பு வெளியானது.

மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோரும் அடங்குவர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களில் 34 பேர் இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. மேலும் 11 எம்.பி.க்கள் மீது கூடுதல் நடவடிக்கை எடுப்பது ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுப்பும் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

இந்திய நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று நடந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கேள்வியெழுப்பிய பதினான்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இது இந்திய நாடாளுமன்றத்திற்குள் உறுப்பினர்களுக்கு இருக்கும் ஜனநாயக வெளி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பட மூலாதாரம், Getty Images

புதன்கிழமையன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து, கேள்வியெழுப்பி, இடைநீக்கம் செய்யப்பட்ட முதல் எம்.பி. திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த டெரிக் ஓ ப்ரைன். அவரது ஒழுங்கற்ற நடத்தைக்காக அவரை நீக்குவதாக மாநிலங்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இதற்குப் பிறகு இதே கோரிக்கையை வலியுறுத்திய மேலும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் ஏழு உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்: கனிமொழி (திமுக), எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கே சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட), எஸ். ஜோதிமணி (காங்கிரஸ்), மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்).

ஆறு பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்: வி.கே.ஸ்ரீகந்தன் (காங்கிரஸ்), பென்னி பெஹனான் (காங்கிரஸ்), டீன் குரியகோஸ் (காங்கிரஸ்), ஹிபி ஈடன் (காங்கிரஸ்), டி.என்.பிரதாபன் (காங்கிரஸ்), ரம்யா ஹரிதாஸ் (காங்கிரஸ்). முகமது ஜாவத் என்பவர் பிஹாரைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர். இவர்களில் எஸ்.ஆர். பார்த்திபன் அவையில் இல்லை என்பதால் அவரது இடைநீக்கம் மட்டும் திரும்பப் பெறப்பட்டது.

எம்.பிக்கள் ஏன் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்?

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்திச்செல்வதற்கான அதிகாரம் மக்களவைத் தலைவருக்கும் மாநிலங்களவையின் தலைவருக்கும் அளிக்கப்படுகிறது. அவையின் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட உறுப்பினர் குந்தகம் விளைவிப்பதாக கருதினால், அந்த உறுப்பனரை இடைநீக்கம் செய்யும் அதிகாரம் அவையின் தலைவருக்குத் தரப்படுகிறது. இந்த இடைநீக்க காலத்தை அவைத் தலைவரே முடிவுசெய்வார். ஆனால், இந்த இடைநீக்க காலம், குறிப்பிட்ட கூட்டத்தொடர் நடக்கும் கால அளவைத் தாண்டிச்செல்ல முடியாது.

இப்படி இடைநீக்கம் செய்யப்படுபவர்கள், நாடாளுமன்ற அவைக்குள் நுழைய முடியாது. அவர்கள் இடம்பெற்றுள்ள கமிட்டியின் கூட்டங்களில் பங்கேற்க முடியாது. இந்த காலகட்டத்தில் கமிட்டி கூட்டங்களில் நடக்கும் வாக்கெடுப்புகளில் கலந்துகொள்ள முடியாது. எம்.பிக்களுக்கான தினப் படியும் வழங்கப்பட மாட்டாது. இந்த இடைநீக்கத்தை ஒரு நாடாளுமன்றத் தீர்மானத்தின் மூலம் நீக்கவோ, குறைக்கவோ முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

இந்திய நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்து தடுக்கும் வகையில் செயல்படும் உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம்தான் என்றாலும்கூட, கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

எட்டு ஆண்டுகளில் 150 எம்.பிக்கள் இடைநீக்கம்

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பட மூலாதாரம், X/Su.Venkatesan

ஊடகங்களில் வந்த தகவல்களின்படி, 2005லிருந்து 2014வரை 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், 2015லிருந்து 2022க்குள் 139 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இப்போது நடந்த இடைநீக்கங்களையும் சேர்த்துப் பார்த்தால், இந்த எட்டு ஆண்டுகளில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 232 ஆகிவிட்டது.

உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதில் தற்போதைய அரசு மிக மோசமாக நடந்துகொள்கிறது என்கிறார் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தி.மு.க. எம்.பியான கனிமொழி. "நான் தற்போது மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். இதுவரை நான் இடைநீக்கம் செய்யப்பட்டதேயில்லை. பொதுவாக அவையின் மூத்த உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதும் வழக்கமில்லை.

இந்த முறை, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பதாகையை பிடித்தபடி நின்றதற்காக இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி இருந்தபோது, பா.ஜ.க. இதுபோல பல முறை செய்திருக்கிறது. இப்படி ஒரு இடைநீக்க நடவடிக்கை இருந்தால், மூத்த உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சென்று பேசுவார்கள். உடனடியாக இடைநீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்படும். இப்போதெல்லாம் அப்படி நடிப்பதில்லை.

இது தவிர, ஒரு நாள், இரண்டு நாள் என சஸ்பென்ட் செய்வதற்குப் பதிலாக முழு கூட்டத்தொடரும் சஸ்பென்ட் செய்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடக்கிறது. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசின் நடவடிக்கை என்ன என்பதை அவர்கள் விளக்கலாம். அதைவிட்டுவிட்டு, விளக்கம் கேட்பவர்களை இடைநீக்கம் செய்கிறார்கள்" என்கிறார் கனிமொழி.

இடைநீக்கங்களுக்கு ஆளும் அரசே காரணம்: எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றச்சாட்டு

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பட மூலாதாரம், Getty Images

இதற்கு முக்கியமான காரணம், தற்போதைய ஆளும் அரசே ஒவ்வொரு கூட்டத்தொடரும் ஒழுங்காக நடக்க வேண்டாம் என நினைப்பதுதான் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.

"தற்போதைய அரசைப் பொறுத்தவரை, எந்த ஒரு கூட்டத் தொடரையும் ஒழுங்காக நடத்த வேண்டாம் என நினைக்கிறார்கள். இந்தக் கூட்டத் தொடர் துவங்கும்போதே மொஹுவா மைத்ரா விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சியினர் பிரச்னை செய்வார்கள், அவையில் கூச்சலும் குழப்பமுமாக இருக்கும் என நினைத்தார்கள்.

ஆனால், அப்படி நடக்கவில்லை. இப்போது இந்த விவகாரத்தை வைத்து அவை நடவடிக்கைகளைச் சீர்குலைக்கிறார்கள். ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் பங்கு, அர்த்தம், புனிதம் எல்லாவற்றையும் இந்த ஆட்சி குலைக்கிறது," என்கிறார் ரவிக்குமார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டால், எளிதாக சபையை நடத்தலாம் என நினைக்கிறார்கள் என்று சொல்லும் கனிமொழி, ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறார்.

"விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

அந்த இடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டுமென மக்களவையில் பலர் கோரிக்கை விடுத்தோம். பிறகு வெளிநடப்புச் செய்தோம். அப்படி நாங்கள் வெளிநடப்பு செய்த சமயமாகப் பார்த்து, தொழிலாளர் நீதிமன்றச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். நாங்கள் திகைத்துப்போனோம். தற்போதைய அரசைப் பொறுத்தவரை விவாதத்தில் நம்பிக்கை என்பதே கிடையாது" என்கிறார் கனிமொழி.

எப்போதெல்லாம் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்?

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் ஒரு மசோதா தொடர்பாக பலத்த விவாதங்களோ, எதிர்ப்போ எழுந்தால் அவை நிலைக்குழுவுக்கும் தேர்வுக்குழுவுக்கும் அனுப்பப்பட்டு, பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகள் கேட்கப்படும். "ஆனால், அப்படியெல்லாம் இப்போது நடப்பதேயில்லை. பெரும்பான்மை இருப்பதால், தொடர்ந்து மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்" என்கிறார் அவர்.

இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பும் மிகப் பெரிய அளவில் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

1989 மார்ச்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான தாகூர் ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக குரல் எழுப்பிய 63 மக்களவை உறுப்பிநர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

2019: அ.தி.மு.க. மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

2015: பதாகைகளை பிடித்துக் கோஷம் எழுப்பி, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)