சந்திரயான்-3: நிலாவை முத்தமிட்டது இந்தியா - நேரலை

பட மூலாதாரம், Getty Images
சந்திரயான் திட்டத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் நிலாவில் தரையிறங்கும் காணொளியை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.
முன்னதாக சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்தை லேண்டிங் இமேஜர் கேமரா (Landing Imager Camera) மூலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது. நிலவின் சமதளத்தைத் தேர்வு செய்து சந்திரயான்-3 தரையிறங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பான காணொளியையும் இஸ்ரோ வெளியிட்டது.
மேலும், லேண்டரில் இருந்து பிரக்ஞான் ரோவர் தற்போது சாய்வுக்கதவு வழியாக வெளியேறி தரையைத் தொட்டுவிட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
இந்த நிகழ்வானது, விக்ரம் லேண்டர் நிலவின் தரையில் மென்மையாகத் தரையிறங்கி சுமார் நான்கு மணிநேரங்களுக்குப் பிறகு நடக்கும் என்று கூறப்பட்டது.
தரையிறங்கி கலனின் சாய்வுக்கதவு திறந்து சிறிது நேரம் கழித்து வெளியேறும் ரோவர் சூரிய ஒளியில் அரை மணிநேரமோ அல்லது ஒரு மணிநேரமோ தனது பேட்டரிகளை சார்ஜ் செய்துகொண்டு தாய் கலனை புகைப்படம் எடுத்து அனுப்பும். அதேபோல், லேண்டரும் சேய்க்கலமான ரோவரை புகைப்படம் எடுத்து அனுப்பும்.

பட மூலாதாரம், ISRO
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிகழ்வு எப்படி நடந்தது?
இன்று மாலை 6:04 மணிக்கு இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

பட மூலாதாரம், ISRO
படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.
விக்ரம் லேண்டர் தரையிறங்கியது தொடர்பாக காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோதி, “இது போன்ற வரலாற்றுத் தருணங்களைப் பார்க்கும் போது நமக்குப் பெருமையாக இருக்கிறது. இது புதிய இந்தியாவின் விடியல். இந்த தருணம் மறக்க முடியாதது. இந்த தருணம் இதற்கு முன் நடந்திராதது. துயரக் கடலை கடக்கும் தருணம் இது.
140 கோடி இந்தியர்களின் துடிப்பால் இந்த தருணம் உருவாகியுள்ளது. இந்த தருணத்துக்காக இஸ்ரோ பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளது. 140 கோடி நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும் திறமையாலும், உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், ISRO
சந்திரயான்- 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீர முத்துவேல் செயல்பட்டு வருகிறார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும் பேசிய அவர் "எனது குழுவினர் முழுமையான பங்களிப்பை வழங்கினர்" என்று கூறினார்.
விழுப்புரத்தில் விஞ்ஞானி வீர முத்துவேல் அவர்களின் தந்தையார் பழனிவேல் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் காட்சியை ஆர்வமுடன் அவர் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசித்தார்
விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்

பட மூலாதாரம், ISRO
பிரக்யான் ரோவர் நிலாவில் பதிக்கும் இந்தியாவின் சின்னம்
சந்திரயான் -3 ரோவர் பிரக்யானின் ஆறு சக்கரங்களும் நிலாவில் பதியும்போது இது இந்தியாவுடையது என அடையாளம் காணும் வகையில், அதன் சக்கரங்களில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்களை விரைவில் இஸ்ரோ அனுப்பும் என்று தெரிகிறது.
நாசா வாழ்த்து
இந்தியாவுக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.
"சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலாவின் தென் துருவத்தில் தரையிறக்கிய இஸ்ரோவுக்கும் நிலாவில் விண்கலத்தை இறக்கிய 4-ஆவது நாடு என்ற பெருமையைப் பெற்ற இந்தியாவுக்கும் வாழ்த்துகள். இந்தத் திட்டத்தில் உங்களுடன் கூட்டணி சேர்வதை எண்ணி மகிழ்கிறோம்" என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு கூறியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
சந்திரயான் 3 விண்கலம் நிலாவில் தரையிறங்கிருப்பதன் மூலம் தமிழ்நாட்டுக்கு அளப்பரிய பெருமை கிடைத்திருப்பதாக மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சந்திரயான்-1 திட்டத்தில் பணியாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான-2 திட்டத்தில் பணியாற்றிய வனிதா, தற்போது சந்திரயான்-3 திட்டத்துக்கு தலைமை வகிக்கும் வீர முத்துவேல் ஆகியோரை தனது வாழ்த்து செய்தியில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், ANI
முன்னதாக சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற வேண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மத வழிப்பாட்டு தலங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
டெல்லியில் உள்ள ஜன் கல்யான் சமிதியில் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள பங்களா சாகிப் குருத்வாராவில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி உள்ளிட்டோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரட்பால் தர்காவில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.
சந்திரயான் 3 திட்டத்துக்கான செலவு எவ்வளவு?
இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் - 2 திட்டத்துக்கு ரூ.978 கோடி செலவிடப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்துக்கான செலவு ரூ.615 கோடி மட்டுமே?

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் 3 விண்கலம் எப்போது விண்ணில் ஏவப்பட்டது?
ஜூலை 6: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது
ஜூலை 11: 24 மணி நேர ஏவுதல் ஒத்திகை வெற்றிகரமாக செய்யப்பட்டது
ஜூலை 13: சந்திரயான் 3 விண்கலத்தின் கவுண்ட் டவுன் பிற்பகல் 1.05-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது.
ஜூலை 14: சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு எல்விஎம்3 எம்4 ராக்கெட் மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் எத்தனை முறை மாற்றப்பட்டது?
சந்திரயான் விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் (Orbit raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது. அவை;
ஜூலை 15: சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 41762 கி.மீ x 173 கி.மீ தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.
ஜூலை 17: 2வது முறையாக விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 41603 கி.மீ x 226 கி.மீ தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.
ஜூலை18: மூன்றாவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது
ஜூலை 20: நான்காவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டது
ஜுலை 25: 5வதாக மற்றும் இறுதியாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது.

பட மூலாதாரம், ISRO
நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 தொடங்கியது எப்போது?
ஆகஸ்ட் 1: புவியின் சுற்றூவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
ஆகஸ்ட் 5: சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமான நிலவின் நீள்வட்ட பாதைக்குள் செலுத்தப்பட்டது. அப்போது, 164 கி.மீ x 18074 கி.மீ தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 இருந்தது.
ஆகஸ்ட் 6: நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 170 கி.மீ x 4313 கி.மீ தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 இருந்தது.
ஆகஸ்ட் 9: 174 கி.மீ x 1437 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 14: 151 கி.மீ x179 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 16: நிலவைச் சுற்றி 153 கி.மீ x163 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.

பட மூலாதாரம், ISRO
விக்ரம் லேண்டர் பிரிந்தது எப்போது?
ஆகஸ்ட் 17: சந்திரயான் 3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.
ஆகஸ்ட் 19: 113 கிமீ x 157 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது
ஆகஸ்ட் 20: 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது
ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கவுள்ளது
விக்ரம் லேண்டர் நிலவில் என்ன பணிகளை செய்யும்?
நிலாவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்குகிறது. அந்தப் பகுதியில்தான் சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யப் போகிறது.
நிலாவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, நிலாவில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டதா அல்லது அந்த வெப்பத்தில் உடையக்கூடிய பொருட்களாக உள்ளனவா என்பது போன்ற தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின்னர், அதன் உள்ளே இருக்கும் ரோவர் வெளியே வரும். இந்த ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












