தென்னாப்பிரிக்காவை ஏன் இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சஞ்சய் கிஷோர்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
1983-ஆம் ஆண்டு ஆடவர் ஒருநாள் உலக கோப்பையைப் போலவே இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியமான தருணம் இது.
இன்று நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலககோப்பை இறுதிப் போட்டி வரலாற்று புத்தகங்களில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட உள்ளது.
2006-ஆம் ஆண்டு பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை தங்களின் குடைக்குள் எடுத்துக் கொண்டது. அப்போது மகளிர் கிரிக்கெட் இன்று அடைந்துள்ள உயரத்தை அடையும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
மகளிர் கிரிக்கெட்டின் ஆரம்ப காலகட்டத்தில் மைதானங்கள் காலியாக இருந்தன, தொலைக்காட்சிகளில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய போராட வேண்டியிருந்தது.
அந்தச் சூழல் தற்போது மாறிவிட்டது, வீராங்கனைகள் நட்சத்திரங்களாக மாறி உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகின்றனர்.
பெண்கள் கிரிக்கெட் பிரபலமடைந்துள்ளது. ஆனால் மைதானங்களுக்கு ரசிகர்களைக் கொண்டு வருவதில் வெற்றியடையவில்லை.
இந்திய அணிக்குப் பின்னால் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ உள்ளது. அவர்களிடம் வளமும் கட்டமைப்பும் உள்ளது. ஆனால் கிரிக்கெட் என்பது பணத்தால் மட்டுமல்ல, தைரியத்தால் வெல்லப்படுகிறது என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. ரசிகர்களின் மனங்களை வெல்ல வேண்டுமென்றால் எந்த அணியும் கோப்பைகளை வெல்ல வேண்டும்.
இந்திய கிரிக்கெட்டின் பிம்பத்தையும் தலைவிதியையும் மாற்ற கபில் தேவின் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டியிருந்தது.
தற்போது அதே போன்றதொரு சூழல் மகளிர் அணிக்கும் உருவாகியுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் மட்டும் விளையாடவில்லை, ஒரு கனவை நிறைவேற்றவும் விளையாடுகிறது.
ஆனால் தென் ஆப்ரிக்க அணிக்கு இறுதிப் போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது தென் ஆப்ரிக்கா. இறுதி போட்டி வெற்றியைக் கொண்டாடுவாதற்காக டேன்சிங் ஷூக்களை எடுத்து வந்துள்ளனர். தென் ஆப்ரிக்க அணியின் இயக்குநர் ஈனோச் நிக்வே தனது அணியை "ஆர்டிஸ்டிக் ஹன்டர்கள்" என அழைக்கிறார்.
இரு 'உதய சூரியன்' அணிகளின் கதை

பட மூலாதாரம், Getty Images
வரலாற்றை மாற்றும் இறுதி போட்டியாக இது அமைந்துள்ளது. முதல்முறையாக ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து அல்லாமல் ஒரு புதிய அணி உலக சாம்பியனாக உள்ளது.
இது, இந்தத் தொடரில் விட்டுக் கொடுக்காத உணர்வை வெளிப்படுத்திய இரு 'உதய சூரியன்' அணிகளின் கதைகளாகும்.
இந்திய அணி முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளை தோற்கடிக்காமல் நாக்-அவுட் சுற்றுக்கு வந்தது. அதன் பிறகு அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் வரலாற்று வெற்றி பெற்று இறுதி போட்டியை அடைந்தது. இந்த வெற்றி, இந்திய அணி அழுத்தமான சூழல்களுக்காக தயாராக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
ஜெமிமா ரோட்ரிகசின் சதம் (ஆட்டமிழக்காமல் 127 ரன்கள்) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் 89 ரன்களும் இந்திய அணி எந்த இலக்கையையும் அடைய முடியம் என்பதை நிரூபித்தது.
மறுபுறம் தென் ஆப்ரிக்க அணி இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் முறையே 69 மற்றும் 97 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததிலிருந்து மீண்டு வந்துள்ளது.
அரை இறுதிப் போட்டியில் தங்களின் பரம எதிரியான இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது அவர்களின் அசாத்தியமான மன உறுதிக்குச் சான்றாக உள்ளது.
இந்தப் போட்டி, தங்களின் கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து போராடி இந்தக் கட்டத்தை அடைந்திருக்கும் வீராங்கனைகளின் கனவுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இன்று வெற்றி என்பது வெறும் கோப்பையாக மட்டும் இருக்காது. மாறாக பொருளாதார சுதந்திரம், சமூக மாற்றம் மற்றும் அசாத்தியமானதை சாத்தியமாக்குவதாக இருக்கும்.
அணிகளின் நிலை மற்றும் முக்கியமான சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வு செய்த காம்பினேஷன் (ஆறு பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 வது வீரர் வரை பேட்டிங் ஆடுவது) தான் இறுதி போட்டிக்கும் உகந்ததாக இருக்கும்
ஒபனிங் மற்றும் மிடில் ஆர்டர்: இந்திய அணிக்கு ஓபனிங்கில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா நல்ல தொடக்கம் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருப்பார்கள்.
செஃபாலி கடந்த போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் அதிரடியான தொடக்கம் தருவதற்கான திறன் அவரிடம் உள்ளது.
மிடில் ஆர்டர்: ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு அசைக்க முடியாத கூட்டணியாக உள்ளனர்.
ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவின் அனுபவமும் அமைதியான அணுகுமுறையும் இந்த அணியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ரிச்சா கோஷின் அதிரடி ஃபினிஷிங் மற்றும் அமன்ஜோத் கவுரின் திறன்கள் நவீன கால கிரிக்கெட்டின் தேவைகளாக உள்ளன.
சுழற்பந்து வீச்சு: தென் ஆப்ரிக்க அணியில் வலது கை பேட்டர்கள் அதிகமாக இருப்பதால் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவ் சிறந்த தேர்வாக இருப்பார். இந்த நகர்வு மிடில் ஓவர்களில் இந்தியா ரன்களைக் கட்டுப்படுத்த உதவும்.
வேகப்பந்து வீச்சு: கிராந்தி கவுட் மற்றும் ரேணுகா சிங் காம்பினேஷன் தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
கவனமுடன் இருக்க வேண்டும்

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்ரிக்க அணி சாம்பலில் இருந்து எழுந்து வந்துள்ளது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் மிக குறைவான ரன்களை எடுத்திருந்தாலும் 5 போட்டிகளில் தொடர்ந்து வென்று இறுதி போட்டிக்கு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு நான்கு உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
உத்தி சார்ந்த செயல்திட்டம்: கடுமையான போட்டிகள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய போட்டியின் முடிவு சில முக்கியமான அம்சங்களால் தீர்மானிக்கப்படும்.
மந்தனா vs கப் - உலகின் நம்பர் 1 பேட்டரான ஸ்மிரிதி மந்தனா, கப்-இன் துல்லியமான ஸ்விங் பந்து வீச்சை இறுதிப் போட்டியின் அழுத்தத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
டி கிளார்க் vs இந்தியாவின் டெத் ஓவர் பவுலிங்: லீக் சுற்று தோல்வியை மறந்து இந்திய அணி டி கிளார்க்கை கட்டுப்படுத்த ஏதேனும் திட்டத்துடன் வருமா என்பதை கவனிக்க வேண்டும்.
தீப்தி சர்மா vs வோல்வார்ட்: தொடர்ச்சியாகவே வோல்வார்ட்டிற்கு எதிராக குறைவான ரன் ரேட்டை தீப்தி சர்மா கடைபிடித்து வருகிறார். இது மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும்.
செஃபாலி வர்மா: அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் வந்துள்ள செஃபாலி வர்மாவுக்கு ஜொலிப்பதற்கான வாய்ப்பு இது. இத்தகைய பிட்ச் மற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் பெரிதாக சாதிக்க முடியும்.
நவி மும்பை எனும் கடுமையான போட்டிக்களம்

பட மூலாதாரம், Getty Images
நவி மும்பை மைதானம் 30,000 ரசிகர்கள், உப்பு கலந்த கடல் காற்று மற்றும் கணிக்க முடியாத வானிலையைக் கொண்டிருக்கும்.
டி.ஒய் பாட்டீல் மைதானம் இந்திய அணிக்கு சாதகமானதாகவே இருந்துள்ளது.
இங்கு நடைபெற்ற கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இங்கு விளையாடுகிறது. இது இந்தியா அணிக்குச் சாதகமான அமையும்.
ஆனால் கணிக்க முடியாத வானிலை மற்றும் பனி டாஸ் ஜெயிப்பதை முக்கியமாக்குகிறது.
மூன்றாவது முறை இந்திய அணிக்கு சாதகமாகுமா?

பட மூலாதாரம், @ICC
இந்திய மகளிர் அணிக்கு இந்த இறுதி போட்டி மூன்றாவது முயற்சியாக இருக்கும். 2005 (இங்கிலாந்திடம் தோற்றது) மற்றும் 2017-இல் (இங்கிலாந்திடம் தோற்றது) இந்திய அணி இறுதி போட்டியை அடைந்தது.
மாறாக, தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் மூன்று முறை அரை இறுதி போட்டி வரை சென்றுள்ளது தென் ஆப்ரிக்கா. இப்போது மிகவும் தொழில்முறை அணியாக மாறியுள்ள தென் ஆப்ரிக்கா கடந்த 12 ஆண்டுகளில் நான்கு முறை ஐசிசி தொடர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












