திருமணம் நடந்தபோது இறந்த மணப்பெண் – அவரது தங்கையை கரம் பிடித்த மணமகன்
திருமண சடங்குகள் நடந்துகொண்டிருக்கும்போதே மணமகள் இறந்த நிலையில், குடும்பத்தினர் அதிரடியாக ஒரு முடிவெடுத்து மணப்பெண்ணின் தங்கையை அதே மேடையில் அதே மணமகனுக்கு மணமுடித்து வைத்தனர்.
குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத துன்பம் தாக்கியபோதும், குடும்பம் கலங்காமல் துணிச்சலாக முடிவெடுத்ததாக சமுதாயப் பெரியவர்கள் இந்த செயலைப் பாராட்டுகிறார்கள்.
பவநகரில் உள்ள சுபாஷ் நகரைச் சேர்ந்த ஹெடல் ரதோட் என்ற பெண்ணுக்கும், விஷால் அலோக்தார் என்ற இளைஞருக்கும் பிப்ரவரி 24ம் தேதி வெள்ளிக்கிழமை திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை, குடும்ப உறுப்பினர்கள் திருமண ஏற்பாட்டில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர். திடீரென மணமகளுக்கு உமட்டலும், மூச்சடைப்பும் ஏற்பட்டு, மயக்கமடைந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடுமையான மாரடைப்பால் இந்த மரணம் நிகழந்ததாகத் தெரியவந்தது.
குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தபோது, திருமண ஊர்வலம் நிகழிடத்தை அடைந்தது. உறவினர்களோடும், சமூதாயப் பெரியவர்களோடும் ஆலோசனை நடத்திய குடும்ப உறுப்பினர்கள் விஷாலுக்கு, இறந்த மணமகளின் தங்கையை மணமுடிப்பது என்று முடிவு செய்தனர்.
ஹெடலின் சடலத்தை மருத்துவமனை குளிர்ப்பதனப் பிணவறையில் வைத்துவிட்டு, அருகில் உள்ள சிவன் கோவிலில் விஷாலுக்கும் ஹெடலின் தங்கைக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
திருமணம் முடிந்து மணமக்கள் மணமகன் வீட்டுக்கு சென்ற பிறகு, மறுநாள் ஹெடலின் இறுதிச் சடங்கு நடந்தது.
"நடந்த சம்பவம் வலிமிகுந்தது. எங்கள் துக்கத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம். இந்தக் கடினமான சூழ்நிலையிலும் அந்தக் குடும்பம் ஒரு துணிச்சலான முடிவை எடுத்து, தங்கள் இளைய மகளை மணமகளாக்க முடிவு செய்தது. சமூகம் முழுவது ம் அந்தக் குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கிறது. குஜராத் முழுவதிலும் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. ஹெடலின் தந்தைக்கு இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி கூறுகிறோம்" என்கிறார் உள்ளூர் கவுன்சிலர் லக்ஷ்மண் ரதோட்.
தயாரிப்பு: பர்த் பாண்ட்யா
காணொளி/ தொகுப்பு: நிதின் கோஹில், ரவி பார்மர்.

பட மூலாதாரம், Jinabai Rathod
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













