'பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றிடுவேன்' - உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi stalin

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 2021 தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வென்றார்.

இத்துடன் தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது . இத்துறை இதுவரை அமைச்சர் சி. வீ. மெய்யநாதனிடம் இருந்தது.

சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் ஆகிய துறைகளும் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

''எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களைச் செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாகக் கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்,'' என்று பதவியேற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

'வாரிசு அரசியல் என்ற விமர்சனம் புதிதல்ல'

பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தற்போது நடித்துவரும் மாமன்னன் திரைப்படமே தமது கடைசிப் படம் என்றும் தெரிவித்தார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் திட்டமிடப்பட்டிருந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்று கூறிய அமைச்சர் உதயநிதி, வாரிசு அரசியல் என்ற விமர்சனம் தமக்குப் புதிதல்ல எனவும் கூறினார். தன் மீதான விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதிலளிப்பேன் என்று உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதற்கான பணிகளைத் தொடங்கி, முடுக்கி விடுவதே என்னுடைய முதல்கட்ட பணியாக இருக்கும்.

அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளில், விளையாட்டுத் துறையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவோம்,” என்றார்.

மு.க. ஸ்டாலின் 2021இல் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றபின் செய்யப்படும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இது. உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளதுடன் தமிழ்நாடு அமைச்சர்களில் சிலரின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், UDHAYANIDHI STALIN/FACEBOOK

அமைச்சரவையில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்

  • கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறை வழங்கப்பட்டுள்ளது.
  • ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பன், கூட்டுறவுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • வனத்துறை அமைச்சராக இருந்த கே.ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
  • இந்து அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபுவுக்கு, சென்னை மெட்ரோ வளர்ச்சிக் குழுமம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
  • நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளன.
  • இதுவரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சராகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த மெய்யநாதன், இனி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சராகப் பொறுப்பு வகிப்பதோடு, முன்னாள் ராணுவத்தினர் பிரிவிலும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
  • இதுவரை சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்து வந்த டாக்டர். எம்.மதிவேந்தன், வனத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: