ஆப்கன் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை; ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்த பெண் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹஃபிசுல்லா மரூஃப்
- பதவி, பிபிசி ஆப்கன் சேவை
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 800 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.
6.0 அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானின் 4 மாகாணங்களில் குறைந்தது 800 பேர் மரணமடைந்திருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களின்ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN Ocha) கூறியுள்ளது.
குறைந்தபட்சம் 2,000 பேர் காயமடைந்திருக்கலாம், என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் தொலைதூர மலைப்பிரதேசங்களில் இருக்கலாம் என கூறுகிறது. இந்த பகுதிகளுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அணுகுவதற்கு கடினமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
குறைந்தபட்சம் 12,000 பேர் நேரடியாக நிலநடுக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் Ocha அமைப்பு கூறுகிறது.
மெல்ல சென்றடையும் உதவிகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள் அணுகுவதற்கு கடினமான இடங்களாக இருப்பதால் மீட்புப் பணிகள் தாமதமாகி வந்தன. இந்நிலையில் நேற்று வரை செல்ல முடியாத பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் இன்று (செவ்வாய்கிழமை) சென்றடைந்துள்ளனர்.
களத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் யாமா பாரிஸ், "குனார் செல்லும் வழியில் நங்கர்ஹார் உள்ளூர் மருத்துவமனைக்கு மீண்டும் சென்றேன். இன்று 80க்கும் மேற்பட்டோர் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் மசர் தாரா மற்றும் நர்குல் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதிகள் நேற்று வரை மீட்புக் குழுவினரால் அணுக முடியாதவையாக இருந்தன. பாதிக்கப்பட்டவர்களில் பலர் விமானம் மூலம் ஜலாலாபாத் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்" என்று எழுதுகிறார்.
"நேற்றை விட இன்று மருத்துவமனை சற்று அமைதியாக காணப்பட்டது. நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் அடங்கியுள்ளன, எனவே மக்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நிலையில் இருந்தனர்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், BBC/Abbas Farzami
பிபிசி செய்தியாளர் யாமா பாரிஸ் தான் மருத்துவமனையில் சந்தித்த நாதிர் கானின் கதையை கூறுகிறார்.
"மசார் தாராவில் வசிக்கும் நாதிர் கானை நான் சந்தித்தேன். 50 வயதான நாதிர், ஞாயிற்றுக்கிழமை இரவு நிலநடுக்கத்தில் தனது வீடு இடிந்து விழுந்ததில் தனது மகன்கள், இரண்டு மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளை இழந்ததாகக் கூறினார்." என்று பாரிஸ் கூறுகிறார்.
தனது இரண்டு பேரக்குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்று அவர் அழுதுகொண்டே கூறுகிறார், ஆனால் அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தனக்குத் தெரியாது என்கிறார்.
இப்போது எங்கு செல்வது என்று தனக்குத் தெரியவில்லை, ஏனெனில் திரும்பிச் செல்வதற்கு அவருக்கு வீடும் இல்லை, குடும்பமும் இல்லை என்கிறார் நாதிர்.
தனது மகன்களை நினைத்து, நாதிர் சத்தமாக அழத் தொடங்குகிறார், அவர் அவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறார்.
"என் தலை மற்றும் முதுகெலும்பில் காயங்கள் இருந்தன, எனவே என்னால் நகரவோ அவர்களை காப்பாற்றவோ முடியவில்லை. நான் நன்றாக இருந்திருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்." என்கிறார்.
சிகிச்சையை தள்ளிவைக்கும் ஆப்கன் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
குனார் மாகாணத்தில் பெண்கள் கலாச்சார காரணங்களுக்கான தங்களின் சிகிச்சையை தள்ளி வைக்கக்கூடும் என பிபிசி ஆப்கன் சேவை ஆசிரியர் ஷோயப் ஷரிஃபி தெரிவிக்கிறார்.
ஜலாலாபாத் பிரதான மருத்துவமனையில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருப்பதாக பகுதிநேர செய்தியாளர் ஒருவர் பிபிசி ஆப்கன் சேவையிடம் தெரிவித்தார்.
"எப்போதும் போலவே பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் இந்த நெருக்கடியின் வலியை தாங்குகின்றனர்" என கேர் என்கிற மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த தீப்மாலா மஹ்லா பிபிசியிடம் தெரிவித்தார்.
சிறிய மருத்துவமனைக்கு உதவிகள் தேவை

பட மூலாதாரம், Getty Images
குனாரில் உள்ள அசாதாபாத்த்தின் மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர் ஒருவர் அவர்களின் சிறிய மருத்துவமனையில் 200 பேருக்கும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த மருத்துவமனையில் 150 படுக்கைகளே உள்ளன.
"செஞ்சிலுவை சங்கம் உதவிகள் வழங்கினாலும் கூடுதல் உதவிகள் தேவை. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். எங்களுக்கு கூடாரமும் மருந்துகளும் தேவை" என அந்த மருத்துவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவர் ஏமி மார்டின் (UN Ocha) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறைவிடம் மற்றும் போர்வைகள் உடனடியாக தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
முடிந்த வரையில் மக்களுக்கு சூடான உணவு மற்றும் அதிக சக்தி நிறைந்த பிஸ்கட்கள் வழங்குவதற்கு தயார் செய்து வருகிறோம் என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
ஆனால் மனிதாபிமான உதவிகளுக்கான நிதியுதவி குறைக்கப்பட்டது ஆப்கானிஸ்தானில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என ஏமி மார்டின் தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதியில் 80 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் மக்களுக்கு மருத்துவ உதவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நிதியுதவியும் பொருளுதவியும்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 1 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிதியுதவி ஐ.நா மக்கள் நிதியத்திற்கும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிற்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.
ஐ.நாவின் உலகளாவிய அவசரகால நிதியிலிருந்து முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தரப்பிலிருந்து 1,000 கூடாரங்கள் வழங்கப்பட்டதாகவும் குனார் மாகாணத்திற்கு 15 டன் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், X/S. Jaishankar
தாலிபன் நிர்வாகம் கூறியது என்ன?
முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தாலிபன் அரசு எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
"உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தற்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள மாகாணங்களிலிருந்து ஆதரவு குழுக்களும் விரைந்துக் கொண்டிருக்கின்றன, "என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் நூற்றுக்கணக்கானோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கம் எங்கு ஏற்பட்டது?
8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் நாட்டின் ஐந்தாவது பெரிய நகரமான ஜலாலாபாத்திலிருந்து 17 மைல் (27 கி.மீ) தொலைவில் இதன் மையப்பகுதி இருந்தது.
இந்த நிலநடுக்கம் குனார் மற்றும் லக்மான் மாகாணங்களையும் பாதித்துள்ளது. மேலும் 140 கி.மீ (87 மைல்) தொலைவில் உள்ள நாட்டின் தலைநகர் காபூலில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது.

பட மூலாதாரம், TALIBAN GOVERNMENT
குனார் மாகாணத்தின் சவ்காய் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 35 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுத்து வருவதாக பிபிசிக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன.
பிபிசி பார்த்த ஒரு வீடியோவில், பொதுமக்கள் சிலர் மலைகளால் சூழப்பட்ட ஒரு திறந்த பகுதியில் கூடியுள்ளனர். காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் செல்லப்படுகின்றனர், குழந்தைகள் கதகதப்புக்காக போர்வைகளால் போர்த்தப்பட்டு தரையில் கிடத்தப்படுகின்றனர்.

பட மூலாதாரம், TALIBAN GOVERNMENT
நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர்.
தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று காலையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன.
இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது.
உதவி கோரும் தாலிபன் அரசு
தொலைதூர மலைப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தாலிபன் அரசு அதிகாரிகள் உதவி வழங்கும் அமைப்புகளை வலியுறுத்தியுள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இப்பகுதிக்கான சாலைகள் அணுக முடியாத அளவுக்கு இருப்பதாக என்று குனார் மாகாண காவல்துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளை விமானம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
தாலிபன் அதிகாரிகள் தங்களிடம் குறைவான வளங்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களை வழங்க சர்வதேச அமைப்புகளின் உதவியைக் கோருவதாகவும் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












