வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ந்து 4 போட்டிகளிலும் வென்று தோல்வியே இல்லாமல் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 5 போட்டிகளில் தொடர்ந்து 2வது தோல்வியை சொந்த மண்ணில் சந்தித்து 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
ஆட்டத்தை மாற்றிய ஒற்றை மனிதர்

பட மூலாதாரம், Getty Images
மிகச்சிறிய பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுபோன்ற குறைந்த ஸ்கோரை அடித்துவிட்டு ஆர்சிபி அணி டிபெண்ட் செய்வது மிகவும் கடினம்.
இரு அணிகளிலும் பிக்ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதில் ஆர்சிபி ஹிட்டர்களை டெல்லி பந்துவீச்சாளர்கள் ஒடுக்கி வெற்றி கண்டனர். டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் கே.எல்.ராகுல் என்ற ஒற்றை விக்கெட்டை எடுத்திருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும். ஆனால், கடைசி வரை ராகுல் விக்கெட்டை ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர்.
தொடர்ந்து 2வது போட்டியாக டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக கே.எல்.ராகுல் அமைந்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக ராகுல் அடித்த ஸ்கோர் அந்த அணிக்கு சம்மட்டி அடியாக இறங்கியது.
இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக ராகுல் 53 பந்தகளில் 93 ரன்கள்(6 சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஆர்சிபி அணியைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவதென்றால், முதல் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.
கடைசி இரு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது. நடுப்பகுதி 15 ஓவர்களில் வெறும் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதுதான் ஆர்சிபி அணியின் நேற்றைய பேட்டிங்கின் சுருக்கம்.
தொடக்கத்தில் தடுமாறிய டெல்லி

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபியை 163 ரன்களில் சுருட்டிவிட்டோம் என்று டெல்லி அணி மகிழ்ச்சியாக இருந்தாலும் அது களத்துக்கு வரும்போது நிலைக்கவில்லை.
தொடக்கத்திலேயே ஆர்சிபி அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து டெல்லி அணியைத் தடுமாற வைத்தது. 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள்தான் டெல்லி எடுத்திருந்தது.
ஆனால், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ராகுல் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 6.5 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்து, 13 பந்துகள் மீதமிருக்கும்போது வெற்றி பெற வைத்தனர். அதாவது 7 ஓவர்களில் 102 ரன்களை இருவரும் சேர்த்துள்ளனர். முதல் 11 ஓவர்களில் டெல்லி அணி 68 ரன்களே சேர்த்தநிலையில் அடுத்த 7 ஓவர்களில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்துள்ளது.
ஆர்சிபி அணி தங்களுக்குக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. 4 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த ஆர்சிபியால் அடுத்ததாக ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியவில்லை. இந்த ஒரு விக்கெட்டில்தான் ஆர்சிபி அணி தோற்றுள்ளது.
வியக்க வைத்த ராகுலின் அற்புதமான ஆட்டம்
கே.எல்.ராகுல் இந்திய அணியில் மட்டுமல்ல ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த இடத்திலும் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்துள்ளார். தொடக்க வீரராக வந்து அதிரடியாக ஆடக் கூடியவர், நடுப்பகுதியில் வந்து ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை நேற்றைய ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி அணயின் டாப் ஆர்டர் பேட்டர்கள் 3 பேரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கடந்த சீசனில் சிறப்பாக ஆடியதை நம்பி ப்ரேசர் மெக்ருக்கை ஏலத்தில் தக்கவைத்து டெல்லி அணி எடுத்தது. இதுவரை ஒரு போட்டியில்கூட அவர் சிறப்பாக பேட் செய்யவில்லை. அபிஷேக் போரெலும் அதே நிலைதான்.
டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ராகுல் தனது ரன் வேகத்தைக் குறைத்து 29 பந்துகளில் 29 ரன்கள்தான் சேர்த்திருந்தார். 7 ரன்களுடன் இருந்தபோது ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கேட்சை நழுவவிட்டு ராகுலுக்கு வாய்ப்பளித்தார். 11வது ஓவரின்போது டெல்லி அணியின் வெற்றி சதவிகிதம் 67 சதவிகிதத்தில் இருந்து 14.31 சதவிகிதமாகக் குறைந்தது. அதன்பின் ராகுலின் அதிரடியால் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் எங்காவது ஒளிந்து கொள்ளலாமா என்று கேட்கும் அளவுக்கு பந்துவீச பயந்தனர்.
ராகுல் 29 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் தொடங்கிய அதிரடி ஆட்டத்தால் அடுத்த 8 பந்துகளில் தனது அரைசத்ததை நிறைவு செய்தார். குர்னல் பாண்டியா, லிவிங்ஸ்டோன் ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டார்.
டெல்லி அணி கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய ராகுல் 22 ரன்கள் சேர்த்து பதற்றத்தைக் குறைத்தார். சூயஷ் ஷர்மா பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் சிக்ஸர், பவுண்டரி என விளாச வெற்றிக்கு அருகே டெல்லி சென்றது.
யஷ் தயால் வீசிய ஓவரில் ராகுல் 2 சிக்ஸர்கள், பவுண்டரி விளாசி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ராகுல் முதல் 29 பந்துகளில் 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும், அடுத்த 24 பந்துகளில் 64 ரன்கள் என 266 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடினார். கே.எல்.ராகுலால் இப்படியும் ஆட முடியுமா என அனைவரையும் வியக்க வைத்தார்.
ஆர்சிபியின் நிலையற்ற ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணியின் பில் சால்ட், கோலி ஆட்டத்தைத் தொடங்கிய வேகத்தைப் பார்த்தபோது, 250 ரன்களை எட்டிவிடும் எனக் கருதப்பட்டது. ஸ்டார்க் பந்துவீச்சில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 30 ரன்கள் சேர்த்தார். ஏனென்றால் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 53 ரன்களை தொட்டது, அதில் 3 சிக்ஸர்களும் அடக்கம். ஆனால் அடுத்த 3 ஓவர்களில் ஆர்சிபி அணி 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
விப்ராஜ் நிகம் பவர்ப்ளேவில் பந்துவீச வந்தவுடனே ஆர்சிபியின் ரன்ரேட் படுத்துக் கொண்டது. தடுமாறிய தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னில் முகேஷ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி பவர்ப்ளேவில் 64 ரன்கள் சேர்த்தது.
அதன் பிறகு, விராட் கோலி 22 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கவே அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆர்சிபி விக்கெட்டுகள் சரிந்தன. லிவிங்ஸ்டன் மீது பெரிய எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்து இதுவரை ஏமாற்றத்தையே அளித்துள்ளார். ஜிதேஷ் சர்மா(3), க்ருனால் பாண்ட்யா(18), கேப்டன் பட்டிதார்(25) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
ஆர்சிபி 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுப்பகுதியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் சேர்ந்து ஆர்சிபி பேட்டர்களை திணறவிட்டனர்.
கடைசியில் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியால்தான் ஆர்சிபி அணி மூச்சுவிட்டு கௌரமான ஸ்கோரை பெற்றது. அதிரடியாக ஆடிய டேவிட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 37 ரன்கள் சேர்த்து, ஆர்சிபியின் ஸ்கோர் 150 ரன்களை கடக்க வைத்தார். டேவிட் 37 ரன்களுடனும், புவனேஷ்வர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆர்சிபியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் டிம் டேவிட் பேட்டிங்தான் ஆட்டத்தின் ஹைலைட்டாக இருந்தது. மற்றவகையில் நடுவரிசை பேட்டிங்கும், ஆட்டமும் ஏகச் சொதப்பலாக இருந்தது.
களமாடிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள்

பட மூலாதாரம், Getty Images
சின்னசாமி மைதானத்தில் நேற்று ஹீரோக்களாக இருந்தவர்கள் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் இருவர்தான். 8 ஓவர்கள் வீசிய இருவரும் 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் 23 டாட் பந்துகளும் அடக்கம்.
நடுப்பகுதி ஓவர்களில் ஆர்சிபி பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தனர். பவர்ப்ளே ஓவரில் பந்துவீசிய நிகம் ஓவரை ஆர்சிபி பேட்டர்களால் அடிக்க முடியவில்லை.
டெல்லி அணியிடம் இருக்கும் அளவுக்கு வலுவான சுழற்பந்துவீச்சு ஆர்சிபி அணியிடம் இல்லை. சூயஷ் சர்மா மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசுகிறார், லிவிங்ஸ்டோன் வழக்கமான ஆஃப் ஸ்பின்னை வீசினாலே போதுமானது. ஆனால், தேவையில்லாமல் லெக் ஸ்பின்னுக்கு நேற்று முயன்று வாங்கிக் கட்டிக்கொண்டார். டெல்லியின் வெற்றிக்கு கேஎல் ராகுல் ஒரு முக்கியக் காரணமெனில், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மற்றொரு ஹீரோவாக ஜொலித்தனர்.
'என் பணியை எளிதாக்கிய ராகுல்'
வெற்றிக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் பேசுகையில், "4வது போட்டியையும் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு நன்றாக எடுபட்டது, நன்றாக பவுன்ஸ் ஆனது.
குல்தீப் எங்கள் அணியில் பல ஆண்டுகளாக விளையாடுகிறார், நிலைத்த பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். விப்ராஜ் முதல் இரு போட்டிகளில் பதற்றமாக இருந்தார், ஆனால் கடந்த ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சு நம்பிக்கையளித்தது. ஒவ்வொரு போட்டியிலும் விப்ராஜ் பந்துவீச்சு மெருகேறுகிறது," என்று தெரிவித்தார்.
மேலும், "கேப்டனின் ஆதரவும், நம்பிக்கையுமே அவருக்குப் போதும். கே.எல்.ராகுல் என் பணியை எளிதாக்கிவிட்டார். அழுத்தமான தருணங்களில் சூழலை ராகுல் மாற்றிவிட்டார். நிதானமான ஆட்டத்தில் இருந்து திடீரென ஆக்ரோஷமாக பேட் செய்வது கடினம். ராகுல் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதைச் செய்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் தொடரின் எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள்
இன்றைய ஆட்டம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இடம்: சென்னை
- நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்
- நாள் - ஏப்ரல் 14
- இடம் – லக்னெள
- நேரம் - இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
- நாள் - ஏப்ரல் 13
- இடம் – டெல்லி
- நேரம் - இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- நாள் - ஏப்ரல் 13
- இடம் – ஜெய்பூர்
- நேரம் - மாலை 3.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
- நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 ரன்கள் (5போட்டிகள்)
- சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்)
- மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்)
பர்ப்பிள் தொப்பி யாருக்கு?
- நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)
- சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)
- முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












