நேரடி மோதலில் ராமதாஸ், அன்புமணி - கட்சிக்குள் என்ன நடக்கிறது? கூட்டணிக் கணக்கு காரணமா?

பட மூலாதாரம், @draramadoss/x
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ், சென்னை
பா.ம.க-வின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக் கொள்வதாகவும் செயல் தலைவராக அன்புமணியை நியமிப்பதாகவும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு உள்கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. "இந்த முடிவு தவறானது," என விமர்சித்துள்ளார், அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா.
கட்சியின் கட்டுப்பாட்டை யார் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாகவே இந்த மோதல் வெடித்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ்
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 10) பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இதுவரை சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்வதற்கு நான் ஆசைப்பட்டதில்லை. இனியும் செல்லப் போவதில்லை என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.
"என் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என இளைஞர்களும் கட்சி நிர்வாகிகளும் கட்டளையிட்டதாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு சில செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்," என செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் குறிப்பிட்டார்.
அதன்படி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், "பா.ம.க-வை தொடங்கிய நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளேன்," எனக் கூறினார்.
இப்படியொரு முடிவை எடுப்பதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதையெல்லாம் கூற முடியாது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று மட்டும் பதில் அளித்தார்.
2026-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உழைக்க வேண்டும் என்பதற்காக அன்புமணி ராமதாஸை செயல் தலைவராக நியமித்துள்ளதாகவும் கட்சியின் இதர பொறுப்புகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
'முடிவு தவறானது' - பா.ம.க பொருளாளர் திலகபாமா

பட மூலாதாரம், Thilagabama Mahendrasekar/Facebook
ராமதாஸின் இந்த அறிவிப்பு அக்கட்சியின் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தைலாபுரம் தோட்டத்தின் முன்பு அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அங்கிருந்த பா.ம.க நிர்வாகிகள் சிலர், "இது மருத்துவர் எடுத்த முடிவு. இதற்கு எதிராக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
''பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு''' என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா.
''சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் அன்புமணியின் தலைமையில் மட்டுமே முடியும்'' எனக் கட்சியின் தொண்டர் பதிவிட்ட கருத்தையும் தனது முகநூல் பக்கத்தில் திலகபாமா பகிர்ந்திருந்தார்.
ராமதாஸின் முடிவு தொடர்பாக அன்புமணியிடம் இருந்தும் விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.
டிசம்பரில் தொடங்கிய நேரடி மோதல்

பட மூலாதாரம், Thilagabama Mahendrasekar/Facebook
அதே நேரம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் உருவாகிவிட்டதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பா.ம.க-வின் இளைஞர் அணித்தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாகவும் அன்புமணிக்கு உதவியாக அவர் செயல்பட உள்ளதாகவும் ராமதாஸ் அறிவித்தார்.
முகுந்தனின் நியமனத்துக்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன ஒருவருக்கு இளைஞர் அணித்தலைவர் பதவியை கொடுப்பதா? கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குக் கொடுங்கள்" எனக் கூறினார்.
ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனான முகுந்தனுக்குப் பதவி கொடுப்பதைத்தான் இவ்வாறாக அன்புமணி விமர்சித்தார்.
இதனை ஏற்க மறுத்த ராமதாஸ், "கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லையென்றால் கட்சியிலேயே நீடிக்க முடியாது" என்றார்.
மேலும், இது நான் உருவாக்கிய கட்சி எனக் கூறிவிட்டு முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணித் தலைவராக நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, "பனையூரில் அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளேன். அங்கு வந்து தொண்டர்கள் என்னைச் சந்திக்கலாம்" எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
இதன்பிறகு ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிருமான கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
மறுநாள் (டிசம்பர் 29) தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "கட்சியின் பொதுக்குழுவில் இதுபோன்ற காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான்," எனக் கூறினார். பா.ம.க ஜனநாயகக் கட்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் முகுந்தன் பரசுராமனின் நியமனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, "உள்கட்சிப் பிரச்னைகளை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். வேறு யாரும் பேச வேண்டியதில்லை" எனவும் பதில் அளித்தார்.

பட மூலாதாரம், @draramadoss/x
கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்துமா?
"கட்சியின் முக்கிய பொறுப்பில் தனது பேரன் முகுந்தன் பரசுராமனும் இருக்க வேண்டும் என ராமதாஸ் நினைக்கிறார். ஆனால், தன்னுடைய எண்ணத்தின்படி கட்சி செயல்பட வேண்டும் என அன்புமணி நினைக்கிறார். இதுவே பிரச்னைக்கு காரணமாக உள்ளது," எனக் கூறுகிறார், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கட்சியில் வாரிசுகளை நியமிக்க மாட்டேன் எனக் கூறிய ராமதாஸ், அன்புமணியை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்தார். ராமதாஸுடன் அன்புமணி இணைந்து போவது தான் அக்கட்சிக்குப் பலனைக் கொடுக்கும். இருவரும் மோதல் போக்கைத் தொடர்ந்தால் அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்" எனவும் குறிப்பிட்டார்.
கூட்டணி காரணமா?
மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "ராமதாஸின் முடிவில் அரசியல் நோக்கம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். பா.ஜ.க கூட்டணியின் மீது ராமதாஸுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அ.தி.மு.க கூட்டணியுடன் மனதளவில் அவருக்கு நெருக்கம் உண்டு" எனக் கூறினார்.
"அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, அ.தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி இறுதி செய்யப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. ராமதாஸின் இந்த முடிவு, தமிழ்நாடு அரசியலில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தலாம்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Dr S Ramadoss/X
ராமதாஸின் முடிவு தொடர்பாக பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணியிடம் விளக்கம் கேட்கும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருளிடம் பிபிசி தமிழ் பேசியது.
"இதை ஒரு பெரிய விஷயமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது ஜனநாயகப்பூர்வமான கட்சி. அதில் எல்லாம் நடக்கத்தான் செய்யும். இதுதொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும்" என்று மட்டும் பதில் அளித்தார்.
பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமாவின் முகநூல் பதிவு குறித்துக் கேட்டபோது, "அதற்குள் போக விரும்பவில்லை" என்றார்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












