கோவை: பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Special Arrangement / Getty Images
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் முதல் மாதவிடாயைத் தொடர்ந்து தேர்வு எழுத சென்ற எட்டாம் வகுப்பு மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நெகமம் காவல் நிலையத்தில் இன்று (ஏப்ரல் 11) விசாரணை நடந்தது.
பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் இதுபற்றி விசாரித்து வருகிறார்.
வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவல்துறை நடத்திய விசாரணையில் பங்கேற்று தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்தும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் தரப்பிலிருந்தும் யாரும் விசாரணைக்கு வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று சிருஷ்டி சிங் கூறினார்.
நேரில் வந்து வீடியோ எடுத்த தாய்!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள செங்குட்டைப் பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள், 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 5 ஆம் தேதியன்று அந்த மாணவிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அதற்குப் பின் தேர்வு எழுத வந்த அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே வைத்து தேர்வெழுத வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
''தேர்வு எழுதிவிட்டு வந்த என் மகள் இரவில் மிகவும் கால் வலிப்பதாகக் கூறினாள். பருவமடைந்து 3 நாட்கள்தான் ஆன நிலையில், அது தொடர்பாக ஏற்பட்ட வலியாக இருக்குமென்று என் மனைவி அவரின் காலில் எண்ணெய் தேய்த்துவிட்டுள்ளார். அதன்பின் என் மனைவி விசாரித்த போதுதான், வகுப்பறை படிக்கட்டில் 3 மணி நேரம் நகராமல் உட்கார்ந்து தேர்வெழுதியதால் கால் வலி ஏற்பட்டது என்று அழுது கொண்டே கூறினார்," என்று கூறுகிறார் மாணவியின் தந்தை.
பெற்றோர் விடுத்த வேண்டுகோளின்படியே, தனியாக உட்கார வைத்து தேர்வெழுத வைத்ததாகக் கூறிய பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், ''தனி வகுப்பறையில் உட்கார வைக்காமல், வகுப்பறைக்கு வெளியே உட்கார வைத்தது ஏன்'' என்று விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தேர்வு நடந்த நேரத்தில் பள்ளிக்கு வந்த அந்த மாணவியின் தாயார், இதை வீடியோ எடுத்துள்ளார். அவர் எடுத்த காணொளி, காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளியில், பள்ளியில் வகுப்பறைக்கு வெளியில் படிக்கட்டில் தனியாக அமர்ந்து அந்த மாணவி தேர்வெழுதுவதும், அவரிடம் அதற்கான காரணத்தை அவரின் தாய் கேட்டுக் கொண்டிருக்கும் போது, பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் வந்து, எப்படி பள்ளிக்குள் வந்து அனுமதியின்றி வீடியோ எடுத்தீர்கள் என மாணவியின் தாயாரிடம் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மாணவியின் தந்தை, ''என் இளைய மகள் கடந்த 5ஆம் தேதியன்று பருவமடைந்தாள். ஏழாம் தேதியன்று தேர்வு எழுதுவதற்குச் சென்றாள். அன்று அவளை வகுப்பறைக்கு வெளியே தனியாக படிக்கட்டில் உட்கார வைத்து தேர்வெழுத வைத்துள்ளனர். அன்று இரவுதான் எங்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அதை உறுதிப்படுத்தவே என் மனைவி சென்று வீடியோ எடுத்தார்.'' என்றார்.
அதே பள்ளியில்தான் தானும் படித்ததாகக் கூறிய அவர், அங்கு பணியாற்றும் சில ஆசிரியர்களும், சில ஊழியர்களும்தான், சமுதாய நோக்கில் மாணவர்களைப் பிரித்துப் பார்ப்பதாகவும், அவர்களால்தான் இது நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏப்ரல் 10 காலையில் கோவைக்கு வந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், கோவையில் தனியார் பள்ளிகளில் ''இத்தகைய அத்துமீறல்கள் அடிக்கடி நடக்கிறதே'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இதுபற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்றார்.
மகாவீர் ஜெயந்தி காரணமாக, அரசு விடுமுறை என்பதால் இன்று பள்ளி இயங்கவில்லை. காலையில் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர், பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளி நிர்வாகி கல்பனா தேவியை பிபிசி தமிழ் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. அவரிடம் இருந்து கருத்துகள் பெறப்படும் போது இந்த செய்தியில் சேர்க்கப்படும்.
தீண்டாமை காரணமாக நடைபெற்றதா?
இந்த சூழலில் மக்கள் விடுதலை முன்னணியின் கோவை மாவட்டத் தலைவர் தம்பு தலைமையில் சிலர், பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.
அதில், ''அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி என்பதால்தான், தீண்டாமை எண்ணத்துடன் வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறப்பட்டிருந்தது.
பள்ளியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால்தான், மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத அனுமதித்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வேறு எந்த மாணவியையும் இப்படி எழுத வைத்ததில்லை என்று பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொள்ளாச்சி உதவிக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், ''மாணவியின் தாயார் முதலில் வகுப்பு ஆசிரியரைத் போனில் தொடர்பு கொண்டு, அவருடைய மகளுக்கு முதன்முறையாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. எனவே தனியாக தேர்வெழுத வைக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
அவர் வடசித்துாரில் தேர்வுப்பணியில் இருப்பதால் பள்ளி முதல்வரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்பின் 7 ஆம் தேதியன்று மாணவியின் தாயார் நேரில் வந்து தன்னிடம் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே தனியாக தேர்வெழுத வைத்ததாக பள்ளி முதல்வர் கூறுகிறார்.'' என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ''அன்று இரவு கால்வலி என்று மாணவி சொன்னபோதுதான், அவரை வெளியே உட்கார வைத்து தேர்வெழுத வைத்த விஷயம், அவரின் தாயாருக்குத் தெரியவந்துள்ளது. மறுநாள் எல்லோருக்கும் வகுப்பு இருந்தும் அந்த மாணவியை அனுப்பவில்லை. ஏப்ரல் 9 அன்று தேர்வு என்பதால் அனுப்பியுள்ளனர். அன்றும் அதே இடத்தில் உட்கார வைத்து தேர்வெழுத வைத்தபோதுதான், மாணவியின் தாயார் நேரடியாக வந்து அதை வீடியோ எடுத்துள்ளார்.'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறிய கருத்துகளை மறுத்த மாணவியின் தந்தை, தங்கள் மகள் பருவமெய்திய காரணத்தைக் கூறி, கட்டாயம் தேர்வெழுத வேண்டுமா என்று தாங்கள் கேட்டதாகவும், கட்டாயம் எழுத வேண்டுமென்று கூறியதால்தான், தனியாக அமர வைத்து தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று பள்ளி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''நாங்கள் தனியாக அமர வைத்து தேர்வெழுத வைக்க வேண்டுமென்று கேட்டது உண்மைதான். ஆனால் தனி வகுப்பறையில் அல்லது ஏதாவது ஹாலில் தனியாக மேசை கொடுத்து அமர வைத்து எழுத வைப்பார்கள் என்றே அப்படிக் கேட்டோம். வகுப்பறைக்கு வெளியே படிக்கட்டில் உட்கார வைத்து 3 மணி நேரத் தேர்வை எழுத வைத்தது பள்ளி ஆசிரியர்கள்தான்.'' என்கிறார் மாணவியின் தந்தை.
பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார் உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங். இதற்கு முன்பு இதே பள்ளியில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதா என்று விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
''முதல்வர் அறையில் நிறைய மேசைகள், நாற்காலிகள் இருக்கின்றன. அங்கே அவரை எழுத வைத்திருக்கலாம். வெளியே உட்கார வைத்து எழுத வைத்தது ஏன் என்பதே கேள்வி '' என்றார் சிருஷ்டி சிங்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் தந்தை அளித்த புகாரை ஏற்று, நெகமம் காவல் நிலையத்தில், பள்ளியின் உதவி தாளாளரும் முதல்வருமான ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி, தாளாளர் தங்கவேல் பாண்டியன் ஆகிய 3 பேர் மீது, எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் 3(1) (r) மற்றும் 3 (1) (za) (D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பட மூலாதாரம், @Anbil_Mahesh/x
இந்த சம்பவத்தில் மாணவியின் பெற்றோர், அந்த மாணவி பருவமெய்திய காரணத்தைக் கூறி, தனியாக தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதும் தவறுதான் என பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராதிகா, ''அந்த மாணவியை தனியாக தேர்வெழுத வைக்க வேண்டுமென்று பெற்றோர் கேட்டதை சரியென்று சொல்ல முடியாது. ஆனால், எல்லோருடனும் சேர்ந்து உங்கள் குழந்தையும் தேர்வெழுதட்டும் என்று சொல்லி, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. அதை செய்யாமல் வகுப்பறைக்கு வெளியே படிக்கட்டில் தனியாக உட்கார வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.'' என்றார்.
பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்!
காவல்துறை அதிகாரிகள், பள்ளியில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், ''இதுபோன்று மாணவிகளை தனியாக அமர வைத்து தேர்வெழுத வைக்கக்கூடாது என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்,'' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், '' தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்,'' என்று பதிவிட்டுள்ளார்.
கல்வித்துறை விசாரணை
பள்ளியில் விசாரணை நடத்தியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கோமதி, ''பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளோம். பெற்றோரிடம் இன்னும் பேசவில்லை. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை கல்வித்துறை உயரதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.'' என்றார்.
விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கு வழங்கவுள்ளதாகவும், அதன்பின் இறுதிக்கட்ட நடவடிக்கை இருக்குமென்று மாவட்ட கல்வி அலுவலர் கூறினார்.
''மாதவிடாய் காலங்களில் மாணவிகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பள்ளிகளுக்கு சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது. முக்கியமாக நாப்கின் மிஷினும், அதை எரியூட்டும் இடமும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் மாவட்ட கல்வி அலுவலர் கோமதி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












