மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப் பற்றி அறிவது ஏன் முக்கியமானது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நசிருதீன்
- பதவி, பிபிசி இந்திக்காக
சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகரில் இருந்து ஒரு செய்தி வந்தது. 12 வயது சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் வந்தது.
அவளது ஆடைகளில் மாதவிடாய் ரத்தம் படிந்திருந்தது. ரத்தக் கறையை அண்ணன் பார்த்தார்.
தன் 12 வயது தங்கைக்கு மாதவிடாய் வரலாம் என்பது கூட அவருக்குத்தெரியாது.
அவர் ரத்தக் கறைகளை பாலியல் உறவுடன் தொடர்புபடுத்தினார். செக்ஸ் பற்றி வேறொரு ஆணிடமிருந்து அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குடும்ப மரியாதையை அவர் அதனுடன் இணைந்திருக்க வேண்டும். இதுவே அந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைக்கு காரணமாக அமைந்தது.
இந்தக்கொடுமை சிறுமியின் உயிரை பறித்தது. ஒரு பெண் மீது வன்கொடுமை நடந்தால், அதற்கு பல காரணங்கள் உள்ளன.
அண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் இந்த விஷயத்தில் மாதவிடாய் குறித்த குறைவான தகவல்கள் பற்றிய விவாதம் மீண்டும் மீண்டும் தலை தூக்குகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு மாதவிடாய் பற்றி தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தாலும் பல ஆண்களுக்கு மாதவிடாய் பற்றி தெரியாது என்பது தான் உண்மை. இதில் திருமணமான ஆண்களும் அடங்குவர்.
பல ஆண்கள், ஒரு பெண்ணின் ரத்தப்போக்கிற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது என்று கருதுகிறார்கள். ஒரு பெண்ணின் உடலில் இருந்து ரத்தப்போக்கு உடலுறவால் மட்டுமே ஏற்படுகிறது என்று அவர்கள் நினைக்கின்றனர். மாதவிடாய் பற்றிய முழுமையான தெளிவு இல்லாதபோது, அதனால் எழும் பிரச்சனைகள் பற்றிய புரிதலும் அவர்களுக்கு முற்றிலுமாக இருக்காது.
மாதவிடாய் ஒரு நோய் அல்ல
மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை என்பதை சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் தெரியுமா?
இது சாதாரணமானது. இது ஒரு நோய் அல்ல. இது பெரும்பாலான பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை நடக்கும். சுழற்சி வடிவில் இது நகர்கிறது. இந்த சுழற்சி சராசரியாக 28 நாட்கள் ஆகும்.
மாதவிடாய் 21 முதல் 35 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மாதவிடாயின் போது கருப்பையின் உள்ளே இருந்து ரத்தம் வெளியேறும்.
மாதவிடாயின் ஆரம்பம் என்பது ஒரு பெண்ணின் உடல் கர்ப்பம் தரிக்கத்தயாராகும் செயல்முறையைத் தொடங்குகிறது என்பதைக்குறிக்கிறது.
இது பெண் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களையும் விளக்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
தவறான எண்ணங்களுக்கு மத்தியில் பெண்களின் வாழ்க்கை
இந்த இயற்கையான மாதவிடாய் குறித்து நமது சமூகத்தில் பல்வேறு வகையான தவறான கருத்துகளும் நிலவுகின்றன. பெண்களின் உயிரைப் பணயம் வைக்கும் பல பழக்கவழக்கங்களும் இதில் உள்ளன.
பல சமூகங்கள் மற்றும் மதங்களில், மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் தூய்மையற்றவளாக கருதப்படுகிறாள்.
அதனால்தான் அவர்கள் பூஜை மற்றும் நாமாஸ் செய்வதில் இருந்தும் விலகி இருக்க வேண்டியுள்ளது. ரம்ஜான் நாட்களில் நோன்பு நோற்பதையும் தவிர்க்க வேண்டியுள்ளது.
இதன் போது பல இடங்களில் பெண்களை தனிமைப்படுத்தி வைக்கும் வழக்கமும் உள்ளது.
பீரியட்ஸ் பற்றி பேசுவது என்பது 'பேட்'களைப் பற்றி பேசுவது மட்டும் அல்ல.
பெண்களின் வாழ்க்கையின் இந்த முக்கியமான விஷயத்தை சிறுவர்கள் அல்லது ஆண்கள், ஒரு ரகசியம் போல அறிந்திருக்கிறார்கள்.
இருப்பினும் கடந்த காலங்களில் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் மற்றும் மாதவிடாய் குறித்த விவாதங்கள், நிச்சயமாக விழிப்புணர்வை அதிகரித்துள்ளன. இந்த விழிப்புணர்வில் சந்தையின் பங்களிப்பு அதிகம்.
இந்த விழிப்புணர்வு சானிட்டரி பேட்களுடன் அதிகமாக நின்றுவிடுகிறது. அதாவது, மாதவிடாய் என்று ஒன்று இருக்கிறது. இந்த நேரத்தில், தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எதையும் பயன்படுத்தக்கூடாது. பேட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது வரை மட்டுமே அவர்களுக்கு தெரிகிறது.
ஆனால் விஷயம் இத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. இது பெண் குழந்தைகளின் இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான விஷயம். வருடக்கணக்கில் ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் அவர்களின் வாழ்க்கையை பிணைக்க முயற்சிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சிறுவர்களும், ஆண்களும் அறிவது அவசியமா?
பள்ளி உயிரியல் புத்தகங்களில் மாதவிடாய் பற்றி பேசப்படுகிறது. ஆனால், பெரும்பாலான இடங்களில் இது சரியாகக் கற்பிக்கப்படுவதில்லை. மாணவர்களும் சரியாகப் படிப்பதில்லை.
சரியாக கற்பிக்கப்பட்டால் அல்லது மாணவர்கள் சரியாகப் படித்தால், பெண்களின் வாழ்க்கையின் இந்த முக்கியமான சுழற்சியைப் பற்றிய துல்லியமான தகவல்கள் அவர்களிடம் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாலியல் கல்வியின் தேவையும் அறியப்படுகிறது.
இப்போது கேள்வி என்னவென்றால், சிறுமிகள் அல்லது பெண்களின் இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் பற்றி சிறுவர்கள் அல்லது ஆண்களுக்கு என்ன தெரியும்?
ஒவ்வொரு மாதமும் பெண்களின் வாழ்க்கையில் ஆறு-ஏழு நாட்கள் எப்படி இருக்கும் என்பது சிறுவர்களுக்கோ ஆண்களுக்கோ தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது தெரியவில்லையென்றால் நம் சகோதரி, நம் தோழி அல்லது அன்புக்குரியவரின் இயல்பு அல்லது மனநிலையை புரிந்து கொள்ள முடியாது.
ஆண்களாகிய நாம் எவ்வளவுதான் நம் ஆண்மையைக் காட்டினாலும், நாம் செய்ய முடியாத ஒன்றைச்செய்யும் ஆற்றல் பெண்ணுக்கு உண்டு என்பதை ஒவ்வொரு மாதமும் இந்த சில நாட்கள் உணர்த்துகின்றன.
இந்த நாட்களில் அவளது உடலில் ஒரு உள் செயல்முறை நடக்கிறது. இந்த செயல்முறை அவளை தூய்மையற்றதாக மாற்றாது. அதனால் நாம் அவளை ஆபத்தில் தள்ளக்கூடிய விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.
மாதவிடாய்- உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்த செயல்முறை தொடங்குவதற்கு முன், சிறுமிகள் அல்லது பெண்களிடம் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை மாதவிடாய்க்கு முந்தைய சிரமங்கள் என்று சொல்லலாம்.
ஆங்கிலத்தில் இது PMS அதாவது Pre-menstrual syndrome என்று அழைக்கப்படுகிறது. இதில் மனதுடன் கூடவே உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இந்த மாற்றங்கள் 200 வகைகளாக இருக்கலாம் என்கிறது மருத்துவ அறிவியல். மனதின் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும். பெண்களின் மனநிலை மிக விரைவாக மேலும் கீழும் செல்லும். சிடுசிடுப்பு அதிகரிக்கும். துக்கம் மனதை அழுத்தும். ஒவ்வொரு விஷயத்திற்கும் அழத்தோன்றும்.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆதிக்கம் செலுத்தும். தூங்கம் வராது. தலைவலி, சோர்வு இருக்கும். பாலியல் ஆசைகள் அதிகரிக்கும் அல்லது குறையும்.
உடலும் பிரச்னைகளை கொடுக்கும். ஆனால் இது மனம் கொடுப்பதைக்காட்டிலும் குறைவாகவே இருக்கும். உடலின் பிரச்சனைகளுக்கு மருந்து உண்டு. ஆனால் மனதை என்ன செய்வது? அதற்கு மற்றொரு மனதின் ஆதரவு மட்டுமே தேவை.
அதனால்தான் அந்த நாட்களைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்
இந்த அறிகுறிகள் எல்லாமே ஒவ்வொரு சிறுமி அல்லது பெண்ணிற்கும் இருக்கும் என்று அவசியமில்லை.
அதனால்தான் ஆண்களாகிய நாம் நம் வீட்டில் உள்ள சிறுமிகள் அல்லது பெண்களின் இந்த நாட்களைப்பற்றி தெரிந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியம்.
'அந்த நாட்கள்' பற்றி சிறுவர்கள் அல்லது ஆண்கள் எப்போது தெரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் அந்த நேரத்தில் பெண்களின் நடத்தை மற்றும் மனநிலையை அவர்களால் அனுமானிக்க முடியும். அதற்கேற்ப நம் நடத்தையிலும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.சிறுவர்களும் ஆண்களும் அந்த மாற்றங்களை உணராமல், அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகும்?
இந்த மாற்றங்கள் பெண்ணின் இயல்பான தினசரி நடத்தையின் விளைவாக ஏற்படுவது இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது இயற்கையின் சுழற்சியுடன் தொடர்புடையது.
ஒவ்வொரு மாதமும் இயற்கையின் இந்த சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க நம் தாய், மகள், சகோதரி, தோழி, பார்ட்னர் ஆகியோருக்கு எப்படி, எந்த அளவிற்கு உதவுவது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
ஆண்களாகிய நாம் இந்த விசேஷ நாட்களில் அவர்களின் மனநிலையையும் அவர்களின் வார்த்தைகளையும் புரிந்து கொண்டால், அவற்றை புறக்கணிக்கவில்லையென்றால் நிச்சயமாக நாம் உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராக இருப்போம்.
சிறுவர்களும் ஆண்களும் மாதவிடாய் காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
பெண்களின் இந்த நாட்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்களை புரிந்து நடத்த வேண்டும். அதனுடன் வாழவும், அன்றாடம் போல வாழவும் அவர்களுக்கு உதவ வேண்டும்.
இயற்கை, சிறுவர்கள் மற்றும் ஆண்களுக்கு இந்த வேலையை முடிவு செய்திருக்கலாம். இது கருப்பு பாலிதீனில் அடைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. தூய்மையற்றது அல்ல. பயப்பட வேண்டியது அல்ல. எந்த நோயும் அல்ல.
எந்த ஒரு சிறுமிக்கோ பெண்ணுக்கோ மாதவிடாய் காரணமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் அல்லது அவள் ஓய்வெடுக்க விரும்பினால், சமையல் அல்லது பிற வீட்டு வேலைகளைச்செய்ய விரும்பவில்லை என்றால், அவளுக்கு உதவுங்கள்.
வீட்டின் மூலையில் அல்ல, அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் ஓய்வெடுக்கட்டும். அவர்களின் உணவு விஷயத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
இதையெல்லாம் செய்ய ஆண்களாகிய நாம், பெண்களின் கைகளில் விட்டுவிட்ட வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும்.
குறிப்பாக இந்த நேரத்தில் அவர்களின் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள். பொறுத்துக்கொள்ளும் வலிமையை உருவாக்குங்கள். இல்லையென்றால் சில நேரங்களில் பிரச்சனையும் ஏற்படும்.
மாதவிடாய் இருப்பது நமக்குத் தெரிந்தால் அந்த நேரத்தில் அவர்கள் கூறும் வார்த்தைகளைப் புறக்கணிக்கவும் நாம் கற்றுக்கொள்வோம். இந்த காரணத்திற்காகவே பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
மாதவிடாய் பிரச்சனை என்பது வெறும் சுகாதாரம் அல்லது பேட் பிரச்சனை மட்டுமல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இது அதைவிடப் பெரியது. மாதவிடாய் காலத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கும் உதவியாக இருக்க ஆண்களாகிய நாம் தயாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












