தஞ்சாவூர் பாரில் மது அருந்திய 2 பேர் மரணம் - நடந்தது என்ன?

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது.
தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற மீன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது 11 மணிதான் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை.
டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில், அந்த நேரத்திலும் மது விற்கப்படுவதை அறிந்த அவர், அங்கு சென்று மது அருந்தினார்.
பிறகு மீண்டும் வியாபாரத்தைக் கவனிக்க மீன் மார்க்கெட்டிற்குச் சென்றார். அங்கு சென்ற சில சிறிது நேரத்திலேயே வாயில் நுரைதள்ளி கவலைக்கிடமான நிலை ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதேபோல, தஞ்சாவூர் பூமான் ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த குட்டி விவேக் என்பவரும் அதே பாரில் சென்று மது அருந்திவிட்டு வெளியில் வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
ஏற்கெனவே விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கள்ளச்சாரயம் அருந்தியதால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டாஸ்மாக் பாரில் மது வாங்கி அருந்தி இருவர் இறந்துபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு நடத்தும் டாஸ்மாக்கிற்கு அருகில் உள்ள பாரில் மது அருந்தியவர்களே உயிரிழந்ததால், அக்கம்பக்கம் வசித்தவர்கள் பாருக்கு முன்பாகத் திரண்டு அதனை மூடும்படி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல்துறை கண்காணி்பாளர் ஆஷிஷ் ராவத் இது தொடர்பாக விசாரணை நடத்தி வழக்குப் பதிவுசெய்தனர்.
அந்த டாஸ்மாக் கடையும் பாரும் மூடி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பாரை நடத்திவந்த பழனிவேல், அங்கு பணியாற்றிவந்த காமராஜ் ஆகியோர் தஞ்சாவூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
டாஸ்மாக் பாரில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே மதுபானம் விற்பனையாவதை நிர்வாகத்திற்கு தெரியபடுத்தாத காரணத்திற்காக, அங்கு டாஸ்மாக்கின் மாவட்ட மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், உயிரிழந்தவர்கள் அருந்திய மதுவை ஆய்வுக்கு அனுப்பியதில் அதில் சயனைடு கலந்திருக்கலாம் எனத் தெரியவருவதாகக் கூறினார்.

சடலங்களை வாங்க மறுப்பு
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் ஏதும் அறிவிக்காமல், இறந்தவர்கள் உடலை வாங்க முடியாது என உயிரிழந்தோரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் காலை முதல் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பது தெரியாமல், அரசால் நிவாரணம் அறிவிக்க முடியாது என்பதை விளக்கியதையடுத்து, உறவினர்கள் சடலங்களைப் பெற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டனர்.
இப்போது, உயிரிழந்தவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்தது எப்படி என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. கொலைசெய்வதற்காக இது நடந்ததா அல்லது குடித்தவர்களுக்கே தெரியாமல் இது கலக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












